வியாழன், 7 நவம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 66

மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்தொன்றாவது அத்தியாயம்
(கர்த்தம ப்ரஜாபதி தவம் செய்தலும், அதனால் ஸந்தோஷித்த பகவான் விவாஹத்தின் ஏற்பாட்டைக் கூறுதலும், மனு அவ்விடம் வருதலும்)

ஸ்ரீவிதுரன் சொல்லுகிறான்:- ஸ்வாயம்புவமனுவின் வம்சம் மேன்மையுடையது; ஸத்புருஷர்களால் மிகவும் புகழப்பெற்றது. “இந்த வம்சத்தில் மைதுன கர்மத்தினால் ப்ரஜைகள் வ்ருத்தி அடைந்தன” என்றீர். இந்த வம்சத்தை எனக்கு மொழிவீராக. தோஷமற்றவரே அந்தணர் தலைவரே! ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர்களாகிய ப்ரியவ்ரதன், உத்தானபாதன் இவர்கள் வர்ணாச்ரம தர்மங்களைத் தவறாமல் ஏழு தீவுகள் அடங்கின பூமண்டலத்தையெல்லாம் எங்ஙனம் பரிபாலித்து வந்தார்களோ, அதைச் சொல்வீராக. அந்த ஸ்வாயம்புவ மனுவுக்கு தேவஹூதியென்று ஓர் புதல்வி இருந்தாளென்றும் அவள் கர்த்தம ப்ரஜாபதிக்குப் பத்னியென்றும் நீர் சொல்லக்கேட்டேன். சமம் தமம் முதலிய யோகலக்ஷணங்கள் அமைந்த அந்த தேவஹூதியிடத்தில் மஹா யோகியாகிய (பகவதுபாஸன ரூபமான யோகம் பரிபக்வமாயிருக்கப் பெற்ற அந்தக் கர்த்தம ப்ரஜாபதி எத்தனை பிள்ளைகளைப்பெற்றார்? அதைக் கேட்கவேண்டுமென்னும் விருப்பமுடைய எனக்குச் சொல்வீராக. வாரீர் அந்தணரே! ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்தவர்களும் ப்ரஹ்மாவின் புதல்வர்களுமாகிய ருசி, தக்ஷர் இவ்விருவரும் மனுவின் புதல்விகளாகிய ஆகூதி, ப்ரஸுதி என்பவர்களை மனைவிகளாகப் பெற்று எங்ஙனம் பிள்ளைகளைப் பெற்றார்களோ, அவ்விதத்தை எனக்கு மொழிவீராக.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- மஹானுபாவராகிய கர்த்தமர் ப்ரஹ்மதேவனால் ப்ரஜைகளைப் படைக்கும்படி தூண்டப்பெற்று ஸரஸ்வதி நதிக்கரையில் பதினாயிரமாண்டுகள் தவஞ்செய்தார். அங்ஙனம் தவம் செய்யுங்காலத்தில் அந்தக் கர்த்தமர் மன ஏக்கத்துடன் கூடியதும் தனது வர்ணாச்ரமங்களுக்கு உரியதுமாகிய ஆசாரத்தினாலும் பக்தியினாலும் தன்னைப் பற்றினாருடைய விருப்பங்களை நிறைவேற்றுந் தன்மையனான பரமபுருஷனைஆராதித்துக்கொண்டு வந்தார். இங்ஙனம் அவர் பதினாயிரமாண்டுகள் பக்தியுடன் தனது வர்ணாச்ரமங்களுக்கு ஏற்பட்ட செயல்களைச் செய்துகொண்டு அதனால் பகவானை ஆராதித்து வந்தார்: வாராய் விதுரனே! இது க்ருதயுகத்தில் நடந்த வ்ருத்தாந்தம். இப்படி பதினாயிரம் வருஷங்கள் நடத்தபின்பு புண்டரீகாக்ஷனாகிய பகவான் அவருடைய தவத்திற்கு ஸந்தோஷம் அடைந்து, பஞ்சோபநிஷன் மந்த்ரங்களால் அறியத் தகுந்ததும் ஸௌகந்த்யம், ஸௌகுமார்யம், லாவண்யம், யௌவனம் முதலிய கல்யாண குணங்கள் அமைந்ததுமாகிய திவ்யமங்கள விக்ரஹத்தை தரித்துக்கொண்டு வந்து அந்தக் கர்த்தம ப்ரஜாபதிக்கு தர்சனம் கொடுத்தான். அந்த பகவான் சீர்மலனும் ஸூர்யன்போல் ஒளியுடன் திகழ்கின்றவனும் வெண்தாமரைகளும் கருநெய்தல்களும் கலந்து கோக்கப்பெற்ற பூமாலை அணிந்தவனும் நிகுநிகுத்துக் கறுத்த முன்நெற்றி மயிர்களின் வரிசையால் விளங்குகின்ற தாமரைமலர் போன்ற முகமுடையவனும் நிர்மலமான பீதாம்பரம் உடுத்தவனுமாய் இருந்தான். மற்றும், அவன் கீரீடமும் குண்டலங்களும் அணிந்து சங்கம் சக்ரம் கதை இவைகளைத் தரித்து லீலைக்காகக் கையில் வெண்தாமரைமலர் ஏந்தி மனோஹரமான புன்னகை அமைந்த கண்ணோக்கம் உடையவனுமாய் இருந்தான். அம்மஹானுபாவன் அப்பரமபுருஷன் ஸ்ரீகருத்மானுடைய தோளின்மேல் தனது பாதாரவிந்தங்களை இட்டுக்கொண்டு வீற்றிருந்து மார்பில் ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் திகழ்கின்றவனும் கழுத்தில் கௌஸ்துப மணி தரித்தவனுமாகி ஆகாயத்தில் கர்த்தம ப்ரஜாபதிக்கெதிரே வந்து நின்றான். அந்த ஸ்ரியபதியைக் கண்டு கர்த்தமர் தன் மனோரதம் கைகூடப் பெற்றவராகிப் பேரானந்தத்துடன் பூமியில் விழுந்து தண்டனிட்டார். அவர் மீளவும் எழுந்து ஸந்தோஷம் நிறைந்த மனமுடையவராகி அஞ்சலி செய்து அவனுடைய குணங்களை எடுத்துரைப்பனவாகிய உரைகளால் தன்னுடையஅபிப்ராயத்தை வெளியிட்டுக் கொண்டு ஸ்தோத்ரம் செய்தார்.

கர்த்தமர் சொல்லுகிறார்:- ஸத் புருஷர்களால் ஸ்தோத்ரஞ் செய்யத்தகுந்தவனே! பரிபூர்ண ஸத்வமயனான உன்னுடைய காட்சியால் என் கண் பயன்பெற்றது. யோகம் கைபுகுந்த மஹாயோகிகளும் பல ஜன்மங்கள் எடுத்தாயினும் உன் காட்சியையன்றோ விரும்புகின்றார்கள். அப்படிப்பட்ட உன் காட்சி எனக்குக் கிடைத்ததாயின், இதைவிட எனக்கு என்ன வேண்டும். கண் படைத்ததற்கு இதைக் காட்டிலும் மற்றொரு பயன் உண்டோ? “தர்மம் அர்த்தம் காமம் ஆகிய இவையன்றோ புருஷார்த்தம்? என் காட்சியைப் புருஷார்த்தமென்கிறீரே! இதெப்படி?” என்னில் சொல்லுகிறேன். எவர் உன் மாயையால் மதிமயங்கப் பெற்றிருக்கின்றார்களோ, அவர்கள் ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தைத் தாண்டுவதற்கு ஓடம்போன்ற உன் பாதாரவிந்தங்களை அற்ப ஸுகங்களுக்காகப் பணிகின்றார்கள். நரகம்போன்ற ஸம்ஸாரத்தில் அவர்கள் எந்தெந்த ஸுகங்களை விரும்புகிறார்களோ, அவற்றையும் நீஅவர்களுக்குக் கொடுக்கின்றனை. ஆயினும், அவர்கள் ஸுமேருபர்வதத்தில் சென்று பலகறை தேடுவார்போல், மஹாந்நதம் கொடுப்பவனாகிய உன்னைப் பணிந்து அற்ப ஸுகங்களை ப்ரார்த்திப்பதற்குக் காரணம் உன் மாயையால் மதிமயங்கப் பெற்றிருக்கையேயன்றி வேறில்லை. ஆகையால் தர்மாதிகளே புருஷார்த்தமென்று நினைத்து அவற்றிற்காக உன்னைப் பணியுமவன் மூர்க்கனேயாவான். இப்படி சிந்திக்கின்ற நானும் அவர்களில் ஒருவனே. நான், இல்லறத்தை வளர்க்கின்றவளும் சீலம் ஒத்திருக்கப்பெற்றவளுமாகிய பார்யையை மணம்புரிய விரும்பி இந்த துர்பிப்ராயத்தினால், கல்பவ்ருக்ஷம்போல் விரும்பினவற்றையெல்லாம் கொடுக்கும் திறமையுடையதும் ஸமஸ்த புருஷார்த்தங்களுக்கும் மூலமுமாகிய உன் பாதமூலத்தைப் பற்றினேன். “இப்படி ஹேய உபாதேயங்களை (விடத்தகுந்தவைகளையும் பற்றத் தகுந்தவைகளையும்) பிரித்தறியும் திறமையுடைய நீஅற்பஸுங்களை விரும்பி அவற்றிற்காக என்னைப் பற்றினையேன்?” என்னில், சொல்லுகிறேன். வாராய் ஜகதீசனே ! இவ்வுலகம் அற்பஸுகங்களால் மதிமயங்கப்பெற்று, ப்ரஜைகளுக்கு நாதனாகிய நீ வெளியிட்ட வேதரூபமான உன் வசனமாகிற தந்திக்கம்பியால் பசுபோல் கட்டுண்டிருக்கின்றது. ஆகையால் அந்த வேதங்களில் வெளிப்படையாய்த் தோற்றுகிற தர்ம அர்த்த காமங்களையே வெகுமதித்து அவற்றில் மனவிருப்பங்கொண்டு அவற்றிற்காக உன்னைப் பணிகின்றார்கள், வாராய் நின்மலனே! நானும் அந்த உலகத்தவர்களைப் பின்தொடர்ந்து காலஸ்வரூபனாகிய உனக்கு ஆராதனஞ் செய்கின்றேன். நான் பற்றத் தகுந்தவைகளையும் விடத்தகுந்தவைகளையும் நன்றாக அறிந்தவனே. ஆயினும் உன் கட்டளையைப் பின் தொடர்ந்த எங்கள் பிதாவாகிய ப்ரஹ்மதேவனால் ப்ரஜைகளைப் படைக்கும்படி நியமிக்கப்பெற்றவனாகி க்ருஹஸ்த தர்மங்களால் உன்னை ஆராதிக்க வேண்டுகின்றேன். (நீ கால ஸ்வரூபனாகி ஸம்ஸாரிகளின் ஆயுஸ்ஸை வீணாக ஓட்டுகின்றனை. ஆகையால் நான் ஸாம்ஸாரிக தர்மங்களை அனுஷ்டிப்பவனாகிக் காலஸ்வரூபனாகிய உன்னிடத்தில் பயந்து எமது வாழ்நாளைப் பயன்படச் செய்யவிரும்பியும் எங்கள் தந்தையின் கட்டளையைப் பரிபாலனஞ் செய்ய விரும்பியும் காலஸ்வரூபனாகிய உனக்கே ஆராதனஞ்செய்ய விரும்புகின்றேன். எவர் விவேகமற்று தர்ம அர்த்த காமங்களில் உழல்கின்ற ஸம்ஸாரி லோகங்களையும், விவேகிகளாயிருந்தும் அவர்களைப் பின்றொடர்ந்து பசு ப்ராயரான எம்மைப் போன்றவர்களையும் துறந்து ஒருவர்க்கொருவர் உன் குணங்களைச் சொல்லுகையாகிற இனிய அம்ருதத்தினால் தேஹ தர்மங்களான ஜராமரணாதிகளெல்லாம் தீரப்பெற்று ஸம்ஸார தாபங்களையெல்லாம் போக்குவதாகிய உன் ஸ்ரீபாதமாகிற குடையின் நீழலில் ஒதுங்கி வர்த்திக்கின்றார்களோ, அவர்களுடைய ஆயுஸ்ஸைக் கால சக்ரம் வீண்செய்கிறதில்லை. அவர்களுடைய வாழ்நாளே பயன் பெற்றதாம். காலசக்ரம் மூப்புப் பசி தாஹம் முதலிய சுழல்களையுடையது; பதின் மூன்று மாதங்களே இலையாகப் பெற்றது. இதற்கு முன்னூற்று அறுபது நாட்களே மூன்னூற்று அறுபது கணுக்களாயிருக்கும். ஆறு ருதுக்களே இதன் சக்கரக் கட்டுகள், கலை காஷ்டை க்ஷணம் முஹூர்த்தம் முதலிய பிரிவுகளே இதன் வட்டைகளாம். ஸமமாகவும் அதிகமாகவும் குறைவாகவும்நடக்கின்ற மூன்று சாதுர்மாஸ்யங்களும் இதற்கு இடையிலிருக்கின்ற மூன்று ரந்த்ரங்களாம். இது மிகவும் தீவிரமான வேகமுடையது. இத்தகைய கால சக்ரமானது கேவல ஸம்ஸாரிகளின் ஆயுஸ்ஸை வீணாகப் பறித்துக்கொண்டு போகின்றது. உன் குணங்களை அனுபவிக்கின்ற மஹானுபாவர்களின் ஆயுஸ்ஸை அது வீணாகப் பறிக்கிறதில்லை. அவர்களுடைய ஆயுஸ்ஸையும் இந்தக் கால சக்ரம் பறித்துக்கொண்டு போகின்றதேயாயினும், உன்னைப் பெற முயற்சி செய்யாத கேவல ஸம்ஸாரிகளின் ஆயுஸ்ஸைப் போல், உன்னைப் பெறவிரும்பி உன் குணங்களைப்பேசி உன்னை அனுபவிக்கின்ற மஹானுபாவர்களின் ஆயுஸ்ஸை வீணாய்த் தொலைகிறதில்லை. ஆயினும், ப்ரஹ்ம ருத்ராதிகள் பலரும் இருக்க என் பாதத்தையே விசேஷமாகப் பற்றுவதற்கு என்ன காரணம்?” என்னில் சொல்லுகிறேன். நீ ஸ்ருஷ்டிக்கு முற்காலத்தில் நாமரூபங்களுக்கிடமல்லாத சேதன அசேதனங்களையும் காலத்தையும் சரீரமாகக் கொண்டிருக்கின்றனை. அப்படிப்பட்ட நீ காம ரூபங்களுக்கிடமாகிப் புலப்படுகின்ற இந்த ஜகத்தையெல்லாம் படைக்க விரும்பி, ஸ்வரூபத்தினாலும் ஸ்வபாவத்தினாலும் உன்னில் மிகவும் வேறுபட்டதும் உனக்குச் சரீரமுமாகிய ப்ரக்ருதியைக் கொண்டு இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் உன்னிடத்திலேயே படைக்கின்றனை. அதற்குள் புகுந்து அவற்றைப் பாதுகாக்கின்றனை ; மீளவும், உன்னிடத்தில் ஸம்ஹரித்துக் கொள்கின்றனை. நூல்பூச்சி தன் சக்தியால் நூல்களை உண்டாக்கி மீளவும் அவற்றை உள்வாங்கிக் கொள்வதுபோல், நீயும் ப்ரக்ருதி புருஷ காலங்களென்கிற உன் சக்திகளாலும் (எல்லாம் அறிந்திருக்கை எல்லாத் திறமைகளுமுடையவனா இருக்கை முதலியவைகளாலும்) ஸர்வஜ்ஞத்வ ஸர்வசக்தித்வாதிகளாலும் ப்ரபஞ்சத்தைப் படைப்பதும் அதை மீளவும் தன்னிடத்தில் ஸம்ஹரித்துக் கொள்வதுமாகி விளையாடுகின்றனை, ஆகையால் நீயே ஜகத்காரணன். நான் எனக்கேற்ற மனைவியை மணம்புரிய விரும்பி அவ்விருப்பம் ஈடேறும்பொருட்டு உன் பாதாரவிந்தங்களைப் பற்றினேன். ஜகதீசனே! நீ உன் மாயையினால் அஹங்காரத்தையும் ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களையும் அவற்றின் ஸூக்ஷ்மமான சப்தாதி விஷயங்களையும் ஸ்ருஷ்டிக்கின்றன. அந்த அஹங்காரத்திற்குட்பட்டு மதிமயங்கி நாங்கள் சப்தாதி விஷயங்களில் கால் தாழ்ந்து உன் பாதங்களை விரும்பாதிருக்கின்றோம். ஆ! இதென்ன வருத்தம் ! இப்படி நான் உன் பாதங்களை விரும்பாதிருப்பினும், திகழ்கின்ற துளஸி மாலையுடன் கூடின ஆச்சர்யமான திவ்யமங்கள விக்ரஹத்துடன் நீ எனக்குப் புலப்பட்டனையல்லவா? என்னை உன் பாதங்களில் சேர்ப்பித்துக்கொள்கையாகிற அனுக்ரஹத்தையும் செய்வாயென்று நிச்சயிக்கின்றேன். அங்ஙனம் எங்களை அனுக்ரஹிப்பதில் மிகவும் ஊக்கமுற்றிருக்கின்ற உன்னை யான் அடிக்கடி வணங்குகின்றேன். நீ ஜ்ஞானாகத் தமயனான உன்னையே அனுபவிப்பவனாகி மஹாநந்தத்தில் மூழ்கியிருப்பவன். ஆகையால் உலகச் செயல்களிலும் அவற்றின் ப்ரயோஜனங்களிலும் கண் வைப்பவனல்லை. ஆயினும் தன் ஸங்கல்ப ஜ்ஞான மாத்ரத்தினால் உலக வ்யாபாரங்களையெல்லாம் நடத்துகின்றனை, நீ, உன்னைச் சிறிது ஆராதிப்பவனுக்கும் அவன் விரும்பின விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுந் தன்மையன். உன் பாதாரவிந்தங்கள் அனைவராலும் புகழத் தகுந்தவை. இத்தகையனான உனக்கு நமஸ்காரம்.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்ஙனம் கர்த்தமரால் ஸத்யமாகத் துதி செய்யப்பெற்றவனும் கருத்மானுடைய பின்புறத்தில் வீற்றிருந்து விளங்குமவனும் ப்ரேமத்தினாலும் புன்னகையினாலும் அழகிய கண்ணோக்கத்தினாலும் திகழ்கின்ற புருவமுடையவனுமாகிய பகவான் பத்மநாபன் கர்த்தமரைப் பார்த்து அம்ருதம் போன்ற இனிய உரையுடன் மொழியத் தொடங்கினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உனது அபிப்ராயத்தை அறிந்து முன்னமே நான் அதற்குத் தகுந்தபடி ஏற்பாடு செய்திருக்கின்றேன். நீ எதற்காக யம நியமாதிகளால் மனத்தை நிலைநிறுத்திக்கொண்டு என்னை ஆராதித்தனையோ, அந்த விஷயம் எனக்கு முன்னமே தெரியும். வாராய் கர்த்தம ப்ரஜாபதி! என்னை எவனேனும் ஒருவன் ஆராதிப்பானாயின், அது எக்காலத்திலும் வீணாகாது. என்னிடத்தில் நிலைநின்ற மனமுடைய உன்னைப்போன்றவர் என் விஷயத்தில் செய்த ஆராதனம் முதலே வீணாகாது. இவ்விஷயத்தில் ஸந்தேஹம் உண்டோ? ப்ரஹ்மாவின் புதல்வனும் ஸார்வபௌமனும் மங்களமான ஆசாரமுடையவன் என்று புகழ்பெற்றவனுமாகிய மனு ப்ரஹ்மாவர்த்தமென்னும் தேசத்தில் வாஸஞ் செய்துகொண்டு ஸப்த ஸாகரங்களும் உள்ளடக்கப்பெற்ற பூமண்டலத்தைப் பரிபாலித்துக்கொண்டு வருகின்றான். இம்மனு உனக்குத் தெரிந்தவனல்லவா? அந்தணனே! ராஜரிஷியாகிய அம்மனு சதரூபையென்னும் பார்யையுடன், என்னுடைய ஆராதன ரூபமான தர்மங்களை ஆசரிப்பதில் ஸமர்த்தனாகிய உன்னைப் பார்க்க விரும்பி நாளையின் அன்றைத்தினம் இங்கு வரப்போகின்றான். “அவன் வருவதனால் எனக்கு என்ன உபயோகம்?” என்னில் சொல்லுகிறேன், கேட்பாயாக. வல்லனே! கறுத்த விழிகள் அமைந்த கண்களுடையவளும் (கறுத்த கடைக் கண்களுடையவளும்) வயது சீலம் நடத்தை குணம் இவை அமைந்தவளும் தனக்குத் தகுந்த பர்த்தாவைத் தேடுகின்றவளுமாகிய தேவஹூதியென்னும் பேர்கொண்ட தன் புதல்வியை வயது முதலியவைகளால் தகுந்திருக்கிற உனக்குக் கொடுக்கப் போகின்றான். நீ காமபோகங்களை விரும்பி எந்த கன்னிகையிடத்தில் இத்தனை வருஷங்களாக மனத்தை வைத்திருந்தாயோ, அத்தகையவளான மனு கன்னிகையானவள். வாராய் அந்தணனே! அனேக வர்ஷங்கள் வரையிலும் ஒரு க்ஷணகாலம்போல் உன்னை அனுபவிக்கப் போகின்றாள். (உன்னோடு பலவாண்டுகள் வரையிலும் ஒரு க்ஷணகாலம்போல் காமஸுகங்களை அனுபவிக்கப் போகின்றாள்). இந்த மனுவின் புதல்வியாகிய தேவஹூதி உன் வீர்யத்தினால் ஒன்பது பெண்களை ப்ரஸவிக்கப் போகின்றாள். உன் வீர்யத்தினால் பிறந்த அந்த ஒன்பது பெண்களையும் மரீசி முதலிய மஹர்ஷிகள் மணம் புரிந்து சீக்ரத்தில் பிள்ளைகளைப் பிறப்பிக்கப் போகின்றார்கள். நீ இங்ஙனம் என்னுடைய ஆஜ்ஞையை நன்றாகப் பரிபாலனஞ் செய்து அழகியதான என்னுடைய ஆராதனத்தில் நிலை நின்று நீ செய்யும் செயல்களையும், அவற்றின் பலன்களையும் என்னிடத்தில் ஸமர்ப்பித்து என்னையே அடையப்போகின்றனை. மனம் போனவழியே போகாமல் அதை அடக்கி ஆளும் திறமையுடைய நீ ஜங்கமஸ்தாவரமான பூதங்களில் தயைசெய்து அபயங்கொடுத்து அவற்றிற்கு அந்தராத்மாவாய் நின்று தரித்துக்கொண்டிருக்கிற என்னிடத்தில் ஜங்கமஸ்தாவர ரூபமான ஜகத்தையெல்லாம் காண்பாய். நானும் என்னுடைய அம்சாம்சத்தினால் உன் வீர்யத்தின் மூலமாய் உன் பத்னியாகிய தேவஹூதியிடத்தில் அவதரித்து, ப்ரக்ருதி புருஷன் ஈஸ்வரன் ஆகிய இம்மூன்று தத்வங்களின் உண்மையை அறிவிக்கும்படியான தத்வ ஸம்ஹிதையை இயற்றப் போகின்றேன்.

ஸ்ரீ மைத்ரேயர் சொல்லுகிறார்:- இந்திரியங்களை உள்ளடக்கி மனத்தை நிலைநிறுத்தி த்யானிக்கும் யோகிகளின் ஜ்ஞானத்திற்கு விஷயமாகுந் தன்மையனான பகவான் அந்த கர்த்தம ப்ரஜாபதிக்கு இங்ஙனம் மொழிந்து உடனே சரஸ்வதி நதியினால் சுற்றிலும் சூழப்பட்ட பிந்து ஸரஸ்ஸின் கரையிலுள்ள அவரது ஆஸ்ரமத்தினின்று புறப்பட்டுப்போனான். ஸமஸ்த யோகீச்வரர்களாலும் புகழப்பெற்றதும் ஸ்வாபாவிகமுமாகிய கல்யாண குணங்களின் ப்ரகாரத்தையுடைய பகவான் அந்தக் கர்த்தம ப்ரஜாபதி பார்த்துக் கொண்டேயிருக்கையில், பக்ஷீந்த்ரனாகிய கருத்தமானுடைய சிறையடிகளால் உச்சரிக்கப்பட்டதும் ப்ருஹத் ரதந்தரம் என்கிற ஸாமங்கள் தோன்றப்பெற்றதுமான ருக்ஸமுதாயமாகிற ஸ்தோமத்தைச் செவியுற்றுக்கொண்டு நடந்தான். பரிசுத்த ஸ்வரூபனாகிய பகவான் அங்ஙனம் கண் மறையச்சென்ற பின்பு, மஹானுபாவராகிய கர்த்தமரிஷி “நாளையின் அன்றைக்கு மனு வரப்போகின்றான்” என்று பகவான் மொழிந்த அந்தக் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு பிந்து ஸரஸ்ஸின் கரையில் உட்கார்ந்தார். வாராய் வில்லாளியாகிய விதுரனே! அப்பால் ஸ்வாயம்புவமனு ஸ்வர்ணமயமான அலங்காரங்கள் அமைக்கப்பெற்ற ரதத்தில் ஏறி அந்த ரதத்தில் தன் புதல்வியையும் ஏற்றிக்கொண்டு பார்யையுடன் தன்புதல்விக்கு வரனைத் தேடும் பொருட்டு பூமி முழுவதும் ஸஞ்சரிப்பவனாகி பகவான் என்றைத்தினம் மனுவருவானென்று மொழிந்தானோ, அன்றைத் தினமே சாந்தியை வ்ரதமாகவுடைய அம்முனிவருடைய ஆச்ரமத்திற்கு வந்தான். அவரது ஆச்ரமம் பிந்து ஸரஸ்ஸின் கரையில் இருக்கின்றது. அந்த பிந்து ஸரஸ்ஸு ஸரஸ்வதி நதியால் சூழப்பட்டிருக்கும். தன்னைச் சரணம் அடைந்த கர்த்தமரிடத்தில் மிகவும் நிலைநின்ற தயையுடையனான பகவானுடைய நேத்ரங்களினின்று ஆனந்த நீர்த்துளிகள் பெருகி அந்த ஸரஸ்ஸில் விழுந்தன. அந்த ஸரஸ்ஸுக்கு பிந்து ஸரஸ்ஸென்னும் பேர் விளைந்தது. (ஆனந்த ஜலபித்துக்கள் விழுந்து அவ்விடத்தில் ஓர் ஸரஸ்ஸாகத் தோன்றின. அதற்கு பிந்து ஸரஸ் என்று பேர் வழங்கி வந்தது). அந்த பிந்து ஸரஸ்ஸின் ஜலம் பார்த்த மாத்திரத்தில் புண்யத்தை விளைவிப்பதும் சோகங்களைப் போக்குவதும் அம்ருதம் போல் மிகுந்த ருசியுடையதுமாய் இருக்கும். அந்த ஜலத்தில் மஹர்ஷிகள் தினந்தோறும் - ஸ்னானஞ்செய்து கொண்டிருப்பார்கள். அதன் கரையில் அழகிய மிருகங்களும் பக்ஷிகளும் கூவப்பெற்று மிகவும் அழகாயிருக்கின்ற வ்ருக்ஷங்களும் கொடிகளும் நிரை நிரையாயிருக்கும். அதன் கரையிலுள்ள அரண்யங்களில், எல்லா ருதுக்களிலும் எந்தெந்த பூவும் காயும் பழமும் உள்ளனவோ அவையெல்லாம் மாறாதிருக்கும். அதனால் அந்த ஸரஸ்ஸு மிகுந்த சோபையுடன் விளக்கமுற்றிருக்கும். அங்குப் பக்ஷிகள் மதித்து கோஷித்துக் கொண்டிருக்கும். வண்டுகள் மதுபானத்தினால் மதித்து முரலுகின்றமையால் அவ்விடம் விலாஸமுடையதாய் இருக்கும். மயில்கள் மதங்கொண்டு நாட்யமாடுகிற நடர்கள்போல் நர்த்தனஞ் செய்வதில் பரபரப்புற்றிருக்கும். குயில்கள் மதித்து ஒன்றோடொன்று பொறாமையினால் கூவிக்கொண்டிருக்கும். கடம்பு நீர் வஞ்சி. அசோகம் புங்கை மகிழ்வேங்கை குருந்தம் பாரிஜாதம் வெப்பாலை மா முதலிய பல வ்ருக்ஷங்களால் அலங்காரமுற்றதும் நீர்க்காகம் காரண்டவம் ப்லவம் ஹம்ஸம் குரஜம் ஜலகுக்குடம் ஸாரஸம் சக்ரவாகம் சகோரம் முதலிய ஜலபக்ஷிகள் அழகாய்க் கூவப்பெற்றதும், மான், காட்டுப்பன்றி, பன்றி, கவயம், யானை, கொண்டைமுயல், ஸிம்ஹம், குரங்கு, கீரிப்பிள்ளை, கஸ்தூரிமிருகம் முதலிய மிருகங்களால் சூழப்பட்டதுமாய் இருக்கும். ஆதிராஜனாகிய அந்த ஸ்வாயம்புவமனு பரிவாரங்களுடன் அத்தகைய புண்ய தீர்த்தமாகிய அந்த பிந்து ஸரஸ்ஸைச் சேர்ந்து அங்கு அக்னி கார்யங்களை நிறைவேற்றி உட்கார்ந்திருக்கின்ற கர்த்தம முனிவரைக் கண்டான். தவத்தில் நெடுநாள் தீவ்ரமான முயற்சி கொண்ட வடிவத்தினால் ப்ரகாசிக்கின்றவரும், அவ்வளவு கடுந்தவம் செய்தும் ஸ்னேஹம் நிறைந்த பகவானுடைய கடைக் கண்ணோக்கத்தினாலும் அந்த பகவானுடைய பேச்சாகிற சந்த்ர கலையினின்று பெருகிவருகின்ற, அம்ருத வெள்ளத்தினாலும் வருத்தமெல்லாம் நீங்கி அவ்வளவு இளைப்பில்லாதவரும் உயர்ந்த உருவமுடையவரும் தாமரை மலர் போன்ற கண்கள் விளங்கப்பெற்றவரும் ஜடைகள் தரித்து நார்த்துணி உடுத்தி ஸ்னானம் முதலிய ஸம்ஸ்காரங்கள் எவையும் இல்லாமையால் அழுக்கடைந்து இருப்பவரும் சாணை பிடிப்பது முதலிய ஸம்ஸ்காரமில்லாமையால் அழுக்கடை ந்து அவ்வளவு ப்ரகாசமில்லாத ரத்னம் போன்றவருமாகிய அம்மஹர்ஷியைக் கிட்டி நமஸ்காரம் செய்தான். அனந்தரம் அந்தக் கர்த்தம ப்ரஜாபதி, அங்ஙனம் ஆச்ரமத்திற்கு வந்து தன்னெதிரில் நமஸ்காரம் செய்து நிற்கின்ற மனு சக்ரவர்த்தியை ஆசீர்வாதங்களால் மனக்களிப்புறச் செய்து அவருடைய கௌரவத்திற்குத் தகுந்த பூஜை செய்து ஸத்கரித்தார், தான் செய்த பூஜையைப் பெற்று உட்கார்ந்து தன்னுடைய வார்த்தையைக் கேட்க முயன்று மன ஊக்கமுற்றிருக்கின்ற அந்த மனு சக்ரவர்த்தியை இனிய உரைகளால் ஸந்தோஷப்படுத்திக் கொண்டு கர்த்தம ப்ரஜாபதி இங்ஙனம் மொழிந்தார்.

கர்த்தம ப்ரஜாபதி சொல்லுகிறார்:- வாராய் மனு சக்ரவர்த்தியே! நீ இங்ஙனம் உலாவுவது ஸத்துக்களை ரக்ஷிப்பதற்காகவும் அஸத்துக்களை அழிப்பதற்காகவுமே அன்றி வேறு காரணத்தைப் பற்றியன்று. நீ பகவானிடத்திலுள்ள உலகங்களைப் பாதுகாக்கும் சக்தியே ஓர் வடிவங்கொண்டு வந்தாற்போல் தோற்றுகின்றனை. (உலகங்களைப் பாதுகாப்பது ஸ்ரீமஹாவிஷ்ணு பகவானுடைய கார்யமே. மற்ற எத்தகையனுடையதும் அன்று. அந்த பகவான் தன்னுடைய சக்தியை உன்னிடத்தில் வைத்து உன் மூலமாய் உலகங்களைப் பாதுகாத்து வருகின்றான். ஆகையால் நீ வெளியில் வந்து திரிவது ஸாதுக்களைப் பாதுகாப்பதற்கும் அஸாதுக்களை அழிப்பதற்குமே). எந்த பகவான் உலகங்களைப் பற்பல வகைகளால் பாதுகாக்கும் பொருட்டு ஸுர்யன், சந்திரன், அக்னி, இந்த்ரன், வாயு, யமன், தர்மம், வருணன் முதலிய சரீரங்களைக் கொள்கின்றானோ, அப்படிப்பட்ட ஸ்ரீவிஷ்ணுவே இப்பொழுது இங்ஙனம் மனுசக்ரவர்த்தி என்னும் சரீரத்தைக் கொண்டு உலகங்களைப் பாதுகாக்கின்றான். ஆகையால் நீ பரிசுத்தனான ஸ்ரீவிஷ்ணுஸ்வரூபனே அன்றி வேறில்லை. அங்ஙனம் பகவத் ஸ்வரூபியான உனக்கு நமஸ்காரம். ஜயத்தைக் கொடுக்குந் தன்மையதும் ரத்னங்கள் நிரைநிரையாய் இழைக்கப் பெற்றதுமான ரதத்தின் மேல் ஏறிப் பிறர்க்கு பயங்கரமான தனுஸ்ஸை ஒலிப்பித்துக் கொண்டு ரதகோஷத்தினாலேயே தர்மவிரோதிகளை பயமுறுத்துமவனும் தனது சைன்யங்களின் காலடிகளால் பூமண்டலத்தையெல்லாம் நடுங்கச் செய்பவனுமாகி மஹத்தான ஸேனையை அழைத்துக் கொண்டு ஸுர்யன் போல் நீ எப்பொழுது ஸஞ்சரியாதிருப்பாயோ, அப்பொழுது பகவான் ஏற்படுத்தின தர்ம மர்யாதைகளெல்லாம் தர்ம விரோதிகளான துஷ்டர்களால் பாழாய்விடும். அப்படியாயின், அது மிகவும் வருத்தத்திற்கிடமாம். அன்றியும், நீ வெளிப் புறப்படாமல் வீட்டில் படுத்திருப்பாராயின், அர்த்த காமங்களில் மன ஆக்கமுற்ற மனிதர்கள் நம்மைக் கேட்பாரில்லை ஆகையால் நாம் நமது இஷ்டப்படி நடக்கலாமென்று துணிந்து பயமின்றி மனம் போன வழியெல்லாம் போகத் தொடங்குவார்கள். அவர்களால் அதர்மமும் (கப்புங் கிளையுமாய்) சாகோப சாகமாய் வளர்ந்து வரும். இங்ஙனம் நீ ஆங்காங்கு திரிந்து எவரெவர் எங்கனம் நடக்கின்றார்களென்று ஆராய்ந்து அவரவர்க்கு உரியபடி தண்டனை விதிக்காமல் வெறுமனே வீட்டில் படுத்து உறங்குவாயாயின், இவ்வுலகமெல்லாம் திருடர்களால் ஆக்ரமிக்கப்பெற்றுப் பாழாய்விடும். ஆகையால் நீ இங்ஙனம் சுற்றித்திரிவதற்கு லோகரக்ஷணமே முக்ய ப்ரயோஜனம். வாராய் வீரனே! ஆயினும், நீ எந்த உத்தேசத்தினால் இங்கு எமது ஆஸ்ரமத்திற்கு வந்தனையோ, அதைச் சொல்வாயென்று உன்னை வினவுகின்றேன். நீ எந்த உத்தேசத்தைக் குறித்து வந்தனையோ, அதைச் சொல்வாயாயின், அந்த உத்தேசத்தை யாம் கபடமற்ற, மனத்துடன் அப்படியே அங்கீகரிகின்றோம். 

இருபத்தொன்றாவது அத்யாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக