“கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்” - கோமான் ஶ்ரீ பாலாஜி


நம்மாழ்வாரின் திருவாய்மொழி, திராவிட வேதம் என்று போற்றப்படும் ஒப்பற்ற பக்தி இலக்கியமாகும். இதில் ஐந்தாம் பத்தில், ஆறாம் திருவாய்மொழியான "கடல் ஞாலம்" பதிகத்தின் முதல் பாசுரம், பக்தியின் உச்சக்கட்ட நிலையையும், எம்பெருமானுக்கும் அடியார்க்கும் இடையிலான ஆழ்ந்த தத்துவத் தொடர்பையும் விளக்குகிறது. இந்தப் பாசுரம், பராங்குச நாயகியாக மாறிய ஆழ்வாரின் நிலை பற்றி, அவரது தாயார் சமூகத்திற்கு எடுத்துரைப்பதாக தாய் கூற்றாக அமைந்துள்ளது.


இப்பாசுரத்தின் பின்னணியும் முந்தைய பாசுரத் தொடர்பையும் சற்றுப் பார்ப்போம்.

 

இதற்கு முந்தைய பத்து பாசுரங்களில் ஆழ்வார், திருக்குருகூர் நம்பியை கண்ணாரக் கண்டு அவனது வடிவழகை அனுபவித்தார். அந்த அனுபவம் அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும், உடன் அவனோடு சேர்ந்து இருக்க முடியவில்லையே என்கிற பிரிவாற்றாமை வந்து விடுகிறது. இந்த ஏக்கமும், பிரிவாற்றாமையும் ஒரு கட்டத்தில் எல்லை மீறிச் செல்லும்போது, அது "ஆவேச நிலை" அல்லது "பகவத் ஆவேசம்" என்ற நிலையை அடைகிறதுதற்கால மொழியில் சொல்வதானால், தெய்வீக ஆவேச நிலை என மக்கள் குறிப்பிடும் அனுபவத்தோடு ஒப்பிடத்தக்கது.


பெரியவாச்சான் பிள்ளை தனது வியாக்கியானத்தில், இந்த மாற்றத்தை மிகவும் அழகாக விளக்குகிறார். ஆழ்வார் ஒருபுறம் மகிழ்ச்சியையும், மறுபுறம் பிரிவின் துயரத்தையும் சமமாக அனுபவித்தார். ஆனால், அவரது துரதிர்ஷ்டவசமாக, துயரம் சற்று மேலோங்கியது. எம்பெருமானைப் பிரிந்து வாழ முடியாது என்கிற நிலையில், பிரிந்தவர்கள் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்ளத் தங்களுக்குப் பிடித்தமானவர்களின் செயல்களைத் தாங்களே செய்வது போலப் பாவிப்பது உலக இயல்பு. இதற்கு உதாரணமாக ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் வரும் கோபிகைகளின் நிலையைக் கூறலாம். கண்ணன் கோகுலத்தை விட்டுப் பிரிந்து சென்றபோது, அந்தப் பிரிவைத் தாங்க முடியாத கோபிகைகள், ஒருத்தி பூதனையாகவும், மற்றொருத்தி கிருஷ்ணனாகவும் மாறி அவளது முலைப் பால் உண்பது போலப் பாவித்தனர். மற்றொருத்தி காளியனாக மாற, இன்னுமொருத்தி அவள் மேல் ஏறி நடனமாடினாள்

 

இதேபோல், நம்மாழ்வாரும் பராங்குச நாயகி என்ற பெண் நிலையில் நின்று, எம்பெருமானின் உலகப் படைப்பு உள்ளிட்ட அனைத்து செயல்களையும் தான்தான் செய்வதாக இந்த பத்து பாடல்களில் கூறுகிறார். இதனை அவளுடைய தாய் பார்த்து வியக்கிறாள். "என் மகள் ஒரு பெண், அவள் எப்படித் தன்னை உலகைப் படைத்தவன் என்று கூறலாம்? அது எவ்வாறு சாத்தியம்?" என்ற தாயின் திகைப்போடு கூடிய புலம்பலே இந்த பத்து பாசுரங்களின்  கருப்பொருளாகும்.

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்

கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்*

கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்

கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*

கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்

கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக்கொலோ?*

கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்

கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றனவே?


இப்பாசுரத்தின் சீர்களில் "கடல் ஞாலம்" என்ற சொல் பலமுறை பயின்று வருகிறது. இது உலகத்தின் பிரம்மாண்டத்தையும், அந்தப் பிரம்மாண்டமான உலகோடு எம்பெருமானுக்குள்ள பிரிக்க முடியாத தொடர்பையும் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு வார்த்தைக்கும் எளிய அர்த்தமும் தத்துவ விளக்கமும் முதலில் பார்ப்போம்.


கடல் - கடலால் சூழப்பட்ட - எல்லையற்ற சம்சாரக் கடலைக் குறிப்பது.


ஞாலம் - உலகம் - அசேதனப் பொருட்கள் மற்றும் நம்மைப் போன்ற உயிரினங்களின் உறைவிடம்.


செய்தேனும் - படைத்தவனும் - ஜகத் காரணபூதன்; மூல காரணமானவன்.


யானே - நானே - வேறு யாரையும் எதிர்பாராமல் தானே செய்தவன்.


என்னும் - என்று சொல்லுகிறாள் - பராங்குச நாயகி இவ்வாறு மீண்டும் மீண்டும் கூறுகிறாள்.


ஆவேனும் - அவையாகவே ஆனவனும் - அந்தர்யாமியாக தான் படைத்த பொருட்களுக்குள் புகுந்து இயக்குபவன்.


கொண்டேனும் - அளந்து கொண்டவனும் - திரிவிக்கிரம அவதாரத்தில் முழு உரிமையோடு உலகை மீட்டது.


கீண்டேனும் - இடந்து எடுத்தவனும் - வராக அவதாரத்தில் கடலுள் கடத்தப்பட்ட உலகை மீட்டது.


உண்டேனும் - விழுங்கியவனும் - பிரளய காலத்தில் உலகைத் தன்னுடைய திருவயிற்றுக்குள் வைத்து காத்தது.


ஈசன் - சர்வேஸ்வரன் - அனைத்தையும் ஆளும் எம்பெருமான்.


வந்து ஏறக்கொலோ - வந்து புகுந்துவிட்டானோ? - ஆவேச நிலையில் எம்பெருமான் நம் பராங்குச நாயகிக்குள் ஆவேசித்தது.


கடல் ஞாலத்தீர்க்கு - உலகில் உழல்கின்ற மனிதர்களாகிய உங்களுக்கு - ஆன்மீக அனுபவம் இல்லாத நம்மைப் போன்ற சம்சாரிகள்.


இவை - இந்த ஆச்சரியங்களை - பராங்குச நாயகியின் விசித்திரமான பேச்சும் நிலையும்.


என் சொல்லுகேன் - என்னவென்று விளக்குவேன்? - மொழிகளால் விவரிக்க முடியாத ஆச்சரியம்.


கற்கின்றனவே - பயில்கின்றனவே - எம்பெருமானுடைய செயல்களைத் தானாகவே கற்றுக் கூறுகிறாள்.


இனி ஒவ்வொரு வரியாக பார்ப்போம், சற்று ஆழ்ந்த அர்த்தமுள்ள கடினமான பாசுரந்தான்.


கடல் ஞாலம் செய்தேனும் யானே - "நான் உலகனைத்திற்கும் காரணபூதன்" என்று ஆழ்வார் கூறுகிறார். சிருஷ்டிக்கு முன்பு உலகம்சத் சித் ஈஸ்வரஎன்ற தத்வத்ரயம் அதாவது மூன்று தத்துவ நிலையில்சத்ஆக மட்டுமே இருந்தது. அப்பொழுது பெயரோ உருவமோ இன்றி, சூட்சும நிலையில் இருந்த சித் மற்றும் அசித்துகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டு எம்பெருமான் மட்டுமே இருந்தான்.


இங்கு "யானே" என்ற சொல்லில் உள்ள ஏகாரம் 'பிரிநிலை ஏகாரம்' ஆகும். அதாவது, “நானே செய்தேன்; எனக்கு வேறு துணை எதுவும் இல்லைஎன்ற உறுதியை அது காட்டுகிறது. மேலும் சொல்வதென்றால், எம்பெருமானைத் தவிர வேறு எந்த ஒரு துணைக்கருவியோ அல்லது வெளிப்புறக் காரணமோ இந்த உலக சிருஷ்டிக்கு தேவையில்லை. எம்பெருமான் தானே மூன்று வகையான காரணங்களாகவும் இருக்கிறான்.


உபாதான காரணம் - குடத்திற்கு மண் எப்படியோ, அப்படியே சிருஷ்டிக்கு அவன் மூலப்பொருளாக இருக்கிறான்.


நிமித்த காரணம் - குடத்தைச் செய்யும் குயவன் போல, படைக்கும் கர்த்தாவாக அவன் இருக்கிறான்.


ஸஹகாரி காரணம்- குடம் செய்யத் தேவையான சக்கரம் போல, மற்ற சக்திகளாகவும் அவனே செயல்படுகிறான்.


இந்த தத்துவத்தையே பராங்குச நாயகி, "நானே உலகைப் படைத்தேன்" என்று தன் செயலாகக் கூறுகிறாள்.


கடல் ஞாலம் ஆவேனும் யானே- படைத்ததோடு நில்லாமல், "தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அனுபிராவிசத்" (உலகைப் படைத்து, அதனுள்ளே அவன் பிரவேசித்தான்) என்ற தைத்திரீய உபநிடத வாக்கியப்படி, அவன் ஒவ்வொரு அணுவிலும் புகுந்து நிற்கிறான்.

 

"ஆவேனும்" என்பது அவன் அந்தப் பொருட்களுக்கு ஆன்மாவாக இருந்து அவற்றைத் தாங்குவதைக் குறிக்கிறது. பொருட்களின் பெயர்களும் உருவங்களும் எம்பெருமானையே சாரும் என்ற "ஸாமாநாதிகரண்யம்" அதாவது, உலகப் பொருட்களைச் சொன்னாலும், அவற்றின் ஆதாரமாக இருப்பவன் எம்பெருமானே என்ற வைணவ தத்துவத்தை இது விளக்குகிறது.


கடல் ஞாலம் கொண்டேனும் யானே- உலகத்தைப் படைத்த எம்பெருமான் அதனைப் பாதுகாக்கிறான். மகாபலி சக்ரவர்த்தி போன்றவர்கள் "இது என் பூமி" என்று கர்வத்தோடு அதனைத் தன் வசப்படுத்த முயன்றபோது, எம்பெருமான் வாமனனாக வந்து, பின் திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகை மூவடிகளால் அளந்து மீட்டுக்கொண்டான். பராங்குச நாயகி கூறுகிறாள், "யாரோ மகாபலி சக்ரவர்த்தியாம், இந்த உலகம் தன்னுடையது என்று பறிக்க முயன்றபோது, நான் சென்று அதனை மீட்டு என் மூவடிகளால் அளந்து கொண்டேன்" என்று எம்பெருமானின் உரிமையை நிலைநாட்டுகிறாள்.


கடல் ஞாலம் கீண்டேனும் யானே- இரண்யாட்சன் என்ற அரக்கன் உலகைத் திருடிக்கொண்டு கடலின் அடியே ஒளித்து வைத்தான். அப்போது எம்பெருமான் ஒரு பெரிய வராக அவதாரம் எடுத்து, கடலில் மூழ்கி, பூமியைத் தனது கொம்பால் கீறி எடுத்து வந்தார். பூமி தன்னைக் காக்குமாறு அவனிடம் வேண்டவில்லை; ஆனால் அவனது கருணை (பரகத ஸ்வீகாரம்) தானாகவே முன்வந்து அதனைக் காத்தது. பராங்குச நாயகி, அந்தப் பேரருள் செயலைத் தானே செய்ததாகக் கூறுகிறாள்.


கடல் ஞாலம் உண்டேனும் யானே- மகா பிரளய காலத்தில், உலகம் முழுவதும் நீரால் அழியும் நிலை வந்தபோது, எம்பெருமான் அனைத்தையும் தன் திருவயிற்றுக்குள் அடக்கிக் காத்தான். ஒரு சிறு குழந்தையாக ஆலிலையில் துயின்ற அந்தப் பேரதிசயம் இங்கும் கூறப்படுகிறது. எம்பெருமான் எல்லாவற்றையும் உண்டு பாதுகாத்ததை பராங்குச நாயகி, "நானே உண்டேன்" என்று கூறுகிறாள்.


வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் இந்தப் பாசுரத்திற்கு அளிக்கும் விளக்கம் பக்தி ரசமும், எளிய உதாரணங்களும் நிறைந்தது. குறிப்பாக "ஆவேச நிலை" என்பதற்கு அவர் கூறும் உதாரணங்கள் சிந்திக்கத் தக்கவை.


ஒரு சாதாரண இரும்புத் துண்டு நெருப்பில் இடப்படும்போது, சிறிது நேரத்தில் அது சிவப்பாக மாறி நெருப்பின் வெப்பத்தையும் நிறத்தையும் பெறுகிறது. அப்போது அந்த இரும்புத் துண்டைத் தொட்டால் நெருப்பு சுடுவது போலவே சுடும். அதுபோல, ஆழ்வார் எம்பெருமானின் நினைவிலேயே மூழ்கி இருப்பதால், அவரது உள்ளத்தில் எம்பெருமான் புகுந்துவிட, ஆழ்வார் எம்பெருமானாகவே மாறிப் பேசுகிறார்.”


மேலும் சுவாமிகள் "கற்கின்றனவே" என்ற சொல்லிற்கு ஒரு விசேஷமான அர்த்தத்தைத் தருகிறார். இது வெறும் கல்வியல்ல; எம்பெருமானின் குணங்களை அனுபவத்தால் உணர்ந்து, அதை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதைக் குறிக்கிறது.


இதனை ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றான கைப்பாவையில் ஒரு பொம்மையை ஆட்டுவிப்பவன் திரைமறைவில் இருந்து கொண்டு அதைப் பேச வைப்பது போல, எம்பெருமான் ஆழ்வாரின் நாவிலிருந்து இக்கருத்துக்களைப் பேசுகிறான். இது ஆழ்வாரின் சுயமுயற்சி அல்ல, எம்பெருமானின் ஆவேசம்.


சங்க இலக்கியங்களில் அகப்பொருள் துறையில் "தாய் கூற்று" என்பது தலைவியின் மாற்றத்தைக் கண்டு தாய் கவலைப்படுவதைக் குறிக்கும். இங்கும் பராங்குச நாயகி உலகியல் ஆசையை விடுத்து, இறை பக்தியில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு, சமூகத்திற்கு அந்த வியப்பைத் தாய் வெளிப்படுத்துகிறாள். "என் மகள் கற்கின்றனவே" என்று வியக்கும் போது, அவளது அறியாமையையும், அவளுக்குள் புகுந்துள்ள பேரறிவையும் தாய் ஒப்பிடுகிறாள்.


இப்பாசுரத்தில் வரும் "யானே" என்ற சொல்லில் உள்ள '' காரம், எம்பெருமானைத் தவிர வேறு எந்த ஒரு காரணமும் உலகிற்கு இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. இது இறைவனின் தனித்துவமான மேன்மையை அதாவது பரத்வம் நிலைநாட்டுகிறது.


ஈசன் வந்து ஏறக்கொலோ?” என்ற வரி, ஒரு வினாவாக இருந்தாலும், அது எம்பெருமானின் ஆவேசத்தை உறுதிப்படுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவளது உடலில் எம்பெருமான் ஏறிவிட்டானோ என்று தாய் கேட்பது, ஆழ்வாரின் மாற்றத்திற்கு இறைவன் மட்டுமே காரணம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இங்குஈசன்என்பது சர்வேஸ்வரனாகிய ஸ்ரீமந்நாராயணனை குறிக்கிறது.


நம்மாழ்வாரின் 5.6.1 பாசுரம், பக்தியின் எல்லையை நமக்குக் காட்டுகிறது. எம்பெருமான் உலகைப் படைத்து, அதனுள் புகுந்து, காத்து, மீட்டு, தன்னுள் அடக்கிக் காக்கும் பரம்பொருள் என்ற உண்மையை ஆழ்வார் தன் அனுபவமாகவே மாற்றிக் கொள்கிறார். "கடல்-ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்" என்று தாய் கூறுவது போல, இந்த உலகியல் மனிதர்களுக்கு இந்த ஆழ்ந்த பக்தி நிலை எளிதில் புரியாது.


பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானம் இப்பாசுரத்தின் தத்துவப் பின்னணியை விளக்க, வேளுக்குடி சுவாமிகளின் உபன்யாசம் அதன் உணர்வுப்பூர்வமான பக்கத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. எம்பெருமானே வந்து நாயகியின் உடலில் ஆவேசித்து, தனது பெருமைகளைத் தனது அடியார் மூலமாகவே உலகிற்குச் சொல்கிறான் என்பதே இப்பாசுரத்தின் சாரம். இதன் மூலம், நான்என்பதே கரைந்து, அவன் மட்டுமே நிலைத்து நிற்கும் பரம பக்தி நிலையையே நம்மாழ்வார் இப்பாசுரத்தின் மூலம் நமக்குக் காட்டுகிறார். 


நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

Post a Comment

புதியது பழையவை