குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியின் ஏழாம் திருமொழியில் இப்பாசுரம் மனதை உருக்கக்கூடிய ஒரு பாசுரம். கண்ணனைப் பெற்றெடுத்தும், அவனை அணைத்து வளர்க்கும் பேறு பெறாத தாய் தேவகிப் பிராட்டியின் ஏக்கத்தையும், புலம்பலையும் தன் பாசுரங்கள் வழி ஆழ்வார் அப்படியே பிரதிபலிக்கிறார்.
கண்ணன் பிறந்த இரவே கம்சனின் சிறையிலிருந்து வசுதேவரால் கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டான். பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற தேவகிக்கு, தன் குழந்தையை மடியில் வைத்துத் தாலாட்டும் பாக்கியம் கிடைக்கவில்லை. அந்தத் தவிப்பே இப்பாசுரத்தின் ஆன்மா. குலசேகராழ்வார் தேவகியின் ஏக்கக் குரலில் இப்பாசுரத்தை அருளியுள்ளார். ஆனால் ஆழ்வாரின் தன்னுணர்வும் அந்தக் குரலோடு கரைந்து கலந்திருக்கிறது என்பதே இப்பாசுரத்தின் சிறப்பு.
இதோ பாசுரம்
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ!
அம்புயத் தடங்கண்ணினன் தாலோ!
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ!
வேழப் போதகம் அன்னவன் தாலோ!
ஏலவார் குழல் என் மகன் தாலோ!
என்று என்று உன்னை என் வாயிடை நிறைய
தால் ஒலித்திடும் திருவினை இல்லாத்
தாயரில் கடை ஆயின தாயே.
தேவகி தன் மகன் கண்ணனை ஐவகை அழகுகளால் வர்ணித்துப் போற்றுகிறாள்:
“ஆலை நீள் கரும்பு” - ஆலையிலிட்டுப் பிழியத்தக்க சாறு நிறைந்த முற்றிய கரும்பு போன்றவன் கண்ணன். கரும்புக்கு மேலே தோகை (மயிர்) இருப்பது போல, மயில்பீலி சூடிய கண்ணனும் இனிமை சொட்டும் கரும்பாகத் தோன்றுகிறான்.
“அம்புயத் தடங்கண்ணன்” - தாமரை இதழ் போன்ற நீண்ட, அகன்ற கண்களை உடையவன்.
“வேலை நீர் நிறத்தவன்” - கடல் நீரைப் போன்ற நீல நிற மேனியைக் கொண்டவன்.
“வேழப் போதகம்” - வெண்ணெய் உண்டு உருண்டு திரண்டு இருக்கும் கண்ணன், அசைந்து வரும் ஒரு கறுத்த யானைக் குட்டியைப் போல் காட்சியளிக்கிறான்.
“ஏலவார் குழல்” - மணம் மிக்க நீண்ட திருக்குழலை (கூந்தலை) உடைய என் மகன்.
இவ்வாறு தன் மகன் கண்ணனை வர்ணிக்கிறாள் தாய் தேவகி. ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
1. “ஆலை நீள் கரும்பு”
"ஆலையில் பிழிந்த நீண்ட கரும்பு போன்றவன்" என்று கண்ணனை வருணிக்கிறார். ஆலையில் இட்டு ஆட்டத்தகுந்த கரும்பு என்பது நன்றாக முற்றி, சாறு நிறைந்த கரும்பு. இந்த உவமை இரண்டு நிலைகளில் பொருந்துகிறது.
ஒன்று, நிறத்தில் — கரும்பு கருநீல நிறத்தில் இருக்கும், தலையில் நீண்ட இலைகளை தோகை போன்று கொண்டிருக்கும். கண்ணனும் கருநீல நிறத்தில், தலையில் மயில் பீலி சொருகி நிற்பான்.
இரண்டாவது, சுவையில் — உபநிஷத் "ரஸோ வை ஸஹ" என்று இறைவனை "இனிமையே வடிவானவன்" என்று சொல்கிறது. கரும்பு இனிமைக்கு நேர் உருவகமாதலால், “இன் சுவையே உருவெடுத்து வந்தவன்" என்ற ஆழமானப் பொருளும் இதில் மறைந்திருக்கிறது.
2. “அம்புயத் தடங்கண்”
அம்புயம் என்றால் தாமரை. அகன்ற, நீண்ட தாமரை மலர் போன்ற கண்கள். குழந்தை கண்ணனின் பெரிய, அப்பாவியான கண்களை ஒரு தாய் பார்க்கும் விதம் இதில் ஒளிந்திருக்கிறது. தாலாட்டும்போது தாய் குழந்தையின் கண்களையே பார்த்துக்கொண்டு பாடுவாள் — அந்தக் கண்களை இங்கே காண முடியாததை நினைத்து தேவகி ஏங்குகிறாள்.
3. “வேலை நீர் நிறம்”
கடல் நீரின் நிறம் — கரும்நீலம். கண்ணனின் திருமேனி நிறம் அது. கடல் எவ்வாறு எல்லை காணமுடியாத விசாலமானதோ, அவ்வாறே கண்ணனின் அழகும் அளவிட முடியாதது என்ற பொருளும் உண்டு.
4. “வேழப் போதகம்”
வேழம் என்றால் யானை; போதகம் என்றால் குட்டி. பால், வெண்ணெய், நெய் என்று தின்று, குண்டுக் குண்டாய், கம்பீரமாய் நடக்கும் குழந்தை கண்ணனை யானைக்குட்டிக்கு உவமைப்படுத்துவது எவ்வளவு இயல்பான அன்பின் வெளிப்பாடு! ஒரு தாயின் கண்ணில் தன் குழந்தை எப்போதும் கொழுகொழுவென்று அழகாகத்தான் தெரியும் — அந்த உணர்வையே இந்த உவமை சொல்கிறது.
5. “ஏல வார் குழல்”
ஏலம் என்பது நறுமணப் பொருள். ஏலக்காய் தான் அது. "மணம் மிக்க, நீண்ட திருக்குழல் கொண்ட என் மகன்" என்கிறாள். குழந்தையின் தலையில் முகம் புதைத்து முகர்வது — அது தாய்மைக்கு உரிய ஓர் இன்பம். தேவகி அந்த மணத்தை நுகரவே முடியாமல் போனது இங்கே மிகவும் உருக்கமாக பிரதிபலிக்கிறது.
'தால்' என்றால் நாக்கு என்று பொருள். நாவினை அசைத்து ஓசை எழுப்பி குழந்தையை உறங்கச் செய்வதால் இது தாலாட்டு (தால் + ஆட்டு) எனப்படுகிறது. "தாலேலோ" என்று நாவார அழைத்து, தன் வாய் நிறைய மகனைப் புகழ்ந்து பாடி உறங்க வைக்கும் அந்தப் பாக்கியத்தை (திருவினை) நான் இழந்துவிட்டேனே என்று தேவகி ஏங்குகிறாள். இங்கே ஆழ்வார் “தாலேலோ” என்று முழுதாய் முடிக்காமல் “தாலோ” என்று பாதியை மட்டும் அருளியுள்ளார். தன் மகன் அருகில் இல்லாத சோகத்தினால் “தாலோ” என்று குறைந்துவிட்டதோ என்னவோ.
பாசுரத்தின் இறுதி வரியில் வலி உச்சம் அடைகிறது. உலகில் எத்தனையோ தாய்மார்கள் இருக்கிறார்கள். ஆனால், பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தும், கைகளால் தொட்டுத் தழுவி, பால் கொடுத்து வளர்க்கும் வாய்ப்பின்றி, பிறந்த உடனே மகனைப் பிரிந்து போனதால், "தாயர்களில் நான் மிகவும் பாக்கியமற்றவள், கடைப்பட்டவள்" என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறாள் தேவகி. இன்பங்களை யசோதை அனுபவிக்க, தான் வெறும் 'பெற்றவள்' என்ற பெயரோடு மட்டும் நிற்பதை எண்ணி வருந்துகிறாள். அவளுக்கு எத்தனை பெரிய இழப்பு என்பதை இந்த ஒரே வரி நெஞ்சை நோகடித்துச் சொல்கிறது.
இந்த பாசுரம் வெறும் சொல்லடுக்கு அல்ல; குலசேகர ஆழ்வார் தேவகியின் இடத்திலிருந்து அனுபவித்த மன வேதனை. கண்ணனைப் பிரிந்த அந்தத் துயரம் ஆழ்வாரின் சொல்லாட்சியில் "என் வாயிடை நிறைய" என்ற வார்த்தையின் மூலம் வெளிப்படுகிறது. அதாவது, மகன் கண்ணனைப் புகழ்ந்து பாடினால் மட்டுமே ஒரு பெற்ற தாயின் வயிறு நிறைவடையும், அந்தத் திருப்தி தனக்குக் கிடைக்கவில்லை என்பதே தேவகியின் மனவலி.
இங்கே ஒன்றை நுணுகிக் கவனிக்க வேண்டும். தேவகி கண்ணனை பெற்றவள்; ஆனால் ஆழ்வார் கண்ணனை பெற்றதும் இல்லை, நேரில் கண்டதும் இல்லை. ஆனால் தேவகியின் மன வருத்தமாக எழுந்த இப்பாசுரத்தில் ஆழ்வாரின் ஏக்கம் எவ்வளவு ஆழமானது என்று புரிகிறது. ஆழ்வார் தேவகியின் வாயிலாக தன் சொந்தத் தாபத்தையே அருளியுள்ளார். அதுவே இந்தப் பாசுரத்தின் மிகப்பெரிய சிறப்பு. இந்த உருக்கமே பக்தி.
குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்.
13-04-2026

கருத்துரையிடுக