திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள்நம் பாவைக்குச் சாற்றுநீர் ஆடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

ஓங்கு பெருஞ்செந்நெ லுõடு கயல்உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்: எங்கள் புருஷோத்தமன் விஸ்வரூபமெடுத்து இந்த உலகத்தை தனது திருவடிகளால் அளந்தான். அவனது திருநாமத்தை பாடி, நாங்கள் பாவை நோன்பு நோற்கிறோம். அந்த நோன்பிற்காக மார்கழி அதிகாலையில் எழுந்து நீராடினால் ஏற்படும் பயன்களை சொல்கிறோம். கேளுங்கள். இந்த நாட்டிற்கு எந்த தீங்கும் நேராது. மாதம் மூன்று முறை மழை பொழியும். அதன் காரணமாக வயல்களில் செந்நெல் பயிர் உயர்ந்து வளரும். அந்த வயல்களில் கயல்மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய குவளை மலர்களில் புள்ளிகளைக் கொண்ட வண்டுகள் தேன் குடித்த மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும். (வற்றாத தேன் வளம் கிடைக்கும் என்பது உட்பொருள்) அழிவற்ற செல்வம் நமக்கு கிடைக்கும். வள்ளல் தன்மையுள்ள பெரிய பசுக்களின் காம்புகளை பற்றி இழுக்கும்போது பால் வெள்ளம்போல் பெருகி குடங்களை நிறைத்துவிடும்.

விளக்கவுரை: இரண்டடியில் உலகத்தை அளந்து முடித்துவிட்டு, மூன்றாவது அடிக்கு எங்கே இடம் என கேட்டவன் நாராயணன். அப்படிப்பட்ட மகாசக்தி படைத்த அவனை வணங்கினால் மானிடர்க்கு மட்டுமல்ல! அவர்களைச் சார்ந்திருக்கும் எல்லா ஜீவன்களுக்குமே நன்மை பயக்கும். அவனை வணங்குவதில் மிக உயர்ந்த விரதம் மார்கழி பாவை நோன்பு விரதம். இந்த விரதம் இருந்தால், மழை தவறாமல் பெய்யும். இன்று இந்தவிரதத்தை மறந்ததால் தானே பாட்டில் தண்ணீரை பத்து ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிறோம்! தண்ணீர் பெருக்க மிக்க நாட்டில் விளைச்சலுக்கு குறைவிருக்காது. வயல்களைச் சார்ந்தோடும் நீரோடைகளில் மீன்கள் துள்ளி விளையாடும். தோட்டங்களிலும், குளங்களிலும் பூத்துக்குலுங்கும் மலர்களில் தேனீக்கள் தேன் குடித்து மகிழும்.அது மட்டுமா! கோகுலத்து பசுக்களெல்லாம் கோபாலன் பெயரைச் சொன்னாலே நாலு படி பால் கறந்து விடுமே!இப்படி, மனிதனை மனிதன் மட்டுமல்ல! தங்களைச் சார்ந்திருக்கும் எல்லா உயிரினங்களையும் நேசிக்க வேண்டும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.


webdunia

பரமைகாந்திகளான இக்கோபிகாஸ்த்ரீகளுக்கு முக்ய பலமோ அவாந்தரமாக நடுவில் வரக்கூடிய பலமோ எல்லாம் கண்ணாயிருக்க மழையைக் கோலலாமோ எனில், தங்களுக்கு எல்லாம் பகவானாக இருந்தாலும் தாங்கள் பகவானை அனுபவிப்பதற்கு அனுமதி கொடுத்த கோபர்களை உத்தேசித்து மழையைக் கோருகிறார்கள் எனக் கொள்ளவேண்டும். தர்ம காரியத்திற்கு அனுமதியளித்தவர்க்கும் "தர்ம : ச்ருதோவா" என்கிற வசனப்படி பலம் ஸித்தமன்றோ. மழைக்கேதாவது ப்ரதி பந்தகமிருந்தால் வாமனத்யாத்தினால் அது விலகும் என்று எண்ணி வாமனைப் பாடுகிறார்கள். கிண்டியிலிருந்து தண்ணீர் விழ வொட்டாமல் தடுத்த சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறித் தண்ணீரை வரவழைத்தவன் வாமனனன்றோ! பிறரையும் கெடுத்துத் தானும் கெடுபவன் அதமாதமன் பிறரைக் கெடுத்துத் தான் வாழ்பவன் அதமன். பிறர் வாழ்வையும் அனுமதித்துத் தானும் வாழ்பவன் மத்யமன். தான் கெட்டாலும் பிறர் வாழ வேண்டுமென்பவன் உத்தமன். ஸூக்ஷ்மீபூய ஸ்வயமபி என்கிற ச்லோகத்தில் இந்நான்கு புருஷர்களுக்கும் உதாஹரணம் காணலாம். வாமனன் "மதியினால் குறள் காணாய்" "தைத்யௌதார்ய" என்று நம்மாழ்வாரும் பட்டரும் அருளிச் செய்த படி பிறருக்காகத் தான் யாசகனானான். மஹாபலி இந்த்ரன் இருவரையும் வாழவைத்தான். அவன் திருநாமத்தை வேறு பயனைக் கருதாமல் அன்புடன் பாடி, யாவருமறியப் பறை சாற்றி நீராடினால், நாடெல்லாம் வறட்கேடு வெள்ளக்கேடு முதலிய தீங்கில்லாமல் மாதம் மும்முறை மழை பொழியும். "வேதமோதிய அந்தணர்க் கோர் மழை மாதர் மங்கையர் கற்பினுக்கோர் மழை நீதி நின்றிடும் மன்னவர்க்கோர் மழை" என்று மூன்று மழை பொழிந்திடும் என்றார்கள் தமிழர்கள். ஜலஸம்ருத்தியால் செந்நெல் ஓங்கி வளரும். மத்ஸ்யங்கள் நிழலிலும் நீரிலும் நன்கு வளர்ந்து பருத்திருக்கிறபடியால் செந்நெலூடே ஒருக்களித்துச் செல்லும், "வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்" என்றாரிறே திருமங்கை மன்னன். அழகிய குவலைப்பூவில் தேனைப் பருகுவதற்காக ப்ரவேசித்த அழகிய வண்டுகள், கீழே மீன்கள் ஓடுவதால் ஆடக்கூடிய குவளைப் பூவில், ஆட்டப்படுகிற தொட்டிலில் சயனித்த ராஜகுமாரனைப் போலே நன்கு நித்திரை கோள்ளும். இது வரையில் வயல் ஸம்ருத்தி பேசப்பட்டது. மேலே க்ராம ஸம்ருத்தி பேசப்படுகிறது. கண்ணனைப் போலே பெண்ணுக்கும் பேதைக்கும் தன்னைக் கொடுத்துக் கொண்டு தன்பேறாகப் பாலைப் பொழியும் பசுக்கள் நிரம்பி இருப்பதால் `வித்யதே கோஷு ஸம்பந்நம்' என்கிற படி நீங்காத செல்வம் நிறைந்திருக்கும். பாலைக் கறப்பவன் துளியும் பயப்படாமல் மரம்போல் ஸ்திரமாக அமர வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக