திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைத்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே? உன்னை

அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்,

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள்: மதுராபுரி சிறையிலே, நள்ளிரவு வேளையில் தேவகியின் மைந்தனாக அவதரித்தவனே! அதே இரவில் யசோதையின் மகனாக வளர்வதற்காக கோகுலத்திற்கு சென்றவனே! நீ ஒளிந்து வளர்வதை கேள்விப்பட்ட கம்சன் தன் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டான். உன்னைக் கண்டு நடுங்கினான். அப்படிப் பட்ட வீரம்மிக்க உன்னை காண்பதற்காகவும், அருளை யாசிப்பதற்காகவும் உன் இல்லத்து வாசலில் காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று உன் அருளைத் தந்தால் உன்னைப் பற்றியும், உன் மார்பில் உறையும் மகாலட்சுமியை பற்றியும், உன் வீரம் பற்றியும் நாங்கள் தொடர்ந்து பாடுவோம். உன் அருள் கிடைத்தால் எங்கள் கவலைகள் இந்தக் கணமே நீங்கிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக