ஏத்துகின்றோம் நாத் தழும்ப, இராமன் திருநாமம்*
சோத்தம், நம்பீ! சுக்கிரீவா! உம்மைத் தொழுகின்றோம்*
வார்த்தை பேசீர், எம்மை உங்கள் வானரம் கொல்லாமே*
கூத்தர் போல ஆடுகின்றோம், குழமணி தூரமே.
இலங்கை மாநகரம் இராமபிரானின் வானரப் படைகளால் முற்றுகையிடப்பட்டபோது, அங்கிருந்த அரக்கர்கள் தங்களைக் காத்துக்கொள்ள இராமனின் நண்பனும், வானரத் தலைவனுமான சுக்கிரீவனிடம் அடைக்கலம் புகுவதை திருமங்கை ஆழ்வார் இப்பாசுரத்தில் மிக அழகாகச் சித்தரிக்கிறார்.
பொதுவாக ஆழ்வார்கள் நாயகி நிலையிலோ (நம்மாழ்வார் - பராங்குச நாயகி, திருமங்கையாழ்வார் - பரகால நாயகி) அல்லது அடியார் நிலையிலோதான் பாசுரங்களைப் பாடுவார்கள். ஆனால், இந்தப் பாசுரத்தில் திருமங்கையாழ்வார் 'அரக்கர்' கோலம் கொள்கிறார். இராமபிரானின் வானரப் படைகள் இலங்கையைச் சூழ்ந்தபோது, அச்சமடைந்த அரக்கர்கள் தங்களைக் காத்துக்கொள்ளச் சுக்கிரீவனிடம் சரணடைவதையே இப்பாசுரம் விவரிக்கிறது. பகவானின் மகிமையைப் பாடுவதற்கு பக்தியே பிரதானம்; அது எந்த நிலையிலிருந்து வெளிப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதே. எதிரி கோலத்திலிருந்தும் அவன் திருநாம மகிமையைப் பாட முடியும் என்பதற்கு இப்பாசுரமே சாட்சி.
“இராமன் திருநாமம்” – சக்கரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமனின் திருப்பெயர்களை.
“நாத் தழும்ப” – நாவிலே தழும்பு உண்டாகும் அளவிற்கு அதிகமாகச் சொல்லி.
“ஏத்துகின்றோம்” – வாயாரப் புகழ்ந்து துதிக்கின்றோம்.
“சோத்தம்” – துதிக்கின்றோம் அல்லது வணங்குகிறோம்.
“நம்பீ! சுக்கிரீவா!” – குறையற்ற குணங்கள் பொருந்திய சுக்கிரீவ மகாராஜனே!
“உம்மைத் தொழுகின்றோம்” – உமது திருவடிகளைத் தொழுது வணங்குகின்றோம்.
“வார்த்தை பேசீர்” – எங்களிடம் அன்புடன் ஒரு வார்த்தை பேச வேண்டும் அல்லது உங்கள் வீரர்களிடம் ஒரு சொல் சொல்ல வேண்டும்.
“எம்மை உங்கள் வானரம் கொல்லாமே” – உங்கள் வானரப் படைகள் எங்களைக் கொல்லாதபடி.
“கூத்தர் போல” – கூத்தாடுபவர்களைப் போல.
“குழமணி தூரமே ஆடுகின்றோம்” – 'குழமணி தூரம்' எனும் தோல்வியுற்றவர்கள் ஆடும் கூத்தை ஆடிக்கொண்டு உம்மைச் சரணடைகிறோம்.
பாசுரத்தின் தொடக்கத்திலேயே, “இராமன் திருநாமம் நாத் தழும்ப ஏத்துகின்றோம்” என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். இராமபிரான் அரசாண்ட காலத்தில் உலகமே ‘இராமமயம்’ ஆக இருந்தது என்பார்கள். அதுபோல, இப்போது இலங்கையில் உள்ளவர்களும் இராமபிரானுடைய திருநாமங்களை இடைவிடாது சொல்லித் துதிக்கிறார்கள். எவ்வளவு என்றால், அந்தப் புனிதமான இராம நாமத்தைச் சொல்லிச் சொல்லி அவர்களின் நாவிலேயே தழும்பு தோன்றிவிட்டதாம். அந்த அளவுக்கு வாயாரப் புகழ்கிறார்கள்.
ஒரு செயலைத் தொடர்ந்து செய்யும் போது அங்கே தழும்பு உண்டாகும். வில் ஏந்தும் வீரனுக்குத் தோளில் தழும்பு இருக்கும். இங்கே, பகவானின் திருநாமங்களை இடைவிடாது உச்சரித்ததால், அவர்களின் நாவிலேயே தழும்பு ஏற்பட்டுவிட்டதாம். இது நாம சங்கீர்த்தனத்தின் மீதான ஆழ்ந்த பக்தியைக் காட்டுகிறது. "ராம ராம" என்று சொல்லும் போது உள்ளத்து அழுக்கு நீங்கி, நாக்கு புனிதமடைகிறது என்பதை இது உணர்த்துகிறது.
“சோத்தம், நம்பீ சுக்கிரீவா!” - பகவானை நேரடியாக அணுகுவதை விட, அவனுக்குப் பிரியமான அடியார்கள் மூலம் அணுகுவதே சிறந்தது. இதன் மூலம் ஆச்சார்ய அபிமானத்தின் பெருமையை ஆழ்வார் உணர்த்துகிறார். 'நம்பி' என்றால் எல்லா நற்குணங்களும் நிறைந்தவர் என்று பொருள். இராமபிரானுக்கு உதவியாக நின்ற சுக்கிரீவனை 'நம்பி' என விளிப்பதன் மூலம் அவனது பெருமையை உயர்த்துகிறார் ஆழ்வார். ‘சோத்தம்’ என்பது சமஸ்கிருத ‘ஸ்தோத்திரம்’ என்ற சொல்லின் தமிழாக்கம். வணக்கம், துதி, சரணாகதி ஆகிய பொருட்களை இது உணர்த்துகிறது. இது பணிவையும், தஞ்சம் புகுதலையும் ஒருங்கே குறிக்கிறது.
“வார்த்தை பேசீர், எம்மை உங்கள் வானரம் கொல்லாமே” - “சுக்கிரீவா! நீ எங்களிடம் ஒரு வார்த்தை பேசினால் போதும்" என்கிறார்கள். ஒரு அரசன் சாதாரண மக்களிடம் பேசினால், அந்த அரசனின் காவலர்கள் அவர்களைத் தாக்க மாட்டார்கள். அதுபோல, “சுக்கிரீவா! நீ எங்களிடம் அன்போடு ஒரு வார்த்தை கூறினால் போதும்; உன் வானரப் படைகள் எங்களை உனக்குரியவர்களாக எண்ணி எதுவும் செய்யாமல் விடுவார்கள்” என்று வேண்டுகின்றனர். இது எம்பெருமானின் அருட்பார்வை ஒருவன் மீது பட்டால், காலனும் அவனைக் கண்டு அஞ்சுவான் என்ற தத்துவத்தை விளக்குகிறது.
“கூத்தர் போல ஆடுகின்றோம், குழமணி தூரமே” - "நாங்கள் பெரிய வீரர்கள் அல்ல, உங்கள் முன்னே ஆடும் கூத்தாடிகள்" என்று தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள். போரில் தோற்றவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆடும் ஒரு கூத்து 'குழமணி தூரம்'. இங்கே இலங்கையர்கள் தங்கள் அகந்தையை விட்டுவிட்டு, "நாங்கள் தோற்றுவிட்டோம், நீங்களே வெற்றி வீரர்" என்று ஆடுகிறார்கள்.
குழமணி தூரம் என்பது ஒரு கூத்து வகை. ‘வென்றிக்கூத்து’ என்பது வென்றவர்கள் தேர்த் தட்டின் மீது நின்றாடும் கூத்து. போர்த்தலைவர்களெல்லாம், வெற்றியைக் கொண்டாட, கைகோர்த்து நின்றாடும் கூத்து இது. ‘குழமணி தூரம்’ என்பது வென்றவர் தம்மீது இரங்குமாறு தோற்றவர் ஆடும் கூத்து. இது தலைகீழாக நின்று ஆடும் ஆட்டம்.
இதைத்தான் ஆழ்வார் 10 பாடல்களில் பாடியுள்ளார். “நீர் எம்மைக் கொல்லாதே, குன்று போல ஆடுகின்றோம் குழமணிதூரமே” இது இந்த திருமொழியில் ஐந்தாவது பாசுரம்.
“யான்”, “எனது” என்ற அகந்தையை விட்டொழித்து, தோற்றவராய் அல்ல; சரணடைந்தவராய் எம்பெருமானின் திருவடிகளில் ஆடிப் பாடுவதே பிறவிப் பிணிக்கான நிவாரணம் என்பதை இப்பாசுரம் உருக்கமாக எடுத்துரைக்கிறது.
இந்தப் பாடல் இராமனின் திருநாமத்தை நா தழும்பேறும் அளவிற்கு துதிப்பதையும், ஆசார்யர்கள் மூலம் அவனை அடைவதையும் மிக மென்மையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கிறது.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக