திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,

தூய பெருநீர் யமுனைத் துறைவனை,

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

பொருள்: மாயச் செயல்கள் புரிபவனும், மதுராபுரி நகரில் அவதரித்தவனும், சுத்தமான நீரைக்கொண்ட யமுனை நதிக்கரையில் வசிப்பவனும், ஆயர்குலத்தில் தோன்றிய தீப ஜோதியாக விளங்குபவனும், பெற்றவள் வயிறு குளிரும்படி அவளுக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தவனும், அரக்கர்களை அழிப்பதற்காக உரலை இழுத்துச்சென்று கயிறு உண்டாக்கிய தழும்பைக் கொண்டவனும் ஆகிய கண்ணபிரானே! நாங்கள் தூய மனதுடனும், தூய டலுடனும், தூய மலர்களுடனும் காண வந்திருக்கிறோம். அவனை வாயாரப் பாட இருக்கிறோம். அவன் நினைவு எங்கள் நெஞ்சை விட்டு நீங்குவதே இல்லை. அறியாமையால் நாங்கள் செய்த பிழைகளையும், இனியும் அறியாமல் செய்யப்போகும் பாவங்களையும் தொலைப்பதற்காக நாங்கள் அவனைக் காண வந்துள்ளோம். அவனது திருநாமங்களைச் சொன்னால் எங்கள் பாவங்கள் தீயிலிட்ட பஞ்சு போல எரிந்துபோகும்.

webdunia

மிகப் பெரியவர்கள் ஆரம்பிக்கும் நல்ல காரியங்களுக்கே பல தடங்கள்கள் வருகின்றனவே! ராம பட்டாபிஷேகத்திற்கே தடை ஏற்பட்டதே! அப்படியிருக்க ஒன்றுமறியாத அபலைகளான நாம் ஆரம்பித்த இந்நோன்பு எங்ஙனே நிர்விக்னமாக நடைபெறும் என்று ஒரு கோபஸ்த்ரீ வினவ, நாம் எந்தக் கார்யம் ஆரம்பித்தாலும் அது பகவானுடைய திருவருளாலேயே பூர்த்தியாகவேண்டும். நம் ஸாமர்த்யத்தாலன்று என்ற மஹாவிச்வாஸத்துடன் அவனிடத்தில் பாரத்தை அர்ப்பணித்தால் அவன் தலைக் கட்டித் தருவான். என்று ப்ரதான கோபகன்யகை பணிக்கிறாள். மாயனை - ஆஸ்சர்ய சேஷ்டிதம் படைத்தவனை - சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்தவனை, அல்லது மாயை என்று பேசப்படுகிற ப்ருக்ருதியைத் தன் வசத்திலுடையவனை, வாமனாவதாரத்தாலும் சத்ருக்னாழ்வான் வாஸத்தாலும் ஸ்திரமான பகவத்ஸம்பந்தம் படைத்த வடமதுரையில் அவதரித்தவனை. மைந்தன் என்ற சப்தம் குழந்தை, ராஜா, மிடுக்கன் என்ற பல பொருளைச் சொல்லும். "மதுரை மன்னன்" என்றாள் ஆண்டாள். பிறந்த மாத்திரத்தில் தாய் தந்தையர் காலிலிருந்த விலங்கைப் போக்கடித்தபடியால் மிடுக்கனாகிறான். கோதாவரியைப் போலும், ஸமுத்ர ராஜனைப் போலுமில்லாமல் ஸ்ரீ வஸுதேவர்க்ருஷ்ணனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு கோகுலத்திற்குச் செல்லும் பொழுது பாங்காகவற்றிக் கொடுத்த பரிசுத்தியை உடைய யமுனையைப் பெண்கள் கிடைக்கும் துறையாகக் கொண்டவனை, மதுரையில் அவதரித்தாலும் அங்கு தோன்றாமல் ஆயர் குலத்தினில் தோன்றி அக்குலத்திற்கு ப்ரகாசகனாய் தானும் மிகவும் ப்ராகசித்த அலங்காரமான விளக்கை - மங்கள தீபத்தை என்னவுமாம். தாய் தன்னைக் கட்டும்பொழுது ஸெளலப்யத்தால் கட்டுண்ணப் பண்ணினபடியால் "இவள் என்ன நோன்பு நோற்றாள் கொலோ" என்று தாய் வயிற்றிற்குப் பட்டங் கட்டினவனை, பகவத் ஸம்பந்த ஜ்ஞானமாகிற தூய்மையுடன் சொந்த ஸ்தலத்திற்கு வந்து வேறு பலன்களைக் கருதாமல் பாவசுத்தியுடன் புஷ்பங்களை ஸமர்பித்து வணங்கி வாய்படைத்த பயன் பெறுவதற்காகப் பாடி மனத்தினால் அவனே ப்ராப்யனும் ப்ராபகனும் என்று சிந்தித்தால், இதற்கு முன் செய்த பாபங்களில் ப்ராரப்தம் தவிர மற்ற பாபங்களும், மேல் செய்யும் பாபங்களில், தேசகாலதேஹ வைகுண்யத்தாலும், அஜ்ஞானத்தாலும் செய்யும் பாபங்களும் தீயிலிட்ட பஞ்சு போலாகும்.முன்பு செய்த பாபங்கள் நெருப்பிலிட்ட ஊகுமுள் மாதிரி நசிக்கும். மேல் செய்யப்படுமவை தாமரையில் தண்ணீர் மாதிரி ஸம்பந்தப்படா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக