திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

புற்றர வல்குல் புனமயிலே! போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்

பொருள்: கன்றுகளோடு கூடிய கறவைப்பசுக்களிடம் பால் கறக்கும் தொழில் செய்பவர்களும், பகைவரின் வலிமை அழியும்படியாக அவர்களோடு போர்புரியும் குணம் கொண்டவர்களும், எந்தப் பாவமும் செய்யாதவர்களான கோகுல மக்களின் வம்சத்தில் பிறந்த பொற்கொடியே! புற்றில் வசிக்கும் பாம்பு படமெடுத்தது போன்ற அழகிய முன்இடுப்பைக் கொண்டவளே! காட்டில் வாழும் மயிலின் சாயலை உடையவளே! நீ எழுவாயாக! உன்னிடம் செல்வமும் பெண்மையும் வாய்க்கப் பெற்றிருக்கிறது. அதனால் என்ன பயன் கிடைத்துவிடும்? மேகம் போல் வடிவழகும், வீரமும் கொண்ட கண்ணனின் திருநாமத்தைப் பாட நாங்கள் புறப்படுகிறோம். உன் சுற்றத்தாரும், தோழிகளும் வாசலில் காத்திருக்கிறார்கள். ஆனால் நீயோ அசையாமல் படுத்திருக்கிறாய். பேசவும் மறுக்கிறாய். இப்படி உறங்குவதால் உனக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? உடனே வா! நாம் கண்ணனின் திருநாமத்தை பாட புறப்படுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக