திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபங் கமழத் துயிலணைமேல்

கண்வளரும் மாமான் மகளே!

மணிக்கதவம் தாள்திறவாய்; மாமீர்

அவளை எழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ

அன்றிச் செவிடோ? அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ


"மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்

பொருள்: எங்கள் மாமன் மகளே! சுற்றிலும் விளக்குகள் எரிய, அழகிய ரத்தினங்களால் அமைக்கப்பட்ட உன் மாளிகை மின்னுகிறது. அதிலுள்ள படுக்கை அறையில் அகில் முதலான
வாசனைப் பொருள்களின் மணம் கமழ்கிறது. இதை நுகர்ந்தபடியே மென்மையான பஞ்சு மெத்தையில் துயில் கொண்டிருக்கிறாயோ? எங்கள் மாமியே! மணிகள் கட்டப்பட்ட உன் வீட்டின் கதவை திறப்பாயாக. உன் மகளை நாங்கள் இத்தனை நேரமும் எழுப்பியும் எழவில்லை. அவள் பெரும் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாளே! அவளை யாராவது மந்திரத்தால் கட்டிவிட்டார்களோ? எந்த பதிலும் சொல்லாத அவள் ஊமையாகி விட்டாளா? காதுகள் செவிடாகிவிட்டதா? ஒருவேளை சோர்வினால் உறங்குகிறாளோ?

"மாயச்செயல்கள் புரிபவன், மாதவன், வைகுண்டவாசன்' என்றெல்லாம் நம் கண்ணபிரானை பல திருநாமங்கள் சொல்லி நாங்கள் பாடுகிறோம். அவளும் அந்த திருநாமத்தை இந்நேரத்தில் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் நோன்பு நோற்பதின் பயனை அடையமுடியும். இனியாவது உன் பெண்ணை எழுப்பமாட்டாயா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக