திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்6

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்: அழகிய பெண்மணியே! பறவைகள் எழுந்துவிட்டன. கருடனின் தலைவனான பெருமாளின் சன்னதியில் வெண்சங்கு ஒலி கேட்கிறது. அது எல்லோரையும் இங்கு "வருக! வருக!' என அழைக்கிறது. அதன் பேரொலி உன் காதில் விழவில்லையா? பேய்போன்ற தோற்றத்தைக் கொண்ட பூதனை என்ற அரக்கி நஞ்சைத்தடவிய மார்புடன் நம் கண்ணனை அழிக்க வந்தாள். அவளது உயிரை பால் குடிப்பது போல நடித்த நம் கண்ணன் மார்பின் வழியாகவே உறிஞ்சி விட்டான். சகடாசுரன் என்பவன் சக்கரத்தின் வடிவில் நம் கண்ணனை கொல்லவந்தான். அவனை தனது காலால் உதைத்து கொன்று விட்டான். திருப்பாற்கடலில் அனந்தசயனத்தில் (யோக நித்திரை) அமர்ந்திருக்கும் பகவானை, தங்களது உள்ளத்தில் அமரச்செய்த யோகிகளும் முனிவர்களும் "ஹரி' என்று கூறும் பேரொலி எங்கள் உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறது. அந்த திருநாமத்தைக் கேட்பதற்காக நீயும் உடனடியாக எழுந்திரு.

webdunia

கீழ் 5 பாட்டுக்களால் நோன்புக் கதிகாரிகளையும் உபகரணங்களையும் பரக்கப் பேசி, மேல் 10 பாசுரங்களால் ஆய்ப்பாடியிலுள்ள பெண்களனைவரையு மெழுப்புகிறார்கள். இவர்களுக்குக் கண்ணனிடத்தில் மிகுந்த ப்ரேமமும் ஏதாந்தமான காலமும் கிட்டியிருக்கத் தனித்தனியே அனுபவிக்காமல் எதற்குக் குழாங்களைக் கூட்டுகிறார்கள்? எனில் தனித்தனுபவிக்கக் கூடிய விஷயமன்றாகையாலும், சுவையான பொருளைத் தனித்தனுபவிக்கக் கூடாதாகையாலும், உயர்ந்த பொருளை யாரும் இழக்கக் கூடாதென்கிற விசாலமான மனப்பான்மையாலும், "வேதம் வல்லார்களைக் கொண்டு" என்கிறபடி பாகவதர்களை முன்னிட்டே பற்ற வேண்டிய விஷயமாகையாலும் பாகவதோத்தமர்களை எழுப்புகிறார்கள்.பகவத் விஷயத்தில் புதியவளான ஒரு பெண் பிள்ளையைப் பிள்ளாய் எழுந்திராய். என்ன பொழுது விடியவேண்டாவா என்றவள் கேட்க, எங்கள் உணர்த்தி பொழுதவிடிவிற்கடையாளமன்றோ என்று வெளியே இருப்பவர்கள் சொல்ல உறங்கினவர்கள் உணர்த்தியன்றோ விடிவிற்கு அடையாளமாவது, உங்கள் உணர்த்தி அடையாளமாகுமா? என்ன. பக்ஷிகளும் சப்திக்கின்றன என்கிறார்கள். "ஊரும் நாடும்" என்கிறபடி உங்கள் ஸம்பந்தத்தாலே ஊரிலுள்ள பக்ஷிகள் முதலிய திர்யக்குகளும் உங்களைப் போல் கண்ணன் திருநாமத்தையே பிதற்றிக் கொண்டு உறக்கமற்றிருக்கின்றன வாதலால் அவைகளின் சப்தமும் அடையாள மாகாது. என்ன, பக்ஷிராஜாவான கருத்மானுக்கு ஸ்வாமியான பகவானுடைய ஆலயத்தில் வெள்ளையான, அழைக்கக்கூடிய சங்கத்தின் பெரிய சப்தத்தைக் கேட்கவில்லையா என்று வெளியே நிற்பவர்கள் சொல்ல குருக்கட்டான்" என்கிறபடி அதே நினைவினால் அவ்விதம் தோற்றமளிக்கிறதென்ன, பிள்ளாய் எழுந்திராய் என்கிறார்கள். பகவத் விஷயத்தில் புதியவளான படியாலே "மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே" என்பதை நீ எவ்வாறு அறிவாய்? என்ன, உங்களை உணர்த்தியவர்கள் யார் என்று உள்ளிருந்தவள் கேட்க, பூதனையின் ஸ்தனத்திலிருந்த விஷயத்தையும், அவள் பிராணனையும் அவள் மறுபிறவியையும் உண்டாவனாயும், க்ரித்ரிமமான சகடம் அமைப்புக்குலையும் திருவடிகளை ஸம்பந்தப் படுத்தியவனும், இம்மாதிரியான பயங்களுக்கு ப்ரஸக்தியே யோகநித்திரை கொள்கிறவனான எல்லா அவதாரங்களுக்கும் வித்தான ஸர்வேச்வரணைப் படுக்கும் போது த்யானம் செய்தபடி உள்ளத்துக் கொண்ட மனை சீலர்களும் கைங்கர்யபார்களும் படுக்கையிலிருந்து மெள்ள எழுந்து ஹரி: ஹரி: என்று கோஷித்தார்கள். அந்த பெரிய கோஷம் எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்து எங்களை உணர்த்தியது என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக