பெரிய ஜீயர் என்று போற்றப் பெறும் ஸ்ரீமணவாள மாமுனிகள் பாடியருளியது “ஆர்த்திப் பிரபந்தம்” என்னும் நூல் ஆகும். இதில் தனியன் இரண்டு. இவற்றில் 20, 23-35, 47, 48, 51, 53, 54, 55 ஆகிய 15 பாடல்கள் ஆசிரிய விருத்தங்கள். ஏனைய 45ம் வெண்பாக்கள்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் தம் அந்திம தசையில் (கடைசி காலம்) சுவாமி ஸ்ரீராமாநுஜரின் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றியிருப்பவர்கள் இதை அனுசந்தித்து நற்கதி அடைய வேண்டும் என்னும் நல்லெண்ணத்தில் இப்பிரபந்தத்தைச் செய்தருளினார் இவர்.
அடியார்கள் எம்பெருமானின் திருவடியைப் பற்றிப் பரமபதம் அடைய அவர்களுக்கு ருசியை உண்டாக்கித் தன்னிடம் பக்தியை வளர்க்கிறான். அதனால் ஞானத்தோடு கூடிய பக்தி முதிர்ந்து, உடையவரின் மீது அன்பை உண்டாக்கி அதனால் பரமபதம் பெற மணவாள மாமுனிகள் பாடியதே இவ் ஆர்த்திப் பிரபந்தம்.
முதல் பாடலிலேயே எதிராசரை வாழ்த்துவோரின் திருவடிகளில் தலை தாழ்த்தி வணங்குவோம். நாங்கள் மட்டுமல்ல நித்திய சூரிகளும் வணங்கி வழிபடுவர் என்கிறார்.
வாழி எதிராசன் வாழி யெதிராசன்
வாழி எதிராசனென வாழ்த்துவார் - வாழியென
வாழ்த்துவார் வாழியென வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை. (1)
எதிராசா! நீயே எனக்குத் தந்தை, நற்றாய், மனைவி, மக்கள், செல்வம் ஆக எல்லாம். பெருமானின் திருவருளுக்கு பாத்திரமாகாமல் இருக்கும் அடியேனின் அவல நிலையைப் பார்த்து, இவ்வுடலை இன்றே அறுத்தருளாதது என்ன, காரணமோ? என வினவுகிறார். (3)
பல கெட்ட செயல்களால் கூறு போடப்பட்டு ஒன்றுக்கும் உதவாத அடியேனின் இச்சரீரத்தை முடித்துக் கொள்வதற்கு ஓர் உபாயத்தைச் செய்தருள வேண்டும் என்று தேவரீரை யாசிக்கிறேன். (6)
தாய், குழவிக்கு நோய் வந்தால், தான் மருந்து சாப்பிட்டு, பாலோடு கலந்த மருந்தை ஊட்டி நோயைக் குணப்படுத்துவாள். அதுபோல நீரே என்னைக் காத்தருள வேண்டும். இந்த நீண்ட இரவாகிய இப்பிறவி என்று விடியும். (நீங்கும்).
20ஆம் பாடலில் பரமபதம் செல்லும் வழியைக் கூறுகிறார். அர்ச்சிராதி நெறியில் சென்று, விரஜையில் நீராடிப் பாவம் நீங்கிப் பரிசுத்தமான தேகத்தைப் பெற்று, நித்திய சூரிகள் எதிர் கொள்ளத் திருமாமணி மண்டபத்தை அடைய, அங்குத் திருமகளுடன் வீற்றிருக்கும் பரமபதநாதனின் மடியில் அமர்ந்து அவன் உச்சிமோந்து அணைக்கும் செல்வம்-உடையவர் நமக்கு அளிக்கும் செல்வமாகும். (பாடல் 24-லும் இக்கருத்து உள்ளது.)
மணவாள மாமுனிகளின் ஆசாரியர் திருவாய் மொழிப்பிள்ளை என்கிற ஸ்ரீசைலேசராவார். தம் ஆசாரியரின் கருணையால் யதிராசரின் கப்பலில் ஏறிச் சம்சாரக்கடலைக் கடப்பேன் என்கிறார் பெரிய ஜீயர். (22) பாடல் 29,31ல் உடையவர் புற மதங்களை வாது செய்து வென்றமையைக் குறிப்பிட்டு, 30இல் மங்களாசாசனம் செய்கிறார். அவ்வழகிய பாடல் வருமாறு:
“சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவ ராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத்தோள்கள் வாழி
சோராத துய்ய செய்யமுகச் சோதி வாழி
தூமுறுவல் வாழி துணைமலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமமணிந்த எழில் வாழி
இனி திருப்போடெழில் ஞானமுத்திரை வாழியே"
மேலும்,
“இன்னும் எத்தனை நாள் இவ்வுடம்புடன் இருந்து நோவுபடக் கடவேனையோ!
என்னை இதனின்றும் விடுவித்துரீர் என்று தான் திருநாட்டினுள் ஏற்றுவீர்?
அன்னையும் அத்தனு மல்லாத சுற்றமும் ஆகியெனை அளித்தருள் நாதனே!
என்னிதத்தை இராப் பகலின்றியே ஏகமெண்ணும் எதிராச வள்ளலே!
என மனமுருக வேண்டுகிறார் (இக்கருத்து 33-லும் உள்ளது)
வேப்பிலையின் குணம் கசப்பு. அதையும் உடம்பிற்கு நல்லதொரு பதார்த்தமாக மக்கள் சமைத்து உண்பர். அதுபோலத் தீயவனான என்னிடமுள்ள கெட்ட குணத்தையே தனக்குப் போக்கியமாக ஏற்றுக் கொண்டு என்னை அவர் தம் அடியவனாக எம்பெருமானார் ஏற்றுக் காத்தருளினார் (39).
"எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகிலுண்டோ?
உனைப் போல் பொறுக்க வல்லாருண்டோ? அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!
ஏழைக் கிரங்காய் இனி"
என்று என்புருக வேண்டி நிற்கிறார் மாமுனிகள். இவர் வேண்டியவாறே நாமும் வேண்டி எம்பெருமானாரின் இன்னருளால் நலம் அந்தமில்லதோர் நாட்டை அடைவோமாக.
நன்றி - சப்தகிரி பிப்ரவரி 2017

கருத்துரையிடுக