திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்2

வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்கலை நீராடி,

மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;

செய்யாதன செய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்: இந்த உலகத்தில் வாழ தகுதியானவர்களே! பாவை நோன்பிற்காக நாம் செய்ய வேண்டிய சடங்குகளைக் கேளுங்கள். பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் திருவடிகளை பாடுங்கள். அதிகாலையில் நீராடுங்கள். எவ்வித தற்பெருமையும் இல்லாமல் தானம் செய்யுங்கள். நெய்யும் பாலும் உண்ணாதீர்கள். உங்கள் கூந்தலில் பூச்சூட வேண்டாம். தீய செயல்களை செய்யாதீர்கள்.

பரந்தாமனிடம் சென்று யாருக்காவது தீங்கு ஏற்பட வேண்டும் என வேண்டுகோள் வைக்காதீர்கள். இந்தப் பிறவிப்பிணியிலிருந்து நீங்கி உய்யும் வகை குறித்து அவனிடம் இறைஞ்சுங்கள்.

விளக்கம்: பெண்களே! அதிகாலையில் நீராடுங்கள். எதையும் எதிர்பாராமல், தற்பெருமை இல்லாமல் தானம் செய்யுங்கள். நெய்யும் பாலும் உண்ணாதீர்கள். கூந்தலில் பூச்சூடாதீர்கள். தீய செயல்களை செய்யாதீர்கள். அந்தப் பரந்தாமனிடம் சென்று யாருக்காவது தீங்கு ஏற்பட வேண்டும் என வேண்டுகோள் வைக்காதீர்கள். இந்தப் பிறவிப்பிணியிலிருந்து நீங்கி உய்யும் வகை குறித்து அவனிடம் கெஞ்சுங்கள் என்பது பாடலின் கருத்து.

எல்லாமே இறைவன்! எல்லாம் அவன் செயல். அவனின்றி எதுவும் அசையாது. பெண்கள் மிகவும் விரும்புவது பூ. பூவோடும் பொட்டோடும் வாழ்க என்று தான் அவர்களை வாழ்த்துவோம். அந்தப் பூவைக் கூட பரந்தாமனின் பூஜைக்கு ஒப்படைத்து விடுங்கள் என்கிறாள் ஆண்டாள். திருப்பதியில் இப்போதும் கூட பெண்கள் தலையில் மலர் சூடக்கூடாது என்ற விதி இருக்கிறது. காரணம், மலர்கள் அனைத்தும் அந்த மாலவனுக்கே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதால்! நம்மிடமுள்ள எல்லாப்பொருட்களும் அவனுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும் என்பதும், கையிலுள்ளதை இல்லாதவர்க்கு தானம் செய்து விட வேண்டும், அந்த தானத்திற்கான புண்ணியத்தைக் கூட எதிர்பார்க்கக்கூடாது என்பதும் இப்பாடல் உணர்த்தும் கருத்து.


webdunia

நல்ல விஷயத்தில் ஆசையிருந்தால் போதுமானது. யாரும் இழக்க வேண்டாம் என்று முதற்பாட்டில் சொன்னவள் அவர்கள் கிட்ட நெருங்கியவாறே, நோன்புக்கு அங்கமாகச் சில அவ‌சியம் செய்யத் தக்கவை, சில மறந்தும் செய்யத் தகாதவை என்பதை விவரிக்கிறாள்.தணலில் தாமரைபூத்தாற் போல், இதர விஷயங்களில் மண்டி முடியக் கூடிய இக்கொடிய உலகத்தில் வகுத்த விஷயமான பகவானையே நிரந்தரம் அனுபவிக்கக்கூடிய பாக்யம் பெற்றவர்களே இவ்வுலகத்தில் பகவானை நன்கு அனுபவிக்கக் கூடிய பாக்யம் பெற்றவர்கள். வைகுந்தம் கிடைத்தாலும் வேண்டாம் என்றல்லவோ கர்ஜிக்கிறார்கள். ராமாவதாரத்தில் ஆழங்கால் பட்ட ஆஞ்சனேயன் ( பாவோ நாந்யத்ர கச்சதி ) என்றான். அர்ச்சாவதாரத்தில் ஈடுபட்ட ஆழ்வார் "அச்சுவை பெறினும் வேண்டேன்" என்றார். வைகுண்டவாஸேபி நமே பிலாஷ : என்றார் கவிதார்க்கிகஸிம்ஹமும். அவ்விதம் "விண்ணுளாரிலும் சீரியர்" என்று கொண்டாடக் கூடிய பெரும் பாக்யம் பெற்றவர்களே! இந்த்ரஜித் முதலியவர்கள் பகவானையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அழிப்பதற்காகச் செய்த நோன்பு போலல்லாமல் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து வாழ்வதற்காகச் செய்யக்கூடிய இந்நோன்புக்கு அங்கமாகச் செய்யக் கூடியவைகளை உகந்து கேட்கவேண்டும். ஜனமேஜயன் பகவத் சசரித்திரத்தை நல்லோர்களிடம் உகந்து கேட்பதே பரமபுருஷார்த்தம் என்றானன்றோ! தான்யங்களைப் பயிர் செய்பவன், அங்கேயே குடில் கட்டிக் கொண்ட தங்கி அவைகளைக் காக்குமாப்போலே, ஸ்ரீ பகவானும் நம்மைப் படைத்து, நம்முடைய ஆர்த்த நாதம் உடனே செவியில் படக்கூடிய வகையில் பாற்கடலில் கள்ளநித்ரை செய்கின்றான். அவன் ஸெளலப்யாதி குணங்களையும், தகட்டிலழுத்தின மாணிக்கம் போல் ஆதிசேஷன் மேல் சாய்ந்தவாறே உண்டான அழகையும் திருக்கண் வளரும்போது ஏற்படும் சௌந்தர்யதையும் நன்கு அனுபவிவத்து அவனுடைய அடியைப் பாடவேண்டும். நெய் பால் முதலிய பதாhத்தங்களை உண்ணக்கூடாது. பகவச்சரித்திரத்தைக் கேட்பதும் சொல்வதும் தவிர வேறு ஆஹாரத்தை அபேக்ஷிக்கக் கூடாது. அதிகாலையில் எழுந்திருந்து ஸ்நாநம் செய்யவேண்டும். மை இட்டுக் கொள்ளக்கூடாது. மலர் வைத்துக் கொள்ளக்கூடாது. முன்னோர் செய்யாததை செய்யக்கூடாது. பிறர்க்குத் தீங்கிழைக்கக் கூடிய சொற்களைச் சொல்லக்கூடாது. தானாகக் கிடைத்ததையே பெறுவது என்றிருக்கும் மஹான்களுக்கும் யாசித்தே பெற வேண்டிய ப்ரஹ்மசாரி, ஸந்யாஸி போன்றவர்களுக்கும் நம்மாலியன்றதைக் கொடுக்க வேண்டும். இவையனைத்தும் நாம் உய்யும் வகைகளாம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக