வியாழன், 9 நவம்பர், 2017

ராமானுஜரின் திவ்யப் பிரபந்த ஈடுபாடு - முனைவர். இரா.வ.கமலக்கண்ணன்

ராமானுஜர் சமயக் கருத்துகளைக் கூற ஏற்ற மொழியாக இருந்த காரணத்தால், வடமொழியில் ஒன்பது நூல்களை இயற்றினார். ஆனால் தமிழ் நூல்கள் எதற்கும் விளக்கவுரை எழுதவில்லை. இதனால் இவருக்குத் தமிழ்ப் புலமை குறைவாக இருக்குமோ என்று கருதுபவரும் உண்டு.

இவர் இயற்றிய தனியன்கள்: (நூலை விட்டு தனியே இருப்பது தனியன்)

‘வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்குவந்தன் வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள், மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல்
--- உடையவர் இயற்றிய பெரிய திருமொழித் தனியன்.

தம்மை ஒரு தலைவியாகக் கருதிப் பாடிய பெருமாள் திருமொழித் தனியன்:

‘ இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தன்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலை சேர் நுதலியர்வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு

‘சீரார் திரு வெழுகூற்றிருக்கை யென்னும் செந்தமிழால்
ஆராவமுதன் குடந்தைப் பிரான் தன் அடியிணைக் கீழ்
ஏரார் மறைப்பொருள் எல்லாம் எடுத்திவ்வுலகுய்யவே
சோராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணை நமக்கே
என்கிறது திருவெழுகூற்றிருக்கை தனியன்.

திவ்யப் பிரபந்த ஈடுபாடு

திருப்பாவையில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினால், ‘திருப்பாவை ஜீயர் என்ற பட்டம் பெற்றார். ராமானுஜர் உரை, நயங்களாகவும் ஆட்சிகளாகவும் ஈட்டு உரையில் பல குறிப்புகள் உள்ளன. ஒரு நாள் உலாவச் சென்றவர் பாதியிலேயே திரும்பிவிட்டார். திருமடத்திலிருந்த எம்பார் கதவைத் திறந்த படி, ‘ திருமாலிருஞ் சோலை மலைத் திருவாய்மொழி திருவுள்ளத்தில் ஓடுகிறது போலும்? என்று வினவ, இவரும் ‘ஆம்; அப்படியே என்று கூறினார்.

தம் அரிய சீடர் கூரத்தாழ்வான் பரமபதித்தபோது, உடையவர் அவரது பிரிவைத் தாங்காமல், (பெரியாழ்வார் திருமொழிப்பாசுரத்தைப்பாடி) ‘ஒரு மகள் தன்னை உடையேன் என்றும், ‘உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்ந்தேன் என்றும், ‘செங்கண்மால் தான் கொண்டு போனான் என்றும் அருளிச் செய்தார் என்று பிரசித்தமிறே என்பது மணவாள மாமுனிகளின் உரைக் குறிப்பு. மேலும் இவர் திவ்யப் பிரபந்தப் பாசுரத் தொடர்களுக்கு நுட்பமான உரைகளை உரைத்துள்ளார்.

‘வான் திகழும் சோலை, என்று தொடங்கும் திருவாய்மொழித் தனியனில், ‘தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன், மொய்ம்யில் வளர்த்த இதத் தாய் இராமானுஜன் என்று கூறப்பட்டுள்ளது. திருவாய்மொழியை இவர் எவ்வாறு வளர்த்தார்? எனின், வியாக்கியானங்கள் தோன்ற நியமித்தார். ‘திருத்தலங்களில் இன்னின்ன சமயங்களில் இன்னின்ன பாசுரங்களை சேவிக்க வேண்டும் என்று கட்டளை வகுத்தார்.

ஸ்ரீ பாஷ்யம் வரைந்தபோது, ‘பாஷியக்காரர் இது கொண்டு சூத்திர வாக்கியங்கள் ஒருங்க விடுவர் என்னும் ஆசாரிய இருதய சூத்திரப்படி ஸ்ரீபாஷியத்தின் நிதியான பொருட்களை ஆழ்வாருடைய திருவாய்மொழியைக் கொண்டு நிர்ணயித்து ஒருங்கவிட்டார். இங்ஙனம் பலவகையிலும் தமிழ்மறையின் ஏற்றத்திற்கு எம்பெருமானார் பாடுபட்டதால், “மாறன் உரை செய் தமிழ்மறை வளர்த்தோன் வாழியே என்று வாழித் திருநாமப்பாடலில் மணவாள மாமுனிகள் குறிப்பிட்டார்.

மேலும் அவர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து அவர் மேல், ‘இராமாநுச நூற்றந்தாதி பாடிய திருவரங்கத்தமுதனார் தம் நூலில்,‘சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அறநெறியாவும் தெரிந்தவன் (44) என்றும், ‘உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும் திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணம்திகழ் கொண்டல் குலக்கொழுந்து இராமானுஜன் (60) என்றும் போற்றிப் பாடியுள்ளார்.

திருவாய்மொழிக்கு ஒரு தனியன் பாடிய அனந்தாழ்வான் என்பவர், ‘ஏய்ந்த பெருங் கீர்த்தி இராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெருஞ்சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற என்று உடையவரின் திருவடிகளை வேண்டுகிறார்.

பெரிய திருமொழிக்கு ஒரு தனியன் பாடிய எம்பார் என்பவரும்,

‘எங்கள் கதியே இராமாநுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்
மங்கையர் குகான் ஈந்த மறையாயிர மனைத்தும்
தங்கு மனம் நீ யெனக்குத் தா என்று உடையவரை முன்னிலைப்படுத்தி விண்ணப்பிக்கிறார். அரையர் சேவை நடைபெற ஊக்கமளித்தார். இவ்வகையில் உடையவரின் பணிகள் அமையாமல் இருந்திருப்பின் நாதமுனிகளின் காலத்திற்கு முன் இருந்த நிலையிலேயே திவ்யப் பிரபந்தங்கள் அமைந்திருக்கும். அந்நிலை நேரா வண்ணம் இவர் பலவகையில் திவ்யப் பிரபந்தங்களுக்கு ஏற்றமளித்துப் பாதுகாத்தார்.

நன்றி - தி இந்து

திங்கள், 18 செப்டம்பர், 2017

எளியோருக்கும் இரங்கிய ஸ்ரீராமாநுஜர் - எஸ்.கண்ணன் கோபாலன்

புண்ணிய பாரதத்தில் எத்தனையோ மகான்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுள் தனிச்சிறப்பு கொண்டவர் அந்த மகான். மிகப் பெரிய தத்துவ ஞானியாக இருந்தாலும் ஏழை எளியவர்களிடமும், சமூகத்தால், 'பிற்படுத்தப்பட்டவர்கள்' என்று ஒதுக்கப்பட்டவர்களிடமும் அளப்பரிய அன்பும் இரக்கமும் கொண்டார்.

அவர்களுக்காகவே நம்முடைய மதம் சார்ந்த கோட்பாடுகளை எளிமைப்படுத்தினார். அவர்களும் ஆலயத்துக்குச் சென்று வழிபட வழிவகுத்தார். எல்லோருக்கும் இறைவனின் அருள் கிடைக்கவேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தார். அந்த அளவுக்கு அவர் ஏழை எளியவர்களிடம் இரக்கம் கொண்டிருந்தார்.''

பல இடங்களில் தாம் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் சுவாமி விவேகானந்தர் பரவசத்துடனும் நெகிழ்ச்சியுடனும் குறிப்பிட்ட அந்த மகான் ஸ்ரீராமாநுஜர்.

1017-ம் ஆண்டுஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவசோமயாஜி - காந்திமதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ஸ்ரீராமாநுஜர். 1,000-மாவது ஜயந்தி கொண்டாடப்படும் இந்த வருடத்தில் அவருடைய  சரிதத்தில் இருந்து சில நிகழ்ச்சிகளை இங்கே கொடுத்திருக்கிறோம்...

துறவு மேற்கொள்ளுதல்

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே உரிய ஆசார அனுஷ்டானங்களைத் தீவிரமாகக் கடைப்பிடித்த ஸ்ரீராமாநுஜரின் வைஷ்ணவப் பற்றும் பக்தியும் தீவிரமாக வளர்ந்தன. ஒரு கட்டத்தில் காஞ்சி வரதராஜ பெருமாளின் சந்நிதியில் துறவறம் மேற்கொண்டார். `யதிராஜர்என்ற பட்டப்பெயரும் பெற்றார். வரதராஜ பெருமாளின் கட்டளைப்படியே ஒவ்வொரு செயலையும் செய்ய முற்பட்டார். இந்த நிலையில் ஸ்ரீரங்கத்துக்கு வந்து அரங்கன் கோயில் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ளும்படியாக ஆளவந்தாரிடம் இருந்து தகவல் வந்தது. வரதராஜ பெருமாளின் உத்தரவினைப் பெற்றுக்கொண்ட பிறகே ஸ்ரீரங்கத்துக்குச் சென்று திருக்கோயில் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார். பூஜா கிரமங்களை ஒழுங்குபடுத்தினார். திவ்வியப்பிரபந்த பாராயணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

"நீரே எம்பெருமானார்"

திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் மந்திரோபதேசம் பெற விரும்பினார் ராமாநுஜர். மந்திரோபதேசம் பெறுவதற்காகப் பலமுறை திருக்கோஷ்டியூருக்கு நடையாக நடந்தார். இறுதியில், அவருக்கு மந்திரோபதேசம் செய்த நம்பி, ``அந்த மந்திரத்தை யாருக்கும் உபதேசம் செய்யக் கூடாது; மீறினால் நரகமே கிடைக்கும்’’ என்றும் எச்சரித்தார். ஆனால், எல்லோரையும் கடைத்தேற்ற அவதரித்த ராமாநுஜர், ``ஊராரே வாரீர், உலகத்தாரே வாரீர், நீங்கள் அனைவரும் உய்யும் வண்ணம் மந்திரோபதேசம் செய்கிறேன்’’ என்று அழைத்து, நம்பியிடம் தாம் பெற்ற அஷ்டாட்சர மந்திரமான `ஓம் நமோ நாராயணாய' என்னும் திவ்விய மந்திரத்தை உபதேசித்தார். அது பற்றிக் கேள்விப்பட்ட நம்பி, ராமாநுஜரை அழைத்தார். ``நான் சொன்னதை மீறினால், உனக்கு நரகம் கிடைக்கும் என்பது தெரியாதா?'' என்று கேட்டார். அதற்கு ராமாநுஜர், ``ஐயனே, தாங்கள் சொல்லியபடி நான் நரகத்துக்குப் போனாலும், உபதேசம் பெற்ற ஆயிரக்கணக்கானவர்கள் நலம் பெறுவார்களே... அதுவே எனக்குப் போதும்'' என்றார்.

உடனே திருக்கோஷ்டியூர் நம்பி, ராமாநுஜரை அணைத்துக்கொண்டு, ராமாநுஜரே தம்முடைய பெருமான் என்ற பொருளில் "நீரே எம்பெருமானார்" என்று பாராட்டி ஆசி கூறினார்.

மகான் வகுத்த திட்டம்

ஒருமுறை ராமாநுஜர், திருவரங்கத்தில் கொள்ளிடக்கரையின் பக்கமாக வந்துகொண்டிருந்தார். அப்போது, உறங்காவில்லி என்ற பயில்வான் தன்னுடைய அழகான மனைவியின் மேல் வெயில்படக் கூடாது என்பதற்காகக் குடை பிடித்துக்கொண்டு வந்தார். ராமாநுஜருடன் சென்ற
வர்கள், ``உறங்காவில்லி மனைவிக்கு தாசன்'' என்று ஏளனம் செய்தனர். அதற்கு ராமாநுஜர், ``அவர் தன்னுடைய மனைவியின் அழகில் மயங்கி இருக்கிறார். அவர் அழகே உருவான அரங்கனைக் கண்டுவிட்டால், அரங்கனுக்கு தாசனாகி விடுவார்'' என்றார்.

அதேபோல் அவரைப் பெருமாள் தரிசனத்துக்கு அழைத்து வந்தார். திருமாலின் அளவிலாத அழகில் மனத்தைப் பறிகொடுத்த உறங்காவில்லிதீவிர பக்தனாக மாறினார். அவரும் அவருடைய மனைவி பொன்னாத்தாளும் ராமாநுஜரின் தொண்டில் ஈடுபட்டார்கள்.

குலத்தால் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்பட்ட உறங்காவில்லி, ராமாநுஜரின் சீடர் ஆனார். ராமாநுஜர், காவிரியில் நீராடிவிட்டு அவருடைய தோளில் கைவைத்த வண்ணம் படியேறி வந்தார். உயர்குலத்தோரான சிலருக்கு இது பிடிக்கவில்லை. அதனால், ராமாநுஜர் மீது புகார் கூறினார்கள். உறங்காவில்லியின் பெருந்தன்மையை உணர்த்துவதற்காக ஒரு திட்டம் வகுத்தார் ராமாநுஜர்.

அன்று இரவு சீடர்கள் சிலரை அனுப்பி, உறங்காவில்லியின் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி பொன்னாத்தாளின் நகைகளைக் கவர்ந்து வரச் செய்தார். மறுநாள் காலையில், அந்த  உயர்குலத்தோர் அவர் குடிசைக்குப் போனபோது, உறங்காவில்லி தனது மனைவியிடம், ``உன் உடம்பில் இன்னும் சில நகைகள் உள்ளனவே? இவற்றையும் அந்த ஏழைகள் எடுத்துச் செல்ல விட்டிருக்கலாமே?'' என்று கூறக் கேட்டார்கள். தங்களைக் காட்டிலும் உறங்காவில்லி பண்பால் உயர்ந்தவர், என்பதைப் புரிந்துகொண்டார்கள். அவர் மீது தனி அன்புகாட்டிய ராமாநுஜரை உயர்வாக மதிக்க முற்பட்டார்கள்.

மேல்கோட்டை விஜயம்

அந்தக் காலத்தில் சோழ தேசத்தை ஆட்சிசெய்த குலோத்துங்கன், வைஷ்ணவர்களிடம் துவேஷம் காட்டியபடியால், ராமாநுஜர் திருவரங்கத்தில் இருந்து புறப்பட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள `மேல்கோட்டைஎன்னும் திருநாராயணபுரத்துக்குச் சென்றார். அங்கே மறைந்திருந்த பெருமாள், அவருக்கு தரிசனம் தந்தார். பெருமாளுக்குக் கோயில் எழுப்பிய ராமாநுஜர், பெருமாளை வழிபட்டுக்கொண்டு  அங்கேயே பல ஆண்டுகள் தங்கி இருந்தார்.

தொண்டனூரில் ஒரு சாகரம்

அந்தக் காலத்தில் மேல்கோட்டை பிரதேசமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருந்தது. பெய்யும் மழை நீர் எல்லாம் தேங்க வழியில்லாமல் வீணாகிப்போனது. அப்போது, அங்கிருந்த தொண்டனூர் என்ற இடத்தில் மூன்று குன்றுகள் இருந்தது ராமாநுஜரின் பார்வையில் பட்டது. மூன்று குன்றுகளுக்கும் இடையில் இடைவெளி இருந்தது. உடனே ராமாநுஜரின் மனதில் ஒரு திட்டம் உருவானது. தம்முடைய சீடர்களுடன் மேலும் பல ஆட்களையும் திரட்டி, மூன்று குன்றுகளுக்கும் இடையில் இருந்த பகுதியை எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமாகத் தோண்ட முடியுமோ, அந்த அளவுக்கு ஆழமாகத் தோண்டச் செய்து, அந்த மண்ணைக்கொண்டே குன்றுகளுக்கு இடையில் இருந்த இடைவெளியை அடைத்து உறுதிப்படுத்தச் செய்தார். அதன் பயனாக ஒரு பெரிய ஏரி உருவானது. மிகப் பெரிய அளவில் ஸ்ரீராமாநுஜரால் ஏற்படுத்தப்பட்ட தொண்டனூர் ஏரி ஒரு கடல் போல் தோற்றம் அளித்தது. பின்னர் வந்த மழையால் அந்த ஏரி நிரம்பி, அந்தப் பகுதியில் இருந்த வறட்சியை காணாமல் போகச் செய்தது. இன்றைக்கும் அந்த ஏரியைக் காணலாம்.

பெண் சிஷ்யைகள்

ராமாநுஜர் தம்முடைய முதிர்ந்த பருவத்திலும் அனைத்து உயிர்களிடத்திலும் அரங்கனையே தரிசித்தார். ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் அவருடைய கோட்பாடுகளைப் பின்பற்றினார்கள். தம்மைப் பின்பற்றியவர்களில் பக்திகொண்ட பெண்மணிகளை சிஷ்யையாக ஏற்றுக்கொண்டார். பொன்னாச்சி, திருவட்டானு அம்மை, திருவான் பரிசரத்து அம்மை போன்ற பலரையும் சிஷ்யைகளாக ஏற்றுக்கொண்டார்.

ஸ்ரீராமாநுஜரின் திருமேனிகள்

ஸ்ரீராமாநுஜரின் மூன்று திருமேனிகள் மிகவும் விசேஷமானவை.

தமர் உகந்த திருமேனி: கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டை, ராமாநுஜருக்கு மிகவும் பிரியமான தலம். இங்கே அவர் சுமார் 12 ஆண்டுகள் தங்கி இருந்தார். மேல்கோட்டையில் இருந்து புறப்படும்போது அவருடைய சீடர்கள் மிகவும் வருந்தினார்கள். ராமாநுஜரைப் பிரிய மனம் இல்லாத சீடர்களிடம் ராமாநுஜர் தம்மைப் போலவே ஒரு விக்கிரகம் செய்யும்படி கூறினார். சீடர்களும் அப்படியே செய்தனர். பின்னர் ராமாநுஜர் அந்த விக்கிரகத்தைத் தழுவி, தம்முடைய சக்தியை அந்த விக்கிரகத்துக்குள் செலுத்தி, ``இந்த விக்கிரகத்தில் நான் இருப்பதாக நினைத்து தரிசித்து மகிழ்ந்திருங்கள்'’ என்று கூறினார். மேலும், ``அந்த விக்கிரகம் தமர் உகந்த திருமேனி என்று அழைக்கப்படும்’’ என்றும் கூறினார்.

தானுகந்த திருமேனி: ராமாநுஜரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள், தங்கள் குருவுக்கு ஒரு சந்நிதி அமைத்து, அங்கே அவரின் திருவுருவக் கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள். சிலைக்குக் கண் திறக்கும் சடங்கு மிக முக்கியமானது. இவ்வாறு சிற்பி கண் திறக்க முனைந்தபோது, உளிபட்டு சிலையின் கண்களில் ரத்தம் வழிந்தது. அந்தச் சமயம் ராமாநுஜர், தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே, சீடர்கள் குழம்பிப் போனார்கள். இதன் காரணம் பற்றிக் கேட்டபோது, `ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள்என்றார். பின்பு ராமாநுஜர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியபோது, அவரின் சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றைச் செதுக்கினார்கள். ராமாநுஜர் அந்தச் சிலையைத் தழுவி, தன் சக்தியை அந்தச் சிலையின் உள்ளே செலுத்தினார். இந்தச் சிலை, `தானுகந்த திருமேனிஎன்று பெயர் பெற்றது. ராமாநுஜரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது. இந்தச் சிலை இன்றும் ஸ்ரீபெரும்புதூர் கோயிலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று, இந்தச் சிலைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்தச் சிலை விலா எலும்பு, காது மடல் உள்ளிட்ட ராமாநுஜரின் 120 வயது தோற்றத்தை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.

தானேயான திருமேனி: ஸ்ரீராமாநுஜர் திருவரங்கத்தில் பரமபதம் என்னும் திருநாடு அடைந்தார். மறுநாளே ராமாநுஜரின் திருமேனி மேலே வந்தது. அந்தத் திருமேனியே, `தானான திருமேனிஎன்று போற்றப்படுகிறது. யோகநிஷ்டையில் அமர்ந்திருப்பதுபோல் திருக்காட்சி தரும் ஸ்ரீராமாநுஜரின் திருமேனிக்கு ஆண்டுதோறும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குங்குமப்பூ மற்றும் பச்சைக் கற்பூரம் கலந்த தைலக் காப்பு சாத்தப்படுகிறது.

`இளையாழ்வார்’, `லக்ஷ்மண முனி’, `திருப்பாவை ஜீயர்’, `எம்பெருமானார்’, `உடையவர்’, `பாஷ்யக்காரர்’, `யதிராஜர்என்று பல திருநாமங்களுடன் போற்றப்பெறும் மகான் ராமாநுஜரின் 1000-மாவது ஆண்டு, இந்த ஆண்டு முதல் அடுத்த ஆண்டு வரை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

நன்றி - விகடன் தீபாவளி மலர் 2016