ஆவியே! அமுதே! என நினைந்து உருகி,
அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது, எத்தனை பகலும்
பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடும் புணரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது* என்
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் இளமையில் சிற்றின்பங்களில் மூழ்கி இருந்தவர். பிறகு திருக்குடந்தை ஆராவமுதனின் அருளால் மனம் திரும்பி, நாராயண மந்திரத்தின் மகிமையை உணர்ந்தவர். இந்தப் பாசுரம் அந்த உணர்வின் வெளிப்பாடே.
இரண்டு பகுதிகளாக இந்தப் பாசுரம் அமைந்துள்ளது — பூர்வாவஸ்தை (முந்தைய நிலை — தன் வருத்தம்) மற்றும் உத்தராவஸ்தை (பிந்தைய நிலை — தன் மகிழ்ச்சி).
ஆழ்வார் இளமையில், "ஆவியே! அமுதே!" என்று பெண்களிடம் காதல் வார்த்தைகளை வாரி இறைத்தார். இந்த வார்த்தைகள் உண்மையில் எம்பெருமானுக்கே உரியவை, ஆனால் அவற்றை சிற்றின்பத்தில் கொட்டி வீணாக்கினார்.
"ஆவியே ஆரமுதே" என்று எம்பெருமான் விஷயத்திலே சொல்ல வேண்டிய பாசுரங்களை ஸ்த்ரீகள் விஷயத்திலே சொல்லி…" என்று விளக்கமளிக்கிறார் காஞ்சி அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள்.
“பெண்களின் பணை முலையையே” — அதாவது அழகிய மார்பகங்களையே, தனக்கு ரட்சகமாக, துணையாகக் கருதினார். இறைவனை மட்டுமே துணையாகக் கொள்ள வேண்டிய நிலையில், உடலின்பத்தை நம்பினார்.
"பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்" — இதுவே இந்த பகுதியின் ஆன்மா.
"ஐயோ! நான் எத்தனை நாட்களை இதற்காக வீணாக்கினேன்!" என்று ஆழ்வார் வாய் விட்டு வருந்துகிறார். எண்ணிக்கை சொல்லவே முடியாது.
இது வெறும் வருத்தமல்ல — இது தான் ஸ்வரூப ஞானம் (தன் உண்மை நிலையை உணர்தல்) இதுவரை பக்தி எதுவும் இல்லாமல் வாழ்ந்ததற்கான ஆழமான அனுதாபம். இதுதான் பூர்வாவஸ்தை எனப்படுகிறது.
தன் தவறை உணர்ந்த ஆழ்வார், நேராகத் தஞ்சமடைவது திருக்குடந்தை (கும்பகோணம்) திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஆராவமுதப் பெருமானிடம். அந்தத் தலம் எப்படிப்பட்டது? நீர் நிலைகள் சூழ்ந்த அழகிய ஊர். அங்கே மென்மையான இறகுகளைக் கொண்ட அன்னப் பறவைகள் தன் துணையோடு (பேடையோடு) கூடி மகிழ்கின்றன.
"தூவிசேர் அன்னம் துணையொடும் புணரும் சூழ்புனல் குடந்தை”
அழகிய இறக்கைகளைக் கொண்ட அன்னப் பறவை, தன் துணையோடு மட்டுமே சேரும். வேறு பறவையோடு சேராது. நீர்நிலைகள் நிறைந்த திருக்குடந்தையில் இப்படிப்பட்ட அன்னங்கள் வாழ்கின்றன.
பெரியோர்கள் இந்த "அன்னம் - துணை" என்பதற்கு ஒரு சிறப்பான விளக்கம் அளிக்கிறார்கள்.
அன்னம்: எம்பெருமான் (விஷ்ணு).
துணை: மகாலட்சுமி தாயார்.
அதாவது, பெருமாளும் பிராட்டியும் ஒருவரை ஒருவர் பிரியாமல் நித்யவாசம் செய்யும் இடமே திருக்குடந்தை.
"நம்முடைய அபராதங்களைப் பொறுப்பிப்பவளும் பொறுப்பவனும் பிரியாதே வாழுமிடம்" என்று ஸ்வாமிகள் இதற்கு அர்த்தம் அளிக்கிறார். நம் பாவங்களை பிராட்டி பெருமாளிடம், தீர்த்து வைத்து, மன்னிப்பு வாங்கித் தருவாள். இங்கே இருவரும் ஒன்றாகவே இருக்கிறார்கள் என்பது தாற்பரியம்.
திருக்குடந்தை ஆராவமுதனை வணங்கி, "நாராயணா" என்னும் திருநாமத்தை — திருவஷ்டாக்ஷர மகா மந்திரத்தை — தன் நாவினால் சொல்லிப் பெற்றேன் என்று ஆழ்வார் மகிழ்கிறார்.
இதில் ஒரு நுட்பமான வலியும் இருக்கிறது.
அந்த வாய் — "ஆவியே! அமுதே!" என்று பெண்களிடம் பிதற்றிய அதே வாய் — இன்று "நாராயணா" என்று திருமந்திரம் சொல்கிறது!
வீணான வாய் இன்று பயனுள்ளதாயிற்று. "என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்" — இதில் "என் நாவினால்" என்பது அழுத்தமாக வருகிறது.
காரணம், அந்த நாவே முன்பு பாவம் செய்தது; அதே நாவால் இப்போது உய்வு பெற்றேன் என்பதில் அருளின் மகிமை புலனாகிறது.
இருளில் தவித்தவனுக்கு ஒரு பெருவிளக்குக் கிடைத்தது போலவும், தாகத்தால் தவித்தவனுக்குத் தீஞ்சுவை நீர் கிடைத்தது போலவும், தான் உய்யும் வழியை (மோட்சத்தை) அந்தத் திருநாமத்தின் மூலம் கண்டுகொண்டதாகப் பாடி முடிக்கிறார்.
எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும், இறைவனின் நாமத்தைச் சொல்லத் தொடங்கினால் நம் முன்வினைகள் நீங்கி வாழ்வு சிறக்கும்.
திருமங்கையாழ்வார் தன் வாழ்வின் அனுபவத்தையே பாடலாக வடித்து, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கும் "நாராயண" நாமமே கதி என்பதை மிக எளிமையாகவும் ஆழமாகவும் இப்பாசுரத்தில் உணர்த்தியுள்ளார்.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
14-04-2026

கருத்துரையிடுக