வியாழன், 20 டிசம்பர், 2007

ஆண்டாள் - அவள் அரங்கனை ஆண்டாள்

மார்கழி மாதம் பிறக்கிறது என்பதை நினைத்தால் உடனே நினைவிற்கு வருபவை ஆண்டாளும், அவள் அருளிய திருப்பாவையும் தான். அவள் கண்ணனின் பக்தியில் திளைக்க கை கோர்த்து அழைத்துச் செல்கிறாள். இந்தத் திருப்பாவை நம்மை அறியாமை என்ற இருளில் இருந்து தட்டி எழுப்ப, நமக்கு வழிகாட்டி, இறைவனிடம் ஆட்படுத்துகின்றது. அவன் அருளையும் பெற்றுத் தருகிறது.

தந்தை விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் ரங்கமன்னாருக்காகத் தினமும் கட்டிவைத்த துளசி மாலையைத் தான் அணிந்துக் கொண்டு அழகு பர்த்துப் பின் அரங்கனுக்கு அனுப்பி வைப்பாள் அவள். ஆண்டாளுக்கு தந்தையிட்ட பெயர் கோதை. கோதையின் இச்செயலை ஒரு நாள் பெரியாழ்வார் பார்த்துக் கொண்டே வந்துவிட, இறைவனுக்காக வைத்திருந்த மாலையை மகள் அணிந்திருப்பதைப் பார்த்து மனம் பதறினார். "என்ன காரியம் செய்தாய் கோதாய்? எனக் கடிந்துக் கொண்டார். அன்று பெருமாளுக்கு அணிவிக்க, அவர் மாலை எடுத்துச் செல்லவில்லை."

அவள் ஆண்டாள்:

அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் வந்த ஸ்ரீமன் நாராயணன், "அவள் சூடிய மாலையே தனக்குகந்தது. அவள் ஆண்டாள்" எனச் சொல்லி மறைந்தான். "சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின்" திருப் பெயர் அன்று முதல் ஆண்டாளாயிற்று.

ஆண்டாளின் அவதாரம்:

ஆண்டாள் என்ற கோதை நாச்சியார் பெரியாழ்வாருக்கு மகளாய் அவதரித்தது ஸ்ரீ வில்லிப் புத்தூரில் கி.பி. 9ம் நூற்றாண்டில் நள வருடம், ஆடிமாதம், பூரம் நட்சத்திரம், வளர்பிறை, செவ்வாய்க்கிழமை, விஷ்ணுசித்தரின் வீட்டிலுள்ள நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அருகே அவள் தோன்றினாள்.

துளசிச் செடியின் அருகில் ஒரு ஜோதியைக் கண்டார் பெரியாழ்வார். அருகில் சென்று பார்த்த போது இடக்கையில் கிளியுடன், இடது குழல் கொண்டையுடன் சர்வாலங்கார பூஷிதையாக ஒரு 12 வயதுச் சிறுமியாக இவளைக் கண்டார்.

பெரியாழ்வார் உடனே மகிழ்ந்து, தான் கொஞ்சி மகிழ குழந்தையாக வரவேண்டும் என வேண்டிக் கொண்டதற்கிணங்கி ஒரு குழந்தை உருவெடுத்து அவர் கைகளில் தவழ்ந்தாள். குழந்தையின் சுருண்ட கூந்தலழகைக் கண்ட பெற்றோர், அவளைக் கோதை எனப் பெயரிட்டழைத்தனர்.

இப்பூவுலகில் பெருமாளின் அடியார்களாக அவதரித்து, ஆழ்வார்களெனச் சிறப்புப் பெற்ற பன்னிரு ஆழ்வார்களில், பரமனைப் பக்தியினாலும், தனது நாயகி பாவத்தினாலும் சொல் மலர்களால் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற பாமாலைகளைச் சுவைபடச் சித்தரித்தாள். அதோடு மட்டுமல்லாமல் தாமே நாயகியாக வேண்டும் என்ற எண்ணமும் கொண்டு அரங்கனை ஆராதித்து, அவனை நாயகனாகவும் அடையும் பேறும் பெற்றாள்.

தந்தை முதலியவர்கள் கண்டு வியக்கும்படி இளமை முதலே எம்பெருமான் மீது பக்தி வேட்கை கொண்டு, எம்பிரானது பெருமைகளையே எப்போதும் சிந்தித்து, துதித்து வாழ்ந்து வந்த கோதை, தந்தை அரங்கனுக்காகக் கட்டி வைத்திருந்த மாலையை அவர் இல்லாத நேரம் தம்குழலிலே தரித்துக் கொண்டு அப்பெருமானுக்கு, "நான் நேரொத்திருக்கின்றேனே" எனச் சிந்தித்தாள்.

ஆண்டாளின் பக்தியும் காதலும்:

வளர்ந்து வந்த காலத்தில் இறை அறிவும், பக்தியும் அவளுடன் வளர்ந்தது, தமக்கு ஏற்ற காதலனாகக் கருதிய கடல்வண்ணன் மீது காதலும் வளர்ந்தது. இனி அவனை ஒரு நொடிப் பொழுதும் பிரிந்திருக்க முடியாது என்று எண் கண்ணனது பிரிவை ஆற்றாத ஆயர் குலப்பெண்கள் போலத் தாமும் நோன்பு நோற்று உயிர் தரிப்பது போல், அவ்வெண்ணங்களை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற திவ்யப் பிரபந்தங்களின் மூலமாக பெருமாளுக்கு தெரிவிப்பது போல் இவ்வுலகுக்கும் தெரிவித்தாள்.

மணம் பேசுதல்:

இந்த நிலையில் பெரியாழ்வார் கோதையின் திருமணப் பேச்சைத் துவக்கினார். ஆண்டாளோ, "மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்வேன்" என்று கூற, பட்டர் பிரான், "பின் யாரை மணப்பாய்" என்று கேட்க, "யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கிறேன்" என்றாள்.

தந்தையிடமிருந்து 108 திருப்பதிகளிலும் எழுந்தருளியுள்ள நாராயணனின் பெருமைகளைக் கேட்டுப் புளகாங்கிதமடைந்த கோதை, திருவரங்கனின் பெருமைகளைக் கேட்டவுடனே அளவற்ற இன்பமடைந்தாள். அரங்கனுக்கே தம்மை மணமகளாக நிச்சயித்து மனதில் அவனையே எப்பொழுதும் எண்ணியிருந்தாள்.

"கற்ப் பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோதிருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோமருப்பொசித்த மாதவன்தன் வாய்சுவையும் நாற்றமும்விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே!" என்று மறுகினாள்.காதல் வளர்ந்தது:

பின் கோதை தம் ஆற்றாமையைத் தணித்துக் கொள்ள எண்ணி வில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், அங்கிருந்த பெண்களையும், தம்மையும் ஆயர்குல மங்கையராகவும், வடபத்ரசாயியைக் கண்ணனாகவும், அவ்வூரை நந்தகோபனுடைய வீடாகவும் கருதி, திருப்பாவையைப் பாடியருளினாள். பின்னர் பதினான்கு திருமொழிகளை நாச்சியார் திருமொழிகளைப் பாடியருளினாள்.

கனவுகளும் வளர்ந்தன:

ஆழ்வார் எங்கேனும் நம்பெருமான் நம் மகளை மணம் புரிவது நடக்குமா என்று நினைத்திருக்கும் போது அவர் கனவில் பெருமாள் எழுந்தருளி, "உமது திருமகளைக் கோயிலுக்கு பிரதான அர்ச்சகர் கனவிலும் அவ்வாறே தோன்ற " நீங்கள் குடை, வாத்தியங்கள் முதலிய பல சிறப்புக்களுடன், ஸ்ரீவில்லிப் புத்தூருக்குப் போய் பட்டர்பிரானுடைய அருமை மகள் கோதையையும், அவரின் தந்தையுடன் கூட இங்கு அழைத்து வாருங்கள் என்று கூறினார். அதே நாள் பாண்டிய மன்னனாகி வல்லபதேவன் கனவிலும் தோன்றி, "நீங்கள் பலருடன் ஸ்ரீவில்லிப் புத்தூருக்குச் சென்று, கோதையை முத்துப் பல்லக்கில் திருவரங்கத்திற்கு அழைத்து வருவாயாக" என்று கூறி மறைந்தார். அன்றே கோதையும் தாம் பல கனவுகளைக் கண்டதாகத் தோழிகளிடம் கூறி மகிழ்கிறாள்.

"வாரணம் ஆயிரம் சூழவலம் செய்து நாராண நம்பி நடக்கின்றான்" என்று தொடங்கி திருமணக் காட்சிகளனைத்தையும் முறையே கண்டதாகப் பத்து பாடல்களில் பாடியுள்ளாள்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூதமுத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி நான் என்பதும் இவற்றில் ஒன்றாகும்.

பாண்டிய மன்னனும் இறைவனின் ஆணையைப் பணியும் முகமாகத் திருவரங்கத்தையும், வில்லிப் புத்தூரையும் இணைக்கும் நெடுவழி முழுவதும் பூம்பந்தல் கட்டி அலங்கரித்து, தோரணங்கள் கட்டி உணர்த்தினான். அவ்வாறே கோயிலிலிருந்து புறப்பட்ட பட்டர் பெருமக்களும் இரவு தம் கனவில் அரங்கத்தம்மாள் காட்சி அளித்துக் கூறியதைத் தெரிவித்தனர்.

பெரியாழ்வார் இறைவனது அன்பை வியந்து, வேதியர்களுக்குச் சொல்லியனுப்பினார். அவர்கள் கொண்டு வந்த பல புண்ணிய நதிநீர் கொண்டு தோழிகள் கோதையை நீராட்டி, பொன்னாடை அணிவித்து தோழியர் புடைசூழ முத்துப் பல்லக்கில் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

கனவு நினைவானது:

பலரும், "ஆண்டாள் வந்தாள்! சூடிக் கொடுத்த சுடர்க் கொடி வந்தாள்! கரும்பமர் சூழற்கோதை வந்தாள்!" என்று கட்டியங்கூறி அழைத்துச் சென்றனர்.

பெரிய பெருமாளுடைய முன்மண்டபத்தை கோதையின் பல்லக்கு வந்தடைய, பின்பு கோதை பெருமாளை வணங்கினாள். அப்போது திருமாலின் அழகு கோதையைக் காந்தம் போல் கவர்ந்தது.

இரண்டறக் கலந்தாள்:

சூடிக் கொடுத்த நாச்சியார் சிலம்பு ஆர்க்க, சீரார் வளையொலிப்ப, கொடியேரிடையாட, காதளவு மோடிக் கயல்போல் மிளிரும் கடைக்கண் பிறழ, அன்ன மென்னடை கொண்டு அரங்கனின் அருகில் சென்று இன்பக் கடலில் ஆழ்ந்து, அரங்கனின் அடிகளைப் பணியக் கருதி, நம்பெருமானது திருமேனியின் கண் மறைந்து அவனுடன் இரண்டறக் கலந்தாள்.

பெரியாழ்வார், வெண்ணைப் பெருமாளிடம் சேர்த்துவிட்ட மகிழ்ச்சியில் வில்லிப்புத்தூர் திரும்பி பல காலம் ரங்கமன்னாருக்குக் கைங்கர்யம் செய்து வாழ்ந்திருந்தார். இன்றும் மார்கழி 30ம் நாள் திருவரங்கத்திலும் சரி, மற்ற பெருமாள் கோயில்களிலும் சரி ஆண்டாளுக்கும் அரங்கனுக்கும் கல்யாண வைபவம் சிறப்பாக நடக்கிறது. இதற்கு 10 நாட்கள் முன்பாகவே ஆண்டாளுக்கு நீராட்டுவிழா தொடங்கிவிடும். குறிப்பாக ஸ்ரீ வில்லிப் புத்தூரில் இது சிறப்பானதொரு வைபவம். பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடுவதுபோல், ஆண்டாளுக்கு ஆற்றங்கரையில் எண்ணெய் நீராட்டுவிழா நடக்கும். ஆண்டாளின் கையில் உள்ள கிளி வெற்றிலை மற்றும் சில குறிப்பிட்ட இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் வாடாமல் நன்றாக இருக்கிறது. திருப்பதியில் இன்றும் ஆண்டாளிடமிருந்து மாலையை வாங்கி, உத்தரவு பெற்று பின் பெருமாளுக்குச் சூட்டிய பின்பு மார்கழி மாத பூஜை தொடங்குகிறது.

ஆண்டாள் கிருஷ்ணனுடைய பக்தியில், மற்ற ஆழ்வார்களைப் போலவே ஆழ்ந்து அனுபவித்த காரணத்தால் ஆழ்வார்களில் ஒருவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டாள். பக்தை மீரா, சக்குபாய் இவர்களைப் போல பக்தைகளில் ஒருவராகவும் கருதப்படுகிறாள். எல்லாவற்றிற்கும் மேலாக சீதையைப் போல், ருக்மினியைப் போல் பூமிதேவித் தாயாராகவும் ஆகிறாள்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக அரங்கனைத் தன் அன்பினால் ஆண்டு ஆண்டாள் என அழியாப் புகழ் பெற்றாள்.

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்

ஒரு பானை இருக்கிறது. அது காரியம் - அதாவது உண்டான வஸ்து. அந்த வஸ்துவுக்கு - காரியத்துக்கு - மூன்று காரணங்கள்.

முதலாவது `உபாதான காரணம்' பானையாய் எது மாறியதோ, அது உபாதான காரணம். இங்கே பானையை உருவாக்க பயனான மண் உபாதான காரணம்.

அடுத்தது மனுஷ்ய சக்தி - அந்த சக்தி தானே பானையை ஆக்குகிறது? இது `நிமித்த காரணம்' எனப்படுகிறது. பானையை உருவாக்கியவர் குயவர் நிமித்த காரணமாகிறார்.

குயவருக்குப் பானை செய்ய சக்கரம் வேண்டும். ஒரு தண்டம் வேண்டும். இவை பானை செய்ய அவருக்கு சஹகரிக்கின்றதால் (உதவுவதால்) `சஹகாரி காரணம்' எனப்படுகின்றது.

இப்படி ஒவ்வொரு காரியத்துக்கும் காரணங்களை ஆராய்ந்து கொண்டே போகலாம். இந்த உலகத்தைக் காரியமாக எடுத்துண்டோமானால், பரமாத்மா அதற்கு உபாதான காரணமா? நிமித்த காரணமா? சஹகாரி காரணமா?... என்று விசாரிக்கலாம்.

இதைப்பற்றி உபநிஷத் சொல்வதை ஆசார்யர்களெல்லாம் விவரிக்கிறார்கள். எல்லாக் காரணங்களுமாய் அவனே இருந்து வருகிறான். ஜகத்காரண வஸ்து அவன்!

பகவானே விச்வமாய்க் காட்சி அளிக்கிறான்.

`தத்வம் அஸி' என்கிற மகா வாக்யத்தை ஒரே பதத்தில் சொல்லணும் என்றால் `விச்வம்' என்று சொல்லணும்.

அந்த விச்வத்தில் நடப்பனவற்றுக்கு எல்லாம் எத்தனை காரணம் சொன்னாலும் ஐந்தாவது காரணமாய் பரமாத்மா இருக்கிறான்.

இந்த உபந்யாஸத்தையே எடுத்துக் கொண்டோமானால், இதற்கு ஐந்து காரணம்.

முதல் காரணம், உபந்யாஸ கருடைய, சரீரம். அது உபந்யாஸம் நடக்கிற இடத்துக்கு வந்து சேரணும். சரீரம் மட்டும் உபந்யாஸத்துக்குக் காரணமாயிடுமா...? சொல்கிறவனுடைய வாக்கு, கேட்கிறவனுடைய செவிப்புலன் என்கிற இந்திரியங்கள் இரண்டாவது காரணம்.

இந்த இரண்டுக்கும் மேலே மூன்றாவது காரணம் மனஸ். உடம்பு, இந்திரியங்களுடன் மனஸும் கூடச் சேரணும்.

ஒருத்தர் ராத்திரி சௌகரியமாய் தலையணை வெச்சுண்டு தூங்கறார். விடிஞ்சதும் பார்த்தா தலையணையடியிலே மூன்று பாம்பு! அது இருக்கறது மனஸுக்குத் தெரிஞ்சிருந்தால் தூக்கம் வருமா....? மனஸும் சேர்ந்து தூங்கினதால்தானே அவராலே தூங்க முடிந்தது....! ஆகையினாலே எந்தக் காரியத்துக்கும் மனஸ் கூடச் சேர வேண்டும்.

நாலாவதாக, சரீரத்துக்குள்ளே இருக்கிற ஆத்மா ஒரு காரணம். சாந்தோக்ய உபநிஷயத்திலே ஒரு கதை உண்டு. உடம்பின் காது, மூக்கு, கண், வாய் எல்லாத்துக்கும் ஒரேயடியாய் பெரிய சண்டை வந்ததாம். எல்லாம் பிரும்மாவிடம் போய், `எங்களுள் யார் பெரியவன்? நீங்கள் சொல்லுங்கள்...' என்றதாம்.

அதற்கு பிரும்மா சொன்னார், `நீங்கள் ஒவ்வொருத்தராக ஒரு வருஷகாலத்துக்குத் தனித்தனியே சரீரத்தை விட்டுப் பிரிந்து போங்கள். யாரு விலகறதாலே உடம்புக்கு அதிக பாதிப்போ அவர்தான் உயர்த்தி....'

`அப்படியே ஆகட்டும்'னு முதலில் கண் ஒரு வருஷயத்துக்குப் பிரிந்து இருந்ததாம். `தீய விஷயங்களைப் பார்க்காமல் நிம்மதியாய் இருந்தேன்' என்றார் உடம்புக்குரியவர்.

அதேபோலக் காதும் மூக்கும் மற்ற இந்த்ரியங்களும் அவரை விட்டுப் பிரிஞ்சு போன போதும் கஷ்டமில்லாமல் இருந்தார்.

ஒரு நாள் அந்த உடலுக்குள் இருந்த பிராணன் புறப்பட்டுப் போனது... அவ்வளவுதான்! பிராணன் கிளம்பினதும் மற்ற எல்லா இந்த்ரியங்களும் மொத்தமாகப் புறப்பட்டுப் போய் விட்டன!

ஆகவே, எந்த ஒரு செயலுக்கும் பிராணன் நாலாவது காரணம் என்று தெரிகிறது.

ஆனால் பிராணன் மட்டுமே தனித்துச் செயல்பட முடியுமா...? உடம்பும் இந்த்ரியங்களும் மனஸும் ஆத்மாவுடன் சேரணும். அதோடு இன்னொரு காரணமும் சேருகையில் தான் பூர்ணத்துவம் உண்டாகிறது. அது என்னவென்று பார்த்தால், அதுக்கு ஒரு கதை சொல்லலாம். நடந்த சம்பவம்...

ஸ்ரீரங்கத்திலே எம்பார் காலட் சேபம் பண்ணறார். அப்போ வடக்கு சித்திரை வீதிக்காரர் ஒருத்தர் திண்ணையிலே வீணாகக் காலத்தைப் போக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். எல்லோரும் அவரை, "காலட்சேபத்துக்கு வரக்கூடாதா - இப்படி வீணா காலத்தைப் போக்கறீர்களே..?" என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தார்கள். யார் கேட்ட போதும் அவர் மசியவில்லை; அப்படியே மறு பக்கமா தலையைத் திருப்பிக் கொண்டு விட்டார். இப்படியே பல நாட்கள் கழிந்தன. திடீரென்று ஒரு நாள் திண்ணைக்காரர் தாமே காலட்சேபத்துக்கு கிளம்பி வந்தார்.

எல்லாரும் ரொம்ப மகிழ்ந்து போனார்கள். பிரவசனம் பண்ணின எம்பார் கேட்டார் : "இத்தனை நாளா வராத இவர் இன்னைக்கு வந்திருக்கிறார் என்றால் அதற்கு யார் காரணம்? ஆசார்யர் காரணமா? அவரை வரச்சொல்லி வற்புறுத்திக் கூப்பிட்டவர்கள் காரணமா....? ஆசார்யர்தான் காரணம் என்று நினைக்கிறவர்களை கையை உயர்த்தலாம்.. ஆச்சார்யர்தானே எதிரிலிருப்பவர்களுக்கு எவ்வளவு புரியும் என்று பார்த்து, அதற்கு ஏற்பச் சொல்பவர்...?

அதனாலே அவர் காரணம்னு நினைக்கிறவர்கள் கை உயர்த்தலாம்...." என்றார்.

கூட்டத்தில் பாதிப்பேர் கையை உயர்த்தினார்கள்.

"சரி, அழைத்தவர்களின் வற்புறுத்தலால் தானே இவர் வந்திருக்கிறார்... அதனால் இவரை வரச்சொல்லிக் கூப்பிட்டவர்களே இவருடைய வருகைக்குக் காரணம் என நினைக்கிறவர்கள் கை உயர்த்தலாம்.....? என்றார்.

கூட்டத்தில் இன்னொரு பாதி கையை உயர்த்தியது!

அந்தச் சமயத்திலே ஆசார்யர் எம்பார் சொல்கிறார்.." இப்போ சொன்ன எதுவுமே காரணமில்லை... இவரை இங்கே வரவழைச்சதுக்குக் காரணமானவன் பரமாத்மாதான். இத்தனை நாளாக இல்லாமல், திடீரென்று இங்கே வரணும் என்று அந்த புத்தியைக்கொடுத்ததே அந்த பரமாத்மாதான்.." என்றார்.

உலகத்தின் சகல காரியங்களக்கும் ஐந்தாவது காரணமாய் இருப்பவன் அந்த பரமாத்மாதான்!

ஆடு, மாடு மாதிரி மனிதர்களை ஓட்டுவதில்லை, பகவான். ஜீவாத்மாவுக்கு ஒரே ஒரு முக்கியமான இடத்திலேயே சுதந்திரத்தைக் கொடுக்கிறான். நல்லது இது; கெட்டது இதுன்னு காட்டிக் கொடுத்து, அது எதைப் பிடிச்சுக்கறதுன்னு கவனிக்கிறான். `மனிதன் நல்லதைப் பற்றுகிறானா? தீயதைப் பற்றுகிறானா?' என்று யோசித்துப் பார்ப்பது அவனுடைய லீலை!

ஆகையினாலே விச்வம் என்கிற சப்தத்துக்குப் பொருள் கேட்டால், `ஐகத்காரண வஸ்துவாக பரமாத்மா இருக்கிறான்; அவனே காரியமாய் இப்படிப் பரிணமிக்கிறான். விச்வத்துக்குக் காரிய காரணம் அவனே ஆனதாலே விச்வம் என்கிற சப்தத்தினால் பரமாத்மா அழைக்கப்படுகிறான்.

இதுக்கு மேலே இன்னொரு அர்த்தமும் இருக்கிறது :

சுவாபாவிகமாக - அதாவது இயற்கையிலேயே எண்ணியிருந்த திருக்கல்யாண குணங்கள் இருப்பதாலே பகவான் என்று அழைக்கப்படுகிறான் அவன்.

பகவான் என்றால்...?

புத்தி உடையவன், புத்திமான், குணமுடையவன், குணவான், பகத்தை உடையவன் பகவான், என்ன குணங்கள்..? ஆறு குணங்களை அவனுக்கே உரியவையாக விவரிக்கிறார்கள். பகம் என்றால் ஆறு குணங்கள் :

முதலாவதாக ஞானம். குறுகுதல், விரிதல் என்பது பகவானுடைய ஞானத்துக்குக் கிடையாது. மனித ஞானம் மாதிரி இல்லை. அது.. மனிதர் ஒருவர் தத்துவம் படிக்கிறார். அவர் புத்தி ஒருநாள் அதை கிரஹிக்கிறது போல இன்னொரு நாள் கிரஹிப்பதில்லை! ஏன்..? அந்த புத்திக்கு சங்கோச விஹாஸம் இருக்கிறதனாலே அது அப்படி நடந்து கொள்கிறது. சில நாள் குறுகிப் போயிடறது: சில நாள் சாத்விகமான ஆகாரம் சாப்பிடாததாலே ஒத்துழைக்கிறதில்லை. இந்த மாதிரி கஷ்டங்களெல்லாம் பகவானுக்குக் கிடையாதே! நமக்கு இந்த்ரியங்கள் எல்லாம் வேண்டியிருக்கு. அப்படியில்லை பரமாத்மா. அவனுடைய ஞானம் சங்கோச விகாசம் இல்லாத ஞானம்.

திருப்பாவை ஒரு வேள்வி - முக்கூர் லக்ஷ்மீ நரசிம்மாச்சாரியார்

பொறுமையே உருவானவர் பூமிப்பிராட்டி. நாம் செய்யும் தவறுகளை பகவானிடத்திலே சொல்ல மாட்டாளாம். நாம் செய்யும் நல்ல காரியங்கள் அவை சிறியவையானால் கூட அதைப் பெரிசுபடுத்தி அவனிடத்திலே சொல்வாளாம். அவ்வளவு காருண்யம் நம்மிடத்திலே அவளுக்கு!

எம்பெருமான் பூமாதாவைப் பார்த்து, "இப்போது நீ போய் கீதையின் சாரத்தை எடுத்துச் சொல்லி, உலகத்தில் உள்வர்களைத் திருத்துவாயா?" என்று கேட்டார்.

"அதற்குத்தானே காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் சுவாமி!" என்றாளாம் பூமாதா. முன்னதாக மஹாலக்ஷ்மி முடியாது என்று சொன்ன பொறுப்பை பூமாதா உடனே ஏற்றுக் கொண்டுவிட்டாள். அதற்கு சில காரணங்கள் உண்டு. பகவான் மகாலக்ஷ்மியிடம் கேட்ட போது, தான் ராமாவதாத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும் பட்ட தொல்லைகளைக் காரணம் காட்டி பூமியில் அவதாரம் எடுக்கும் பொறுப்பை மறுத்துவிட்டாள்.

"நீங்கள் என்னைப் போகச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்" என்று முந்தானையிலே போட்ட முடிச்சோடு சொல்கிறாளாம்.

எப்போது போட்ட முடிச்சு அது? வராஹ அவதாரத்திலே, வராஹத்தின் மூக்கில் மேலே உட்கார்ந்திருந்த போது அவன்(பகவான்) சொன்ன மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.

அவன் திருவடியிலே மலரிட்டு அர்ச்சனை செய்யவேண்டும்.அவன் திருநாமத்தை உரக்கச் சொல்ல வேண்டும்.அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும்.என்ற மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுக்கள்.

இப்போதே நீங்கள் போகச் சொன்னாலும் சித்தமாயிருக்கிறேன் என்றாள் பூமாதேவி. "எங்கே போவாய்? யாரிடம் பிறப்பாய்?" என்றார் பகவான்..

"உங்களுடைய அனுக்கிரஹம் உதவும்" என்று புறப்பட்டுவிட்டாள் தேவி. விஷ்ணு சித்தரின் மகளாய் வந்து அவதரித்தாள். நம் திராவிட தேசத்துக்கே அந்த அவதாரம் பெருமை சேர்த்தது.

கல்பத்தின் ஆதியிலே கேட்ட வராஹ மூர்த்தியினுடைய வாக்கைத் தானே எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக துளவி வனத்திலே அவதரித்தாள் பூதேவி. பிறக்கும்போதே மேன்மையுடைவளாய், சுவாசனையுடன் ஆர்பவித்தாள். இருமாலை கட்டினாள். ஒரு மாலை பாமாலை, ஒரு மாலை பூமாலை. ஒன்றைப் பாடிச் சமர்ப்பித்தாள். மற்றதைச் சூடிச் சமர்ப்பித்தாள். சூடிக் கொடுத்த நாச்சியார் என்று பெயர் பெற்றாள்.

திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள். அவற்றில் முதல் பத்து "அவன் திருநாமத்தைச் சொல்லு என்று உணர்த்துகின்றன". இரண்டாவது பத்து, "உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப் பாரு " என்று சொல்கின்றன. ஆக வராஹ மூர்த்தியினிடத்திலே அன்று கேட்ட மூன்று விஷயங்களை முப்பது பாசுரங்களைய்ப் பாடி ஆண்டாள் அவதாரத்திலே எடுத்துக் காட்டினாள்.

திருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல. அது ஒரு யக்ஞம். ஆண்டாள் பண்ணிய வேள்வி அது. வராஹ மூர்த்தியினிடத்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள்.

வேள்வி-யக்ஞம் செய்வதற்கு கபாலம் என்றொரு பாத்திரசாதனம் உண்டு. அதிலே புரோடாசத்தை வைத்து நெய்யைத் தடவி சமர்ப்பிப்பார்கள். ஆண்டாள் பண்ணிய திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம். ஆசார்ய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள்.

யக்ஞம் பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான எம்பெருமானை °தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு.

திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்றேன் இல்லையா? ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனை துதிக்கிறார் ஆண்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

"ஒங்கி உலகளந்த உத்தமன்" என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள். "அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த.." என்று அடுத்த பதினொன்று முதல் இருபது வரையிலான பாசுரத்துக்குள்ளே இரண்டாவது முறையாக திரிவிக்கரமாவதாரத்தைப் பாடுகிறாள்.

"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி" என்று மறுபடியும். இருபத்தொன்று முதல் முப்பது வரையிலான பாசுரங்களுக்குள்ளே மறுபடியும் திரிவிக்கிரமன் திருவடிகளைப் போற்றுகிறாள்.

ஆகையினாலே, திருப்பாவை ஒரு வேள்வி போன்றது ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, "நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா!" என்று ஆச்ரயித்து, அவனையே திருக்கல்யாணமும் செய்துக் கொண்டாள்.

ஆண்டாள் அழைத்தாள் என்று வந்து குதித்த பெருமான், ஸ்ரீவில்லிப்புத்தூரிலே மடிந்த திருவடியோடு காட்சி தருகிறான்.

பெரியாழ்வாரோ, கன்னிகாதானம் செய்து கொடுத்துவிட்டு அழுகிறார்! "ஒரு பெண்ணைப் பெற்றேன். அவளைச் செங்கண்மால் கொண்டு போனான்.. நான் என்ன செய்வேன்.." என்று அவருக்கு வேதனை.

ஆனால் ஆண்டாள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தாள். அப்படிச் சேர்ந்ததில் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டல் இருக்கிறது. வராஹ மூர்த்தி சொன்னதை அனுசரித்து அவள் அவனை அடைந்தது போல நாமும் அவனை அடையலாம். அவன் நமக்குப் பதி.. நாம் அவனுக்கு பத்னி எனற பாவத்துடன் உத்தமமான சரணாகதி மார்க்கத்தைக் கடைப்பிடித்தோமானால் நாமும் அவனை அடையலாம்.!


திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்30

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.

பொருள்: அழகுமிக்க ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவளும், குளிர்ந்த தாமரை மலர்களால் ஆன மாலையை அணிந்தவளும், பெரியாழ்வாரின் திருமகளுமான ஆண்டாளாகிய நான், முப்பது பாசுரங்களைக் கொண்ட தமிழ் மாலையான திருப்பாவையை பாடியிருக்கிறேன். இதில் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் வழங்கியவனும், மாதவனும், கேசவனுமான கண்ணபிரானின் புகழைப் சொல்லியிருக்கிறேன். அவனை சந்திரபிம்பம் போன்ற அழகிய முகம் கொண்டவர்களும், அழகிய ஆபரணங்கள் அணிந்தவர்களுமான கோபியர்கள் மார்கழியின் முப்பது நாளும் வணங்கச் சொல்வார்கள். அந்தத் திருவரலாற்றை இந்தத் திருப்பாவையில் சொல்லியிருக்கிறேன். இம்மாதத்தில் இதை தவறாமல் பாடுவோர், மலைகள் போன்ற தோள்களையும், சிவந்த கண்களையும், அழகிய முகத்தையும், செல்வத்தையும் உடைய திருமாலின் திருவருள் பெற்று ஆனந்தம் அடைய வேண்டுகிறேன்.
பாடல்29

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்;

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்துநீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கேநாம் ஆட்செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்


பொருள்: கதிரவன் உதிக்கும் உதய நேரத்தில் உன் இல்லத்திற்கு வந்து உன்னை வணங்குகிறோம். உன் அழகிய திருவடிகளை பல்லாண்டு பாடி வாழ்த்துகிறோம். இதற்குரிய காரணத்தை கேள். பசுக்களை மேய்த்து உண்ணும் ஆயர்குலத்தில் நீ பிறந்தாய். அப்படிப்பட்ட நீ, நாங்கள் உனக்காக இருந்த இந்த விரதத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை மறுப்பது எவ்வகையிலும் தகாது. நீ இன்றே எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். கோவிந்தனே! எப்போது நீ எந்தப்பிறவி எடுத்தாலும், எந்த அவதாரத்தில் வந்தாலும், நாங்கள் உனக்கு உறவினர்களாகவே இருப்போம். உனக்கு மாத்திரமே நாங்கள் சேவை செய்வோம். உன் சேவையைத் தவிர வேறு எந்தத் தேவையும் எங்களுக்கு இல்லை. அப்படி ஒரு சில விருப்பங்கள் எங்களுக்குள் ஏற்பட்டாலும் அதையும் நீதான் மாற்றி அருள வேண்டும்.
பாடல்28

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்!

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்;

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது!

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்


பொருள்: கறவைப்பசுக்களை மேய்த்து, தயிர்சாதத்தை இணைந்து சாப்பிடும் ஆயர்குலத்தில் நீ பிறந்தாய். எங்களை உலக மக்கள் "மாடு மேய்ப்போர்' என கேலி செய்து, சிறிதும் அறிவில்லாதவர்களாக கருதுகிறார்கள். அப்படிப்பட்ட குலத்தில் நீ வந்து பிறப்பதற்கு நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ! குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனே! உன்னோடு எங்களுக்குள்ள உறவை எக்காரணம் கொண்டும் யாராலும் பிரிக்க முடியாது. ஒருவேளை நீயே பிரிக்க நினைத்தாலும் அதுவும் நடக்காது. உலகம் தெரியாத, ஒன்றும்அறியாத சிறுபெண்களான நாங்கள் அன்பின் காரணமாக உன்னை "நீ, வா, போ' என ஒருமையில் அழைக்கிறோம். அதுகுறித்து நீ கோபப்படாதே. நீ எங்களுக்கு உரிமைப்பட்டவன் என்ற முறையிலேயே அவ்வாறு சொல்கிறோம். இதற்காக கோபிக்காமல் எங்களுக்கு அருள் செய்வாயாக.
பாடல்27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாக,

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்;

ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

மூட, நெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

பொருள்: கட்டுப்படாதவர்களை வெல்லும் குணம் கொண்ட கோவிந்தனே! நாங்கள் உனது சன்னதியில் உள்ளம் குளிர கூடியிருக்கிறோம். எங்கள் விரதத்தை ஏற்று இவ்வுலக மக்கள் பாராட்டும்படியாக நீயும் உன் மனைவி நப்பின்னை பிராட்டியும் இணைந்து எங்களுக்கு சூடகம், தோள்வளை, தோடு, கர்ணப்பூ பாடகம் என சொல்லப்படும் காலில் அணியும் அணிகலன் ஆகியவற்றை தாருங்கள். நீங்கள் தரும் பட்டாடைகளை நாங்கள் உடுத்திக் கொள்வோம். அதன்பிறகு கையில் நெய் வழிய பால்சோறு சாப்பிடுவோம். உன்னைப் பாடுவதையே எங்கள் கடமையாக எண்ணுகிறோம். இத்தனை நாளும் இருந்த விரதத்திற்கு பலனாக உன் அருளை வேண்டுகிறோம். இதுவே நாங்கள் பெற விரும்பும் சன்மானம்.
பாடல்26

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவனகேட்டியேல்,

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள், போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே, பல்லாண் டிசைப்பாரே,

கோல விளக்கே, கொடியே விதானமே,

ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்


பொருள்: பக்தர்களிடம் பாசம் கொண்டவனே! நீலநீறக் கண்ணனே! ஆலிலையில் பள்ளிகொண்டவனே! மார்கழி மாதத்தில் நீராடும் முறை குறித்து பெரியோர்கள் எங்களுக்குச் சொன்ன விதிமுறைகளை, நீ கேட்பாயானால் அது குறித்து நாங்கள் உனக்கு சொல்கிறோம். பாலின் நிறமுடைய பாஞ்சஜன்யம் என்ற உனது சங்கு உலகத்தையே நடுங்க வைக்கும் தன்மை உடையது. அப்படிப்பட்ட சங்கை முழக்கும் பெரியோர்களுக்கும், பெரிய இசைக்கருவிகளை முழக்கி "நீ பல்லாண்டு வாழ்க' என பாடுபவர்களுக்கும், அழகிய தீபங்களையும், கொடிகளையும் கோயில் விதானத்தில் கட்டுபவர்களுக்கும் நீ அருள் செய்ய வேண்டும் என்பது விதி என அவர்கள் எங்களுக்குச் சொல்லியுள்ளனர். அந்த விதிமுறைப்படி எங்களுக்கு நீ அருள் செய்வாயாக!
பாடல்25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைத்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே? உன்னை

அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்,

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள்: மதுராபுரி சிறையிலே, நள்ளிரவு வேளையில் தேவகியின் மைந்தனாக அவதரித்தவனே! அதே இரவில் யசோதையின் மகனாக வளர்வதற்காக கோகுலத்திற்கு சென்றவனே! நீ ஒளிந்து வளர்வதை கேள்விப்பட்ட கம்சன் தன் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டான். உன்னைக் கண்டு நடுங்கினான். அப்படிப் பட்ட வீரம்மிக்க உன்னை காண்பதற்காகவும், அருளை யாசிப்பதற்காகவும் உன் இல்லத்து வாசலில் காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று உன் அருளைத் தந்தால் உன்னைப் பற்றியும், உன் மார்பில் உறையும் மகாலட்சுமியை பற்றியும், உன் வீரம் பற்றியும் நாங்கள் தொடர்ந்து பாடுவோம். உன் அருள் கிடைத்தால் எங்கள் கவலைகள் இந்தக் கணமே நீங்கிவிடும்.
பாடல்24

அன்று இவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி

கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி

குன்று குடையா எடுத்தாய் குணம்போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்


பொருள்: மகாபலியின் ஆணவத்தை அடக்குவதற்காக உலகத்தையே அளந்தவனே! உன் திருவடிகளுக்கு எங்கள் வணக்கம். தென்னிலங்கைக்கு சென்று ராவணனை தோற்கடித்தவனே! உன் திறமையை போற்றுகிறோம். சகடாசுரன் என்ற அரக்கனை உதைத்தவனே! உன் புகழ் என்றும் வளர வாழ்த்துகிறோம். கன்றின் வடிவாக வந்த அசுரனை வீசி எறிந்தவனே! உன் திருவடிகளை வணங்குகிறேன். கோவர்த்தன மலையை குடையாக எடுத்தவனே! உன் மங்களகரமான குணம் எங்களுக்கும் வேண்டுமென வேண்டுகிறோம். பகைவர்களை அழிக்கும் உன் வேலுக்கு மங்களம் உண்டாகட்டும். உனது வீர சரிதத்தை நாங்கள் இவ்வளவு நேரமும் பாடினோம். எங்கள் பிரார்த்தனையை ஏற்று நாங்கள் எந்நாளும் மகிழ்ந்திருக்க அருள் தர மன்றாடி வேண்டுகிறோம்.
பாடல்23

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே, நீபூவைப்பூ வண்ணா! உன்

கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்திலிருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்


பொருள்: இந்த பாடலை கண்ணனின் வளர்ப்புத்தாய் யசோதை பாடுவதுபோல ஆண்டாள் வடிவமைத்திருக்கிறாள். மழைக்காலத்தில் மலைக்குகையில் பதுங்கி படுத்துறங்கும் வீரம் மிக்க சிங்கம் உறக்கம் தெளிந்து எழுகிறது. நெருப்புப்பொறி பறக்கும் கண்களை திறக்கிறது. தனது ரோமத்தை சிலிர்த்து, உடலை உதறி, சோம்பல் முறித்து, பெருமை பொங்க நிமிர்ந்து கர்ஜிக்கிறது. குகையிலிருந்து தோரணையுடன் வெளியே வருகிறது. அந்த சிங்கத்தைப் போல், நீல வண்ண கண்ணனே! நீயும் உன் இருப்பிடத்திலிருந்து நாங்கள் காத்திருக்கும் இடத்திற்கு எழுந்தருள்வாயாக. பூப்போன்றவனே! அழகிய வேலைப்பாடுகள் அமைந்த இந்த சிம்மாசனத்தில் வீற்றிருந்து எங்களது கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி வைப்பாயாக.

பாடல்22

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான

பங்கமாய்: வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல், வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்,

அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

பொருள்: அழகானதும் மிகவும் பெரியதுமான இந்த பூமியை ஆளும் அரசர்கள் அனைவரும் தங்களுக்கு மேற்பட்டவர் இல்லை என்ற அகங்காரம் கொண்டிருந்தனர். அவர்களை வெற்றி கொண்டதன் மூலம், அந்த அகங்காரத்தை நீ தகர்த்தெறிந்தாய். அதன்பிறகு அவர்கள் நீ பள்ளி கொண்டிருக்கும் கட்டிலின் பக்கத்தில் திரளாக வந்து காத்திருக்கின்றனர். அதுபோல நாங்களும் உன் இல்லத்து வாசலில் உன் தரிசனத்திற்காக காத்துக் கிடக்கிறோம். சலங்கையின் வாய் போலவும், சிறிதே மலர்ந்த செந்தாமரை போலவும் உன் கண்களை மெதுவாக திறந்து எங்களைப் பார்க்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் ஒரு சேர உதித்ததுபோல் உன் அழகிய இரண்டு கண்களையும் திற. எங்கள் மீதுள்ள பாவம் தொலைந்துபோகும்படி காத்தருள்!
பாடல்21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளற்பெரும் பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்

ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே,

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள்: இந்த பாடலில் நப்பின்னை பிராட்டி உள்ளிட்ட அனைவரும் கண்ண பரமாத்மாவின் வீரத்தை புகழ்ந்து, அவரை எழுப்பும் வகையில் பாடுகின்றனர். ""கறந்த பால் பொங்கி வழியும்
படியாக, இடைவிடாமல் பால் சொரியும் வள்ளல் குணம் கொண்ட பெரிய பசுக்களை உடைய நந்தகோபனின் மகனான கண்ணனே! எழுவாயாக. அடியார்களைக் காப்பாற்றுவதில் அக்கறை கொண்டவனே! வேதங்களால் புகழப்படும் தன்மை வாய்ந்தவனே! அந்த வேதங்களாலும் அறியமுடியாத பெரியவனே! இந்த உலகமே பிரகாசம் அடையும்படியாக சுடர்போல் திகழ்பவனே! எழுவாயாக! உனக்கு எதிரான பகைவர்கள் தங்கள் வலிமையை இழந்து உன்னிடம் சரணாகதி அடைவதற்காக உன் திருவடிகளில் வந்து விழுவதுபோல நாங்களும் உன்னை புகழ்ந்து பாடியபடி உன் திருவடிகளை அடைவதற்காக வந்திருக்கிறோம்.
பாடல்20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

செப்பன்ன மென்முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்.


பொருள்: முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவருக்கு துன்பம் ஏற்பட்டால்கூட அதைத் தடுப்பதற்காக அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்றுவிடும் கண்ணனே! எழுவாயாக. பக்தர்களை காக்கவும், தீமையை அழிக்கவும் வல்லவனே! நேர்மை கொண்டவனே! உன் அடியார்களின் எதிரிகளுக்கு பயம் என்ற காய்ச்சலை கொடுப்பவனே! நல்ல குணம் உள்ளவனே! எழுவாயாக. குவிந்த மார்பு, பொற்கலசம் போன்ற வாய், பவளச் செவ்வாய், நுண்ணிய இடையை உடைய நப்பின்னை பிராட்டியே! மகாலட்சுமி போன்றவளே! நீயும் எழுவாய். எங்கள் நோன்பிற்குத் தேவையான விசிறியும் கண்ணாடியும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இந்தக் கணத்திலேயே உன் அருளால் எங்களை நீராட்டு.
பாடல்19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;

மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்


பொருள்: மை தீட்டிய பெரிய கண்களை உடைய நப்பின்னை பிராட்டியே! உன் இல்லத்தில் நான்குபுறமும் குத்துவிளக்குகள் எரிகின்றன யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் மீது
மிருதுவான பஞ்சணை விரித்து உன் மார்பில் தலைவைத்து, உன் கணவன் கண்ணபிரான் துõங்கிக் கொண்டிருக்கிறான் அவனை விட்டு பிரியும் சக்தி இல்லாததால், அவனை எழுப்பாமல் இருக்கிறாய் ஒரு கணம்கூட அவனைப் பிரியமாட்டாய் என்பது எங்களுக்குத் தெரியும் ஆனாலும் எங்கள் தரிசனத்திற்காக அவனை எழுப்பு அப்படிச் செய்யாமல் இருந்தால் உன்னுடைய நற்குணத்துக்கு (கிருபை) அது பொருந்தாத செயலாகும் அல்லவா?
பாடல்18

உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,

நந்த கோபாலன் மருமகளே, நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;

வந்தெங்கும் கோழி அழைத்தன காண்; மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி! உன்மைத்துனன் பேர்பாடச்

செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்: யானைகளுடன் போரிடும் அளவுக்கு பலமுடையவனும், எதிரிகளைக் கண்டு பின்வாங்காத தன்மை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே!
நறுமணம் கமழும் கூந்தலைக் கொண்டவளே! கதவைத் திற. கோழிகள் கூவிவிட்டன. குருக்கத்திச் செடி பந்தல்கள்மீது அமர்ந்த குயில்கள் பாடத் துவங்கிவிட்டன. பந்தாடும் விரல்களைக் கொண்டவளே! உன் கணவனான கண்ணனின் திருநாமத்தை உன்னோடு சேர்ந்து பாடுவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். நீ மகிழ்ச்சியுடன் வந்து, செந்தாமரை போன்ற உன் கை வளைகள் குலுங்கும்படி கதவைத்திறப்பாயாக.
பாடல்17

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய்;

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!

எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;

அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த

உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்,

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.


பொருள்: ஏழைகளுக்கு ஆடைகளையும், தண்ணீரையும், உணவையும் அவர்கள் திருப்தி அடையும்வரை தர்மம் செய்கின்ற எங்கள் தலைவனே! நந்தகோபனே! எழுவாயாக. பூங்கொடிபோன்றவளும், எங்கள் குலக்கொழுந்தும், குலவிளக்கும், தலைவியுமான யசோதையே! எழுவாயாக. விண்ணையும் மண்ணையும் அளந்தவனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான கண்ணனே! எழுவாயாக. தங்கத்தால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த திருவடிகளைக் கொண்ட செல்வச்சீமானாகிய பலதேவனே! நீயும் உன் தம்பி கண்ணனும் உடனே எழுந்தருளுங்கள். உங்களைத் தரிசிப்பதற்காக காத்திருக்கிறோம்.
பாடல்16

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய

கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில்காப் பானே; மணிக்கதவம் தாள்திறவாய்,

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,

தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

பொருள்: ஒரு வழியாக ஆயர்குலப் பெண்கள் அனைவரும் கண்ணனின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அங்கே அவர்கள் பாடும் பாடல் இது. ""எங்கள் அன்புத்தலைவர் நந்தகோபனின் இல்லக் காவலனே! கொடிகள் கட்டிய தோரணவாசலைக் காப்பவனே! மணிகள் ஒலிக்கும் இக்கதவின் தாளை திறப்பாயாக. ஆயர்குல பெண்களான எங்களுக்கு அருள் தருவதாக கண்ணன் நேற்றே எங்களுக்கு வாக்களித்திருக்கிறான். மாயச் செயல்களை புரிபவனும், நீல ரத்தின மணிகளை அணிந்தவனுமான அவனை எழுப்புவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். உடல் அழுக்கையும், மன அழுக்கையும் களைந்து பள்ளியெழுச்சி பாடுவதற்காக இங்கே குவிந்திருக்கிறோம். எங்களுக்கு நீ வழிவிடு. "அனுமதி தரமாட்டேன்' என முதன்முதலாக உன் வாயால் மறுத்துவிடாதே. (நல்ல நிகழ்ச்சிகளின் போது தடை ஏற்படுத்தும் வார்த்தைகளைப் பேசக்கூடாது) கதவைத்திற!'' என்றனர்.
பாடல்15

எல்லே இளங்கிளியே; இன்னம் உறங்குதியோ?

சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்

வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன்வாயறிதும்!

வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக

ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?

எல்லாரும் போந்தாரோ?
போந்தார், போந்தெண்ணிக்கொள்;

வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

பொருள்: உறங்குகின்றவளை எழுப்பவந்த தோழிகள், ""ஏலே இளங்கிளியே! இன்னும் உறங்குகிறாயா?'' என்றனர். (ஏலே என்ற சொல் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களையும் செல்லமாக அழைக்க பயன்படுவது. தென் மாவட்ட மக்கள் இச்சொல்லை பயன்படுத்துவர்)உறங்கிக் கொண்டிருந்தவள் வேகமாக எழுந்து ஏற்கனவே தயாராகி விட்டவள் போல நடித்து, ""தோழியரே! இதோ புறப்பட்டுவிட்டேன். ஏன் தொணதொணக்கிறீர்கள்?'' என்றாள். அதற்கு தோழிகள், ""உன்னைப்பற்றி எங்களுக்கு தெரியாதா? உன் பேச்சுத் திறமையை நாங்கள் அறிவோம்'' என்றனர்.அதற்கு அந்தப் பெண், ""நீங்களும் சாதாரணமானவர்களா? சாமர்த்தியசாலிகள். ஒருவேளை நான்தான் "புரட்டி பேசுபவள்' என்றால் அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்,'' என்று கோபித்தாள் செல்லமாக. தோழிகள் அவளிடம், ""இங்கு எல்லோரும் வந்துவிட்டார்கள். நீ மட்டும் கிளம்புவதற்கு ஏன் தாமதம்? உன்னிடம் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?'' என்றனர்.உடனே அந்தப்பெண், ""என்னைத் தவிர எல்லாரும் வந்துவிட்டதுபோல் பேசிக் கொள்கிறீர்களே! எல்லாத்தோழிகளும் வந்துவிட்டார்களா?'' என்றாள்.அதற்கு அவர்கள், ""எல்லோரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீ வந்து எண்ணிக்கொள். குவலயாபீடம் என்ற வலிமை மிக்க யானையைக் கொன்றவனும், எதிரிகளை அழிக்க வல்லவனும், மாயச் செயல்களை புரிபவனுமான கண்ணனை பாடுவதற்கு விரைவாக எழுந்து வா,'' என்றனர்.
பாடல்14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பால்வாய் கூம்பினகாண்

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.


பொருள்: உறங்கும் தோழியே! உங்கள் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திலுள்ள குளத்தில், தாமரை மலர்ந்து விட்டது. அல்லி குவிந்துவிட்டது. காவி உடையணிந்த, வெண்ணிற பற்களையுடைய துறவிகள் திருக்கோயில்களில் திருச்சங்கு ஊதுவதற்காக செல்கிறார்கள். நேற்று இரவில், நீ எங்களை வந்து எழுப்புவதாக சொன்னாய். வாயால் சொல்லிவிட்டு செயலில் மறந்துபோன மங்கையே! சொன்னபடி செய்யவில்லையே என்ற நாணம் சற்று கூட உன்னிடம் இல்லையா? பேச்சில் மட்டும் இனிப்பைக் கொண்டிருப்பவளே! சங்கு சக்கரங்களை தரித்தவனும், வலிமையான கைகளை உடையவனும், தாமரை போன்ற பெரிய கண்களை உடையவனுமான நம் கண்ணனை பாடுவதற்கு உடனே எழுவாயாக.
பாடல்13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண்: போதரிக் கண்ணினாய்

குள்ளக் குறிரக் குடைந்துநீ ராடாதே,

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்: பறவையின் வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயை பிளந்தெறிந்தவன் நம் கண்ணன். சீதாபிராட்டியை கடத்திச் சென்று துன்பம் செய்த ராவணனின் பத்து தலைகளையும் மனிதவடிவில் வந்து கிள்ளி எறிந்தவன். அவனது வீர சரிதங்களை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். நம்மைவிட வயதில் குறைந்த சிறுமிகள் கூட நமக்கு முன்னால் ஆர்வத்துடன், நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்கள். சுக்கிரன் உதயமாகிவிட்டது. பிரகஸ்பதி அஸ்தமித்துவிட்டது. பறவைகள் கூட்டிலிருந்து புறப்பட்டு இரைதேட சென்றுகொண்டிருக்கின்றன. தாமரைப் பூவையும் மானையும் ஒத்த கண்களை கொண்டவளே! பதுமை போன்ற அழகியே! இந்த அதிகாலைப் பொழுதில் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயா? அல்லது படுக்கையில் கிடந்தபடியே கண்ணனை தனியாக நினைத்துக் கொண்டிருக்கிறாயா? இவற்றையெல்லாம் விட்டு எங்களோடு சேர்ந்து வா. கடும் பனியிலும் இந்த உடல் குளிர வேண்டும். எனவே நீராடி மகிழ்வதற்காக எங்களோடு கிளம்பி வா.
பாடல்12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்!

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்: கறப்பதற்கு ஆளில்லாததால் மடுக்கள் வலி எடுக்க இளங்கன்றுகளைக் கொண்ட
எருமைகள் அங்குமிங்கும் கதறியபடி ஓடுகின்றன. தங்கள் கன்றுகளை மனதில் நினைத்து, அவை தங்களிடம் பால் குடிப்பதுபோல கற்பனை செய்துகொள்கின்றன. அந்த நினைவிலேயே பாலைச் சொரிகின்றன. அப்படிப் பெருகிய பால் வீட்டு முற்றத்தில் தேங்கி, சேறாக மாறியது. இப்படி பால் பொழியும் கோகுலத்தில் ஏராளமான செல்வத்தை உடைய கோபால குலத்தைச் சேர்ந்தவனின் தங்கையே! எங்கள் தலையில் பனி கொட்டுகிறது. ஆனாலும், உனக்காக உன் வீட்டின் முன்பு காத்து நிற்கிறோம். நமது கண்ணபிரான் தென்திசையிலுள்ள இலங்கைக்கு அரசனான ராவணனை "தர்மாவேசம்' என்ற கோபத்தால் கொன்றொழித்தான். ராமபிரான் என்று பெயர் தாங்கினான். அப்படிப்பட்ட இறைவனை நாங்கள் புகழ்ந்துபாடியும் நீ வாய் திறக்காமல் இருக்கிறாயே! எல்லாரும் எழுந்துவிட்டனர். உனக்கு மட்டும் என்ன உறக்கம்? இனியாவது எழுந்திரு.
பாடல்11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

புற்றர வல்குல் புனமயிலே! போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்

பொருள்: கன்றுகளோடு கூடிய கறவைப்பசுக்களிடம் பால் கறக்கும் தொழில் செய்பவர்களும், பகைவரின் வலிமை அழியும்படியாக அவர்களோடு போர்புரியும் குணம் கொண்டவர்களும், எந்தப் பாவமும் செய்யாதவர்களான கோகுல மக்களின் வம்சத்தில் பிறந்த பொற்கொடியே! புற்றில் வசிக்கும் பாம்பு படமெடுத்தது போன்ற அழகிய முன்இடுப்பைக் கொண்டவளே! காட்டில் வாழும் மயிலின் சாயலை உடையவளே! நீ எழுவாயாக! உன்னிடம் செல்வமும் பெண்மையும் வாய்க்கப் பெற்றிருக்கிறது. அதனால் என்ன பயன் கிடைத்துவிடும்? மேகம் போல் வடிவழகும், வீரமும் கொண்ட கண்ணனின் திருநாமத்தைப் பாட நாங்கள் புறப்படுகிறோம். உன் சுற்றத்தாரும், தோழிகளும் வாசலில் காத்திருக்கிறார்கள். ஆனால் நீயோ அசையாமல் படுத்திருக்கிறாய். பேசவும் மறுக்கிறாய். இப்படி உறங்குவதால் உனக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? உடனே வா! நாம் கண்ணனின் திருநாமத்தை பாட புறப்படுவோம்.
பாடல்10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்


பொருள்: கிருஷ்ணனின் தரிசனத்திற்காக நோன்பு நோற்று அந்த இன்பத்திலேயே மூழ்கியிருக்கும் தலைவியே! உன் வாசல் கதவை திறக்காதிருப்பதின் மர்மம் என்ன? உள்ளிருந்துகொண்டே ஏன் பேச மறுக்கிறாய்? நறுமணமுள்ள துளசியை அணிந்திருக்கும் ஸ்ரீமந் நாராயணன், நமது நோன்பை ஏற்று அருள்தரக் காத்திருக்கிறார். ஒரு காலத்தில் எமனிடம் சிக்கி வீழ்ந்த, கும்பகர்ணனைவிட நீ துõக்கத்தில் பெரிய ஆளாக இருக்கிறாய். அவன் உனக்கு தனது தூக்கத்தை பரிசாகத் தந்துவிட்டுப் போய்விட்டானோ? சோம்பல் கொண்டவளே! கிடைத்தற்கரிய ஆபரணமாக எங்களுக்கு வாய்த்தவளே! துõக்கம் தெளிந்து உடனே கதவைத்திற.
பாடல்9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபங் கமழத் துயிலணைமேல்

கண்வளரும் மாமான் மகளே!

மணிக்கதவம் தாள்திறவாய்; மாமீர்

அவளை எழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ

அன்றிச் செவிடோ? அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ


"மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்

பொருள்: எங்கள் மாமன் மகளே! சுற்றிலும் விளக்குகள் எரிய, அழகிய ரத்தினங்களால் அமைக்கப்பட்ட உன் மாளிகை மின்னுகிறது. அதிலுள்ள படுக்கை அறையில் அகில் முதலான
வாசனைப் பொருள்களின் மணம் கமழ்கிறது. இதை நுகர்ந்தபடியே மென்மையான பஞ்சு மெத்தையில் துயில் கொண்டிருக்கிறாயோ? எங்கள் மாமியே! மணிகள் கட்டப்பட்ட உன் வீட்டின் கதவை திறப்பாயாக. உன் மகளை நாங்கள் இத்தனை நேரமும் எழுப்பியும் எழவில்லை. அவள் பெரும் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாளே! அவளை யாராவது மந்திரத்தால் கட்டிவிட்டார்களோ? எந்த பதிலும் சொல்லாத அவள் ஊமையாகி விட்டாளா? காதுகள் செவிடாகிவிட்டதா? ஒருவேளை சோர்வினால் உறங்குகிறாளோ?

"மாயச்செயல்கள் புரிபவன், மாதவன், வைகுண்டவாசன்' என்றெல்லாம் நம் கண்ணபிரானை பல திருநாமங்கள் சொல்லி நாங்கள் பாடுகிறோம். அவளும் அந்த திருநாமத்தை இந்நேரத்தில் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் நோன்பு நோற்பதின் பயனை அடையமுடியும். இனியாவது உன் பெண்ணை எழுப்பமாட்டாயா?
பாடல்8

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.



பொருள்: கீழ்வானம் வெளுத்துவிட்டது. எருமைமாடுகள் பனிச்சிதறலுடன் கூடிய பசும்புல்லை மேய்ந்துவிட்டு கறவைக்குத்தயாராகிவிட்டன. நீராடுவதற்காக எல்லாப் பெண்களும் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எல்லாம், நீ வருவதற்காக தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறோம். உன்னை அழைப்பதற்காக உன் வீட்டுவாசலில் காத்திருக்கிறோம். கண்ணனின் ஆசி பெற்ற அழகிய பெண்ணே! எழுவாயாக. நம் கண்ணபிரானின் குணங்களைப் பாடி, மார்கழி நோன்பு வெற்றிகரமாக அமைய அவனது அருளை வேண்டுவோம். குதிரை வடிவத்தில் வந்த அசுரனின் வாயைப் பிளந்தவனும், கம்சனால் ஏவப்பட்ட மல்யுத்த வீரர்களை அழித்தவனுமான கண்ணனின் பாதங்களை பணிவதற்காக நாம் கிளம்புவோம். தெய்வத்துக்கெல்லாம் தெய்வமான அவனது திருவடி பணிந்தால் "ஐயோ!' என்று இரங்கி நமது குறைகளை தெரிந்துகொண்டு அதற்கேற்ப அருள்செய்வான்.

webdunia


பொழுதுவிடிந்ததற்கு உண்டான அடையாளங்களைச் சொல்லி, எழுந்த பின் செய்ய வேண்டியனவைகளைச் சொல்லி, அதனால் உண்டாகும் பயன்களைச் சொல்லி, பெண் ஒருத்தியை எழுப்புவதாக அமைந்த பாடல்.கீழ்வானம் வெளுத்துவிட்டது. பனிப்புல் மேய்வதற்காக, எருமை மாடுகள் நான்கு திசைகளிலும் பரவின. நீயே பார். நோன்பிற்காக நீராடக்கிளம்பிய பெண்களைத் தடுத்து நிறுத்தி, உன்னைக் கூப்பிடுவதற்காக நாங்கள் வந்து நிற்கின்றோம். கண்ணனுக்கு மிக நெருங்கியவளான நீ தூங்கிக் கொண்டிருக்கலாமா? எழுந்திரு. குதிரை வடிவான அசுரனின் வாயைப் பிளந்தவனும், மல்லர்களை அழித்தவனும், தேவாதிதேவனும்-ஆகிய பெருமாளை நெருங்கி, வணங்கினால், "ஆஹா! இவர்களைத் தேடிப் போய் நாம் அருள் செய்ய வேண்டியதிருக்க, நம்மைத் தேடி இவர்கள் வரும்படியாகச் செய்துவிட்டோமே" என்று சுவாமி இரங்கி, நமக்கு அருள் புரிவான். அப்படிப்பட்ட பெருமாளை நாடிச் செல்லுவோம். எழுந்திரு வா.
பாடல்7

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துழென வாச

நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?

தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.


பொருள்: மதிகெட்ட பெண்ணே! வலியன் குருவிகள் தங்கள் துணையுடன் இணைந்து கீசு கீசென்று பாடிக்கொண்டிருக்கின்றன. இந்தப்பாடல் ஒலி பொழுது விடிந்து விட்டது என்பதை உனக்கு உணர்த்தவில்லையா? நீராடி, பூ முடித்து. காசுமாலையும், ஆமைத்தாலி என்ற ஆபரணமும் கலகலவென்று ஒலிக்க, கைகளை மாறி மாறி அசைத்து, நமது இடைச்சியர்கள் மத்தால் தயிர் கடையும் ஓசை உதய நேரத்தை உனக்கு உணர்த்தவில்லையா? பெண்களின் திலகமே! நாராயண மூர்த்தியின் அவதாரமாகிய கண்ணபிரானை நாங்கள் பாடி மகிழ்வது உன் காதில் விழவில்லையா? அதைக் கேட்டும் உறங்கிக் கொண்டிருக்க உன் மனம் எப்படி இடம்கொடுத்தது? ஒளிமிக்க உடலை உடையவளே! உடனே எழுந்து வருவாயாக.

webdunia

இறைவனின் மேல் கொண்ட மிகுதியான ஈடுபாட்டின் காரணமாக மெய் மறந்து கிடக்கும் ஒருத்தியை எழுப்புவதாக அமைந்த பாடல் இது.எழுந்திரு. இதோ வலியன் பறவைகள் (குருவி) தங்கள் துணையுடன் சேர்ந்து `கீசுகீசு' என்று பேசும் ஒலி, எல்லா இடங்களிலும் கேட்கிறது பார். அது உன் காதில் விழவில்லையா? நறுமணம் வீசும் கூந்தலைக் கொண்ட ஆய்ச்சியர்கள் (தாங்கள்) அணிந்திருக்கின்ற காசுமாலை, பலவகை வடிவங்களாகச் செய்து கோக்கப்பட்ட மாலை, ஆகியவை சப்தமிடும்படியாக, கையை முன்னும் பின்னும், மாற்றி மாற்றித் தயிர் கடைகின்ற ஓசை உன் காதில் விழவில்லையா? எங்களுக்கெல்லாம் தலைவியான நீ, இப்படிச் செய்யலாமா? நாங்கள் யாரைப்பற்றிப் பாடிக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? நாராயணனை, பல யுகங்களிலும் பலவிதமான திருமேனிகள் கொண்டு அவதரித்த சுவாமியை, கேசியென்னும் அரக்கனைக் கொன்ற கண்ணனை-இப்படிப்பட்ட சுவாமியை, நாங்கள் புகழ்ந்து பாடுவதைக் கேட்கும் நீ இப்படிப் படுத்துக் கிடக்கலாமா?ஒளியை உடையவளே! கதவைத் திற.
பாடல்6

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்: அழகிய பெண்மணியே! பறவைகள் எழுந்துவிட்டன. கருடனின் தலைவனான பெருமாளின் சன்னதியில் வெண்சங்கு ஒலி கேட்கிறது. அது எல்லோரையும் இங்கு "வருக! வருக!' என அழைக்கிறது. அதன் பேரொலி உன் காதில் விழவில்லையா? பேய்போன்ற தோற்றத்தைக் கொண்ட பூதனை என்ற அரக்கி நஞ்சைத்தடவிய மார்புடன் நம் கண்ணனை அழிக்க வந்தாள். அவளது உயிரை பால் குடிப்பது போல நடித்த நம் கண்ணன் மார்பின் வழியாகவே உறிஞ்சி விட்டான். சகடாசுரன் என்பவன் சக்கரத்தின் வடிவில் நம் கண்ணனை கொல்லவந்தான். அவனை தனது காலால் உதைத்து கொன்று விட்டான். திருப்பாற்கடலில் அனந்தசயனத்தில் (யோக நித்திரை) அமர்ந்திருக்கும் பகவானை, தங்களது உள்ளத்தில் அமரச்செய்த யோகிகளும் முனிவர்களும் "ஹரி' என்று கூறும் பேரொலி எங்கள் உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறது. அந்த திருநாமத்தைக் கேட்பதற்காக நீயும் உடனடியாக எழுந்திரு.

webdunia

கீழ் 5 பாட்டுக்களால் நோன்புக் கதிகாரிகளையும் உபகரணங்களையும் பரக்கப் பேசி, மேல் 10 பாசுரங்களால் ஆய்ப்பாடியிலுள்ள பெண்களனைவரையு மெழுப்புகிறார்கள். இவர்களுக்குக் கண்ணனிடத்தில் மிகுந்த ப்ரேமமும் ஏதாந்தமான காலமும் கிட்டியிருக்கத் தனித்தனியே அனுபவிக்காமல் எதற்குக் குழாங்களைக் கூட்டுகிறார்கள்? எனில் தனித்தனுபவிக்கக் கூடிய விஷயமன்றாகையாலும், சுவையான பொருளைத் தனித்தனுபவிக்கக் கூடாதாகையாலும், உயர்ந்த பொருளை யாரும் இழக்கக் கூடாதென்கிற விசாலமான மனப்பான்மையாலும், "வேதம் வல்லார்களைக் கொண்டு" என்கிறபடி பாகவதர்களை முன்னிட்டே பற்ற வேண்டிய விஷயமாகையாலும் பாகவதோத்தமர்களை எழுப்புகிறார்கள்.பகவத் விஷயத்தில் புதியவளான ஒரு பெண் பிள்ளையைப் பிள்ளாய் எழுந்திராய். என்ன பொழுது விடியவேண்டாவா என்றவள் கேட்க, எங்கள் உணர்த்தி பொழுதவிடிவிற்கடையாளமன்றோ என்று வெளியே இருப்பவர்கள் சொல்ல உறங்கினவர்கள் உணர்த்தியன்றோ விடிவிற்கு அடையாளமாவது, உங்கள் உணர்த்தி அடையாளமாகுமா? என்ன. பக்ஷிகளும் சப்திக்கின்றன என்கிறார்கள். "ஊரும் நாடும்" என்கிறபடி உங்கள் ஸம்பந்தத்தாலே ஊரிலுள்ள பக்ஷிகள் முதலிய திர்யக்குகளும் உங்களைப் போல் கண்ணன் திருநாமத்தையே பிதற்றிக் கொண்டு உறக்கமற்றிருக்கின்றன வாதலால் அவைகளின் சப்தமும் அடையாள மாகாது. என்ன, பக்ஷிராஜாவான கருத்மானுக்கு ஸ்வாமியான பகவானுடைய ஆலயத்தில் வெள்ளையான, அழைக்கக்கூடிய சங்கத்தின் பெரிய சப்தத்தைக் கேட்கவில்லையா என்று வெளியே நிற்பவர்கள் சொல்ல குருக்கட்டான்" என்கிறபடி அதே நினைவினால் அவ்விதம் தோற்றமளிக்கிறதென்ன, பிள்ளாய் எழுந்திராய் என்கிறார்கள். பகவத் விஷயத்தில் புதியவளான படியாலே "மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே" என்பதை நீ எவ்வாறு அறிவாய்? என்ன, உங்களை உணர்த்தியவர்கள் யார் என்று உள்ளிருந்தவள் கேட்க, பூதனையின் ஸ்தனத்திலிருந்த விஷயத்தையும், அவள் பிராணனையும் அவள் மறுபிறவியையும் உண்டாவனாயும், க்ரித்ரிமமான சகடம் அமைப்புக்குலையும் திருவடிகளை ஸம்பந்தப் படுத்தியவனும், இம்மாதிரியான பயங்களுக்கு ப்ரஸக்தியே யோகநித்திரை கொள்கிறவனான எல்லா அவதாரங்களுக்கும் வித்தான ஸர்வேச்வரணைப் படுக்கும் போது த்யானம் செய்தபடி உள்ளத்துக் கொண்ட மனை சீலர்களும் கைங்கர்யபார்களும் படுக்கையிலிருந்து மெள்ள எழுந்து ஹரி: ஹரி: என்று கோஷித்தார்கள். அந்த பெரிய கோஷம் எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்து எங்களை உணர்த்தியது என்கிறார்கள்.
பாடல்5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,

தூய பெருநீர் யமுனைத் துறைவனை,

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

பொருள்: மாயச் செயல்கள் புரிபவனும், மதுராபுரி நகரில் அவதரித்தவனும், சுத்தமான நீரைக்கொண்ட யமுனை நதிக்கரையில் வசிப்பவனும், ஆயர்குலத்தில் தோன்றிய தீப ஜோதியாக விளங்குபவனும், பெற்றவள் வயிறு குளிரும்படி அவளுக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தவனும், அரக்கர்களை அழிப்பதற்காக உரலை இழுத்துச்சென்று கயிறு உண்டாக்கிய தழும்பைக் கொண்டவனும் ஆகிய கண்ணபிரானே! நாங்கள் தூய மனதுடனும், தூய டலுடனும், தூய மலர்களுடனும் காண வந்திருக்கிறோம். அவனை வாயாரப் பாட இருக்கிறோம். அவன் நினைவு எங்கள் நெஞ்சை விட்டு நீங்குவதே இல்லை. அறியாமையால் நாங்கள் செய்த பிழைகளையும், இனியும் அறியாமல் செய்யப்போகும் பாவங்களையும் தொலைப்பதற்காக நாங்கள் அவனைக் காண வந்துள்ளோம். அவனது திருநாமங்களைச் சொன்னால் எங்கள் பாவங்கள் தீயிலிட்ட பஞ்சு போல எரிந்துபோகும்.

webdunia

மிகப் பெரியவர்கள் ஆரம்பிக்கும் நல்ல காரியங்களுக்கே பல தடங்கள்கள் வருகின்றனவே! ராம பட்டாபிஷேகத்திற்கே தடை ஏற்பட்டதே! அப்படியிருக்க ஒன்றுமறியாத அபலைகளான நாம் ஆரம்பித்த இந்நோன்பு எங்ஙனே நிர்விக்னமாக நடைபெறும் என்று ஒரு கோபஸ்த்ரீ வினவ, நாம் எந்தக் கார்யம் ஆரம்பித்தாலும் அது பகவானுடைய திருவருளாலேயே பூர்த்தியாகவேண்டும். நம் ஸாமர்த்யத்தாலன்று என்ற மஹாவிச்வாஸத்துடன் அவனிடத்தில் பாரத்தை அர்ப்பணித்தால் அவன் தலைக் கட்டித் தருவான். என்று ப்ரதான கோபகன்யகை பணிக்கிறாள். மாயனை - ஆஸ்சர்ய சேஷ்டிதம் படைத்தவனை - சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்தவனை, அல்லது மாயை என்று பேசப்படுகிற ப்ருக்ருதியைத் தன் வசத்திலுடையவனை, வாமனாவதாரத்தாலும் சத்ருக்னாழ்வான் வாஸத்தாலும் ஸ்திரமான பகவத்ஸம்பந்தம் படைத்த வடமதுரையில் அவதரித்தவனை. மைந்தன் என்ற சப்தம் குழந்தை, ராஜா, மிடுக்கன் என்ற பல பொருளைச் சொல்லும். "மதுரை மன்னன்" என்றாள் ஆண்டாள். பிறந்த மாத்திரத்தில் தாய் தந்தையர் காலிலிருந்த விலங்கைப் போக்கடித்தபடியால் மிடுக்கனாகிறான். கோதாவரியைப் போலும், ஸமுத்ர ராஜனைப் போலுமில்லாமல் ஸ்ரீ வஸுதேவர்க்ருஷ்ணனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு கோகுலத்திற்குச் செல்லும் பொழுது பாங்காகவற்றிக் கொடுத்த பரிசுத்தியை உடைய யமுனையைப் பெண்கள் கிடைக்கும் துறையாகக் கொண்டவனை, மதுரையில் அவதரித்தாலும் அங்கு தோன்றாமல் ஆயர் குலத்தினில் தோன்றி அக்குலத்திற்கு ப்ரகாசகனாய் தானும் மிகவும் ப்ராகசித்த அலங்காரமான விளக்கை - மங்கள தீபத்தை என்னவுமாம். தாய் தன்னைக் கட்டும்பொழுது ஸெளலப்யத்தால் கட்டுண்ணப் பண்ணினபடியால் "இவள் என்ன நோன்பு நோற்றாள் கொலோ" என்று தாய் வயிற்றிற்குப் பட்டங் கட்டினவனை, பகவத் ஸம்பந்த ஜ்ஞானமாகிற தூய்மையுடன் சொந்த ஸ்தலத்திற்கு வந்து வேறு பலன்களைக் கருதாமல் பாவசுத்தியுடன் புஷ்பங்களை ஸமர்பித்து வணங்கி வாய்படைத்த பயன் பெறுவதற்காகப் பாடி மனத்தினால் அவனே ப்ராப்யனும் ப்ராபகனும் என்று சிந்தித்தால், இதற்கு முன் செய்த பாபங்களில் ப்ராரப்தம் தவிர மற்ற பாபங்களும், மேல் செய்யும் பாபங்களில், தேசகாலதேஹ வைகுண்யத்தாலும், அஜ்ஞானத்தாலும் செய்யும் பாபங்களும் தீயிலிட்ட பஞ்சு போலாகும்.முன்பு செய்த பாபங்கள் நெருப்பிலிட்ட ஊகுமுள் மாதிரி நசிக்கும். மேல் செய்யப்படுமவை தாமரையில் தண்ணீர் மாதிரி ஸம்பந்தப்படா.

பாடல்4

ஆழி மழைக்கண்ணா! ஒன்றும்நீ கைகரவேல்

ஆளியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந் தோளுடையப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்,

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள்: கடல்போல் பரந்து விரிந்திருக்கும் கம்பீரமான தோற்றம் உள்ள மழைதேவதையே! நீ, ஒரு சொட்டு தண்ணீரைக்கூட உன்னிடம் வைத்துக்கொள்ளாதே. கடலில் மூழ்கி நீரை அள்ளிக்கொண்டு ஆரவாரத்துடன் வானத்தை நோக்கிச் செல்! காலம், நேரம் முதலிய எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் எம்பெருமானாகிய நாராயணனின் திருமேனி போல் உன் உடலை கருப்பாக்கிக் கொள். அந்த பத்மநாபனின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் போல் மின்னலை வெட்டு. அவனது பாஞ்சஜன்யம் என்னும் வலம்புரி சங்கு ஒலிப்பதுபோல இடியை முழக்கு. அவனிடமுள்ள சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல மழையைப் பொழி. இவ்வுலகில் எல்லோருக்கும் நல்வாழ்வைக் கொடு. இந்த மார்கழி மாதத்தில் நாங்கள் தினமும் நீராடி மகிழும் வகையில் புத்தம்புது நீரைத் தரும் வகையில் தாமதிக்காமல் பெய்வாயாக!
மார்கழியில் மழை பெய் கிறதே... ஐப்பசி, கார்த்திகையில் அல்லவா அடைமழை பெய்திருக்க வேண்டும் என்று நாம் இப்போது பெய்யும் மழையைப் பார்த்து பேசிக் கொள்கிறோம். ஆண்டாள், பெருமாளிடம் மார்கழி மாதத்தில் நாங்கள் நீராடி விரதமிருக்க புத்தம் புதுதண்ணீர் வேண்டும் என கேட்கிறாள். எனவே, இப்போது தமிழகத்தில் பெய்யும் மழை ஆண்டாளின் அருட்கொடை என்றே கொள்ள வேண்டும்.

மழைதேவதையே! ஒரு சொட்டு தண்ணீரைக்கூட உன்னிடம் வைத்துக்கொள்ளாதே. கடலில் மூழ்கி நீரை அள்ளிக்கொண்டு வானத்தை நோக்கிச் செல்! காலம், நேரம் முதலிய எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் எம்பெருமானாகிய நாராயணனின் திருமேனி போல் உன் உடலை கருப்பாக்கிக் கொள். அவனது கை யிலுள்ள சக்கரம் போல் ஒளிவீசும் மின்னலை வீசு. அவன் ஊதும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு ஒலிப்பதுபோல இடி முழக்கு. அவனிடமுள்ள சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல மழையைப் பொழி. எல்லோருக்கும் நல்வாழ்வைக் கொடு. இந்த மார்கழி மாதத்தில் நாங்கள் தினமும் நீராடி மகிழும் வகையில் புத்தம்புது தண்ணீரைக் கொடு என்கிறாள் ஆண்டாள்.




webdunia

கோப கன்னிகைகள் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழிய வேணுமென்று மநோரதித்தவாறே, பர்ஜன்ய தேவதை ஓடி வந்து அவர்களை வணங்கி மழை பொழியும் வகையை நியமித்தருள வேணுமேன்று ப்ரார்த்திக்க, இவர்களும் நியமிக்கிறார்கள் ஸமுத்ரம் போல் கம்பீரமான தன்மை படைத்தவனே, மழைக்கு நிர்வாஹகனே, மண்டலாகாரமான வர்ஷத்திற்கு நியாமகனே என்றும் கொள்ளலாம். புண்யாத் மாக்களைக் கைக்கொண்டு பாபாத்மாக்களையும் காக்குமியல்பினளான பிராட்டியைப் பின்பற்றி உள் ஒளதார்யத்தில் ஒன்றையும் குறைக்காதே மழை பொழியவேணும். மஹா ஸமுத்ரத்தின் நடுவில் புக்குத் தண்ணீரை முகந்து கொண்டு, உன் சப்தத்தால் நாட்டார் வாழும் படி முழங்கிக் கொண்டு ஆகாசத்திலேற வேண்டும்.ஸ்ருஷ்டிகாலத்தில் கருணையாகிற நீர் நிரம்பிய பகவான் திருமேனி மாதிரி உன் மேனி கறுத்திருக்க வேண்டும். ( மெய் கறுத்து என்பதால் அகவாயில் கருணையில்லை என்பது ஸ்பஷ்டம் ) பலமுள்ள அல்லது விசாலமான அழகிய தோள் படைத்தவனாய் திருநாபியில் தாமரையைத் தாங்கினவரான பகவானுடைய கையில் உள்ள சக்கரத்தாழ்வான் மாதிரி மின்னவேண்டும். ஒருவனுக்கு வெகு காலம் குழந்தை இல்லாமலிருந்து பிறகு பிறந்தால், ஸந்தோஷமிருந்தாலும் தன் கர்ம பீர்யத்தால் அதை வெளிக்காட்டிக் கொள்ளான். அவனைச் சேர்ந்தவர்கள் பலவாறாக அதை ப்ரகாசப்படுத்துவார்கள். அதே போல் ஸர்வேச்வரனுக்கும் வெகுகாலம் குழந்தை இல்லாமலிருந்த திருநாபிக் கமலத்தில் ப்ரஹ்மாவாகிற குழந்தைபிறந்தார். பகவான் தன் கம்பீரஸ்வபாவத்தால் ஸந்தோஷத்தை வெளிக்காட்டவில்லை. ஆனால் பகவானைச் சேர்ந்த ஸுதர்சனாழ்வான் ஸந்தோஷத்தால் அப்போது மிகவும் ப்ரகாசித்தார். அது போல் நீயும் ப்ரகாசிக்க வேணும் என்று கருத்து. இது பத்மநாபன் கையில் ஆழி போல் என்பதால் கிடைக்கக் கூடிய பொருள். ப்ரதி கூலரி மனத்தைப் பிளக்கக் கூடியதும் அனுகூலர்க்கு ஆனந்த ஜனகமுமான சப்தத்தையுடைய பாஞ்சஜன்யம் போல் நீயும் சப்திக்க வேண்டும். பாஞ்ச ஜன்யம் பாரதயுத்தத்தில் ஒரு ஸமயம் முழங்கிப் பின்பு நின்று விட்டது. நீ தொடர்ந்து முழங்க வேண்டும். தேவதாந்தரங்களைப் போல் விளம்பிக்காமல் சார்ங்கம் பொழிந்த பாணவர்ஷம் போல் நீ உடனே பொழிய வேண்டும். பாணவர்ஷத்தால் உலகமழிந்தது. உன் வர்ஷத்தால் உலகம் வாழவேண்டும். நாங்களும் எங்கள் முயற்சி ஸபலமாயிற்றென்று மகிழ்ந்து மார்கழி நீராடவேண்டும்.
பாடல்3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள்நம் பாவைக்குச் சாற்றுநீர் ஆடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

ஓங்கு பெருஞ்செந்நெ லுõடு கயல்உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்: எங்கள் புருஷோத்தமன் விஸ்வரூபமெடுத்து இந்த உலகத்தை தனது திருவடிகளால் அளந்தான். அவனது திருநாமத்தை பாடி, நாங்கள் பாவை நோன்பு நோற்கிறோம். அந்த நோன்பிற்காக மார்கழி அதிகாலையில் எழுந்து நீராடினால் ஏற்படும் பயன்களை சொல்கிறோம். கேளுங்கள். இந்த நாட்டிற்கு எந்த தீங்கும் நேராது. மாதம் மூன்று முறை மழை பொழியும். அதன் காரணமாக வயல்களில் செந்நெல் பயிர் உயர்ந்து வளரும். அந்த வயல்களில் கயல்மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய குவளை மலர்களில் புள்ளிகளைக் கொண்ட வண்டுகள் தேன் குடித்த மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும். (வற்றாத தேன் வளம் கிடைக்கும் என்பது உட்பொருள்) அழிவற்ற செல்வம் நமக்கு கிடைக்கும். வள்ளல் தன்மையுள்ள பெரிய பசுக்களின் காம்புகளை பற்றி இழுக்கும்போது பால் வெள்ளம்போல் பெருகி குடங்களை நிறைத்துவிடும்.

விளக்கவுரை: இரண்டடியில் உலகத்தை அளந்து முடித்துவிட்டு, மூன்றாவது அடிக்கு எங்கே இடம் என கேட்டவன் நாராயணன். அப்படிப்பட்ட மகாசக்தி படைத்த அவனை வணங்கினால் மானிடர்க்கு மட்டுமல்ல! அவர்களைச் சார்ந்திருக்கும் எல்லா ஜீவன்களுக்குமே நன்மை பயக்கும். அவனை வணங்குவதில் மிக உயர்ந்த விரதம் மார்கழி பாவை நோன்பு விரதம். இந்த விரதம் இருந்தால், மழை தவறாமல் பெய்யும். இன்று இந்தவிரதத்தை மறந்ததால் தானே பாட்டில் தண்ணீரை பத்து ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிறோம்! தண்ணீர் பெருக்க மிக்க நாட்டில் விளைச்சலுக்கு குறைவிருக்காது. வயல்களைச் சார்ந்தோடும் நீரோடைகளில் மீன்கள் துள்ளி விளையாடும். தோட்டங்களிலும், குளங்களிலும் பூத்துக்குலுங்கும் மலர்களில் தேனீக்கள் தேன் குடித்து மகிழும்.அது மட்டுமா! கோகுலத்து பசுக்களெல்லாம் கோபாலன் பெயரைச் சொன்னாலே நாலு படி பால் கறந்து விடுமே!இப்படி, மனிதனை மனிதன் மட்டுமல்ல! தங்களைச் சார்ந்திருக்கும் எல்லா உயிரினங்களையும் நேசிக்க வேண்டும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.


webdunia

பரமைகாந்திகளான இக்கோபிகாஸ்த்ரீகளுக்கு முக்ய பலமோ அவாந்தரமாக நடுவில் வரக்கூடிய பலமோ எல்லாம் கண்ணாயிருக்க மழையைக் கோலலாமோ எனில், தங்களுக்கு எல்லாம் பகவானாக இருந்தாலும் தாங்கள் பகவானை அனுபவிப்பதற்கு அனுமதி கொடுத்த கோபர்களை உத்தேசித்து மழையைக் கோருகிறார்கள் எனக் கொள்ளவேண்டும். தர்ம காரியத்திற்கு அனுமதியளித்தவர்க்கும் "தர்ம : ச்ருதோவா" என்கிற வசனப்படி பலம் ஸித்தமன்றோ. மழைக்கேதாவது ப்ரதி பந்தகமிருந்தால் வாமனத்யாத்தினால் அது விலகும் என்று எண்ணி வாமனைப் பாடுகிறார்கள். கிண்டியிலிருந்து தண்ணீர் விழ வொட்டாமல் தடுத்த சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறித் தண்ணீரை வரவழைத்தவன் வாமனனன்றோ! பிறரையும் கெடுத்துத் தானும் கெடுபவன் அதமாதமன் பிறரைக் கெடுத்துத் தான் வாழ்பவன் அதமன். பிறர் வாழ்வையும் அனுமதித்துத் தானும் வாழ்பவன் மத்யமன். தான் கெட்டாலும் பிறர் வாழ வேண்டுமென்பவன் உத்தமன். ஸூக்ஷ்மீபூய ஸ்வயமபி என்கிற ச்லோகத்தில் இந்நான்கு புருஷர்களுக்கும் உதாஹரணம் காணலாம். வாமனன் "மதியினால் குறள் காணாய்" "தைத்யௌதார்ய" என்று நம்மாழ்வாரும் பட்டரும் அருளிச் செய்த படி பிறருக்காகத் தான் யாசகனானான். மஹாபலி இந்த்ரன் இருவரையும் வாழவைத்தான். அவன் திருநாமத்தை வேறு பயனைக் கருதாமல் அன்புடன் பாடி, யாவருமறியப் பறை சாற்றி நீராடினால், நாடெல்லாம் வறட்கேடு வெள்ளக்கேடு முதலிய தீங்கில்லாமல் மாதம் மும்முறை மழை பொழியும். "வேதமோதிய அந்தணர்க் கோர் மழை மாதர் மங்கையர் கற்பினுக்கோர் மழை நீதி நின்றிடும் மன்னவர்க்கோர் மழை" என்று மூன்று மழை பொழிந்திடும் என்றார்கள் தமிழர்கள். ஜலஸம்ருத்தியால் செந்நெல் ஓங்கி வளரும். மத்ஸ்யங்கள் நிழலிலும் நீரிலும் நன்கு வளர்ந்து பருத்திருக்கிறபடியால் செந்நெலூடே ஒருக்களித்துச் செல்லும், "வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்" என்றாரிறே திருமங்கை மன்னன். அழகிய குவலைப்பூவில் தேனைப் பருகுவதற்காக ப்ரவேசித்த அழகிய வண்டுகள், கீழே மீன்கள் ஓடுவதால் ஆடக்கூடிய குவளைப் பூவில், ஆட்டப்படுகிற தொட்டிலில் சயனித்த ராஜகுமாரனைப் போலே நன்கு நித்திரை கோள்ளும். இது வரையில் வயல் ஸம்ருத்தி பேசப்பட்டது. மேலே க்ராம ஸம்ருத்தி பேசப்படுகிறது. கண்ணனைப் போலே பெண்ணுக்கும் பேதைக்கும் தன்னைக் கொடுத்துக் கொண்டு தன்பேறாகப் பாலைப் பொழியும் பசுக்கள் நிரம்பி இருப்பதால் `வித்யதே கோஷு ஸம்பந்நம்' என்கிற படி நீங்காத செல்வம் நிறைந்திருக்கும். பாலைக் கறப்பவன் துளியும் பயப்படாமல் மரம்போல் ஸ்திரமாக அமர வேண்டும்.



பாடல்2

வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்கலை நீராடி,

மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;

செய்யாதன செய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்: இந்த உலகத்தில் வாழ தகுதியானவர்களே! பாவை நோன்பிற்காக நாம் செய்ய வேண்டிய சடங்குகளைக் கேளுங்கள். பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் திருவடிகளை பாடுங்கள். அதிகாலையில் நீராடுங்கள். எவ்வித தற்பெருமையும் இல்லாமல் தானம் செய்யுங்கள். நெய்யும் பாலும் உண்ணாதீர்கள். உங்கள் கூந்தலில் பூச்சூட வேண்டாம். தீய செயல்களை செய்யாதீர்கள்.

பரந்தாமனிடம் சென்று யாருக்காவது தீங்கு ஏற்பட வேண்டும் என வேண்டுகோள் வைக்காதீர்கள். இந்தப் பிறவிப்பிணியிலிருந்து நீங்கி உய்யும் வகை குறித்து அவனிடம் இறைஞ்சுங்கள்.

விளக்கம்: பெண்களே! அதிகாலையில் நீராடுங்கள். எதையும் எதிர்பாராமல், தற்பெருமை இல்லாமல் தானம் செய்யுங்கள். நெய்யும் பாலும் உண்ணாதீர்கள். கூந்தலில் பூச்சூடாதீர்கள். தீய செயல்களை செய்யாதீர்கள். அந்தப் பரந்தாமனிடம் சென்று யாருக்காவது தீங்கு ஏற்பட வேண்டும் என வேண்டுகோள் வைக்காதீர்கள். இந்தப் பிறவிப்பிணியிலிருந்து நீங்கி உய்யும் வகை குறித்து அவனிடம் கெஞ்சுங்கள் என்பது பாடலின் கருத்து.

எல்லாமே இறைவன்! எல்லாம் அவன் செயல். அவனின்றி எதுவும் அசையாது. பெண்கள் மிகவும் விரும்புவது பூ. பூவோடும் பொட்டோடும் வாழ்க என்று தான் அவர்களை வாழ்த்துவோம். அந்தப் பூவைக் கூட பரந்தாமனின் பூஜைக்கு ஒப்படைத்து விடுங்கள் என்கிறாள் ஆண்டாள். திருப்பதியில் இப்போதும் கூட பெண்கள் தலையில் மலர் சூடக்கூடாது என்ற விதி இருக்கிறது. காரணம், மலர்கள் அனைத்தும் அந்த மாலவனுக்கே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதால்! நம்மிடமுள்ள எல்லாப்பொருட்களும் அவனுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும் என்பதும், கையிலுள்ளதை இல்லாதவர்க்கு தானம் செய்து விட வேண்டும், அந்த தானத்திற்கான புண்ணியத்தைக் கூட எதிர்பார்க்கக்கூடாது என்பதும் இப்பாடல் உணர்த்தும் கருத்து.


webdunia

நல்ல விஷயத்தில் ஆசையிருந்தால் போதுமானது. யாரும் இழக்க வேண்டாம் என்று முதற்பாட்டில் சொன்னவள் அவர்கள் கிட்ட நெருங்கியவாறே, நோன்புக்கு அங்கமாகச் சில அவ‌சியம் செய்யத் தக்கவை, சில மறந்தும் செய்யத் தகாதவை என்பதை விவரிக்கிறாள்.தணலில் தாமரைபூத்தாற் போல், இதர விஷயங்களில் மண்டி முடியக் கூடிய இக்கொடிய உலகத்தில் வகுத்த விஷயமான பகவானையே நிரந்தரம் அனுபவிக்கக்கூடிய பாக்யம் பெற்றவர்களே இவ்வுலகத்தில் பகவானை நன்கு அனுபவிக்கக் கூடிய பாக்யம் பெற்றவர்கள். வைகுந்தம் கிடைத்தாலும் வேண்டாம் என்றல்லவோ கர்ஜிக்கிறார்கள். ராமாவதாரத்தில் ஆழங்கால் பட்ட ஆஞ்சனேயன் ( பாவோ நாந்யத்ர கச்சதி ) என்றான். அர்ச்சாவதாரத்தில் ஈடுபட்ட ஆழ்வார் "அச்சுவை பெறினும் வேண்டேன்" என்றார். வைகுண்டவாஸேபி நமே பிலாஷ : என்றார் கவிதார்க்கிகஸிம்ஹமும். அவ்விதம் "விண்ணுளாரிலும் சீரியர்" என்று கொண்டாடக் கூடிய பெரும் பாக்யம் பெற்றவர்களே! இந்த்ரஜித் முதலியவர்கள் பகவானையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அழிப்பதற்காகச் செய்த நோன்பு போலல்லாமல் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து வாழ்வதற்காகச் செய்யக்கூடிய இந்நோன்புக்கு அங்கமாகச் செய்யக் கூடியவைகளை உகந்து கேட்கவேண்டும். ஜனமேஜயன் பகவத் சசரித்திரத்தை நல்லோர்களிடம் உகந்து கேட்பதே பரமபுருஷார்த்தம் என்றானன்றோ! தான்யங்களைப் பயிர் செய்பவன், அங்கேயே குடில் கட்டிக் கொண்ட தங்கி அவைகளைக் காக்குமாப்போலே, ஸ்ரீ பகவானும் நம்மைப் படைத்து, நம்முடைய ஆர்த்த நாதம் உடனே செவியில் படக்கூடிய வகையில் பாற்கடலில் கள்ளநித்ரை செய்கின்றான். அவன் ஸெளலப்யாதி குணங்களையும், தகட்டிலழுத்தின மாணிக்கம் போல் ஆதிசேஷன் மேல் சாய்ந்தவாறே உண்டான அழகையும் திருக்கண் வளரும்போது ஏற்படும் சௌந்தர்யதையும் நன்கு அனுபவிவத்து அவனுடைய அடியைப் பாடவேண்டும். நெய் பால் முதலிய பதாhத்தங்களை உண்ணக்கூடாது. பகவச்சரித்திரத்தைக் கேட்பதும் சொல்வதும் தவிர வேறு ஆஹாரத்தை அபேக்ஷிக்கக் கூடாது. அதிகாலையில் எழுந்திருந்து ஸ்நாநம் செய்யவேண்டும். மை இட்டுக் கொள்ளக்கூடாது. மலர் வைத்துக் கொள்ளக்கூடாது. முன்னோர் செய்யாததை செய்யக்கூடாது. பிறர்க்குத் தீங்கிழைக்கக் கூடிய சொற்களைச் சொல்லக்கூடாது. தானாகக் கிடைத்ததையே பெறுவது என்றிருக்கும் மஹான்களுக்கும் யாசித்தே பெற வேண்டிய ப்ரஹ்மசாரி, ஸந்யாஸி போன்றவர்களுக்கும் நம்மாலியன்றதைக் கொடுக்க வேண்டும். இவையனைத்தும் நாம் உய்யும் வகைகளாம்.





பாடல்1

மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறைதருவான்

பாரோர் புகழ பரிந்தேலோர் எம்பாவாய்!

விளக்கவுரை: இந்தப் பாடல் வைகுண்டத்தில் இருக்கும் நாராயணனைப் பற்றி குறிப்பிடுகிறது. 108 திவ்யதேசங்களில் பூலோகத்தில் 106 இருக்கிறது. 107வது தலம் திருப்பாற்கடல். வைகுண்டம் 108வது தலம். 108வது தலத்தில் இருக்கும் எம்பிரான் நாராயணனைப் புகழ்ந்து, அவனிடம் "பறை' வேண்டுகிறாள் ஆண்டாள். "பறை' என்ற சொல்லுக்கு "ஒரு வகை தோல் வாத்தியம்' என்ற பொருள் உண்டு. இறைவனிடம் யாராவது ஒரு தோல் வாத்தியம் கேட்பதற்காக காத்து நிற்பார்களா? அப்படியானால் ஏன் "பறை' கேட்கிறாள் ஆண்டாள். பறையை ஒலிக்கும் போது வெகுதுõரமுள்ள மக்களை அதன் ஒலி கவரும். அதுபோல், "நாராயணா' என்னும் நாமத்தை சொல்லும் போது, அது உள்ளத்தைக் கவரும். ஒருவர் அந்த ஒலியை எழுப்பினாலும், சுற்றி நிற்கும் எல்லாருடைய உடலும் உள்ளமும் புனிதமடையும். மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் என்பது பவுர்ணமியைக் குறிக்கும். ஆண்டாள் இப்பாசுரத்தை துவங்கிய நாள் பவுர்ணமியாக இருந்திருக்கக் கூடும். மதி என்றால் "அறிவு' என்றும் பொருள். ஆம்...அறிவுள்ள யாவரும் மார்கழியில் அந்த நாராயணனை வணங்க வேண்டும். ஏனெனில் மாதங்களில் நான் மார்கழி என அவனே சொல்லியிருக்கும் போது, அந்த மாதத்தை அறிவுடையோர் தவற விடுவார்களா! உடலே ஆத்மா என்று நினைப்பது அறிவீனம். அந்த நினைப்பை உதிர வைப்பதே அறிவுடையோர் செயல் என்றும் இதற்கு பொருள் சொல்லலாம்.
புத்திக்கூர்மையை அதிகரிக்கும் மாதம் மார்கழி. தகுதி வாய்ந்த அழகிய ஆபரணங்களை அணிந்தவர்களை பெருமைமிக்க கோகுலத்தில் வசிக்கும் செல்வச் சிறுமிகளே! நாமெல்லாம் உலகத்தார் புகழும்படி நோன்பு நோற்று நீராடுவோம். என்னோடு வர விரும்புபவர்கள் வரலாம். கையில் கூர்மையான வேலை வைத்திருக்கும் நந்தகோபனுடைய மகனும், அழகு நிறைந்த கண்களை உடைய யசோதையின் மைந்தனும், சிங்கத்தைப் போல் கர்வமாக நடப்பவனும், மேகம் போன்ற கருநிற மேனியை உடையவனும், தீயவர்களைக் கண்டால் சிவந்துபோகும் கண்களை உடையவனும், சூரியனின் ஒளிக்கதிர் போன்ற பிரகாசமான தோற்றம் கொண்டவனும், குளிர்ந்த சந்திரன் போன்ற முகத்தை உடையவனுமான கண்ணபிரான் நம் அனைவரையும் காப்பாற்றும் நாராயணமூர்த்தியாக உள்ளார். அவரையே நம் பலமாகக் கருதி பற்றியிருக்கிறோம். அந்த இறைவனை வணங்குவதற்கு இன்றுமுதல் நோன்பு துவங்குவோம். அவ்வாறு நோன்பிருந்தால் பயன்கருதாமல் தொண்டு செய்யும் மனப்பாங்கை அவன் நமக்குத் தருவான். ஸ்ரீவில்லிபுத்துõரில் அவதரித்த ஆண்டாள், அவ்வூரில் அருள்செய்யும் ரெங்கமன்னார் மீது காதல் கொண்டாள். அவரை அடைவதற்காக நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, தன்னைச் சேர்ந்தவர்களும் இறைவனை அடையவேண்டும் என்பதற்காக நோன்பிருக்க அழைக்கிறாள். அவள் பாடிய பாடல்களின் தொகுப்பே "திருப்பாவை'. இதில் வரும் "பறை' என்ற சொல் வெறும் வாத்தியக் கருவியை குறிப்பதல்ல. "பயன் கருதாமல் செய்யும் தொண்டு' என்பதே பறை என்பதன் பொருளாகும்.

webdunia

ஒருவனுக்கு ஒரு உயர்ந்த பொருள் கிடைத்தால், அப்பொருளைக் காட்டிலும் கிடைத்த காலத்தைக் கொண்டாடுவது வழக்கம். "சைத்ர : ஸ்ரீமாநயம் மாஸ :" என்று ராம பட்டாபிஷேகத்திற்கமைந்த நாளைக் கொண்டாடினார்களிரே! அவ்விதமே ஆயர் பெண்களும் தங்கள் நோன்புக்கு அமைந்த காலத்தைக் கொண்டாடி அடையப்படவேண்டிய பொருள் இது. அதை அடைவதற்கு ஸாதனமிது. என்பதை முதல் பாட்டாலே நிர்ணயிக்கிறார்கள். கண்ணன் பகவத் கீதையில் "நான் மாதங்களில் மார்கழி மாதம்" என்றான். "அயம் ஸ கால: ஸம்ப்ராப்த : ப்ரியோ யஸ் தே ப்ரியம்வத" என்று, இளைய பெருமாளும் ராமனுக்குப் பிடித்தமான காலமென்றார். வ்யூஹமூர்த்திகளில் முதல்வனான கேசவனைத் தேவதையாகக் கொண்ட மாதமிது. அதிகக் குளிரும் அதிக தாபமும் இல்லாத மாதம். இப்படிப் பலவிதமான ஏற்றத்தைக் கொண்ட இம்மாதத்தில் சந்திரன் நிறைந்த சுக்லபக்ஷத்தில் பகவத்ஜ்ஞான முண்டாகக் கூடிய நாளில் ஸகல விதமான ஸம்பத்தும் நிறைந்த ஆயர்பாடியில் அவதரித்து, பகவத் பக்தியாகிற செல்வம் நிரம்பப் பெற்று, எல்லா விதத்திலும் அணிந்தவர்களே! பகவானாகிற தடாகத்தில் நீராட விரும்புபவர்கள் யாவரும் செல்லலாம். ( அல்லது வரலாம் ) புத்ரவாத்ஸல்யத்தால், யாரால் என்ன தீங்கு வருமோ என்று பயந்து கூரான வேலை எப்பொழுதும் கையில் தாங்கிப் பகவத் விரோதிகளை அழிக்கக் கூடிய நந்த கோபாலனுக்கு அடங்கினவனும், கண்ணனை எப்பொழுதும் கண் கொட்டாமல் அனுபவிப்பதால் அவ்வழகைக் கண்ணில் பெற்ற அம்பன்ன கண்ணாளான யசோதையின் இளஞ்சிங்கமானவனும், நீர் கொண்ட மேகம் போன்ற நிறம் படைத்தவனும், ஸூர்யனால் அப்பொழுது மலர்ந்த செந்தாமரை போன்ற கண்கள் படைத்தவனும், வேண்டாதவர்களுக்குச் சூர்யன் போன்றதும், வேண்டியவர்களுக்குச் சந்திரன் போன்றதுமான முகம் படைத்தவனுமான ச்ரிய : பதியான நாராயணனே, வேறு கதியில்லாமல் அவன் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றின நமக்குப் பறை முதலிய யாவற்றையும் கொடுப்பான். எல்லோரும் புகழ்ந்து பயன் பெறும் படி அநவதாநமில்லாமல் மனத்தைச் செலுத்தி நீராடுவோமாக