“நின்னையே தான் வேண்டி நிற்பன்…” - கோமான் ஶ்ரீ பாலாஜி

 ஶ்ரீ:
ஶ்ரீமதே இராமாநுஜாய நம:


“நின்னையே தான் வேண்டி, நீள் செல்வம் வேண்டாதான்

தன்னையே* தான் வேண்டும் செல்வம் போல், மாயத்தால்*

மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மா!*

நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே.”


சேரகுல திலகரான குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழியின் ஐந்தாம் திருமொழி, “தருதுயரம் தடாயேல்” என்று தொடங்குகிறது. திருவித்துவக்கோட்டு எம்பெருமானை முன்னிறுத்திப் பாடப்படும் இத்திருமொழியின் ஒன்பதாவது பாசுரம் இது.


முந்தைய பாசுரங்களில், எம்பெருமான் துன்பம் கொடுத்தாலும் அவனைவிட்டு விலகாத அடியவனுடைய நிலையைப் பல அற்புதமான உலகியல் உவமைகளின் மூலம் ஆழ்வார் எடுத்துரைத்தார்.


தாய் வெறுத்தாலும் தாயையே நாடும் குழந்தை,
கணவன் புறக்கணித்தாலும் அவனையே பற்றிக்கொள்ளும் குலமகள்,
அரசன் தண்டித்தாலும் அவனையே நோக்கும் குடிமகன்,
மருத்துவன் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அவனையே நம்பும் நோயாளி,
கடலில் திசைதவறினாலும் தன் கப்பலின் கூம்பையே நாடும் பறவை,
சுட்டெரிக்கும் கதிரவனையே நோக்கி மலரும் தாமரை,
மழை பொய்த்தாலும் கார்முகிலையே எதிர்நோக்கும் பயிர்,
எத்திசையில் வளைந்து சென்றாலும் கடலையே அடையும் நதிகள், என்று எட்டு உவமைகளால், எம்பெருமான் எத்தகைய நிலையிலிருந்தாலும் அவனையே பற்றிக்கொள்வதே அடியவனுடைய இயல்பு என்பதை ஆழ்வார் காட்டினார். ஆனால் இந்தப் பாசுரத்தில் ஒரு புதிய திருப்பம் வருகிறது.


இதுவரை “எம்பெருமான் துன்பம் கொடுத்தாலும் அவனை விடமாட்டேன்” என்றார். இப்போது, “எம்பெருமான் எனக்கு அளவற்ற செல்வத்தைக் கொடுத்தாலும், அந்தச் செல்வத்தால் என்னைத் தன்னிடமிருந்து விலக்க முயன்றாலும், அதிலும் மயங்கமாட்டேன்; உன்னை மட்டுமே வேண்டி நிற்பேன்” என்று கூறுகிறார்.


இதனால், இப்பாசுரம் துன்பத்தைவிடச் செல்வத்தையே பெரிய சோதனையாகக் காணும் ஆழ்வாரின் வைராக்கியத்தை வெளிப்படுத்துகிறது.


“நின்னையே தான் வேண்டி, நீள் செல்வம் வேண்டாதான்”


“நின்னையே” - உன்னை மட்டுமே.


“தான்” - வேறு எதனையும் அல்ல; உன்னை மட்டுமே என்ற அழுத்தத்தைத் தருகிறது.


“வேண்டி” - அடைய வேண்டிய பேறாக விரும்பி.


“நீள் செல்வம் வேண்டாதான்” - அளவற்ற செல்வம் கிடைத்தாலும் அதனை விரும்பாதவன்.


இங்கு “நீள் செல்வம்” என்ற சொல் மிகவும் ஆழமானது. உலகத்தில் கிடைக்கும் பொன், பொருள், பதவி, அதிகாரம், அரசுரிமை போன்ற செல்வங்கள் மட்டுமல்லாமல், தன்னை மையமாகக் கொண்ட பிற பயன்களையும் இதில் விரிவாகக் கருதலாம்.


உலகச் செல்வத்தை விரும்புபவன் ஐஸ்வர்யார்த்தி.


தன்னுடைய ஆத்மாவுக்கேற்படும் ஆனந்தத்தை மட்டுமே விரும்புபவன் கைவல்யார்த்தி.


எம்பெருமானையே பேறாக விரும்புபவன் பகவல்லாபார்த்தி.


இவர்களுள், “எனக்கு எம்பெருமானே வேண்டும்; அவனைத் தவிர வேறு எந்தப் பயனும் வேண்டாம்” என்று நிற்பவனே பரமைகாந்தி.


அதனால்தான், “நின்னையே தான் வேண்டி” என்று ஆழ்வார் அழுத்தமாகக் கூறுகிறார். எம்பெருமானை அடைந்து ஏதாவது ஒன்றைப் பெற வேண்டும் என்பதல்ல; எம்பெருமானையே அடைவதே பேறு. இதுவே அநந்ய ப்ரயோஜனத்வம்.


“தன்னையே தான் வேண்டும் செல்வம் போல்…”


இப்பாசுரத்தின் அற்புதமான உவமை இங்குதான் வருகிறது. பொதுவாக மனிதன் செல்வத்தைத் தேடிச் செல்கிறான். ஆனால், ஒருவன், “இந்தச் செல்வம் எனக்கு வேண்டாம். இதனால் எனக்கு பகவத் அனுபவத்தில் இடையூறு ஏற்படக்கூடாது” என்று செல்வத்தைத் துறந்து விலகினால், சில சமயங்களில் அந்தச் செல்வமே அவனைத் தேடி வருவது போல உலகத்தில் காணப்படுகிறது.


செல்வத்தை விரும்பாதவனைச் செல்வம் விரும்புவது போல, எம்பெருமானைத் தவிர வேறொன்றையும் விரும்பாத அடியவனைப் பகவானுடைய அருளும் தொடர்ந்து வருகின்றது. இதுவே இங்குள்ள உவமையின் அழகு. 


ஆனால் இதன் ஆழமான உட்பொருள் இன்னும் ஒன்று. செல்வம் வேண்டாம் என்று விலகும் அளவுக்கு அவன் எம்பெருமானிடம் பற்றுடையவன். அவனுடைய மனத்தில், “எனக்கு நீ போதும்; உன்னைத் தவிர வேறு எதுவும் வேண்டாம்.”

என்ற நிலை ஏற்பட்டுவிட்டால், உலகப் பொருள்கள் அவனுடைய குறிக்கோளாக இருக்காது.


“மாயத்தால்…” - செல்வமும் ஒரு சோதனையே!


எம்பெருமானுடைய ஆச்சரியமான சங்கல்பத்தினால், ஒருவனுக்கு அளவற்ற செல்வம் கிடைக்கலாம். ஆனால் செல்வம் கிடைத்துவிட்டால் ஆன்மிகப் பயணம் எளிதாகிவிடும் என்று சொல்ல முடியாது. மாறாக, அது ஒரு பெரிய சோதனையாகவும் மாறக்கூடும்.

செல்வம், “இது என்னுடையது” என்ற மமகாரத்தையும், “நான் இதற்கெல்லாம் உரியவன்” என்ற அகங்காரத்தையும், “இனி எனக்கு எம்பெருமான் எதற்கு?” என்ற மறதியையும் ஏற்படுத்தக்கூடும். அதனால்தான் ஆழ்வார் செல்வத்தை வெறுக்கிறார். அவர் செல்வத்திற்கு எதிரானவர் என்பதற்காக அல்ல. செல்வம் தன்னை எம்பெருமானிடமிருந்து பிரித்துவிடக் கூடாது என்பதற்காக.


“மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மா!”


இங்கு ஆழ்வார் திருவித்துவக்கோட்டு எம்பெருமானை நேரடியாக அழைக்கிறார்.


“மின்னையே சேர் திகிரி” - மின்னலைப் போன்று ஒளிவீசும் திருவாழியை ஏந்தியவனே!


எம்பெருமானுடைய திருக்கரத்தில் விளங்கும் சுதர்சனச் சக்கரம், மின்னல் கொடி போன்ற பேரொளியுடன் திகழ்கிறது. அது வெறும் ஆயுதம் மட்டுமல்ல. அடியார்களின் விரோதிகளை அழித்து, அவர்களைப் பாதுகாக்கும் திருவாழியாழ்வான். அதனால்தான் ஆழ்வார், தம்முடைய முழு சரணாகதியையும் அந்தச் சக்கரத்தைத் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவித்துவக்கோட்டு அம்மானிடமே செலுத்துகிறார்.


“வித்துவக்கோட்டு அம்மா!” என்று திவ்யதேசத்து அர்ச்சாவதாரப் பெருமானை அழைப்பதும் மிகவும் இனிமையானது. பரமபதத்தில் பரத்துவமாக விளங்கும் அதே எம்பெருமான், தன்னை நாடி வரும் அடியார்களுக்காக எளிய முறையில் வந்து நின்றிருப்பது அர்ச்சாவதார சௌலப்யம்.  அதனால், “உன்னைத் தவிர வேறு புகல் எனக்கு இல்லை” என்று கூறுவதற்கு ஏற்ற இடமாகவே திருவித்துவக்கோட்டை ஆழ்வார் முன்னிறுத்துகிறார்.


பாசுரத்தின் தொடக்கத்திலும், “நின்னையே தான் வேண்டி” என்றார். முடிவிலும், “நின்னையே தான் வேண்டி” என்று மீண்டும் கூறுகிறார். இந்த மறுபடியும் கூறுதல் வெறும் சொல் அழகுக்காக அல்ல. அது ஆழ்வாருடைய உறுதியை வெளிப்படுத்துகிறது.


“நீ என்னைத் துன்பத்தால் சோதித்தாலும் சரி; செல்வத்தால் சோதித்தாலும் சரி; என்னை விட்டு விலகினாலும் சரி; என்னை உலகப் போகங்களில் ஆழ்த்தினாலும் சரி,  நான் மட்டும் உன்னை விடமாட்டேன்.” இதுதான் இந்தப் பாசுரத்தின் உயிர்.


“அடியேன்” என்ற ஒரு சொல்லிலேயே ஜீவாத்மாவின் பரதந்த்ர ஸ்வரூபம் வெளிப்படுகிறது. நான் எனக்குச் சொந்தமானவன் அல்ல; நான் உனக்கே சொந்தமானவன். என்பதே “அடியேன்” என்பதன் உள்ளார்ந்த உணர்வு.


இந்தப் பாசுரத்தின் கருத்துக்கு மிகவும் அழகான உதாரணம் குசேலருடைய சரித்திரம்.


கண்ணபிரானுடன் சாந்தீபனி முனிவருடைய குருகுலத்தில் பயின்ற குசேலர், மிகுந்த பகவத் பக்தியுடையவர். வறுமை அவருடைய இல்லத்தை வாட்டியது. அவருடைய மனைவி, கண்ணபிரானைச் சென்று தரிசித்து ஏதாவது உதவி பெற்றுவருமாறு வேண்டினாள். குசேலர் துவாரகைக்குப் புறப்பட்டார். ஆனால் அவருடைய மனத்தில், “கண்ணனிடம் சென்று செல்வம் கேட்க வேண்டும்”

என்ற ஆசை முதன்மையாக இருக்கவில்லை. பால்ய நண்பனான கண்ணபிரானைத் தரிசிப்பதே பேறு என்ற மனநிலையிலேயே சென்றார். அவர் கொண்டு சென்ற சிறிய அவல் காணிக்கையையும் கண்ணன் பேரன்புடன் ஏற்றுக்கொண்டான். குசேலர் செல்வத்தைக் கேட்கவில்லை. ஆனால் திரும்பி வந்தபோது, அவனுடைய இல்லமே அளவற்ற செல்வத்தால் நிறைந்திருந்தது.

இங்கு மிக அழகான உண்மை ஒன்று தெரிகிறது.


குசேலர் செல்வத்தை நாடிச் செல்லவில்லை; செல்வமே குசேலரை நாடிச் சென்றது. இதுவே, “தன்னையே தான் வேண்டும் செல்வம் போல்…” என்ற ஆழ்வாருடைய உவமைக்கு அழகான உதாரணமாகிறது.


அதேபோல விபீஷணாழ்வானின் சரித்திரமும் இப்பாசுரத்தின் கருத்தை நன்றாக விளக்குகிறது.


விபீஷணன் இராவணனுடைய சகோதரன். இலங்கையின் அரச போகமும் செல்வமும் அவனுக்கு அருகிலேயே இருந்தன. ஆனால் அவற்றை விரும்பி இராமபிரானிடம் அவன் சரணடையவில்லை. “இராமபிரானுடைய திருவடிகளில் சரணடைந்து, அவனுக்குக் கைங்கரியம் செய்ய வேண்டும்” என்ற ஒரே நோக்கத்தோடு அவன் வந்தான். ஆனால், இராமபிரான் அவனுடைய சரணாகதியை ஏற்று, இலங்கைக்கு அவனையே அரசனாக்கினான்.


அவன் விரும்பியது கைங்கரியம். அவனுக்குக் கிடைத்தது சாம்ராஜ்யம்.


இதிலும் நாம் காண்பது இதுதான். எம்பெருமானையே விரும்புபவனிடம், அவன் விரும்பாத பிற பயன்கள்கூட எம்பெருமானுடைய சங்கல்பத்தால் வந்து சேரலாம்.


இந்தப் பாசுரத்தை அருளிய குலசேகராழ்வாரின் சொந்த வாழ்க்கையும் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர் சேர மன்னராகப் பிறந்தவர். அரசுரிமை, செல்வம், அதிகாரம் என உலகம் விரும்பும் அனைத்தும் அவருடைய கையில் இருந்தன. ஆனால் அவருடைய உள்ளம் அவற்றில் இல்லை. பெருமாளையும் அவனுடைய அடியார்களையும் சேவிப்பதே அவருடைய பேராசை. அரச செல்வத்தைத் தமக்கான போகமாகக் கருதாமல், பகவத்-பாகவத கைங்கரியத்திற்கே பயன்படுத்தியவர். இதனால், “நீள் செல்வம் வேண்டாதான்” என்ற சொல் வெறும் இலக்கியக் கூற்று அல்ல. அது ஆழ்வாருடைய வாழ்ந்து காட்டிய வைராக்கியம்.


இப்பாசுரத்தின் மிக நுட்பமான செய்தி இதுவாக இருக்கலாம். துன்பம் வந்தால் மனிதன் இயல்பாகவே எம்பெருமானைத் தேடுகிறான். “எம்பெருமானே! என்னைக் காப்பாற்று!” என்று அவன் ஓடுகிறான். ஆனால் செல்வம் வந்துவிட்டால்? “எனக்கு எல்லாம் இருக்கிறது” என்று நினைத்து எம்பெருமானையே மறந்துவிடும் அபாயம் ஏற்படலாம். அதனால்தான் சில சமயங்களில் துன்பத்தைவிடச் செல்வமே பெரிய சோதனை ஆகிவிடுகிறது.


ஸ்ரீமத் பாகவதத்தில், “யஸ்யாநுக்ரஹமிச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்” என்று கண்ணபிரான் கூறுவதாக வரும் பிரமாணம், பகவானுடைய விசேஷ அனுக்ரஹத்தில் செல்வப் பற்றை அறுப்பதற்காக செல்வமே பறிக்கப்படலாம் என்ற கருத்தை எடுத்துரைக்கிறது.


அதேபோல, துன்பங்கள் வந்தாலும் எம்பெருமானைப் பற்றிய பக்தி தளராமல் இருப்பது உயர்ந்த அனுக்ரஹத்திற்கு வழியாகிறது என்ற சாஸ்திரக் கருத்தும் உண்டு. இதனால் ஒரு பக்தனுடைய நிலை என்னவாக இருக்க வேண்டும்? துன்பம் வந்தாலும் அவனை விடக்கூடாது. செல்வம் வந்தாலும் அவனை மறக்கக்கூடாது. இரண்டிலும் இலக்கு ஒன்றே “நின்னையே தான் வேண்டி…”


ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகன் அருளிய ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில், பரதேவதா நிர்ணய அதிகாரத்தில், இப்பாசுரம் தொடர்பான கருத்து எடுத்துக்காட்டப்படுகிறது. பகவானையே ஒரே பயனாகக் கொண்ட அநந்ய ப்ரயோஜனர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே சில உலகியல் நன்மைகள் தொடர்ந்து வரலாம் என்ற கருத்தை விளக்கும் வகையில் விஷ்ணு தர்மம் முதலிய பிரமாணங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன. நெல்லுக்காகப் பாய்ச்சிய நீர் புல்லுக்கும் கிடைப்பது போல, பகவானையே ஒரே பயனாக விரும்புபவனுக்கு, அவனுக்குத் தேவையில்லாத பிற பயன்களும் அனுபந்தமாக வந்து சேரலாம். ஆனால் அவை அவனுடைய இலக்கு அல்ல. அவனுடைய இலக்கு ஒன்றே, “நின்னையே தான் வேண்டி…”


குலசேகராழ்வார் அருளிய இந்தப் பாசுரம், பரமைகாந்தித்வம், அநந்ய ப்ரயோஜனத்வம், பகவத் பரதந்த்ரியம், செல்வத்தின் மீதான வைராக்கியம் ஆகியவற்றை ஒரே மூச்சில் நமக்கு உணர்த்துகிறது. எம்பெருமான் துன்பம் கொடுத்தாலும் அவனை விடாதிருப்பது பக்தி. ஆனால், எம்பெருமான் அளவற்ற செல்வத்தைத் தந்து, அந்தச் செல்வத்தின் மூலம் நம்மைத் தன்னிடமிருந்து விலக்கினாலும், அந்தச் செல்வத்தையே உதறிவிட்டு அவனையே பற்றிக்கொள்வது, அதைவிட உயர்ந்த வைராக்கியம். “நீயே உபாயம்; நீயே உபேயம்;
உன்னைத் தவிர எனக்கு வேறு பயன் எதுவுமில்லை.” என்று திருவித்துவக்கோட்டு அம்மானின் திருவடிகளில் தன்னை முழுமையாக ஒப்படைக்கும் குலசேகரப் பெருமாளின் திருவுள்ளம், நம் உள்ளங்களிலும் அந்த “நின்னையே தான் வேண்டி” என்ற ஒரே ருசியை ஏற்படுத்தட்டும்.


குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்.

🙏🙏🙇‍♂️🙇‍♂️

அடியேன்,

கோமான் ஶ்ரீ பாலாஜி

Post a Comment

புதியது பழையவை