திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்22

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான

பங்கமாய்: வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல், வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்,

அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

பொருள்: அழகானதும் மிகவும் பெரியதுமான இந்த பூமியை ஆளும் அரசர்கள் அனைவரும் தங்களுக்கு மேற்பட்டவர் இல்லை என்ற அகங்காரம் கொண்டிருந்தனர். அவர்களை வெற்றி கொண்டதன் மூலம், அந்த அகங்காரத்தை நீ தகர்த்தெறிந்தாய். அதன்பிறகு அவர்கள் நீ பள்ளி கொண்டிருக்கும் கட்டிலின் பக்கத்தில் திரளாக வந்து காத்திருக்கின்றனர். அதுபோல நாங்களும் உன் இல்லத்து வாசலில் உன் தரிசனத்திற்காக காத்துக் கிடக்கிறோம். சலங்கையின் வாய் போலவும், சிறிதே மலர்ந்த செந்தாமரை போலவும் உன் கண்களை மெதுவாக திறந்து எங்களைப் பார்க்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் ஒரு சேர உதித்ததுபோல் உன் அழகிய இரண்டு கண்களையும் திற. எங்கள் மீதுள்ள பாவம் தொலைந்துபோகும்படி காத்தருள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக