திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்7

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துழென வாச

நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?

தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.


பொருள்: மதிகெட்ட பெண்ணே! வலியன் குருவிகள் தங்கள் துணையுடன் இணைந்து கீசு கீசென்று பாடிக்கொண்டிருக்கின்றன. இந்தப்பாடல் ஒலி பொழுது விடிந்து விட்டது என்பதை உனக்கு உணர்த்தவில்லையா? நீராடி, பூ முடித்து. காசுமாலையும், ஆமைத்தாலி என்ற ஆபரணமும் கலகலவென்று ஒலிக்க, கைகளை மாறி மாறி அசைத்து, நமது இடைச்சியர்கள் மத்தால் தயிர் கடையும் ஓசை உதய நேரத்தை உனக்கு உணர்த்தவில்லையா? பெண்களின் திலகமே! நாராயண மூர்த்தியின் அவதாரமாகிய கண்ணபிரானை நாங்கள் பாடி மகிழ்வது உன் காதில் விழவில்லையா? அதைக் கேட்டும் உறங்கிக் கொண்டிருக்க உன் மனம் எப்படி இடம்கொடுத்தது? ஒளிமிக்க உடலை உடையவளே! உடனே எழுந்து வருவாயாக.

webdunia

இறைவனின் மேல் கொண்ட மிகுதியான ஈடுபாட்டின் காரணமாக மெய் மறந்து கிடக்கும் ஒருத்தியை எழுப்புவதாக அமைந்த பாடல் இது.எழுந்திரு. இதோ வலியன் பறவைகள் (குருவி) தங்கள் துணையுடன் சேர்ந்து `கீசுகீசு' என்று பேசும் ஒலி, எல்லா இடங்களிலும் கேட்கிறது பார். அது உன் காதில் விழவில்லையா? நறுமணம் வீசும் கூந்தலைக் கொண்ட ஆய்ச்சியர்கள் (தாங்கள்) அணிந்திருக்கின்ற காசுமாலை, பலவகை வடிவங்களாகச் செய்து கோக்கப்பட்ட மாலை, ஆகியவை சப்தமிடும்படியாக, கையை முன்னும் பின்னும், மாற்றி மாற்றித் தயிர் கடைகின்ற ஓசை உன் காதில் விழவில்லையா? எங்களுக்கெல்லாம் தலைவியான நீ, இப்படிச் செய்யலாமா? நாங்கள் யாரைப்பற்றிப் பாடிக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? நாராயணனை, பல யுகங்களிலும் பலவிதமான திருமேனிகள் கொண்டு அவதரித்த சுவாமியை, கேசியென்னும் அரக்கனைக் கொன்ற கண்ணனை-இப்படிப்பட்ட சுவாமியை, நாங்கள் புகழ்ந்து பாடுவதைக் கேட்கும் நீ இப்படிப் படுத்துக் கிடக்கலாமா?ஒளியை உடையவளே! கதவைத் திற.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக