திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்8

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.



பொருள்: கீழ்வானம் வெளுத்துவிட்டது. எருமைமாடுகள் பனிச்சிதறலுடன் கூடிய பசும்புல்லை மேய்ந்துவிட்டு கறவைக்குத்தயாராகிவிட்டன. நீராடுவதற்காக எல்லாப் பெண்களும் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எல்லாம், நீ வருவதற்காக தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறோம். உன்னை அழைப்பதற்காக உன் வீட்டுவாசலில் காத்திருக்கிறோம். கண்ணனின் ஆசி பெற்ற அழகிய பெண்ணே! எழுவாயாக. நம் கண்ணபிரானின் குணங்களைப் பாடி, மார்கழி நோன்பு வெற்றிகரமாக அமைய அவனது அருளை வேண்டுவோம். குதிரை வடிவத்தில் வந்த அசுரனின் வாயைப் பிளந்தவனும், கம்சனால் ஏவப்பட்ட மல்யுத்த வீரர்களை அழித்தவனுமான கண்ணனின் பாதங்களை பணிவதற்காக நாம் கிளம்புவோம். தெய்வத்துக்கெல்லாம் தெய்வமான அவனது திருவடி பணிந்தால் "ஐயோ!' என்று இரங்கி நமது குறைகளை தெரிந்துகொண்டு அதற்கேற்ப அருள்செய்வான்.

webdunia


பொழுதுவிடிந்ததற்கு உண்டான அடையாளங்களைச் சொல்லி, எழுந்த பின் செய்ய வேண்டியனவைகளைச் சொல்லி, அதனால் உண்டாகும் பயன்களைச் சொல்லி, பெண் ஒருத்தியை எழுப்புவதாக அமைந்த பாடல்.கீழ்வானம் வெளுத்துவிட்டது. பனிப்புல் மேய்வதற்காக, எருமை மாடுகள் நான்கு திசைகளிலும் பரவின. நீயே பார். நோன்பிற்காக நீராடக்கிளம்பிய பெண்களைத் தடுத்து நிறுத்தி, உன்னைக் கூப்பிடுவதற்காக நாங்கள் வந்து நிற்கின்றோம். கண்ணனுக்கு மிக நெருங்கியவளான நீ தூங்கிக் கொண்டிருக்கலாமா? எழுந்திரு. குதிரை வடிவான அசுரனின் வாயைப் பிளந்தவனும், மல்லர்களை அழித்தவனும், தேவாதிதேவனும்-ஆகிய பெருமாளை நெருங்கி, வணங்கினால், "ஆஹா! இவர்களைத் தேடிப் போய் நாம் அருள் செய்ய வேண்டியதிருக்க, நம்மைத் தேடி இவர்கள் வரும்படியாகச் செய்துவிட்டோமே" என்று சுவாமி இரங்கி, நமக்கு அருள் புரிவான். அப்படிப்பட்ட பெருமாளை நாடிச் செல்லுவோம். எழுந்திரு வா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக