"ரங்கநாதா! மோக்ஷம் கொடு" - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யர்

பகவானைக் குறித்த சிறந்த ஞானம் நமக்கு வேண்டும். அவன் என்னென்ன பண்ணுவான், யார் யாருக்கு பண்ணியிருக்கிறான் என்பதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு அதைச் சொல்ல வேண்டும் அவனிடம்.


அவனிடத்திலே போய் நாம் அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்கவே கூடாது.


பரஞானம் என்றால் என்ன...? ‘அதைக் கொடு, இதைக் கொடு' என்று கேட்பதல்ல பரஞானம். பரஞானம் என்றால், அவன் எதிரிலே போய் உட்கார்ந்து கொண்டு, நீ கஜேந்திரனுக்காக இப்படி ஓடி வந்தாயே, அம்பரீஷனுக்குச் சக்கரத்தை முன்னமே கொடுத்தாயே! திரௌபதியை உன் திருநாமமே ரக்ஷித்ததே! நீ குருக்ஷேத்திர பூமியில் அப்பேர்ப்பட்ட பாரத்தையும் குறைத்தாயே! ராமனாய்ப் பிறந்து, இவ்வளவு காரியம் பண்ணினாயே! சரணாகதி பண்ணியவர்களை ரக்ஷித்தாயே!


இப்படியே 'அதைப் பண்ணினாயே, இதைப் பண்ணினாயே' என்று அவன் கதை மொத்தமும் அவன் முன்னே போய் நாம் சொல்ல வேண்டும். இப்படியே நாம் சொல்லிக் கொண்டிருந்தோமானால் பகவான் பார்ப்பான்... 'நம்ம சமாசாரம் மொத்தத்தையும் இவன் தெரிந்து வைத்திருக்கிறான் போலிருக்கிறது. இவனை நாம் ஏமாற்ற முடியாது' என்று முடிவுக்கு வந்து, என்ன வேண்டுகிறோமோ, அதை நாம் கேளாமலே கொடுத்து விடுவான்!


உலக வாழ்க்கையிலேயும் இது சகஜம் தானே?... 'நீ என்னத்துக்காக எகிறி குதிக்கிறாய்? நீ யார் என்று எனக்குத் தெரியாதா...? உன் அப்பா யார் என்று எனக்குத் தெரியாதா...? உங்கள் வம்சத்திலே எப்படிப் பட்டவர்களெல்லாம் உண்டு என்று எனக்குத் தெரியாதா...? இன்றைக்கு என்னவோ புதுசாகப் பேசுகிறாயே நீ!” என்று ஒருத்தரிடம் நாம் பேசினால்.


"சுவாமி, வாயை மூடிக் கொண்டு விடுமே! நீர் கேட்பதை நான் இதோ கொடுத்து விடுகிறேன். வாங்கிக் கொண்டு போய்விடுமே!' என்று அவர் நாம் விரும்புவதைத் தந்துவிடுவார்.


அதனால், பகவானே பக்தர்களிடத்திலே பயப்படுகிறான். நீ அதைப் பண்ணினாயே, இதைப் பண்ணினாயே, அவ்வளவு விலை நான் தாளமாட்டேனா?' என்று கேட்டால் நடுநடுங்கிப் போய் விடுகிறான்!


இதை அடியேன் சொல்லவில்லை. சுவாமி தேசிகனே பரமார்த்த ஸ்துதியிலே சொல்கிறார் இதை.


"ஹே ப்ரபோ! நீ சரணாகத ரக்ஷண விரதம் உடையவன். உன் திருவடியைப் பற்றியவர்களைக் கைவிட மாட்டாய். நீ என்ன சொல்லியிருக்கிறாய்...? அன்றைய தினம் விபீஷணனையே சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றார்கள், எல்லோரும். அப்போது நீ என்ன சொன்னாய்...? விபீஷணனுக்குத் தடை சொல்கிறாயேடா சுக்ரீவா! ராவணனே வந்திருந்தாலும் போய் அழைத்துக் கொண்டு வா...' என்று சொன்னாய். நனைந்த கை உலருகிற சமயத்தில், உன் பத்னியை அபகரித்த மகாபாபி அவன். அப்படிப்பட்டவனுக்கே அபயம் அளிக்கிறேன் என்று சொன்னாய் நீ. அப்படிப்பட்ட நீ... அந்த மாதிரி தப்புகள் எதுவும் நான் பண்ணியிருக்கிறேனா, இல்லையே! ஒரு தப்பும் பண்ணாத என்னை உன்னாலே கைவிட முடியுமா!” என்று கேட்கிறார்.


“சொன்னவன் நீ தான், உன் வாக்குதான் பிரமாணம். ஒரு தப்பும் பண்ணாத என்னை விட முடியுமா உன்னாலே! ராவணனுக்கே அபயம் அளிக்கிறேன் என்று சொன்னவன். என்னைவிட முடியுமா?" என்று சுவாமி தேசிகன் கேட்கிறார்…


அந்த மாதிரி பகவானிடத்திலே கேட்டால் நடுநடுங்கிப் போய் விடுவான் அவன்.


பிள்ளை பெருமாள் அய்யங்காரும் இப்படியேதான் பகவானைப் பார்த்துக் கேட்டார். அர்ச்சனை பண்ணிக் கொண்டேயிருந்தார். ரங்கநாதருக்கு... கிருஷ்ணாவதார மகிமைகளைச் சொல்லி அர்ச்சனை.


நவநீத சோராய நம:


ததிபாண்ட மோக்ஷ தாயினே நம:


என்றார்... சொல்லிக் கொண்ட வந்ததும் இந்த இடத்திலே நிறுத்தி, தட்டைக் கீழே வைத்துவிட்டார்.


தட்டைக் கீழே வைத்துவிட்டு ரங்கநாதரைப் பார்த்துக் கேட்கிறார்.


"ரங்கநாதா! மோக்ஷம் கொடு" என்கிறார். "இன்றைக்கே போக வேண்டும்” என்கிறார் மோக்ஷத்துக்கு!


ரங்கநாதர்! பிள்ளை பெருமாள் அய்யங்காரைப் பார்த்துக் கேட்கிறார்:


“நீர் என்ன கர்மயோகம் பண்ணினீரா?”


“அதெல்லாம்எனக்குத் தெரியாது!” என்கிறார் அய்யங்கார்.


"ஞான யோகம்...?”


“அதிலே அறவே ஞான சூன்யம்."


"பக்தி யோகம்...?"


“தெரியாதே!”


"பிரபத்தி, சரணாகதி...?”


“தெரியாதே!”


‘என் கதை சொல்கிற இடத்திலே போய்க் கேட்டதுண்டா?"


"இல்லையே!”


“என் பக்தர்களுக்கு ஒரு நாளாவது உமது கிருஹத்திலே இடம் கொடுத்ததுண்டா...? தங்குவதற்கு இடமளித்ததுண்டா?”


"இல்லையே!”


"என் பக்தனுக்கு அன்னமிட்டதுண்டா?”


"இல்லையே!”


இப்படி எதைக் கேட்டாலும் இல்லையே என்கிறார். 


"புண்ணிய நதிகளில் நீராடியது உண்டா?" 


“இல்லையே!”


இப்படியே எதைக் கேட்டாலும் பிள்ளை பெருமாள் அய்யங்கார் “இல்லையே! இல்லையே!” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.


படுத்துக் கொண்டிருக்கிற ரங்கநாதருக்கு ரொம்பக் கோபம் வந்துவிட்டது! எழுந்து உட்கார்ந்து கொண்டு விட்டார்!


நாமெல்லாம் ரங்கநாதர் படுத்துக் கொண்டிருக்கிற ஸேவையைத்தான் பார்த்திருக்கிறோம். பிள்ளை பெருமாள் அய்யங்கார் ரங்கநாதர் அமர்ந்த ஸேவையைப் பார்த்தார்!


எழுந்து உட்கார்ந்து கொண்ட ரங்கநாதர், “என்ன அக்கிரமம்! நீர் என்ன மோக்ஷம் கிள்ளுக்கீரைன்னு நினைத்துக் கொண்டிருக்கிறீரா...? நான் கேட்டதில் ஏதாவது ஒன்றேனும் பண்ணியிருக்கிறீர் என்று சொன்னால், உமக்கு மோக்ஷம் கொடுக்கலாம். ஒன்றுமே பண்ணாத உமக்கு எவ்வாறு நான் மோக்ஷம் கொடுப்பேன்?”


உடனே இவருக்குக் கோபம் வந்து விட்டது. இடுப்பு வஸ்திரத்தை இறுக்கிக் கட்டினார்.


"ரங்கநாதா! நான் உன்னை ஒன்று கேட்கிறேன்... இதையெல்லாம் பார்த்துத்தான் நீ மோக்ஷம் கொடுக்கிறாயா? என்னைப் பார்த்து நீ வரிசையாக, அடுக்கடுக்காகக் கேள்வி கேட்கிறாயே...? 'கர்ம யோகம் பண்ணினாயா? ஞான யோகம் பண்ணினாயா? பக்தி யோகம் பண்ணினாயா? பிரபத்தி பண்ணினாயா? அதைப் பண்ணினாயா? இதைப் பண்ணினாயா? என்று இப்படி அடுக்கடுக்காகக் கேட்கிறாயே! அன்றைய தினம் ததிபாண்டன் வீட்டுப் பானை இவற்றிலே எதைப் பண்ணிற்று...? வந்திக்க மனமில்லை. விழுந்தெழுந்து கைகூப்ப கரமில்லை. சேவிக்க மெய்யில்லை. எதுவொன்றும் இல்லாத பானைக்கு எப்படி மோக்ஷம் கொடுத்தாய்?" என்று ரங்கநாதரைப் பார்த்து அதட்டிக் கேட்கிறார் பிள்ளை பெருமாள் அய்யங்கார்!


ததிபாண்டனைப் பற்றித் தெரியுமல்லவா…


ததிபாண்டவன் கோகுலத்தில் இருந்த கிருஷ்ண பக்தன். ஒரு சமயம் பகவான் அவன் வீட்டுக்குள்ளே நுழைந்தான். யசோதையும் கோபஸ்த்ரீகளும் குழந்தையைத் தூரத்திக் கொண்டு வருகிறார்கள்.


ததிபாண்டன் நித்யம் குழந்தை கிருஷ்ணனுக்காக பானையிலே தயிர் எடுத்து வைப்பான். ஆனால் பகவான் அதைச் சாப்பிட வரமாட்டான்!


'வந்தாய் போலே வாராதாய் 

வாராதாய் போல் வருவானே!'


இதுதான் பகவானின் குணம்!


'வருவான் வருவான்' என்று நாம் நினைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிற வேளையில் அவன் வரமாட்டான். வரமாட்டான் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோமானால் திடீரென்று வந்து நிற்பான்!


நித்யம் தயிர் எடுத்து வைத்த ததிபாண்டன், அன்றைய தினம் அப்போதுதான் புதிதாகப் பானை வாங்கி வைத்திருந்தான். பெரிய பானை ! இனிமேல்தான்


அதிலே தயிரைக் கொட்ட வேண்டும். அதற்குள்ளே கிருஷ்ணன் வேகமாக ஓடி வந்தான். ஓடி வந்து, காலியான பானைக்குள்ளே ஏறி தொப்பென்று உள்ளே குதித்து உட்கார்ந்து கொண்டான்!

அப்படியானால், பானை எவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்!


குழந்தை உள்ளே குதிப்பதைப் பார்த்தான் ததிபாண்டன். அது தப்பித்து ஓடி வருகிறது என்பதைப் புரிந்து புரிந்து கொண்டான். 'சரியாகச் சிக்கிக் கொண்டாயிற்று!' என்று பானை மேலே மூடி போட்டது மாதிரி ஏறி உட்கார்ந்து கொண்டுவிட்டான். ததிபாண்டன்!


அவன் ஏறி உட்கார்ந்து கொண்டதுமே யசோதை வந்தாள்... கோபஸ்த்ரீகளெல்லாம் வந்தார்கள்.


"ததிபாண்டா! என் குழந்தை கிருஷ்ணன் இங்கே வந்தானா?” என்று கேட்டாள் யசோதை.


"கிருஷ்ணனா?... கிருஷ்ணனை நான் பார்த்து ஆறு மாசமாயிற்றே, இங்கே வரவேயில்லையே” என்று அப்பட்டமான பொய்யை ரொம்ப அழகாகச் சொன்னானாம் ததிபாண்டன்.


பொய் சொன்ன ததிபாண்டனுக்கு மோக்ஷம் கிடைத்தது. உண்மையே சொன்ன தசரதனுக்கு ஸ்வர்கம்தான் கிடைத்தது என்கிறது புராணம்!


தசரதனுக்கு மோக்ஷம் கிடைக்கவில்லை. அதனால் தான் ஆசார்யர்கள் 'தசரதனைக் காட்டிலும் உத்தமமானவன் ததிபாண்டன்' என்று கொண்டாடுகிறார்கள். காரணமென்ன...?


விசேஷ தர்மம், சாமான்ய தர்மம் என சாஸ்திரத்தில் இரண்டு விதம் சொல்லப்பட்டிருக்கிறது.


சாமான்ய தர்மத்துக்குப் பக்கத்திலே விசேஷ தர்மம் வருமானால், சாமான்ய தர்மத்தை விட்டுவிட்டு, விசேஷ தர்மத்தைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும். அமாவாஸை அன்றைக்கு கிரஹணம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். கிரஹண தர்ப்பணம்தான் பண்ண வேண்டும். அமாவாஸை தர்ப்பணத்தை அன்று விட்டுவிடலாம். ஏனென்றால் அன்றைய தினம் விசேஷ தர்மம் கிரஹணம்தான். அமாவாஸை தர்ப்பணம் பண்ணவில்லையே, அதையும் பண்ணுகிறேன் என்று நாம் பண்ணிக் கொண்டிருக்கக் கூடாது.


கிருஷ்ணம் தர்மம் சனாதனம் - கிருஷ்ணனாகிய தர்மத்தை ரக்ஷிப்பதற்காக சாமான்ய தர்மமாகிற உண்மை பேசுதல் என்பதைக் கைவிட்டான் ததிபாண்டன் கிருஷ்ணனை ரக்ஷித்தான்.


தசரதனோ, விசேஷ தர்மமாகிற ராமனைக் காட்டுக்கு அனுப்பி, சாமான்ய தர்மமாகிற கைகேயிக்குக் கொடுத்த வாக்கிலே நின்றான்! அதனால், சாமான்ய தர்மத்தைக் காத்து, விசேஷ தர்மத்தை விட்ட தசரதனுக்கு ஸவர்கம்தான் கிடைத்தது. சாமான்ய தர்மத்தைவிட்டு விசேஷ தர்மத்தைக் காத்த ததிபாண்டனுக்கோ, மோக்ஷமே கிடைத்தது.


“கிருஷ்ணன் இங்கே வரவேயில்லையே!” என்று ததிபாண்டன் சொன்னதும், யசோதை அங்கேயிருந்து புறப்பட்டுப் போய்விட்டாள்.


குழந்தை எத்தனை நாழி உள்ளே உட்கார்ந்திருக்கும் பானைக்குள்ளே...? மூச்சுத் திணறுகிறது அதற்கு! மூடி போல் மேலே உட்கார்ந்திருக்கிற ததி பாண்டனை ஒரு குத்து குத்தியது!


“என்ன அக்கிரமம்! உட்கார்ந்தே இருக்கிறாயே நீ...! எழுந்திரு, நான் வெளியே வரவேண்டும்" என்றது. 


அதற்கு ததிபாண்டன் சொல்கிறான்.


"ஹே கிருஷ்ணா! உனக்கு மோக்ஷம் வேண்டுமானால் எனக்கு மோக்ஷம் கொடு!."


அதற்கு அந்தக் குழந்தை கேட்கிறது,


“எனக்கு மோக்ஷமா...?"


"ஆமாம்! இந்தப் பானையிலேயிருந்து நீ வெளியே வரவேண்டுமா வேண்டாமா? இந்த கடத்திலேயிருந்து வெளியே கிளம்பு..."


நம் சரீரத்துக்கு கடம் என்று பெயர். சாஸ்திர ரீதியாகப் பேசினால் நாம் ஒவ்வொருத்தரும் ஒரு கடம்! ஆஸ்திக சமாஜத்திலே உபன்யாஸம் நடந்ததாமே... நித்யம் எத்தனை கடங்கள் வந்திருந்தன?” என்று தான் நாம் கேட்க வேண்டும்!


பானையும் நாமும் ஒன்றுதான்! அதிலேயும் தீர்த்தத்தைக் கொட்டி நிரப்பலாம். நம் சரீரத்திலேயும் தீர்த்தத்தைக் கொட்டி நிரப்பலாம். அதுவும் ம்ருண்மயமானது. நம் சரீரமும் ம்ருண்மயமானது!


"இப்படிப்பட்ட பானையிலிருந்து நீ வெளியே கிளம்பவேண்டாமா” என்றான் ததிபாண்டன்!" நீ வெளியே கிளம்ப வேண்டுமானால், எனக்கு முதலில் மோக்ஷத்தைக் கொடு!” என்று கேட்கிறான்!


அதற்கு பகவான் சொல்கிறான்:


"உனக்கு மாத்திரம் என்னடா...? அந்த பானைக்கும் சேர்த்து மோக்ஷம் கொடுக்கிறேன் !”


"பானைக்குக் கூட மோக்ஷம் கொடுப்பாயா...?"


"நான் சொன்ன வண்ணம் செய்யும் பிரான். கட்டாயம் கொடுப்பேன்!'


எழுந்தான் ததிபாண்டன். பகவான் பானையிலேயிருந்து வெளியிலே குதித்தான். புஷ்பக விமானம் வந்து இறங்கியது. அதிலே ததிபாண்டன் ஏறிக் கொண்டான். அவன் பானையும் கூட ஏறி உட்கார்ந்து கொண்டது!


என்ன அதிசயம் பாருங்கள்! எத்தனையோ அதிமானுஷமான சேஷ்டிதங்கள் செய்துள்ளான் பகவான். அதிலே இந்தப் பானைக்கு மோக்ஷம் கொடுத்த வைபவம் விசேஷமானது! இப்போதுகூட வைகுண்டத்துக்குப் போனால், அந்தப் பானையை நாம் பார்க்கலாம்!


அசேதனத்துக்கும் மோக்ஷம் உண்டு என்பதற்கு சாட்சியாக அது அங்கே இருக்கிறது.


பிள்ளை பெருமாள் அய்யங்கார் என்ன கேட்கிறார்...?


"அந்தப் பானை கர்ம யோகம் பண்ணியிருக்கிறதா? அந்தப் பானை ஞான யோகம் பண்ணியிருக்கிறதா? அது என்ன, பக்தி யோகம் பண்ணிற்றா, பிரபத்தி பண்ணியதா?... வெறும் மண்பாண்டம் கடம்! அந்த விலை நான் தாள மாட்டேனா?” என்றார்!


இதைக் கேட்டதும் எழுந்து உட்கார்ந்திருந்த ரங்கநாதன் திரும்பவும் படுத்துக் கொண்டு விட்டான். இன்றைக்கு வரையில் அவன் எழுந்திருக்கவே இல்லை!


பக்தர்கள் எவ்வாறு மடக்கி விடுகிறார்கள் பாருங்கள் பகவானை...!


ஆகையினாலே, பகவான் பக்தர்களை வணங்கி நிற்கிறான்.


யார் அவனை வணங்குகிறார்களோ, அவர்கள் விரும்பியதையெல்லாம் கொடுப்பான். என்ன வேண்டுமானாலும் கொடுப்பான் அவன்.


அவன் சரித்திரத்தை நன்றாகச் சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும் நாம். அவன் கதையை நன்றாகக் கேட்டு, அவன் எதிரிலே போய் உட்கார்ந்து, ஒவ்வொரு அத்தியாயமாகப் படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் பகவான் கேட்பான். இன்னொருத்தர் என்ன நினைப்பார் என்பது அனாவசியம். பகவான் கேட்கிறான்; அது போதும்.


நன்றி - குறையொன்றுமில்லை (பகுதி 6)


Post a Comment

புதியது பழையவை