திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்15

எல்லே இளங்கிளியே; இன்னம் உறங்குதியோ?

சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்

வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன்வாயறிதும்!

வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக

ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?

எல்லாரும் போந்தாரோ?
போந்தார், போந்தெண்ணிக்கொள்;

வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

பொருள்: உறங்குகின்றவளை எழுப்பவந்த தோழிகள், ""ஏலே இளங்கிளியே! இன்னும் உறங்குகிறாயா?'' என்றனர். (ஏலே என்ற சொல் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களையும் செல்லமாக அழைக்க பயன்படுவது. தென் மாவட்ட மக்கள் இச்சொல்லை பயன்படுத்துவர்)உறங்கிக் கொண்டிருந்தவள் வேகமாக எழுந்து ஏற்கனவே தயாராகி விட்டவள் போல நடித்து, ""தோழியரே! இதோ புறப்பட்டுவிட்டேன். ஏன் தொணதொணக்கிறீர்கள்?'' என்றாள். அதற்கு தோழிகள், ""உன்னைப்பற்றி எங்களுக்கு தெரியாதா? உன் பேச்சுத் திறமையை நாங்கள் அறிவோம்'' என்றனர்.அதற்கு அந்தப் பெண், ""நீங்களும் சாதாரணமானவர்களா? சாமர்த்தியசாலிகள். ஒருவேளை நான்தான் "புரட்டி பேசுபவள்' என்றால் அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்,'' என்று கோபித்தாள் செல்லமாக. தோழிகள் அவளிடம், ""இங்கு எல்லோரும் வந்துவிட்டார்கள். நீ மட்டும் கிளம்புவதற்கு ஏன் தாமதம்? உன்னிடம் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?'' என்றனர்.உடனே அந்தப்பெண், ""என்னைத் தவிர எல்லாரும் வந்துவிட்டதுபோல் பேசிக் கொள்கிறீர்களே! எல்லாத்தோழிகளும் வந்துவிட்டார்களா?'' என்றாள்.அதற்கு அவர்கள், ""எல்லோரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீ வந்து எண்ணிக்கொள். குவலயாபீடம் என்ற வலிமை மிக்க யானையைக் கொன்றவனும், எதிரிகளை அழிக்க வல்லவனும், மாயச் செயல்களை புரிபவனுமான கண்ணனை பாடுவதற்கு விரைவாக எழுந்து வா,'' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக