திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண்: போதரிக் கண்ணினாய்

குள்ளக் குறிரக் குடைந்துநீ ராடாதே,

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்: பறவையின் வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயை பிளந்தெறிந்தவன் நம் கண்ணன். சீதாபிராட்டியை கடத்திச் சென்று துன்பம் செய்த ராவணனின் பத்து தலைகளையும் மனிதவடிவில் வந்து கிள்ளி எறிந்தவன். அவனது வீர சரிதங்களை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். நம்மைவிட வயதில் குறைந்த சிறுமிகள் கூட நமக்கு முன்னால் ஆர்வத்துடன், நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்கள். சுக்கிரன் உதயமாகிவிட்டது. பிரகஸ்பதி அஸ்தமித்துவிட்டது. பறவைகள் கூட்டிலிருந்து புறப்பட்டு இரைதேட சென்றுகொண்டிருக்கின்றன. தாமரைப் பூவையும் மானையும் ஒத்த கண்களை கொண்டவளே! பதுமை போன்ற அழகியே! இந்த அதிகாலைப் பொழுதில் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயா? அல்லது படுக்கையில் கிடந்தபடியே கண்ணனை தனியாக நினைத்துக் கொண்டிருக்கிறாயா? இவற்றையெல்லாம் விட்டு எங்களோடு சேர்ந்து வா. கடும் பனியிலும் இந்த உடல் குளிர வேண்டும். எனவே நீராடி மகிழ்வதற்காக எங்களோடு கிளம்பி வா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக