அதிகப் பார்வை

“செய்ய தமிழ் மாலைகள்” - கோமான் ஶ்ரீ பாலாஜி


பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார் 
தண் பொருநல் வரும் குருகேசன் விட்டுசித்தன்

துய்ய குலசேகரன் நம் பாணநாதன் 

தொண்டரடிப்பொடி மழிசை வந்த சோதி

வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும்

மங்கையர் கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும் 

செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்  

தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே


ஸ்வாமி வேதாந்த தேசிகர் அருளிச்செய்த அதிகாரசங்கிரகத்தின் முதற்பாசுரம் இதுஇப்பாசுரத்தில் பத்து ஆழ்வார்களின் திருநாமங்களை நயமாகக் குறிப்பிட்டுஅவர்கள் பகவதனுபவப் பரவசத்தில் அருளிச் செய்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப்  போற்றுகிறார்.


அந்த அருளிச்செயல்களை வெறும் பாடல்களாக அல்லாதுசெய்ய தமிழ்மாலை” எனப் பெருமைப்படுத்திஅவற்றின் அர்த்தத்தை உணர்ந்து கற்றவர்களுக்கு வேதங்களில் மறைந்திருக்கும் அரிய பொருள்கள் கூட தெளிவடைகின்றன என்று அருளுகிறார்"மறை நிலங்கள்" என்பது வேதத்தின் கடினமான பகுதிகள் என்று பொருள்படும். 


இங்கு கவனிக்கத்தக்க சிறப்பு என்னவெனில்நீங்கள் தெளிவடைவீர்கள் என்று சொல்லாமல்நாமும் தெளிவடைகின்றோம்” என்ற பாங்கில் தன்னையும் அடியார்களுடன் சேர்த்துக் கொள்கிறார் ஸ்வாமி வேதாந்த தேசிகர்இதுவே அவரது ஆழ்வார்கள் மேல் உள்ள அற்புதமான பக்தியையும்அவரின் அடக்க மனப்பான்மையும் வெளிப்படுத்துகிறதுஇதை வைணவத்தில் "நைச்சிய அனுசந்தானம்" (தன்னைத் தாழ்த்திக் கொண்டு பேசுதல்என்று சொல்வார்கள்.


அதிகாரசங்கிரகம் என்பது ஸ்வாமி வேதாந்த தேசிகர் அருளிய வடமொழி கிரந்தமான ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்’ என்னும் மாபெரும் வைணவ சித்தாந்த நூலின் ஒவ்வொரு அதிகாரத்தின் சாரார்த்தத்தைச் சுருக்கமாக எடுத்துரைக்கும் அருளிச்செயலாகும்.


இம்முதற்பாசுரத்தில் ஆண்டாள் பற்றி தனியாக குறிப்பிடப்படாததற்கும் அழகிய விளக்கம் உண்டுஆண்டாள்பெரியாழ்வார் அவர்களின் திருமகளாகவும்அவருடைய அருளும் வளர்ப்பும் பெற்றவராகவும் விளங்கியதால்ஆசார்ய பரம்பரையில் தந்தையே குருவாகக் கருதப்படும் மரபின்படிபெரியாழ்வார் பெயரிலேயே ஆண்டாள் அடங்கியிருக்கிறார் என்று பெரியோர் கூறுவர்மேலும்ஸ்வாமி வேதாந்த தேசிகர் அவர்களுக்கு ஆண்டாள்  மீது அளவற்ற பக்தி இருந்தது அனைவரும் அறிந்ததேஅதற்குச் சாட்சியாகவே அவர் அருளிச்செய்த கோதா ஸ்துதி’ விளங்குகிறது.


அதேபோல்இப்பாசுரத்தில் மதுரகவி ஆழ்வாரைப் பற்றியும் தனியாக குறிப்பிடப்படவில்லைகாரணம்மதுரகவி ஆழ்வார் அவர்களின் முழு வாழ்வும் நம்மாழ்வார் திருவடிகளிலேயே முழுமையாக லயித்திருந்ததுஅவருடைய ஆசார்ய பக்தி தனித்துவமுடையது என்பதைக் காட்டுவதற்காகவேஅடுத்தப் பாசுரத்தில் துன்பற்ற மதுரகவி என்று தனியே போற்றி அருள்கிறார் ஸ்வாமி வேதாந்த தேசிகர்இதன் மூலம்பகவத் பக்தியை விட ஆசார்ய பக்தியே உயர்ந்த மார்க்கம் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.


அதேபோன்று திருப்பாணாழ்வாரை நம் பாணன் என்று விசேஷமாக குறிப்பிடுகிறார் ஸ்வாமி தேசிகர்பாணரின் அமலனாதிபிரானை வடமொழியில் முனிவாஹனபோகம் என்று வியாக்யானம் அருளியுள்ளார்அந்தளவிற்கு பாணர் மேல் அவ்வளவு ஈடுபாடு ஸ்வாமிக்கு.


திருமழிசை ஆழ்வாரை "மழிசை வந்த சோதி" என்று தேசிகர் போற்றுவதற்குக் காரணம்அவர் பிற சமயங்களில் இருந்து வந்து வைணவத்தின் பரத்துவத்தை நிலைநாட்டிய ஒளியாகத் திகழ்ந்தவர் என்பதால்.


திருமங்கையாழ்வாரைப் பற்றி சொல்லும்போது வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும் என்று விவரித்து அவரின் கீர்த்தியை சொல்கிறார்மங்கையர்கோன் செல்லாத இடமில்லை அவர் பாடாதப் பெருமாளே இல்லை எனலாம்மற்ற ஆழ்வார்களை விட அதிகமான திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்தவர் திருமங்கையாழ்வார் என்பதால்அவரின் பயணமும்பக்திப் பரப்பும்வையம் எல்லாம்” என்ற சொல்லுக்கு உண்மையான பொருளாகவே அமைகிறதுவேடிக்கையாக சொல்வார் என் தந்தைஇந்தக் கோயிலில் கலியனின் பாசுரம் இல்லையென்றால் அக்கோயில் அவர் காலத்திற்கு பிற்பட்டதுஏனென்றால் கலியன் எந்தக் கோவிலின் கோபுரத்திலும் திருமண் இருந்தாலும் போய் ஒரு பத்து பாசுரம் பாடிவிட்டுத் தான் செல்வாராம்அவ்வளவு பரந்த மங்களாசாசன கைங்கர்யமும்அளவற்ற கீர்த்தியும் அவருக்கு உண்டுஅதனால்தான் ஸ்வாமி தேசிகர் இரண்டு வரிகளை திருமங்கையாழ்வார்க்கு இப்பாசுரத்தில் அருளியுள்ளார்.


இவ்வாறுஅதிகாரசங்கிரகத்தின் முதற்பாசுரம் திவ்யப் பிரபந்தத்தின் வேதசாரத்தையும்ஆழ்வார் அருளிச்செயல்களின் மகிமையையும்ஆசார்யர்களின் நைச்சிய அனுபவத்தையும் ஒரே இடத்தில் தொகுத்து நிற்கும் ‘அரிய மணியாக’ விளங்குகிறது


வேதாந்த தேசிகரே கண்டாவதாரம் தானே.


சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

Post a Comment

புதியது பழையவை