முன் காலங்களில் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து, புகுந்த வீட்டுக்கு முதன் முதலாக அனுப்பும்பொழுது, நிறைய சீர் வரிசைகளோடு அனுப்புவார்கள். சிலர் சீர் வரிசைகளோடு, தங்களது பெண்ணுக்கு உதவியாக, வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஒரு வேலைக்காரப் பெண்ணையும் அனுப்புவார்கள். இப்படி வீட்டு எடுபிடி வேலைகளைச் செய்வதற்கு செல்வோர்களை, 'சீதன வெள்ளாட்டி' என்பர்.
திருவரங்கத்தில் வைணவத் தொண்டு புரிந்து வந்தவர் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள். இவர் ஸ்ரீ ராமாநுஜரின் மானசீக குரு ஆவார். ஸ்ரீ ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர் பெரிய நம்பி ஆவார். இவரது மகள் அத்துழாய். இவள் திருமணம் முடிந்து, புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது, தன்னால் முடிந்த அளவில் சீதனப் பொருட்களோடு தனது மகள் அத்துழாயை அனுப்பி வைத்தார் நம்பி.
சீதனப் பொருட்களில் திருப்தி அடையாத மாமியார், குறையுடன் மருமகளோடு காலத்தை ஓட்டினார். தாய் பாசம் அறியாத அத்துழாய், மாமியாரை தனது தாய் போல எண்ணி குடும்பத்தில் இருந்து வந்தார். நாட்கள் சென்றன.
ஒரு நாள், காவிரி நதியில் நீராட அக்கம்பக்கத்து தோழிகள் இல்லாமையால், தனது மாமியாரை துணைக்கு அழைத்தாள் அத்துழாய். இத்தனை நாள் மனதில் பொருமிக்கொண்டிருந்த மாமியார், வார்த்தைகளால் சுட்டாள். “என்னை ஏன் அழைக்கிறாய்? உன் தந்தை அனுப்பிய சீதன வெள்ளாட்டியை கூட்டிப் போயேன்" என்றாள். மாமியாரின் மனம் அறிந்த அத்துழாய், பொறுமை காத்தாள்.
மாமியார் ஒரு வேலையாக பக்கத்து கிராமத்துக்குச் சென்ற சமயம், அவள் அனுமதியோடு தனது தந்தையைக் காணச் சென்றாள் அத்துழாய். தந்தையிடம் தனது வருத்தத்தைக் கூறினாள். பெரியநம்பி, அந்த விஷயத்தை ஸ்ரீ ராமாநுஜரிடம் உரைத்தார். ஸ்ரீ ராமாநுஜர், தனது ஆச்சாரிய குருவான பெரியநம்பிக்கு உதவ எண்ணம் கொண்டார்.
ஸ்ரீ ராமாநுஜர் தனது பிரதான சிஷ்யன் முதலியாண்டானை அழைத்து, “அத்துழாய் புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது, நீ அவளுடன் சீதன வெள்ளாட்டியாக செல்” என்று கூறினார்.
முதலியாண்டான் ஸ்வாமி, அத்துழாயுடன் அவள் புக்ககம் சென்றபோது, அங்கு அவள் மாமியார் கிராமத்திலிருந்து திரும்பவில்லை. முதலியாண்டான் சென்ற உடனேயே தனது வேலைகளை ஆரம்பித்து விட்டார். வீட்டின் ஒட்டடைகளை நீக்கி, வீட்டைக் கழுவி சுத்தம் செய்தார். வீட்டைச் சுற்றிலும் இருந்த குப்பை கூளங்களை நீக்கி தூய்மை செய்தார். துணிமணிகளைத் துவைத்து, உலர்த்தி, காய்ந்ததை மடித்து வைத்து... என்று பல வேலைகளில் அத்துழாய்க்கு உதவி புரிந்தார்.
மூன்று நாட்கள் கழித்து வந்த மாமியார், தனது வீடும், சுற்றுப்புறமும் வெகு நேர்த்தியாக பளிச்சென இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றாள். வீட்டில் ஆராதனை செய்ததால், தெய்வீக மணத்தோடு இருந்ததைக் கண்டு மகிழ்ந்தாள். வீட்டுக்குள் நுழைந்த மாமியார், வீட்டின் பின் பகுதியில் முதலியாண்டான் பாத்திரங்களை சுத்தம் செய்வதைக் கண்டு அதிர்ந்தாள். முதலியாண்டான், ஸ்ரீ ராமாநுஜரின் சிஷ்யர் என்பதை அவள் அறிவாள். சீதன வெள்ளாட்டியாக அவர் வந்துள்ளதை அத்துழாய் தெரிவித்ததும், கண்ணீர் மல்க முதலியாண்டான் திருவடியில் வீழ்ந்து மன்னிக்கும்படி வேண்டினாள் மாமியார். ஸ்ரீராமாநுஜரின் உத்தரவின் பேரில் தாம் வந்துள்ளதாகத் தெரிவித்த முதலியாண்டான் ஸ்வாமி, ஆச்சாரியார் உத்தரவு கொடுத்தால்தான் தாம் செல்ல முடியும் என்று கூறிவிட்டார்.
மாமியார் திருவரங்கம் சென்று, ஸ்ரீ ராமாநுஜரின் திருவடிகளை வணங்கி, முதலியாண்டான் ஸ்வாமியை திருப்பி அழைக்கும்படி வேண்டினாள். பெரியநம்பியின் அனுமதியோடு, முதலியாண்டானை திருவரங்கம் திரும்பும்படி கூறினார் ஸ்ரீ ராமாநுஜர்.
நன்றி - தீபம் பிப்ரவரி 20, 2020

கருத்துரையிடுக