ஸ்ரீமனக்கால் நம்பி - திரு. வி.பார்த்தசாரதி, திருச்சி

"நானிலத்தில் குருபரம்பரையை நாட்டினான் வாழியே!” என்று போற்றப்படுபவர் ஸ்ரீமந்நாதமுனிகள்.

மயற்வற மதிநலம் அருளப்பெற்ற நம்மாழ்வாரை நேரில் தரிசித்தவர். இவருக்கு நாலாயிரத் திவ்ய பிரபந்த பாசுரங்களை பொருள்பட விளக்கி அருளினார் அருள் மாறன். பாசுரங்களைப் பட்டோலை படுத்தியும் அவைகளை இயல், இசை வடிவில் அமைத்தும், அவைகளை மனனம் கானம் பண்ணி வந்ததால் பாலேய் தமிழர் இசைக்காரர் என்றும் அடையாளப் பெயர் பெற்றார்.


இவருடைய பேரன் யமுனைத் துறைவன் என்ற ஆளவந்தார். இளம் வயதிலிருந்தே தனது பாட்டனாரிடமிருந்து வேதசாஸ்த்திரங்களின் பொருள் எல்லாம் ஒன்று விடாமல் கற்றுத் தேர்ந்தார். ஆனால் இடையில் கிடைத்த ராஜ போகத்தினால் குலதனமான “ப்ரபத்தி” சாஸ்த்திரத்தை தெளிய கற்க வேண்டும் எனக் கருதி தனது சீடரான உய்யக் கொண்டாரை நியமித்தார்.


அருள் பெற்ற நாதமுனிகளின் எண்ணம் ஈடேற முடியாமைக்கு வருந்தி அப்பணியை தமது சீடர் மணக்கால் நம்பிக்கு ஒப்படைத்து திருநாடு அலங்கரித்தார் உய்யக் கொண்டார்.


ஆளவந்தார் திறம்பட அரசாண்டு வந்த காலம் மனக்கால் நம்பி தம் பொறுப்பை எண்ணி பலதரம் அரண்மனை வாசலில் நின்று கடுந்தவமாய் காத்திருந்து அரசரைப் பார்க்கும் சூழ்நிலை சித்திக்காமல் மனம் வருந்தியவராய் திருவரங்கம் திரும்பினார்.


ஐந்தாம் முறையாக உஞ்சவிருத்தி அடியார்களுடன் அரண்மனை மடைப்பள்ளி சென்ற கைங்கர்யபரர்கள் வழியாக அரசருக்கு தூதுவளைக்கீரை மிக்க விருப்பம் என கேள்விப்பட்டு அன்றிலிருந்து தினமும் தூதுவளைக் கீரையை எடுத்துச் சென்று பரிசாரர்களிடம் தந்து நன்கு பக்குவம் செய்து அரசருக்கு பரிமாறும்படி விண்ணப்பித்தார். அரசரும் கீரையை பகவானுக்கு படைத்து போக்யமாக அமுது செய்து அகமகிழ்ந்தார்.


அவ்வளவில் சில நாட்கள் நம்பியிடமிருந்து தூதுவளை வருவது நின்று போனது. இவ்விஷயம் கேட்டறிந்து அந்த துறவியை வரவழைத்து நலம் விசாரித்தார். பிதாமகர் நாதமுனிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்யவே நம்பிகள் அவரை நாடினார் என்று அறிந்து மிகுந்த மரியாதையுடன் தூதுவளை ஜீயர் மனக்கால் நம்பியை உபசரித்து அவரின் திருவடி உச்சி மேல் வைத்து மெச்சினார்.


நம்பிகள். “உம் பாட்டனார் ஒரு பெரும் தனத்தைக் கண்டு அதை உமக்குக் காட்டி கொடுக்கும்படி நியமித்து நம்மாழ்வாரின் திருவடியை அடைந்தார். அந்த தனம் ஈராற்றங்கரை நடுவே உள்ளது. அதை பைந்நாகம் ஒன்று காத்து வருகிறது. கண்டு கொண்டு ஆண்டு இரும் எனக்கூற நிதியை காணும் ஆர்வ மிகுதியால் மனக்கால் நம்பியை பின் தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர்ந்து பயணம் கொண்டு திருவரங்கம் அடைந்தனர். வழி நெடுக "ரகஸ்ய த்ரய அர்த்தங்களையும் பதினெட்டு அத்யாயங்கள் கொண்ட ஸ்ரீமத் பகவத் கீதையையும் பொருள்பட நம்பியிடம் கேட்டறிந்தார் ஆளவந்தார். கடைசியாக கண்ணபிரானின் சரம ஸ்லோகமான ப்ரபத்தி ஸாஸ்த்ரப் பொருளை நம்பி விளக்க கேட்ட ஆளவந்தார் அன்றே தன் ஆசைகளைனைத்தையும் அறவே விட்டொழித்து நம்பிகளின் தாள் பற்றிக் கொண்டார்.


ஆளவந்தார் பகவத் விஷயமாகின்ற ஆழ்வார்களின் ஸ்ரீஸுக்திகளில் நாட்டமின்றி ஐச்வர்யத்தையே சாஸ்வத நிதியாக நினைத்து அரசாண்டு வந்த நிலையை மாற்றி... ஸத்வ நிஷ்டராகிய மனக்கால் நம்பிகளால் அளிக்கப்பட்ட தூதுவளைக்கீரை சிறந்த ஞானத்தை அளித்தது என்பர்.


மனக்கால் நம்பி ஆளவந்தாரை பெரிய பெருமாள் முன் நிறுத்தி இதோ! இந்த மஹா தனந்தான் உம்முடைய பாட்டானார் உமக்கு காட்டியருளும்படி உரைத்தது. நீர் இந்த பொக்கிஷத்தைப் போற்றி கொண்டும் கைங்கர்யங்களை ஆராய்ந்து கொண்டும் ப்ரவர்த்திதமான விசிஷ்ட்டாத்வைத ஸித்தாந்தத்தை பாதுகாத்தும், தர்சனத்தை ப்ரவர்த்தனம் பண்ணிக் கொண்டும் பிரகாசித்திரும்.


“அத்ரைவ ஸ்ரீரங்கே சுகமாஸ்வ” என அருளினார். ஆளவந்தாரும் பெரிய பெருமாளை சரணாகதி பண்ணி ராஜ போகத்தை துறந்து துறவியானார்.


ஸ்ரீஆளவந்தாரை ஸத்ய ப்ரதாய விசிஷ்டாட்த்வைத ப்ரவர்த்தகராகப் பண்ணிய பெருமை மனக்கால் நம்பியையே சாரும். யாமுனா முனி ஆழ்வார்களின் ப்ரபந்தங்களையும், விளக்கங்களையும், ஆசார்யர் நம்பிகளிடமும் மேன்மேலும் கற்றுணர்ந்தார்.


சீலங்கொள் - நாதமுனிகள், யமுனைத் துறைவர் முதலான தேசிகர்கள் இல்லையென்றால் ஆழ்வார்களையும் அவர்கள் தம் அருளிச் செயல்களையும் அறிய வாய்ப்பில்லாமல் "வைணவ மதம்” என்று ஒன்று அற்றதாகியிருக்கும்.


ஆசாரியார் ஆளவந்தாரின் சீடர் ஈசாண்டர் என்பவரின் கற்பனை, இரு காவிரி நதிகளின் இடையே இருப்பது திருவரங்கம். ஸரயூ நதிக் கரையிலே திருவயோத்தி. இவ்விரு நகரங்களுக்கும் அதிபதி ரங்கபதி ஒருவரே. திருவரங்கத்திற்கும் ராஜா யமுனைத் துறைவராவார். திருவயோத்தியின் அரசர் பங்க்திரர் என்ற தசரத மஹாராஜா ஆவார். ஆளவந்தாருக்கு நான்கு குமாரர்கள். சொட்டை நம்பி, தேவராஜன், அரசு நம்பி, ரங்கராஜன் ஆகியோர். தசரதனுக்கும் ஸ்ரீராமன், பரதன், லக்ஷ்மணன், ஸத்ருக்னன் என நான்கு புதல்வர்கள். மனக்கால் நம்பிதான் "ப்ரம்ம ஸுதரிஷி” தசரதனுக்கு ராஜரிஷி வசிஷ்ட்டராகிய ப்ரம்மரிஷி.


இப்பொருளுடைய வடமொழி ஸ்லோகம் பின்வருமாரு :


“காவேரி ஸரயூ ஸரித் சுபகுணம் ரங்கம் ஹ்யயோத்யா

தயோர் நாதோ ரங்கபதி: விதே: குலமிதம் சைகம் ஸ்வயம் யாமுனா:

ஸ்ரீமான் பங்க்ரதோ (அ) ஸ்ய தேச தனயாஸ் சத்வார ரதத்குரு

ராமோ ப்ரஹ்ம ஸீதர்ஷித்ர ஸிதயோ ப்ரஹ்மர்ஷி ராஜா ஷாய:||"


யமுனைத் துறைவன் மற்றும் மனக்கால் நம்பியின் மேன்மையின் காரணமாக அயோத்தி மாநகரைக் காட்டிலும் அரங்க மாநகரமே சிறந்தது என்பது ஈசாண்டனின் கருத்து. திருவயோத்தியில் வழிபடப்பட்ட பெரிய பெருமாள் அரங்க மாநகரில் எழுந்தருளப்பெற்று தற்போது ஆளவந்தாரால் ஆராதிக்கப் பெறுவதால் திருவரங்கம் ஏற்றம் பெற்றது என்று கொள்வர் நமது ஆசார்யர்கள். ஸரயுவில் புனிதமாய காவிரி என்றும் கொள்ள வாய்ப்பு.


தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே!

தமிழ் நாதமுனி யுகப்பைத் தாபித்தான் வாழியவே!

மாசி மகந்தன்னில் விளங்க வந்துதுதித்தோன் வாழியவே!

மால் மனக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியவே!


நன்றி - சப்தகிரி மார்ச் 2017


Post a Comment

புதியது பழையவை