திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்18

உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,

நந்த கோபாலன் மருமகளே, நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;

வந்தெங்கும் கோழி அழைத்தன காண்; மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி! உன்மைத்துனன் பேர்பாடச்

செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்: யானைகளுடன் போரிடும் அளவுக்கு பலமுடையவனும், எதிரிகளைக் கண்டு பின்வாங்காத தன்மை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே!
நறுமணம் கமழும் கூந்தலைக் கொண்டவளே! கதவைத் திற. கோழிகள் கூவிவிட்டன. குருக்கத்திச் செடி பந்தல்கள்மீது அமர்ந்த குயில்கள் பாடத் துவங்கிவிட்டன. பந்தாடும் விரல்களைக் கொண்டவளே! உன் கணவனான கண்ணனின் திருநாமத்தை உன்னோடு சேர்ந்து பாடுவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். நீ மகிழ்ச்சியுடன் வந்து, செந்தாமரை போன்ற உன் கை வளைகள் குலுங்கும்படி கதவைத்திறப்பாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக