"சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே!” - கோமான் ஶ்ரீ பாலாஜி

 ஶ்ரீ:

ஶ்ரீமதே இராமாநுஜாய நம:

ஆழ்வார் அருளிச்செயல்களை ஓதத் தொடங்குவதற்கு முன்பாக அப்பிரபந்தத்தை அருளிச்செய்த ஆழ்வாரைப் போற்றியும், அப்பிரபந்தத்தின் வைபவத்தை விளக்கியும் ஆச்சார்யர்களால் அருளிச்செயய்யப்படும் அறிமுகப் பாசுரங்கள் 'தனியன்கள்' என அழைக்கப்படுகின்றன. "தனியே நிற்கும் பாசுரம்" என்பதால் இது தனியன் என்ற பெயர் பெற்றது. ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த முப்பது பாசுரங்கள் கொண்ட திருப்பாவைக்கு மூன்று தனியன்கள் சம்ப்ரதாயத்தில் அநுஸந்திக்கப்படுகின்றன. அதில் முதலாவது தனியனான "நீளாதுங்க ஸ்தனகிரித்ரடீ..." எனும் வடமொழி ஸ்லோகத்தைப் பராசர பட்டர் அருளிச்செய்தார். 


எஞ்சிய இரு தமிழ் தனியன்களான "அன்னவயல் புதுவை..." மற்றும் "சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே..." ஆகிய இரண்டையும் அருளிச்செய்த பெருமை ஸ்ரீமந் நாதமுனிகளின் முக்கிய சீடர்களுள் ஒருவரான உய்யக்கொண்டாரையே சேரும். இவர் திருச்சிக்கு அருகிலுள்ள திருவெள்ளறை எனும் திவ்யதேசத்தில் அவதரித்தவர்; இவருடைய இயற்பெயர் புண்டரீகாக்ஷர் என்பதாகும். ஸ்ரீமந் நாதமுனிகளிடம் அஷ்டாங்க யோகத்தைக் கற்கின்ற வாய்ப்பு வந்தபோது, "பிணம் கிடக்க மணம் புணரலாமோ?" என்று கேட்டார். இவ்வார்த்தையின் உட்பொருள், உலக உயிர்கள் சம்சாரத் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும்போது, தனக்கான ஆத்மானுபவத்தை மட்டும் நாடுவது உய்யக்கொண்டாரின் திருவுள்ளத்திற்கு உகந்ததாக இல்லை என்பதாகும். இவருடைய அளப்பரிய ஜீவகாருண்யத்தையும் பரந்த மனப்பான்மையையும் கண்டு வியந்த நாதமுனிகள், "நீர் இந்த வையத்தை உய்யக்கொண்டீரோ!" என்று உகந்து போற்றியதால் இவருக்கு 'உய்யக்கொண்டார்' என்ற திருநாமம் நிலைபெற்றது.


ஆண்டாள் என்ற திருநாமத்தை திவ்யப் பிரபந்தத்தில் முதன்முதலாக தனியனாகப் பதிவு செய்த ஆச்சார்ய பெருமகன் உய்யக்கொண்டார் ஆவார். பாண்டிய மன்னன் தன் வாள் முனையால் நாட்டையாண்டான் என்றால், கோதைப்பிராட்டி தன் பக்தியாலும் பாசுரங்களாலும் எம்பெருமானையே ஆட்கொண்டு உலகை ஆண்டதால் இவரை "ஆண்டாள்" என்று உய்யக்கொண்டார் போற்றி மகிழ்ந்தார். 


உத்தமூர் ஸ்ரீ வீரராகவாசார்ய ஸ்வாமிகள் தம்முடைய பிரபந்த ரக்ஷை உரையில், உய்யக்கொண்டாரின் இவ்விரு தனியன்களும் திருப்பாவையின் முழுத் தத்துவத்தையும், ஆண்டாளின் அவதார நோக்கத்தையும் அப்படியே பிழிந்து தரும் அமுதமாக விளங்குவதை நுணுக்கமாக தந்துள்ளார்.


முதலாம் தனியன்: "அன்னவயல் புதுவை”


அன்னவயல் புதுவை ஆண்டாள்* அரங்கற்குப்

பன்னு திருப்பாவைப் பல்பதியம்*இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை* பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.


"அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு" என்ற தொடரில், மென்னடையுடைய அன்னப் பறவைகள் உலவி விளையாடும் வளமிக்க வயல்கள் சூழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள், தன் பிரபந்தத்தைத் திருவரங்கநாதனுக்குச் சமர்ப்பித்த வரலாறு விளக்கப்படுகிறது. உத்தமூர் ஸ்வாமிகள் தம் உரையில், "அரங்கற்கு என்பது கொடுத்தாள், கொடுத்தாளை என இரண்டோடும் சேரும்" என்று குறிப்பிடுகிறார். அதாவது, அரங்கனுக்குப் பாமாலையைப் பாடிக் கொடுத்தாள்; அரங்கனுக்கே பூமாலையைச் சூடிக்கொடுத்தாள். வடபெருங்கோயிலுடையான், திருவேங்கடமுடையான் எனப் பல திவ்யதேச எம்பெருமான்கள் எழுந்தருளியிருந்தாலும், "அரங்கற்கு" என்று சிறப்பாகக் கூறியது, ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் "கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான் பெண்ணாளன் பேணுமூர் அரங்கமே" என்று பாடியவாறே, அரங்கன் அவளை மனைவியாக ஏற்று மணந்துகொண்டமையாலாகும்.


"பன்னு திருப்பாவைப் பல்பதியம் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை" என்பதில், ‘பன்னு’ என்பது ஆராய்ந்து திருப்பாவை அருளிச்செய்தது, தொடர்ந்து பயிலத்தக்கது என்ற பொருள் நயத்தைத் தருகிறது. 


'பல்பதியம்' என்பதில் ஒரு நுட்பமான சம்ப்ரதாய ரஹஸ்யத்தை ஆச்சார்யர்கள் வெளிப்படுத்துகின்றனர். திவ்யப் பிரபந்தங்களில் பொதுவாகப் பத்து பாசுரங்கள் கொண்டது ஒரு பதிகம் (திருமொழி/திருவாய்மொழி) என அழைக்கப்படும். 


திருப்பாவையின் முப்பது பாசுரங்களிலும், நோன்பின் நோக்கம், தோழியரைத் துயிலெழுப்புதல், நப்பின்னை–கண்ணனை எழுப்புதல், எம்பெருமானிடம் கைங்கர்யத்தை இரத்தல் எனப் பல நிலைகள் தொடர்ச்சியாக விரிகின்றன.


இத்தகைய அற்புத அமைப்பைக் கொண்ட பாமாலையை, வெறும் கவிதையாக அன்றி, வேதசாரமான இன்னிசையோடு பாடி எம்பெருமானுக்கு அர்ப்பணித்தாள்.


"பூமாலை சூடிக்கொடுத்தாளைச் சொல்லு" என்பதில், ஆண்டாள் திருப்பாவையை அருளிச்செய்ததற்கு முன்பே, தினமும் பெரியாழ்வார் கட்டும் பூமாலையைத் தான் சூடிப் பார்த்து, எம்பெருமானுக்கு அது உகப்பதாகுமா என்று சோதித்து அளித்து வந்தமை நினைவுக்கூறப்படுகிறது. எனவே, ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலையின் வைபவத்தை நினைவூட்டியே இத்தனியன் அமைந்துள்ளது. இத்தனியனின் இறுதியில் "சொல்" என்று உய்யக்கொண்டார் தன் நெஞ்சிற்கு ஆணையிடுகிறார். "ஆண்டாளின் திருநாமங்களையும் அவளது பெருமைகளையும் எப்போதும் துதிப்பதே உனக்கு உய்யும் வழியாகும்" என்பது இதன் உட்கருத்தாகும்.


இரண்டாம் தனியன்: "சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே”


சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே!* தொல்பாவை

பாடி அருளவல்ல பல்வளையாய்! நாடி நீ

வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்*

நாம் கடவா வண்ணமே நல்கு.


"சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே!" என்ற வரிகளில், எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்கும் மாலையைத் தான் முன்னே சூடி மகிழ்ந்து, பின்னர் அவனுக்குச் சூடக் கொடுத்த பேரொளிமிக்க கொடி போன்றவள் என்று போற்றப்படுகிறாள். உத்தமூர் ஸ்வாமிகள், "சுடர்க்கொடி என்பதனாலே மானிடர் தீண்டக்கூடாத மேன்மையையும், எம்பெருமானுடன் சேர்க்கத்தக்க சீரையும் சொன்னதாகுக" என்பர். அதாவது, உலகியலில் உச்சிஷ்டம் (எச்சில்) தோஷமாகக் கருதப்படும்; ஆனால் எம்பெருமானிடம் பேரன்பு கொண்ட ஆண்டாளின் சூடிக்களைந்த மாலை, அவனுடைய பிரேமத்தை அதிகரிக்கும் திவ்ய வஸ்துவாக மாறுகிறது, அவன் உகந்து சூடிக் கொண்டதால்.


"தொல்பாவை பாடி அருளவல்ல பல்வளையாய்!" என்பதில், ‘தொல்பாவை’ என்பது தொன்றுதொட்டு வந்த பாவை நோன்பைக் குறிக்கிறது; அந்தப் பழம்பெரும் நோன்பின் வழியாக ஆண்டாள் பரமாத்மப் பிராப்திக்கான பக்தி நெறியை வெளிப்படுத்துகிறாள். கண்ணனை அடைய ஆய்ச்சிறுமிகள் ஸ்ரீபாகவதத்தில் அனுஷ்டித்த கார்த்தாயனி விரதத்தையே, ஆண்டாள் தமிழ் நெறியில் திருப்பாவையாகப் பாடி அருளினாள். 'பல்வளையாய்' என்பதற்கு ஆச்சார்யர்கள் இரு சுவையான வியாக்யானங்களைத் தருகின்றனர்.


திருப்பாவை பாசுரங்களைப் பாடி ஆடி நோன்பு நோற்றபோது, தாளத்திற்கு ஏற்பக் கைகளில் ஒலித்த வளையல்களை உடையவள்.


திருப்பாவையின் மகத்தான பெருமையைக் கண்டு உகந்த எம்பெருமானும் ஆச்சார்யர்களும் உகந்து பரிசளித்த வளையல்களை அணிந்தவள்.


பெரியவாச்சான் பிள்ளை உரைப்படி, ஆண்டாளின் வளையல்களின் ஒலியே ஸ்ரீரங்கநாதனுக்கு மிக உகந்ததாக இருந்தது.


"நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாம் கடவா வண்ணமே நல்கு" என்பதில் ஒரு முக்கிய ஐயம் எழலாம்: "நாச்சியார் திருமொழியில் 'வேங்கடவற்கு என்னை விதி' என்று காமதேவனிடம் வேண்டினாயே, அது திருப்பாவைத் தனியனுக்கு எவ்வாறு பொருந்தும்?" என்பது. அதற்கு உத்தமூர் ஸ்வாமிகள் தெளிவான விடையளிக்கிறார். வேங்கடவனுக்குத் தன்னை ஆட்படுத்தக் கோரியதன் தாத்பர்யம் 'சேஷத்வம்' (எம்பெருமானுக்கு மட்டுமே அடிமையாயிருக்கும் தன்மை) ஆகும். இச்சேஷத்வமும் பாரதந்த்ரியமும் திருப்பாவையிலும் "உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்", "உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது" என்று தெளிவாக அருளப்பட்டுள்ளது.


எனவே, "ஆண்டாளே! நீ மன்மதனை நாடி வேங்கடவனுக்கு என்னை அடிமையாக்கு என்று இரந்தாயோ, அதேபோல் நாங்கள் உன்னை நாடி எங்களை உனக்கு அடிமையாக்கு என்று இரக்கிறோம்; 'எம்பெருமானைத் தவிர மற்றொன்றிற்கும் ஆட்படோம்' என்ற உன்னுடைய மேன்மையான நிலையை (இம்மாற்றம்) நாங்களும் மீறாமல் அனுஷ்டிக்கும்படி எங்களுக்கு அருள் புரிய வேண்டும்" என்று உய்யக்கொண்டார் பிராட்டியிடம் பிரார்த்திக்கிறார்.


ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் உய்யக்கொண்டாரின் பங்கு மிக முக்கியமானது. ஸ்ரீமந் நாதமுனிகள் திருநாட்டிற்கு எழுந்தருளுமுன், தம்முடைய பேரனுக்கு 'யமுனைத்துறைவன்' எனப் பெயரிட்டு, அவனுக்குச் சகல ரஹஸ்யார்த்தங்களையும் உபதேசிக்கும்படி உய்யக்கொண்டாரிடம் நியமித்தார். உய்யக்கொண்டார் தம் அந்திம காலத்தில், தம் சீடரான மணக்கால் நம்பியிடம் இப்பொறுப்பை ஒப்படைத்தார். மணக்கால் நம்பியும் தன் ஆச்சார்யனின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, யமுனைத்துறைவனைப் (ஆளவந்தாரை) நல்வழிப்படுத்திச் சம்ப்ரதாயத் தலைவராக்கினார்.


இங்கே சுவையான சங்கதி யாதெனில், திருப்பாவையின் 5-ஆம் பாசுரத்தில் வரும் ‘யமுனைத் துறைவன்’ என்ற கண்ணனின் திருப்பெயரை நினைவுகூர்ந்து, நாதமுனிகள் தம் பேரனுக்கு ‘யமுனைத்துறைவன்’ என்ற திருநாமத்தைச் சூட்டினார் என்று குருபரம்பரை மரபு கூறுகிறது.


ஆச்சார்ய பரம்பரையின் வரிசையை நோக்கினால், ஸ்ரீமந் நாதமுனிகளிடம் தொடங்கி, உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி வழியாக ஆளவந்தாரை வந்தடைகிறது. பின்னர் ஜெகம் போற்றும் நம் உடையவர் இராமானுஜர் வருகிறார்.  உய்யக்கொண்டார் இத்திருப்பாவைத் தனியன்களை அருளி, இச்சம்ப்ரதாயத்தின் பக்தி நெறியை உலகிற்கு நிலைநாட்டினார்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்) நந்தவனம் அமைத்துத் துளசி மாலைகளைத் தொடுத்து வடபெருங்கோயிலுடையானுக்குச் சமர்ப்பித்து வந்தார். துளசிச் செடியின் அடியில் கண்டெடுக்கப்பட்ட ஆண்டாள், தன் சிறுவயது முதலே கண்ணன் மீது அளப்பரிய காதல் கொண்டாள். பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மாலையை, அவர் அறியாத வண்ணம் ரகசியமாக எடுத்துத் தன் கூந்தலில் சூடி, கிணற்று நீரில் தன் அழகைப் பார்த்து, "இக்கண்ணனுக்கு ஏற்ற அழகியாக நாம் இருக்கிறோமா?" என்று சோதித்துவிட்டு மீண்டும் மாலையை மடித்து வைத்து விடுவாள்.


ஒருநாள் இதனைக் கண்ட பெரியாழ்வார் பேரதிர்ச்சியடைந்து, "பெருமானுக்குரிய மாலையை மானிடப் பெண் சூடுவது மாபெரும் அபச்சாரம்" என்று கடிந்து கொண்டு, ஆண்டாள் சூடாத புதிய மாலையைத் தொடுத்துப் பெருமாளுக்குக் கொண்டு சென்றார். அன்றிரவு எம்பெருமான் பெரியாழ்வாரின் கனவில் தோன்றி, "நீர் கொணர்ந்த புதிய மாலை எனக்கு உகப்பளிக்கவில்லை; கோதை சூடிக்களைந்த மாலையே எனக்கு மிகுந்த நறுமணத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அவளது சூடிய மாலையையே எனக்குக் கொணர்ந்து தருவீராக!" என்று கட்டளையிட்டருளினான். அன்றுமுதல் கோதை "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "சூடிக் கொடுத்த நாச்சியார்" என்றும் போற்றப்படலானாள்.


பராசர பட்டர் அருளிய வடமொழித் தனியனில் ("நீளாதுங்க ஸ்தனகிரித்ரடீ..."), நப்பின்னைப் பிராட்டியின் மார்பில் துயிலும் கண்ணனைத் தன் சூடிக்களைந்த மாலையாலும் பாசுரங்களாலும் வசப்படுத்தி, அவனுக்கு ஜீவாத்மாக்களின் பாரதந்த்ரியத்தை உணர்த்தி நம்மைக் காத்த ஆண்டாளின் பிரபாவம் பேசப்படுகிறது.


உய்யக்கொண்டார் தம் முதலாவது தனியனில் ஆண்டாளின் இரு பெருமைகளான 'பாமாலை' மற்றும் 'பூமாலை' இரண்டையும் எடுத்தோதி, அவளைத் துதிக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார். இரண்டாவது தனியனில், ஆண்டாளையே சரணடைந்து, அவளுடைய அநன்யார்ஹ சேஷத்வப் பாதையில் நாம் நிலைத்து நிற்க அவளது அருளை இரக்கின்றார்.


உய்யக்கொண்டார் 'இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்' என்று கூறியதன் மூலம், திருப்பாவை இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் ஒருங்கே அமைந்த திவ்யப் பிரபந்தம் என்பதை உத்தமூர் ஸ்வாமிகள் புலப்படுத்துகிறார்.


இயல் (செய்யுள் நயம்): திருப்பாவை 'வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் ஒரு விகற்பக் கொச்சகக் கலிப்பா' எனும் கடினமான யாப்பு அமைப்பில் அற்புதமாக இயற்றப்பட்டுள்ளது.


இசை (பண்ணிசை): திருப்பாவை காலங்காலமாக இசையோடு அநுசந்திக்கப்படும் இனிமைமிக்க திவ்யப் பிரபந்தமாக விளங்குகிறது.


நாடகம் (திரைக்கதை அமைப்பு): ஆய்ப்பாடியின் சூழலைத் தத்ரூபமாகக் கண்முன் நிறுத்தி, தோழிகளை ஒவ்வொருவராகச் சென்று எழுப்புவதும், உரையாடுவதும், வாயில்காப்பானிடம் அனுமதி கேட்பதும், நப்பின்னையை எழுப்புவதும் என ஓர் அழகிய நாடகத் திரைக்கதை போலக் காட்சிப்படுத்துகிறது.


ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்த இவ்விரு தனியன்களும் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் இரு கண்களைப் போலத் திகழ்கின்றன. ஆண்டாளின் அவதார நோக்கமான எம்பெருமானுக்கு ஆட்படுதலையும் (சேஷத்வம்), அவனையன்றிப் பிறரைச் சரணடையாமையையும் (அநன்யார்ஹத்வம்) இத்தனியன்கள் மிக எளிமையாகவும் அதே வேளையில் ஆழமான வேத வேதாந்த நயங்களுடனும் நமக்கு உணர்த்துகின்றன.


ஸ்ரீ ராமானுஜர் (எம்பெருமானார்), ஆண்டாளின் திருப்பாவையில் கொண்ட அளப்பரிய ஈடுபாட்டின் காரணமாக "திருப்பாவை ஜீயர்" என்றே சிறப்புத் திருநாமம் பெற்றார். தினசரி உஞ்சவிருத்தியின் போது திருப்பாவை பாசுரங்களை அநுஸந்தித்துக் கொண்டே வீதி உலா வருவது எம்பெருமானாரின் வழக்கம். இத்தகைய மகத்தான திருப்பாவை பிரபந்தத்திற்கு உய்யக்கொண்டார் அமைத்துக் கொடுத்த முகவுரையான இத்தனியன்களை அநுஸந்தித்த பிறகே திருப்பாவையைப் பாடுவது பூர்வாசாரியர்களின் தொன்றுதொட்ட மரபாகும்.


ஆண்டாளின் திருவடிகளையும், அவளைப் போற்றிய ஆச்சார்யர்களின் திருவடிகளையும் அநுசந்தித்து, திருப்பாவையின் உட்பொருளை உணர்ந்து வாழ்வதே, ஜீவாத்மாவின் உஜ்ஜீவனத்திற்கும் பரமபுருஷார்த்தமான நித்ய கைங்கர்யப் பிராப்திக்கும் வழிகாட்டும்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

உய்யக்கொண்டார் திருவடிகளே சரணம்.

🙏🙏🙇‍♂️🙇‍♂️

அடியேன்,

கோமான் ஶ்ரீ பாலாஜி

Post a Comment

புதியது பழையவை