திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பால்வாய் கூம்பினகாண்

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.


பொருள்: உறங்கும் தோழியே! உங்கள் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திலுள்ள குளத்தில், தாமரை மலர்ந்து விட்டது. அல்லி குவிந்துவிட்டது. காவி உடையணிந்த, வெண்ணிற பற்களையுடைய துறவிகள் திருக்கோயில்களில் திருச்சங்கு ஊதுவதற்காக செல்கிறார்கள். நேற்று இரவில், நீ எங்களை வந்து எழுப்புவதாக சொன்னாய். வாயால் சொல்லிவிட்டு செயலில் மறந்துபோன மங்கையே! சொன்னபடி செய்யவில்லையே என்ற நாணம் சற்று கூட உன்னிடம் இல்லையா? பேச்சில் மட்டும் இனிப்பைக் கொண்டிருப்பவளே! சங்கு சக்கரங்களை தரித்தவனும், வலிமையான கைகளை உடையவனும், தாமரை போன்ற பெரிய கண்களை உடையவனுமான நம் கண்ணனை பாடுவதற்கு உடனே எழுவாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக