திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்16

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய

கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில்காப் பானே; மணிக்கதவம் தாள்திறவாய்,

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,

தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

பொருள்: ஒரு வழியாக ஆயர்குலப் பெண்கள் அனைவரும் கண்ணனின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அங்கே அவர்கள் பாடும் பாடல் இது. ""எங்கள் அன்புத்தலைவர் நந்தகோபனின் இல்லக் காவலனே! கொடிகள் கட்டிய தோரணவாசலைக் காப்பவனே! மணிகள் ஒலிக்கும் இக்கதவின் தாளை திறப்பாயாக. ஆயர்குல பெண்களான எங்களுக்கு அருள் தருவதாக கண்ணன் நேற்றே எங்களுக்கு வாக்களித்திருக்கிறான். மாயச் செயல்களை புரிபவனும், நீல ரத்தின மணிகளை அணிந்தவனுமான அவனை எழுப்புவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். உடல் அழுக்கையும், மன அழுக்கையும் களைந்து பள்ளியெழுச்சி பாடுவதற்காக இங்கே குவிந்திருக்கிறோம். எங்களுக்கு நீ வழிவிடு. "அனுமதி தரமாட்டேன்' என முதன்முதலாக உன் வாயால் மறுத்துவிடாதே. (நல்ல நிகழ்ச்சிகளின் போது தடை ஏற்படுத்தும் வார்த்தைகளைப் பேசக்கூடாது) கதவைத்திற!'' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக