திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்1

மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறைதருவான்

பாரோர் புகழ பரிந்தேலோர் எம்பாவாய்!

விளக்கவுரை: இந்தப் பாடல் வைகுண்டத்தில் இருக்கும் நாராயணனைப் பற்றி குறிப்பிடுகிறது. 108 திவ்யதேசங்களில் பூலோகத்தில் 106 இருக்கிறது. 107வது தலம் திருப்பாற்கடல். வைகுண்டம் 108வது தலம். 108வது தலத்தில் இருக்கும் எம்பிரான் நாராயணனைப் புகழ்ந்து, அவனிடம் "பறை' வேண்டுகிறாள் ஆண்டாள். "பறை' என்ற சொல்லுக்கு "ஒரு வகை தோல் வாத்தியம்' என்ற பொருள் உண்டு. இறைவனிடம் யாராவது ஒரு தோல் வாத்தியம் கேட்பதற்காக காத்து நிற்பார்களா? அப்படியானால் ஏன் "பறை' கேட்கிறாள் ஆண்டாள். பறையை ஒலிக்கும் போது வெகுதுõரமுள்ள மக்களை அதன் ஒலி கவரும். அதுபோல், "நாராயணா' என்னும் நாமத்தை சொல்லும் போது, அது உள்ளத்தைக் கவரும். ஒருவர் அந்த ஒலியை எழுப்பினாலும், சுற்றி நிற்கும் எல்லாருடைய உடலும் உள்ளமும் புனிதமடையும். மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் என்பது பவுர்ணமியைக் குறிக்கும். ஆண்டாள் இப்பாசுரத்தை துவங்கிய நாள் பவுர்ணமியாக இருந்திருக்கக் கூடும். மதி என்றால் "அறிவு' என்றும் பொருள். ஆம்...அறிவுள்ள யாவரும் மார்கழியில் அந்த நாராயணனை வணங்க வேண்டும். ஏனெனில் மாதங்களில் நான் மார்கழி என அவனே சொல்லியிருக்கும் போது, அந்த மாதத்தை அறிவுடையோர் தவற விடுவார்களா! உடலே ஆத்மா என்று நினைப்பது அறிவீனம். அந்த நினைப்பை உதிர வைப்பதே அறிவுடையோர் செயல் என்றும் இதற்கு பொருள் சொல்லலாம்.
புத்திக்கூர்மையை அதிகரிக்கும் மாதம் மார்கழி. தகுதி வாய்ந்த அழகிய ஆபரணங்களை அணிந்தவர்களை பெருமைமிக்க கோகுலத்தில் வசிக்கும் செல்வச் சிறுமிகளே! நாமெல்லாம் உலகத்தார் புகழும்படி நோன்பு நோற்று நீராடுவோம். என்னோடு வர விரும்புபவர்கள் வரலாம். கையில் கூர்மையான வேலை வைத்திருக்கும் நந்தகோபனுடைய மகனும், அழகு நிறைந்த கண்களை உடைய யசோதையின் மைந்தனும், சிங்கத்தைப் போல் கர்வமாக நடப்பவனும், மேகம் போன்ற கருநிற மேனியை உடையவனும், தீயவர்களைக் கண்டால் சிவந்துபோகும் கண்களை உடையவனும், சூரியனின் ஒளிக்கதிர் போன்ற பிரகாசமான தோற்றம் கொண்டவனும், குளிர்ந்த சந்திரன் போன்ற முகத்தை உடையவனுமான கண்ணபிரான் நம் அனைவரையும் காப்பாற்றும் நாராயணமூர்த்தியாக உள்ளார். அவரையே நம் பலமாகக் கருதி பற்றியிருக்கிறோம். அந்த இறைவனை வணங்குவதற்கு இன்றுமுதல் நோன்பு துவங்குவோம். அவ்வாறு நோன்பிருந்தால் பயன்கருதாமல் தொண்டு செய்யும் மனப்பாங்கை அவன் நமக்குத் தருவான். ஸ்ரீவில்லிபுத்துõரில் அவதரித்த ஆண்டாள், அவ்வூரில் அருள்செய்யும் ரெங்கமன்னார் மீது காதல் கொண்டாள். அவரை அடைவதற்காக நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, தன்னைச் சேர்ந்தவர்களும் இறைவனை அடையவேண்டும் என்பதற்காக நோன்பிருக்க அழைக்கிறாள். அவள் பாடிய பாடல்களின் தொகுப்பே "திருப்பாவை'. இதில் வரும் "பறை' என்ற சொல் வெறும் வாத்தியக் கருவியை குறிப்பதல்ல. "பயன் கருதாமல் செய்யும் தொண்டு' என்பதே பறை என்பதன் பொருளாகும்.

webdunia

ஒருவனுக்கு ஒரு உயர்ந்த பொருள் கிடைத்தால், அப்பொருளைக் காட்டிலும் கிடைத்த காலத்தைக் கொண்டாடுவது வழக்கம். "சைத்ர : ஸ்ரீமாநயம் மாஸ :" என்று ராம பட்டாபிஷேகத்திற்கமைந்த நாளைக் கொண்டாடினார்களிரே! அவ்விதமே ஆயர் பெண்களும் தங்கள் நோன்புக்கு அமைந்த காலத்தைக் கொண்டாடி அடையப்படவேண்டிய பொருள் இது. அதை அடைவதற்கு ஸாதனமிது. என்பதை முதல் பாட்டாலே நிர்ணயிக்கிறார்கள். கண்ணன் பகவத் கீதையில் "நான் மாதங்களில் மார்கழி மாதம்" என்றான். "அயம் ஸ கால: ஸம்ப்ராப்த : ப்ரியோ யஸ் தே ப்ரியம்வத" என்று, இளைய பெருமாளும் ராமனுக்குப் பிடித்தமான காலமென்றார். வ்யூஹமூர்த்திகளில் முதல்வனான கேசவனைத் தேவதையாகக் கொண்ட மாதமிது. அதிகக் குளிரும் அதிக தாபமும் இல்லாத மாதம். இப்படிப் பலவிதமான ஏற்றத்தைக் கொண்ட இம்மாதத்தில் சந்திரன் நிறைந்த சுக்லபக்ஷத்தில் பகவத்ஜ்ஞான முண்டாகக் கூடிய நாளில் ஸகல விதமான ஸம்பத்தும் நிறைந்த ஆயர்பாடியில் அவதரித்து, பகவத் பக்தியாகிற செல்வம் நிரம்பப் பெற்று, எல்லா விதத்திலும் அணிந்தவர்களே! பகவானாகிற தடாகத்தில் நீராட விரும்புபவர்கள் யாவரும் செல்லலாம். ( அல்லது வரலாம் ) புத்ரவாத்ஸல்யத்தால், யாரால் என்ன தீங்கு வருமோ என்று பயந்து கூரான வேலை எப்பொழுதும் கையில் தாங்கிப் பகவத் விரோதிகளை அழிக்கக் கூடிய நந்த கோபாலனுக்கு அடங்கினவனும், கண்ணனை எப்பொழுதும் கண் கொட்டாமல் அனுபவிப்பதால் அவ்வழகைக் கண்ணில் பெற்ற அம்பன்ன கண்ணாளான யசோதையின் இளஞ்சிங்கமானவனும், நீர் கொண்ட மேகம் போன்ற நிறம் படைத்தவனும், ஸூர்யனால் அப்பொழுது மலர்ந்த செந்தாமரை போன்ற கண்கள் படைத்தவனும், வேண்டாதவர்களுக்குச் சூர்யன் போன்றதும், வேண்டியவர்களுக்குச் சந்திரன் போன்றதுமான முகம் படைத்தவனுமான ச்ரிய : பதியான நாராயணனே, வேறு கதியில்லாமல் அவன் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றின நமக்குப் பறை முதலிய யாவற்றையும் கொடுப்பான். எல்லோரும் புகழ்ந்து பயன் பெறும் படி அநவதாநமில்லாமல் மனத்தைச் செலுத்தி நீராடுவோமாககருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக