வியாழன், 7 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 2 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

உலகம் உண்ட பெருவாயா!

விஷ்ணு என்கிற வடமொழிச் சொல்லுக்கு திருமால், மாயோன் என்கிற அழகு தூய தமிழ்ப் பெயர்கள் உண்டு. வைணவம் என்பது திருமாலை முதன்மைக் கடவுளாகக் கொண்டு வழிபடுவதாகும். திருமாலை வழிபடும் பழக்கம் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு, அகநானூறு, நற்றினை, பரிபாடல், பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்ககால நூல்களில் திருமாலைப் பற்றிய செய்திகள் ஏராளமாக காணப்படுகின்றன. ரிக் வேதம் மிகப் பழமையானது. அதில் திருமாலைக் குறிக்கும் விஷ்ணு என்கிற கடவுள் பற்றிய செய்திகள் ஏராளமாக புதைந்து கிடைக்கின்றன. தொல்காப்பியத்தில், ‘‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’’ என தமிழ்நாட்டு எல்லைகளை திருமால் உறையும் திருவேங்கடமலையை வைத்து கூறப்பட்டுள்ளது.

திருவேங்கடம் என்கிற திருமலையைப்பற்றி ஆழ்வார் பெருமக்கள் நெஞ்சு நெக்குருக, கண்ணீர் மல்க கதறியிருக்கிறார்கள். ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் படைத்த திருவாய்மொழியில் இருந்து ஓர் அற்புதப் பாசுரம்

உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி யம்மானே !
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி ! நெடியாய் அடியே னாருயிரே !
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத் தெம் பெருமானே ! 
குலதொல் லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே. 

பிரளய காலத்தில் இந்த உலகத்தையெல்லாம் உண்ட பெரிய திருவாயினை உடையவனே! அழிவே இல்லாத நிரந்தரப் புகழை உடையவனே! எப்போதும் நிலைபெற்று இருக்கிற சுடர்கள் சூழ்ந்த ஒளிகளை உடைய மூர்த்தியே! நெடியவனாக நின்று அருள் வெள்ளத்தை அடியவர்களுக்கு அளிப்பவனே! எனது ஆருயிரே! ஆருயிர் என்ற வார்த்தைக்குத்தான் எத்தனை மகத்துவம். அடடா! நிலையாமைதான் நிலையானது என்பதை ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு புரியவைத்துக் கொண்டிருக்கும் புரியாத புதிரானவனே! உலகத்திற்கெல்லாம் திலகம் போன்று நிற்கின்ற திருவேங்கடத்திலுள்ள எம்பெருமானே! நான் மட்டுமில்லாமல் தொன்று தொட்டு தொண்டு செய்த குலத்தில் பிறந்த குலத்தில் பிறந்த அடியேனுக்கு உன்னுடைய திருவடிகளைச் சேரும் வழிவகைகளை கூறுவாயாக என்று அந்த மாலவனிடம் மருகுகிறார்.

நம்மாழ்வார் கண்ட உலகம் உண்ட பெருவாயனை இறைவனுக்கே மாமனாரான பெரியாழ்வார் வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர்புத்திரன் அல்லன் அருந்தெய்வம் கிருஷ்ணாவதார சிறப்பை வெளிப்படுத்துகிறார். பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் பாலபருவத்துக் குறும்புகளை பாசுரமாக வெளிப்படுத்திய விதம் இருக்கிறதே பக்தி இலக்கியத்தில் தனிச்சிறப்பாக போற்றப்படுகிறது. இதோவொரு மயக்கும் பாசுரம்...

ஆனிரை மேய்க்க நீ போதி
அருமருந்து ஆவது அறியாய்,
கானகமெல்லால் திரிந்து உன்
கரிய திருமேனி வாடப்
பானையிற் பாலைப் பருகிப்
பற்றாதார் எல்லாம் சிரிப்ப,
தேனில் இனிய பிரானே!
செண்பகப் பூச்சுட்ட வாராய்!

இதனுடைய பொருளைப் பார்ப்போம். தேனைக் காட்டிலும் இனியவனாய் எங்களுக்கு உபகாரம் செய்பவனே! அப்போதுதான் கறந்து வைத்த பாலை பாத்திரத்தோடு எடுத்துப் பருகினாய்! பார்ப்பவர்கள் கண்கள் குளிரும்படியாய் இருக்கும் உன் அழகான முகம் அதாவது, உன் கரிய திருமேனி வாடிப் போயிருக்கிறது, எதனால் வாடிப் போயிருக்கிறதாம்... காடெல்லாம் அலைந்து திரிந்து பசுக் கூட்டங்களை மேய்த்ததனால்தான் என்கிறார்.  அதை அழகு தமிழிலே அப்படியே ஆனிரை மேய்க்க நீ போதி என்று படம்பிடித்துக் காட்டுகிறார். அதோடு மட்டுமில்லை. மனம் வீசும் நல்ல வாசனையை உடைய செண்பகப்பூவை தலையில் சூட்டுகிறேன். இங்கே வா என்று அன்பொழுக கண்ணனை கூப்பிடுகிறார்.

அந்த பாவம், அதில் காணப்படும் பரிவு, பொங்குகிற பெருங்கருணை இதையெல்லாம் வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியுமா என்ன? பின்பு என்னதான் செய்ய வேண்டும். கண்ணனை அனுபவிக்க வேண்டும். அதுவும் உட்கார்ந்து மகிழ்ந்து மெல்ல அசைபோட்டு அந்த நினைவுகளில் நீந்த வேண்டும்.

யானையின் அழைப்பிலும், சகாதேவனின் பக்தியிலும், குசேலரின் நட்பிலும், யசோதையின் தாய்மையிலும் இறைவன் அதாவது, கண்ணபரமாத்மா கட்டுண்டு கிடக்கிறான். திருமாலியம் என்பதே இறைவனின் எளிமையை உணர்த்துவது தான்.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக