"ஏழை என்றும் பாரான்!" - கோமான் ஶ்ரீ பாலாஜி


காவிரி ஆற்றங்கரை. மாலை வேளை. மெல்லிய காற்று வீசுகிறது. ஆற்று நீர் மெல்ல ஓடிக்கொண்டிருக்கிறது. வரதன், அம்மா மண்டபத்தில் ஒரு படியில் தனியாக அமர்ந்து, சோகமாக ஆற்றை நோக்கிக் கொண்டிருக்கிறான். அவன் முகத்தில் கவலையும் ஏக்கமும் தெரிகிறது. அப்போது ரங்கன் அவனைத் தேடிக்கொண்டு வருகிறான்.
ரங்கன்: (வந்து அருகில் அமர்ந்து) வரதா! இங்கே தனியா உட்கார்ந்து என்ன யோசிக்கிறாய்? எல்லா இடமும் தேடி பார்த்தேன். உனக்கு என்ன ஆச்சு?
வரதன்: (நீண்ட மூச்சு விட்டபடி) ரங்கா, எனக்கு நிம்மதியே இல்லை. மனசு ரொம்ப கலங்கியிருக்கு.
ரங்கன்: என்ன கவலை? எனக்குச் சொல்லு.
வரதன்: (முகம் வாடி) பார் ரங்கா, நான் யார்? பெரிய படிப்பாளியா? இல்லை. பணக்காரனா? இல்லை. சமூகத்தில் பெரிய அந்தஸ்து ஏதாவது இருக்கா? அதுவும் இல்லை. உதவாக்கரை தானே.
ரங்கன்: (கவலையுடன்) வரதா! ஏன் இப்படித் தாழ்வு மனப்பான்மையோடு பேசுகிறாய்? இது நம் கலாச்சாரத்தில் இல்லாத எண்ணம். உனக்கு ஒரு அற்புதமான கதை சொல்கிறேன், கேள்.
வரதன்: என்ன கதை?
ரங்கன்: இராமாயணத்தில் குகன் என்று ஒரு வேடன் இருந்தான் தெரியுமா?
வரதன்: (சிந்தித்து) தெரியும் ரங்கா. காட்டில் வாழ்ந்த வேடன் தானே அவன்? கங்கை ஆற்றைக் கடக்க இராமனுக்கு உதவினவன் என்று கேள்விப்பட்டிருக்கேன்.
ரங்கன்: சரியாகச் சொன்னாய். அவன் சாதாரண வேடன் அல்ல, அந்த வேடர்கள் கூட்டத்திற்கே தலைவன். ஆனால், அவனைப் பற்றி திருமங்கையாழ்வார் என்ன சொல்கிறார் தெரியுமா? அவர் குகனைப் பற்றிச் சொல்லும்போது அவனிடம் இருந்த மூன்று பெரிய குறைகளைச் சுட்டிக் காட்டுகிறார். முதல் குறை - "ஏழை".
வரதன்: ஏழை என்றால் ஏழ்மை நிலையா?
ரங்கன்: இல்லை வரதா, இங்கே "ஏழை" என்பது பொருளாதாரத்தை குறிக்கவில்லை. குகனுக்கு ஆன்மீக அறிவே கிடையாது, வேதம் படிக்கவில்லை, சாஸ்திரம் தெரியாது என்ற பொருளில் "ஆன்மீக ஏழை" என்று சொல்கிறார். அதாவது, கல்வியறிவில்லாதவன். இரண்டாவதா, "ஏதலன்" - இது இன்னும் முக்கியமானது.
வரதன்: "ஏதலன்" என்றால் என்ன பொருள்?
ரங்கன்: "அந்நியன்" என்று பொருள். இராமனுக்கு அவன் உறவினனும் இல்லை, நண்பனும் இல்லை, முன்பின் அறிமுகம் இல்லாத புதியவன். கோசல ராஜ குடும்பத்துக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அடுத்து, "கீழ்மகன்" - இதுதான் மிக முக்கியமானது.
வரதன்: (குழப்பத்துடன்) கீழ்மகன் என்றால்?
ரங்கன்: அந்தக் காலத்து சமூக அமைப்பின்படி, குகன், உயர்ந்த ஆசாரமான குலத்தில் பிறந்தவன் இல்லை. வனத்தில் வாழும் வேடர் குலத்தைச் சேர்ந்தவன்.
வரதன்: அப்போ குகன் எப்படி இராமனை சந்தித்திருப்பான்?
ரங்கன்: அதுதான் இந்தக் கதையின் அழகு வரதா! மனிதர்கள் செய்யாததை கடவுள் செய்தான். இராமன் என்ன செய்தான் தெரியுமா?
வரதன்: (ஆவலுடன்) என்ன செய்தான்?
ரங்கன்: "என்னாது இரங்கி" - திருமங்கையாழ்வார் இதை மிக அழகாகச் சொல்கிறார். "என்னாது" என்றால் "சொல்லாமல்" அல்லது "கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்" என்று பொருள். அவனை கீழ் உள்ளவன் என்று என்னாது இருந்தவன் இராமன்.
"இவன் கல்வி இல்லாதவன், அந்நியன், கீழ்குலத்தில் பிறந்தவன்" என்று சொல்லாமல், அவன்மேல் கருணை காட்டினான். "இரங்கி" என்றால் கருணை செய்தான் என்று பொருள்.
வரதன்: (ஆச்சரியத்துடன்) என்னே அவரின் கருணை.
ரங்கன்: (உணர்ச்சியுடன்) கருணை மட்டுமல்ல வரதா! ஒரு புதிய உறவுமுறையையே உருவாக்கினான். இதைத்தான் கேட்கும்போது நெஞ்சம் உருகும்.
வரதன்: எப்படி?
ரங்கன்: முதலில் சீதையை ஓரக்கண்ணில் பார்த்து விட்டு திரும்பிய இராமன் "உன் தோழி" என்றான்.
வரதன்: (குழப்பத்துடன்) யார் யாருடைய தோழி?
ரங்கன்: குகனிடம் இராமன் "சீதை உனக்கு தோழி" என்று சொன்னான். கவனி வரதா, "அண்ணி" என்றோ “அக்கா” என்றோ சொல்லவில்லை. "தோழி" என்றான். இதில் என்ன அர்த்தம் தெரியுமா?
வரதன்: என்ன அர்த்தம்?
ரங்கன்: "அண்ணி" என்று சொன்னால் ஒரு இடைவெளி இருக்கும். மரியாதை இருக்கும். ஆனால் "தோழி" என்றால் சமமானவள், நெருக்கமானவள் என்று பொருள். அந்த அளவுக்கு குகனுக்கு உரிமை கொடுத்தான் இராமன்.
வரதன்: (வியப்புடன்) ஒரு சக்கரவர்த்தியின் மனைவி, வேடனிடம் தன் மனைவியை அவனுடைய தோழி என்று சொல்வதா?
ரங்கன்: உடன் அவன் தம்பி இலக்குவனைப் பார்த்து என்ன சொன்னான் தெரியுமா? "உம்பி எம்பி" என்றான்.
வரதன்: "உம்பி எம்பி" என்றால் என்ன?
ரங்கன்: "என் தம்பி இனி உனக்கும் தம்பி" என்று பொருள். குகனைப் பார்த்து தன் இளையவன் லட்சுமனனை கைகாட்டி "இவன் எனக்கு மட்டும் தம்பி இல்லை, உனக்கும் தம்பி" என்று சொன்னான்.
ரங்கன்: (உணர்ச்சிவசப்பட்டு) கடைசியாக, "நீ என் உயிர் தோழன்" என்று சொல்லி, அவனைக் கட்டித் தழுவினான்! "தோழன்" என்றால் நண்பன். "உயிர் தோழன்" என்றால் உயிரைப் போல மதிக்கும் நண்பன், பிரிக்க முடியாத நண்பன் என்று பொருள்.
வரதன்: ஒரு சக்கரவர்த்தி மகன், ஒரு வேடனைப் பார்த்து "உயிர் தோழன்" என்று சொல்வது? கட்டித் தழுவுவது இதெல்லாம் நம்ப முடியவில்லையே?
ரங்கன்: அதுதான் இராமனின் பெருமை வரதா. மனிதர்கள் குலம், செல்வம், படிப்பு இவற்றைப் பார்ப்பார்கள். ஆனால் கடவுள் இதயத்தைப் பார்க்கிறான். குகன் இதயத்தில் இருந்த தூய அன்பை இராமன் பார்த்தான். இதனைத்தான் நம்மாழ்வாரோ "கற்பார் இராமபிரானை அல்லால் கற்பாரோ" என்று தன் பாசுரத்தில் அருளிச் செய்திருப்பார். நம் ஆண்டாள் நாச்சியாரும் "மனத்துக்கினியான்" என்று இராமனை போற்றி பாடுவாள். இதைத்தான் 'சௌசீல்யம்' என்று சொல்வார்கள் வரதா.
வரதன்: ‘சௌசீல்யம்’ என்றால் என்ன?
ரங்கன்: "நீர்மை குணம்" என்று பொருள். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், தாழ்ந்த இடத்தில் இருப்பவரோடு கலந்து பழகுவது, அவர்களை அரவணைப்பது. பெருமையுள்ளவர் தன் பெருமையை மறந்து சாதாரண மக்களோடு சேர்ந்து பழகுவது. சொல்லப்போனால் இராமன் ஒரு சக்கரவர்த்தி மகன். அயோத்தியின் இளவரசன். சூரிய வம்சத்தில் பிறந்தவன். அவருக்கு அப்படி ஒரு உயர்வு இருக்கும்போது, ஒரு வேடனை ஏன் நெருங்க வேண்டும்? தூரத்திலேயே நின்று "வா குகா, எங்களுக்கு படகு கொண்டு வா" என்று சொல்லியிருக்கலாம் அல்லவா?
வரதன்: ஆமாம், அதுதான் சாதாரணமாக எல்லோரும் செய்வார்கள்.
ரங்கன்: ஆனால் இராமன் அப்படிச் செய்யவில்லை. குகனை அணைத்துக்கொண்டான், தம்பி என்றான், தோழன் என்றான். தன் உயர்வை மறந்து, குகனின் அன்பை ஏற்றுக்கொண்டான். இதுதான் சௌசீல்யம். மேலும், குகன் இராமனைப் பிரிய மனமில்லாமல், "நானும் காட்டுக்கு வருகிறேன்" என்று அழுது நின்றான். ஆனால் இராமன், "இங்கு ஒழி" (நீ இங்கேயே இரு) என்றான். "குகனே! பரதன் எப்படி அயோத்தியை ஆள்கிறானோ, அப்படி நீ இந்த வனத்தை ஆள வேண்டும். நீ வேறு, நான் வேறு இல்லை. நீ இங்கேயே இருப்பது, நான் இருப்பது போலத்தான்" என்று அவனுக்குத் தன்னுடைய இடத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.
வரதன்: (நெகிழ்ச்சியுடன்) என்ன ஒரு நம்பிக்கை! சரி ரங்கா, திருமங்கையாழ்வார் இந்தக் கதையைச் சொன்னதின் நோக்கம் என்ன?
ரங்கன்: (சிரித்து) நல்ல கேள்வி வரதா. ஆழ்வார் கதையைச் சொல்வதோடு நிற்கவில்லை. அவர் இறுதியில் அழுது வேண்டுகிறார்.
வரதன்: என்ன வேண்டுகிறார்?
ரங்கன்: "இராமா! குகனிடம் நீ காட்டிய அந்தப் பாசத்தை, அந்தச் சௌசீல்யத்தை, அந்த நீர்மை குணத்தை எனக்கும் காட்டு" என்று வேண்டுகிறார்.
வரதன்: ஓ! ஆழ்வார் தன்னையும் குகனைப் போலத்தான் நினைக்கிறாரா?
ரங்கன்: ஆமாம் வரதா. "நானும் ஆன்மீக அறிவில் ஏழை, உனக்கு அந்நியன், கீழான நிலையில் இருப்பவன். அதனால் குகனுக்குக் கொடுத்த அன்பை எனக்கும் கொடு" என்று கெஞ்சுகிறார்.
குகன் இராமனின் பாதங்களைக் கழுவினான், அவருக்குத் தன்னால் முடிந்த சேவை செய்தான். படிப்பும் இல்லை, பணமும் இல்லை, ஆனால் சேவை மனப்பான்மை இருந்தது. அதைத்தான் இராமன் விரும்பினான்.
வரதன்: (எழுந்து நின்று, கண்களில் கண்ணீருடன்) ரங்கா! என் கவலைகள் எல்லாம் பறந்து போய்விட்டன. என் மனதில் இருந்த சுமை இப்போது இல்லை.
ரங்கன்: (சிரித்து) அதுதான் வேண்டும் வரதா. நினைவில் வைத்துக்கொள் - கடவுள் ஏழையையும் பணக்காரனையும், படித்தவனையும் படிக்காதவனையும், உயர்குலத்தையும் தாழ்குலத்தையும் ஒன்றாகப் பார்க்கிறான். எல்லோரும் அவனுக்கு சமம். வித்தியாசம் ஒன்றுதான் - எவ்வளவு அன்போடு அவனை அணுகுகிறாய் என்பதுதான்.
வரதன்: (ஆனந்தக் கண்ணீருடன்) நன்றி ரங்கா! இந்தக் கதை என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இனிமேல் நான் தலைகுனிந்து நடக்க மாட்டேன். தைரியமாக, அன்போடு கடவுளை அணுகுவேன்.
ரங்கன்: (அன்புடன் தோளைத் தட்டி) அதுதான் வரதா நான் உன்னிடம் பார்க்க விரும்புவது. குகனைப் போல தூய இதயத்துடன் இரு, கடவுள் உன்னை நிச்சயம் அரவணைப்பான். சரி இப்போது முழுப் பாசுரத்தையும் பார்ப்போமா…

ஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது
இரங்கி, மற்று அவற்கு இன் அருள் சுரந்து,
மாழை மான் மட நோக்கி உன் தோழி,
உம்பி எம்பி என்று ஒழிந்திலை* உகந்து
தோழன் நீ எனக்கு, இங்கு ஒழி என்ற
சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட*
ஆழி வண்ண! நின் அடியிணை அடைந்தேன்,
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே!
ரங்கன்: வரதா, கவிச்சக்கரவர்த்தி கம்பரும் இந்த ஆழ்வார் பாசுரத்தால் ஈர்க்கப்பட்டு, சுந்தர காண்டம் காட்சிப் படலத்தில் ஒரு அற்புதம் செய்திருக்கிறார். அசோகவனத்தில் சீதை, இராமனின் குணங்களை நினைத்துப் பார்க்கிறாள். அப்போது அவள் நினைவில் வருவது குகன் தான்!
“ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, 'எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி' எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்.”
ஆழ்வார் "தோழி" என்றார், கம்பர் அதை இன்னும் உரிமையோடு "கொழுந்தி" (மைத்துனி) என்று உறவு முறை ஆக்கிவிட்டார். அந்த நட்பை நினைத்து சீதையே மயங்கி விழுந்தாளாம்!
வரதன்: (உற்சாகத்துடன்) ரங்கா! என் தாழ்வு மனப்பான்மை முற்றிலும் போய்விட்டது. குகனை ஏற்றவன், என்னையும் ஏற்பான். வா, அரங்கனைச் சேவிக்கப் போவோம்.
(பாசுரம் பாடியபடி செல்கிறார்கள்.)
நாராயண! நாராயண!!

12-04-2026

Post a Comment

புதியது பழையவை