திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்26

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவனகேட்டியேல்,

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள், போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே, பல்லாண் டிசைப்பாரே,

கோல விளக்கே, கொடியே விதானமே,

ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்


பொருள்: பக்தர்களிடம் பாசம் கொண்டவனே! நீலநீறக் கண்ணனே! ஆலிலையில் பள்ளிகொண்டவனே! மார்கழி மாதத்தில் நீராடும் முறை குறித்து பெரியோர்கள் எங்களுக்குச் சொன்ன விதிமுறைகளை, நீ கேட்பாயானால் அது குறித்து நாங்கள் உனக்கு சொல்கிறோம். பாலின் நிறமுடைய பாஞ்சஜன்யம் என்ற உனது சங்கு உலகத்தையே நடுங்க வைக்கும் தன்மை உடையது. அப்படிப்பட்ட சங்கை முழக்கும் பெரியோர்களுக்கும், பெரிய இசைக்கருவிகளை முழக்கி "நீ பல்லாண்டு வாழ்க' என பாடுபவர்களுக்கும், அழகிய தீபங்களையும், கொடிகளையும் கோயில் விதானத்தில் கட்டுபவர்களுக்கும் நீ அருள் செய்ய வேண்டும் என்பது விதி என அவர்கள் எங்களுக்குச் சொல்லியுள்ளனர். அந்த விதிமுறைப்படி எங்களுக்கு நீ அருள் செய்வாயாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக