சனி, 20 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 277

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்தொன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணனுடைய புத்ர, பௌத்ர (பேரன்) பரம்பரையும், அநிருத்த விவாஹமும், ருக்மியின் வதமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பார்யைகளில் (மனைவிகளில்) ஒவ்வொருத்தியும் பத்து பத்து பிள்ளைகளைப் பெற்றாள். அப்புதல்வர்கள், தங்களுடைய உருவம், குணம் முதலியவற்றின் ஸம்ருத்தியால் (நிறைவால்), தங்கள் தந்தையாகிய ஸ்ரீக்ருஷ்ணனைக் காட்டிலும் சிறிதும் குறையாதிருந்தார்கள். அந்த ராஜபுத்ரிகள், ஸ்ரீக்ருஷ்ணன் தங்கள் க்ருஹத்தை எப்பொழுதும் விடாமல் அவ்விடத்திலேயே நிலையாயிருப்பதைக் கண்டு, அந்தப் பகவானுடைய உண்மையை அறியாமல், ஒவ்வொருத்தியும் தன்னை அவனுக்கு மிகவும் அன்பிற்கிடமாக நினைத்துக் கொண்டாள். 

அம்மாதரசிகள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய அழகிய தாமரை மலர் போன்ற முகமும், நீண்ட புஜ தண்டங்களும் (கைகளும்), நீண்டு மலர்ந்த கண்களும், ப்ரீதியோடும், சிரிப்போடும் கூடிய கண்ணோக்கங்களும், அழகிய உரைகளும் ஆகிய இவைகளால் மதி (புத்தி) மயங்கினார்களேயன்றி, தங்கள் விலாஸங்களால் (உடல் நெளிவுகளால்), நிறைவாளனாகிய அவனுடைய மனத்தைப் பறித்து, வசப்படுத்திக் கொள்ள வல்லராகவில்லை. அந்தப் பதினாயிரம் பத்னிகளும், புன்னகையோடு கூடின கடைக்கண்ணோக்கத்தினால் கருத்தை வெளியிடுவதும், மனத்தைப் பறிக்கும் தன்மையதுமாகிய வளைந்த புருவ நெரிப்பினால் அனுப்பப்பட்ட, ஆண்களைக் கவர்ச்சியால் கவரும் மன்மத பாணங்களாலும் (காமக் கணைகளாலும்), காம சாஸ்த்ரங்களில் (காமக்கலவி பற்றி விவரித்துக் கூறும் நூல்களில்) ப்ரஸித்தங்களான மற்றும் பலவகைக் கருவிகளாலும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய மனத்தைக் கலக்க வல்லராகவில்லை. 

ப்ரஹ்மாதிகளும்கூட எவனுடைய உண்மையை அறிய வல்லரல்லரோ, அத்தகையனும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனை, அம்மடந்தையர்கள் கணவனாகப் பெற்று, ஸர்வகாலமும் வளர்ந்து வருகின்ற ஸந்தோஷமுடையவர்களாகி, அனுராகமும் (அன்பும்), புன்னகையும் அமைந்த கண்ணோக்கங்களாலும், புதுப்புதிய ஸம்போக (புணர்ச்சி) ஸுகங்களாலும், மேன்மேலும் பேராவலுற்று, அவனைப் பணிந்து வந்தார்களன்றி, அவனுடைய மனத்தை வசப்படுத்தச் சிறிதும் வல்லராகவில்லை. 

அம்மாதரசிகள், தாங்கள் நினைத்தபடி செய்யவல்ல அளவற்ற தாஸிகளுடையவர்களாயினும், எதிர்கொள்வது, சிறந்த ஆஸனம் அளிப்பது, பாதங்களை அலம்புவது, தாம்பூலங் கொடுப்பது, பாதங்களைப் பிடித்து இளைப்பாறச் செய்வது, சாமரம் வீசுவது, கந்தம் பூசுவது, பூமாலை சூட்டுவது, தலைவாரி முடிப்பது, படுக்கை அமைப்பது, ஸ்னானம் செய்விப்பது, உபஹாரம் கொடுப்பது முதலியவைகளால் தாங்களே நேரில் அவனுக்குப் பணிவிடை செய்தார்கள். 

பத்து பத்து பிள்ளைகளையுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பார்யைகளில் (மனைவிகளில்), ருக்மிணி முதலியவர் எண்மர் ப்ரதான மஹிஷிகளென்று (பட்டத்து அரசிகள் என்று) முன்பு மொழிந்தேனல்லவா; அவர்களுடைய பிள்ளைகளான ப்ரத்யும்னன், முதலியவர்களைச் சொல்லுகிறேன்; கேட்பாயாக. 

ஸ்ரீக்ருஷ்ணனுக்கு, ருக்மிணியிடத்தில் சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன், சாருதேஹன், ஸுசாரு, சாருகுப்தன், பத்ரசாரு, சாருசந்த்ரன், அதிசாரு, சாருமான் ஆகிய இவ்வொன்பதின்மரும், ப்ரத்யும்னனை முன்னிட்டுக்கொண்டு பிறந்தார்கள். இப்பதின்மரும், ஸ்ரீக்ருஷ்ணனோடொத்து விளங்கினார்கள். 

பானு, ஸுபானு, ஸ்வர்ப்பானு, ப்ரபானு, பானுமான், சந்த்ரபானு, ப்ருஹத்பானு, அதிபானு, ஸ்ரீபானு, ப்ரதிபானு ஆகிய இப்பதின்மரும், ஸத்யபாமையின் பிள்ளைகள். 

ஸாம்பன், ஸுமித்ரன், புருஜித்து, சதஜித்து; ஸஹஸ்ரஜித்து, விஜயன், சித்ரகேது, வஸுமான், த்ரவிணன், க்ரது ஆகிய இப்பதின்மரும், ஜாம்பவதியின் பிள்ளைகள். இந்த ஸாம்பன் முதலியவர்கள் பதின்மரும், தந்தையோடொத்தவர்கள். 

வீரன், சந்த்ரன், அச்வஸேனன், சித்ரகு, வேகவான், வ்ருஷன், ஆமன், சங்கு, வஸு, குந்தி ஆகிய இப்பதின்மரும் நாக்னஜிதியின் பிள்ளைகள்.

ச்ருதன், கவி, வ்ருஷன், வீரன், ஸுபாஹு, பத்ரன், சாந்தி, தர்சன், பூர்ணமாஸன், ஸோமகன் ஆகிய இப்பதின்மரும் காளிந்தியின் பிள்ளைகள். இவர்களில் பத்ரனென்பவனை ஏகலனென்றும் வழங்குவதுண்டு. 

ப்ரகோஷன், காத்ரவான், ஸிம்ஹன், பலன், ப்ரபலன், ஊர்த்வகன், மஹாசக்தி, ஸஹன், ஓஜஸ், அபராஜிதன் ஆகிய இப்பதின்மரும் லக்ஷ்மணையின் பிள்ளைகள். 

வ்ருகன், ஹர்ஷன், அனிலன், க்ருத்ரன், வர்தனன், அன்னாதன், மஹாசன், பாவனன், வஹ்னி, க்ஷுதி ஆகிய இப்பதின்மரும், மித்ரவிந்தையின் பிள்ளைகள். 

ஸங்க்ராமஜித்து, ப்ருஹத்ஸேனன், சூரன் , ப்ரஹரணன், அரிஜித்து, ஜயன், ஸுபத்ரன், வாமன், ஆயு, ஸத்யகன் ஆகிய இப்பதின்மரும், பத்ரையின் பிள்ளைகள். 

வியாழன், 18 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 276

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபதாவது அத்தியாயம்

(ருக்மிணிக்கும், ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் ப்ரணயகலஹம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒருகால், ருக்மிணி ஜகத்குருவும் தன் படுக்கையில் ஸுகமாக வீற்றிருப்பவனும், தன் பதியுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனைத் தன் ஸகிகளுடன் சாமரம் வீசி உபசாரம் செய்து கொண்டிருந்தாள். எவன் ஜீவாத்மாக்கள் தன்னை ஆராதித்து உஜ்ஜீவிக்கும் பொருட்டு அதற்குரிய கரண (இந்த்ரியங்கள்) களேபராதிகளைக் (சரீரங்களைக்) கொடுக்கையாகிற ஸ்ருஷ்டியை நடத்துகிறான்? எவன் ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தில் விழுந்து அலைகிற ஜீவாத்மாக்களுக்கு ப்ரளயம் (அழிவு) என்னும் வ்யாஜத்தினால் (சாக்கால், excuse) இளைப்பாறுதலை விளைக்கிறான்? எவன் ஸம்ஸார தசையிலும் அந்த ஜீவாத்மாக்களுக்கு அனிஷ்டங்களைப் (தீமைகளைப்) போக்கி இஷ்டங்களைக் கொடுத்துக் காக்கிறான்? எவனுக்கு இந்த ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்கள் (அழித்தல்) கேவலம் விளையாடலாயிருக்கின்றன? அப்படிப்பட்ட ஸர்வேச்வரன் பிறவியற்றவனாயினும், தான் ஏற்படுத்தின தர்ம மர்யாதைகளை நிலைநிறுத்தும் பொருட்டு, தன் ஸங்கல்பத்தினால் யதுகுலத்தில் பிறந்தான். 

இவ்வாறு ஜகத்திற்கு (உலகிற்கு) வேண்டிய ஹிதங்களை நடத்துகிறானாகையால், அவனே ஜகத்குரு (உலகிற்கு ஆசான்). அத்தகையனான ஸ்ரீக்ருஷ்ணன், சிறந்த சயனத்தில் ஸுகமாக வீற்றிருக்கையில், பீஷ்மகனுடைய புதல்வியான ருக்மிணி, அவனுக்குச் சாமரம் வீசிக்கொண்டிருந்தாள். அந்தப் படுக்கையறை திகழ்கின்ற முத்துச்சரங்கள் தொங்கவிடப்பெற்ற மேல் கட்டினாலும், ரத்னமயமான தீபங்களாலும், விளக்கமுற்றிருந்தது. மற்றும் வண்டினங்கள் ஒலித்துக் கொண்டிருக்கிற திவ்யமான மல்லிப்பூமாலைகள் தொங்க விட்டிருந்தன. அப்பொழுதே உதித்த நிலவின் சிவந்திருக்கின்ற கிரணங்கள் ஜன்னல்கள் வழியாக நுழைந்து நிறைந்திருந்தன. 

உத்யானவனத்தில் வைத்து வளர்க்கப்பட்ட பாரிஜாத வ்ருக்ஷங்களின் வனத்தினின்று புஷ்பங்களின் வாஸனையை ஏந்திக்கொண்டு வருகின்ற மந்த மாருதத்தினாலும் (தென்றலினாலும்), சாளரத்தின் ரந்திரத்தினால் (ஜன்னல் ஓட்டைகள் மூலம்) வெளிவருகின்ற அகிற் புகைகளாலும் அந்தப் படுக்கையறை மிகவும் அழகாயிருந்தது. இத்தகைய படுக்கையறையில், பால் நுரையை நிகர்த்து வெளுத்திருக்கின்ற மஞ்சத்தின்மேல் அமைக்கப்பட்ட மேலான மெத்தென்ன பஞ்ச சயனத்தின் மேல் ஸுகமாக உட்கார்ந்திருக்கின்ற ஜகதீச்வரனான தன் கணவனை ருக்மிணி உபசரித்துக் கொண்டிருந்தாள். 

மிகுந்த ஒளியுடைய அம்மடந்தையர் மணியான ருக்மிணி, மணிக் காம்புடைய சாமரத்தைத் தன் ஸகியின் (தோழியின்) கையினின்று வாங்கி, அதனால் ஸர்வேச்வரனான ஸ்ரீக்ருஷ்ணனை வீசிக்கொண்டு அவனைப் பணிந்திருந்தாள். அந்த ருக்மிணி, ஸ்ரீக்ருஷ்ணனுடைய அருகாமையில் ரத்ன மயமான சிலம்பு தண்டைகளால் சப்தம் செய்து கொண்டு, மோதிரங்களையும், வளைகளையும் அணிந்த ஹஸ்தத்தின் (கையின்) நுனியில் சாமரத்தை ஏந்தி, வஸ்த்ரத்தின் நுனியால் மறைக்கப்பட்ட கொங்கைகளின் மேலுள்ள குங்குமக் குழம்பினால் சிவந்திருக்கின்ற முத்து மாலையின் ஒளியினாலும், நிதம்பங்களில் (இடுப்பில்) தரிக்கப்பட்ட மேலான அரைநாண் மாலையாலும் விளக்கமுற்றிருந்தாள். மானிட உருவம் பூண்ட மஹாலக்ஷ்மியும், அவதாரங்கள் தோறும் தன்னையொழிய வேறு கணவன் அற்றவளும், வேறு கதியற்றவளும், லீலையினால் மானிட உருவம் பூண்ட தனக்கு அனுரூபையும் (ஏற்றவளும்), முன்னெற்றி மயிர்களாலும், குண்டலங்களாலும், பதக்கத்துடன் கூடிய தங்க அட்டிகை அணிந்த கண்டத்தினாலும் (கழுத்தினாலும்) விளக்கமுற்று, முகத்தில் திகழ்கின்ற அம்ருதம் போன்ற புன்னகையுடையவளுமாகிய அந்த ருக்மிணியைப் பார்த்து ஸ்ரீக்ருஷ்ணன் ஸந்தோஷமுற்று, புன்னகை செய்து கொண்டு, இவ்வாறு மொழிந்தான்.

புதன், 17 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 275

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தொன்பதாவது அத்தியாயம்

(நரகாஸுர வதத்தின் வ்ருத்தாந்தம்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- எவன் உலகத்திலுள்ள ராஜர்களை எல்லாம் வென்று, அந்தந்த ராஜ கன்னிகைகளைப் பறித்துக் கொண்டு வந்தானோ, அப்படிப்பட்ட நரகாஸுரனை, ஸ்ரீக்ருஷ்ணன் எப்படி வதித்தான்? சார்ங்கமென்னும் வில்லைத் தரித்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பராக்ரமத்தை வெளியிடுவதாகிய இந்த நரகாஸுர வதத்தை எனக்கு விவரித்துச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நரகாஸுரன், வருணனுடைய சத்ரத்தையும் (அஸாதாரணமான குடையையும்), இந்த்ரனுடைய மாதாவாகிய அதிதியின் குண்டலங்களையும், மேரு பர்வதத்திலுள்ள மணிபர்வதமென்கிற இந்த்ரனுடைய ஸ்தான விசேஷத்தையும், பறித்துக் கொண்டு போனான். (இந்தரன் லோகபாலர்களில் முக்யனாகையால், வருணனுக்கு நேர்ந்த பரிபவத்தையும் (அவமானத்தையும்) தன்னுடையதாகவே நினைத்தான்). இவ்வாறு பெளமனென்னும் நரகனால் பரிபவிக்கப்பட்ட (அவமானப்படுத்தப்பட்ட) தேவேந்திரன், த்வாரகைக்கு வந்து, அங்கு ஸத்யபாமையின் க்ருஹத்தில் இருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனுக்கு, பெளமன் செய்த சேஷ்டையை (செயலை) விண்ணப்பம் செய்தான். ஸ்ரீக்ருஷ்ணனும், பார்யையாகிய (மனைவியாகிய) ஸத்யபாமையுடன் கருடன் மேல் ஏறிக்கொண்டு, கிரி துர்க்கங்களாலும் (மலை அரண்களாலும்), சஸ்த்ர துர்க்கங்களாலும் (ஆயுத அரண்களாலும்), ஜலதுர்க்கம் (நீர் அரணாலும்), அக்னி துர்க்கம் (நெருப்பு அரணாலும்), வாயு துர்க்கம் (காற்று அரணாலும்) ஆகிய மற்றும் பல துர்க்கங்களாலும் (அரண்களாலும்) நுழைய முடியாதிருப்பதும், பயங்கரமாயிருப்பவைகளும், உறுதியுள்ளவைகளுமாகிய, அனேகமாயிரம் முரபாசங்களால் (முரன் என்கிற அசுரனின் திடமான வலைகளால்) நாற்புறத்திலும் சூழப்பட்டிருப்பதுமாகிய ப்ராக்ஜ்யோதிஷபுரத்திற்குப் போனான்.

அந்த ஸ்ரீக்ருஷ்ணன், கிரி (மலை) துர்க்கங்களைக் (அரண்களை) கதையினாலும், சஸ்த்ர (ஆயுத) துர்க்கங்களைப் (அரண்களை) பாணங்களாலும் பிளந்தான். அக்னி (நெருப்பு) துர்க்கம் (அரண்), ஜல (நீர்) துர்க்கம் (அரண்), வாயு (காற்று) துர்க்கம் (அரண்) இவைகளைச் சக்ரத்தினால் அழித்தான். முரபாசங்களைக் (முரன் என்கிற அசுரனின் திடமான வலைகளை) கத்தியினால் சேதித்தான் (வெட்டினான்). மன உறுதியுடைய முரன் முதலிய வீரர்களின் ஹ்ருதயங்களையும் (இதயங்களையும்), யந்த்ரங்களையும் (இயந்திரங்களையும்) சங்கநாதத்தினால் பிளந்தான். கதையைத் தரித்திருக்கின்ற அந்தப் பகவான், பெரிய கதையை விடுத்து, அப்பட்டணத்தின் கோட்டையைப் பிளந்தான். 

ஜலத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஐந்தலையுடைய முரனென்னும் அஸுரன், ப்ரளய காலத்திலுண்டாகும் இடி போல் பயங்கரமாயிருக்கிற பாஞ்சஜன்யத்தின் (பகவானிடம் இருக்கும் சங்கு) த்வனியைக் (ஒலியைக்) கேட்டு, ஜலத்தினின்று எழுந்திருந்தான். ப்ரளய காலத்து ஸூர்யனோடொத்த ஒளியுடையவனும், பொறுக்க முடியாதவனும், கண்ணெடுத்துப் பார்க்க முடியாதவனுமாகிய அந்த முராஸுரன், த்ரிசூலத்தை ஏந்திக் கொண்டு, ஐந்து முகங்களால் மூன்று லோகங்களையும் விழுங்குபவன் போன்று, ஸர்ப்பம் கருடனை எதிர்ப்பது போல, கருட வாஹனனாகிய (கருடனை வாகனமாக உடைய) ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்த்து வந்தான். 

அவ்வஸுரன், த்ரிசூலத்தைப் பலமுள்ள அளவும் சுழற்றி, கருடன் மேல் எறிந்து, ஐந்து முகங்களாலும் ஸிம்ஹநாதம் (சிங்க கர்ஜனை) செய்தான். பெரிதாயிருக்கின்ற அந்த ஸிம்ஹநாதம் (சிங்க கர்ஜனை), பூலோகத்தையும், அந்தரிக்ஷ (பூமிக்கும் ஆகாசத்திற்கும் இடைப்பட்ட) லோகத்தையும், அந்த லோகத்திற்கு மேலுள்ள ஆகாசத்தையும், ஸமஸ்த திசைகளையும், ப்ராணிகளின் காது ரந்தரங்களையும் (காது ஓட்டைகளையும்) நிறைத்து, ப்ரஹ்மாண்டம் (14 உலகம் கொண்ட அண்டம்) முழுவதும் நிரம்பி விட்டது. ஸ்ரீக்ருஷ்ணன், கருடன் மேல் வருகின்ற அந்த த்ரிசூலத்தை, பலத்தினால் இரண்டு பாணங்களை விடுத்து, மூன்று துண்டங்களாகச் சேதித்தான் (வெட்டினான்); அந்த முரனையும் முகங்களில் பாணங்களால் அடித்தான். அந்த முரனும் கோபமுற்று, ஸ்ரீக்ருஷ்ணன் மேல் கதையை ப்ரயோகித்தான். ஸ்ரீக்ருஷ்ணன் தன் மேல் வருகின்ற அந்தக் கதையை, தன் கதையால் ஆயிரம் துண்டங்களாகும்படி துண்டித்து விடுகையில், அவ்வஸுரன் புஜங்களை உயரத் தூக்கிக் கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணன்மேல் எதிர்த்து வந்தான். 

திங்கள், 15 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 274

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தெட்டாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் காளிந்தி முதலிய ஐந்து பேர்களை மணம் புரிதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒருகால் ஸ்ரீக்ருஷ்ணன், (பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்டார்களென்று கேள்விப்பட்டிருந்தும், த்ருபதனுடைய க்ருஹத்தில் எல்லோர்க்கும் தென்பட்டார்களாகையால், அது பொய்யென்றும், அவர்கள் க்ஷேமமாயிருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டு) அப்பாண்டவர்களைப் பார்ப்பதற்காக ஸாத்யகி முதலிய யாதவர்களால் சூழப்பட்டு, இந்த்ர ப்ரஸ்தத்திற்குப் போனான். 

ப்ருதையென்கிற குந்தியின் பிள்ளைகளும், வீரர்களுமாகிய அப்பாண்டவர்கள், ஸர்வேச்வரனும், போக மோக்ஷங்களைக் கொடுப்பவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன் வரக் கண்டு, இந்திரியங்கள், போய் வந்த முக்ய ப்ராணனை (மூச்சுக்காற்றை) எதிர்கொள்வது போல, எல்லோரும் எழுந்து, அவனை எதிர் கொண்டார்கள். அந்தப் பாண்டவர்கள், ப்ரீதியுடன் அந்த ஸ்ரீக்ருஷ்ணனை ஆலிங்கனம் செய்து, அவனுடைய அங்கத்தின் ஸபர்சத்தினால் (உடல் பாகங்கள் பட்டதால்) பாபங்களெல்லாம் தொலையப் பெற்று, அனுராகம் (பரிவு) நிறைந்த புன்னகையோடு கூடின அவன் முகத்தைக் கண்டு ஸந்தோஷம் அடைந்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணன், யுதிஷ்டிரனுக்கும், பீமனுக்கும், பாத வந்தனம் செய்து (திருவடிகளை வணங்கி), அர்ஜுனனை ஆலிங்கனம் செய்து, நகுல, ஸஹதேவர்களால் வந்தனம் செய்யப்பெற்று, சிறந்த ஆஸனத்தில் உட்கார்ந்திருக்கையில், புதிதாக மணம் புரிந்தவளும் நிந்தைக்கு இடமாகாதவளுமாகிய த்ரௌபதி, சிறிது வெட்கத்துடன் மெல்ல மெல்ல வந்து ஸ்ரீக்ருஷ்ணனுக்கு வந்தனம் செய்தாள். அவ்வாறே, ஸாத்யகியும் பார்த்தர்களால் (ப்ருது என்கிற குந்தியின் புதல்வர்களால்) வெகுமதித்து வந்தனம் செய்யப் பெற்று, ஆஸனத்தில் உட்கார்ந்தான். கூட வந்த மற்ற யாதவர்களும், அவ்வாறே பார்த்தர்களால் பூஜிக்கப்பட்டு, ஸ்ரீக்ருஷ்ணனைச் சுற்றி உட்கார்ந்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணன், ப்ருதையிடம் சென்று வந்தனம் செய்து, ஸ்னேஹத்தின் மிகுதியால், கண்ணும் கண்ணீருமாயிருக்கின்ற அவளால் ஆலிங்கனம் செய்து, பந்துக்களின் க்ஷேமமும் நன்கு விசாரிக்கப் பெற்று, தந்தையின் உடன்பிறந்தவளும், நாட்டுப் பெண்ணோடு கூடியவளுமாகிய அவளைத் தானும் க்ஷேமம் விசாரித்தான். 

அந்த ப்ருதை, ப்ரேமத்தின் மிகுதியால் தழதழத்துக் கண்டம் (தொண்டை) தடைபடப் பெற்று, நீர் நிறைந்த கண்களுடன், தனக்கு நேர்ந்த பலவகை வருத்தங்களையும் நினைத்துக்கொண்டு, தன் காட்சி மாத்ரத்தினால் வருத்தங்களையெல்லாம் தீர்க்கவல்லனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்து மொழிந்தாள்.

ப்ருதை சொல்லுகிறாள்:- ஸ்ரீக்ருஷ்ணா! நீ பந்துக்களாகிய எங்களை நினைத்து எப்பொழுது என் ப்ராதாவாகிய (ஸஹோதரனான) அக்ரூரனை எங்களிடம் அனுப்பினையோ, அப்பொழுதே எங்களுக்கு க்ஷேமம் உண்டாயிற்று. அப்பொழுதே நாங்கள் உன்னால் நாதனுடையவர்களாகச் செய்யப்பட்டோம். ஜகத்திற்கெல்லாம் நண்பனும், அந்தராத்மாவுமாகிய உனக்குத் தன்னுடையவனென்றும், பிறனென்றும் பேத (வேற்றுமை) புத்தி கிடையாது. ஆயினும், உன்னை நினைக்கின்ற உன் பக்தர்களுடைய ஹ்ருதயத்தில் இருந்து கொண்டு, ஸர்வ காலமும் அவர்களுடைய வருத்தங்களைப் போக்குகின்றனை.

யுதிஷ்டிரன் சொல்லுகிறான்:- ஜகதீச! (உலக நாயக!) நாங்கள் என்ன புண்யம் செய்தோமோ? எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், யோகேச்வரர்களுக்கும் கூடக் காணமுடியாத நீ சப்தாதி விஷயங்களில் (உலக இன்பங்களில்) ஆழ்ந்த கெடு (கெட்ட) மனமுடைய எங்களுக்குப் புலப்பட்டாயல்லவா?

சனி, 13 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 273

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தேழாவது அத்தியாயம்

(சத்தன்வன் ஸத்ராஜிதனைக் கொன்று, மணியைக் கொண்டு போய் அக்ரூரனிடம் வைத்து பயந்தோட, ஸ்ரீக்ருஷ்ணன் அவனைத் தொடர்ந்து வதித்தும், அவனிடத்தில் மணியைக் காணாமல் அக்ரூரனிடம் இருப்பதைக் கண்டுபிடித்து, அவனை வரவழைத்து மணியைப் பந்துக்களுக்குக் காட்டி, அதை அவனுக்கே கொடுத்தனுப்புதல்.) 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், பாண்டவர்களும், குந்தியும், அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்டார்களென்று கேள்விப்பட்டு, அவர்கள் சுரங்கப்பாதை வழியாக தப்பித்துக் கொண்டார்களென்கிற உண்மையை அறிந்தவனாயினும், ஒன்றுமறியாதவன் போல், தங்கள் குலத்தில் ஏற்பட்ட வழக்கத்தின்படி நடத்த முயன்று, பலராமனுடன் குருதேசத்திற்குச் சென்றான். 

அந்த ராம, க்ருஷ்ணர்கள், தங்களோடொத்த மன வருத்தமுடையவர்களாகிய பீஷ்மர், க்ருபர், விதுரர், காந்தாரி, த்ரோணாசார்யர் இவர்களைக் கிட்டி, “ஆ, என்ன கஷ்டம் நேர்ந்தது!” என்று உபசார வார்த்தைகளால் ஸமாதானப்படுத்தினார்கள். ராஜனே! அப்பொழுது, அக்ரூரனும், க்ருதவர்மனும் “இதுவே ஸமயம்” என்று தெரிந்து கொண்டு, சத்தன்வனைப் பார்த்து மொழிந்தார்கள்.

அக்ரூர, க்ருதவர்மர்கள் சொல்லுகிறார்கள்:- நீ இப்பொழுது ஸத்ராஜிதனிடத்தினின்று ஏன் மணியைப் பிடுங்கிக் கொள்ளலாகாது. இந்த ஸத்ராஜிதன், நமக்குத் தன் புதல்வியைக் கொடுக்கிறேனென்று சொல்லி, நம்மை அனாதரித்து (அவமரியாதை செய்து), ஸ்ரீக்ருஷ்ணனுக்குக் கொடுத்தானல்லவா? ஆனால், பிழைத்திருக்கும் வரையில் மணியை எப்படி கொடுப்பானென்கிறாயோ? அவன், தன் ப்ராதாவை (ஸஹோதரனை) ஏன் பின் செல்லமாட்டான். (ஸிம்ஹம் அவன் ப்ராதாவைக் (ஸஹோதரனை) கொன்றாற் போல், நீ அவனைக் கொன்று, ஏன் மணியைப் பெறலாகாது?)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு சத்தன்வன் அக்ரூர, க்ருதவர்மர்களால் மதி (புத்தி) கலங்கும்படி போதிக்கப் பெற்று, மிகவும் பாபிஷ்டனும், ஆயுள் க்ஷீணிக்கப் (குறையப்) பெற்றவனுமாகையால், மணியிடத்தில் பேராசை கொண்டு, படுத்து உறங்குகின்ற ஸத்ராஜிதனை வதித்தான். ஸ்த்ரீகள், அநாதைகள் போலக் கூக்குரலிட்டுப் புலம்பிக் கொண்டிருக்கையில், பசுக்களை ஹிம்ஸிப்பவன் பசுவைக் கொல்லுவது போல, அவன் ஸத்ராஜிதனைக் கொன்று, மணியை எடுத்துக் கொண்டு போனான். அப்பொழுது, ஸத்யபாமையும், தந்தை மாண்டதைக் கண்டு சோகமுற்று, இடையிடையில் மூர்ச்சை அடைந்து, “அப்பா, அப்பா! ஐயோ நான் பாழானேன்” என்று புலம்பினாள். 

அப்பால், அந்த ஸத்யபாமை மரணம் அடைந்த தன் தந்தையை எண்ணெய்க் கடாஹத்தில் (கொப்பரையில்) வைத்து, ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று, அங்கு முன்னமே இந்தச் செய்தியை அறிந்தும் அறியாதவன் போன்றிருக்கிற ஸ்ரீக்ருஷ்ணனுக்கு, தன் தந்தையைச் சத்தன்வன் கொன்ற கதையைச் சொன்னாள். 

ராஜனே! ஸர்வேச்வரர்களாகிய ராம, க்ருஷ்ணர்கள், அந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டு, மானிடர்களின் நிலைமையை அனுஸரித்து, சோகத்தினால் கண்ணும் கண்ணீருமாகி, “ஆ! நமக்குப் பெரிய ஆபத்து நேர்ந்ததே!” என்று புலம்பினார்கள். அப்பால், ஸ்ரீக்ருஷ்ணன் ஸத்யபாமையோடும், தமையனோடும், ஹஸ்தினாபுரத்தினின்று புறப்பட்டு, த்வாரகைக்கு வந்து, சத்தன்வனைக் கொன்று, மணியைப் பறிக்கத் தொடங்கினான். அந்தச் சத்தன்வனும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய முயற்சியைக் கேள்விப்பட்டு பயந்து, ப்ராணன்களைப் (உயிரைப்) பாதுகாத்துக் கொள்ள விரும்பி, க்ருதவர்மனைத் தனக்கு ஸஹாயமாய் (உதவியாய்) இருக்கும்படி வேண்டினான். அவன், சத்தன்வனைக் குறித்து மொழிந்தான்.

புதன், 10 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 272

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தாறாவது அத்தியாயம்

(ஸ்யமந்தக மணியின் உபாக்யானமும் (கதையும்), ஜாம்பவதீ, ஸத்யபாமைகளின் விவாஹமும்) 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸத்ராஜிதன் ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் அபராதப்பட்டானாகையால், அதைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு,  தன் புதல்வியாகிய ஸத்யபாமையையும், ஸ்யமந்தகமென்னும் மணியையும் அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தானே முயன்று கொடுத்தான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்ம ரிஷீ! ஸத்ராஜிதன் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு என்ன அபராதம் செய்தான்? அவனுக்கு ஸ்யமந்தகமணி எங்கிருந்து கிடைத்தது? அவன் எந்த காரணத்தினால் தன் புதல்வியை ஸ்ரீக்ருஷ்ணனுக்குக் கொடுத்தான்?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸத்ராஜிதனென்று ஒரு மன்னவன் இருந்தான். அவன், ஸூர்யனிடத்தில் மிகுந்த பக்தியுடைவனாயிருந்தான். ஸூர்யன் அவனுடைய பக்திக்கு ஸந்தோஷம் அடைந்து, ப்ரீதியுடன் அவனுக்கு ஸ்யமந்தகமென்னும் மணியைக் கொடுத்தான். ராஜனே! அந்த ஸத்ராஜிதன், அம்மணியைக் கழுத்தில் தரித்து, ஸூர்யன் போல் விளக்கமுற்று, மணியின் தேஜஸ்ஸினால் சரீரம் தெரியாமல் மறைந்து, த்வாரகைக்குள் நுழைந்தான். பட்டணத்து ஜனங்கள் அவனைக் கண்டு, தூரத்திலேயே அவனுடைய தேஜஸ்ஸினால் கண்கள் பறியுண்டு, இவன் ஸூர்யனேயென்று நினைத்து, சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனிடம் வந்து மொழிந்தார்கள்.

ஜனங்கள் சொல்லுகிறார்கள்:- நாராயணா! சங்கசக்ரகதாதரா! தாமோதரா! தாமரைக்கண்ணா! யதுகுலகுமாரா! நீ ஸமஸ்த லோகங்களுக்கும் ஆதாரன்; ஸர்வாந்தராத்மா; ஸர்வரக்ஷகன்; ஸமஸ்த லோகங்களின் ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), ஸமஹாரங்களை (அழித்தல்) நடத்துபவன். நீ உலகங்களைப் படைக்கும் பொழுது, முதலில் ஜலத்தைப் படைத்து, அதன் மேல் சயனித்துக் கொண்டிருந்தாயாகையால், நாராயணனென்று பெயர் பெற்றாய். நீ உன் பக்தர்களின் விரோதிகளை (எதிரிகளை) அழிப்பதற்காக, சங்கு, சக்கரம், கதை ஆகிய இவ்வாயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கின்றாய். நீ தாமரையிதழ் போன்ற கண்களையுடைய பரமபுருஷன். அத்தகைய நீ, யாதவ குலத்தில் வந்து அவதரித்து, நந்தகோப க்ருஹத்தில் வளர்ந்து, யசோதையால் கட்டுண்டு, தாமோதரனென்று பெயர் பெற்றாய். பசுக்களை மேய்த்தாயாகையால், கோவிந்தனென்று பெயர் பெற்றாய். உலகங்களுக்கெல்லாம் நாதனே! உஷ்ணமான கிரணங்களையுடைய ஸூர்யன், தன் கிரண ஸமூஹத்தினால் மனுஷ்யர்களின் கண்களைப் பறித்துக்கொண்டு, உன்னைப் பார்க்க விரும்பி இதோ வருகின்றான். தேவச்ரேஷ்டர்கள் மூன்று லோகங்களிலும் உன்னுடைய மார்க்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ப்ரபூ! ஆகையால், இப்பொழுது நீ யதுகுலத்தில் யாதவனாய் மறைந்திருப்பதை அறிந்து, ஸூர்யன் உன்னைப் பார்க்க வருகின்றான். 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வருகிறவன் இன்னவனென்று தெரிந்து கொள்ளாமல் ப்ரமிக்கின்ற அந்த ஜனங்களின் வசனத்தைக் கேட்டு, தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் சிரித்து, அவர்களைக் குறித்து மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- இவன் தேவனாகிய ஸூர்யனல்லன். இவன் ஸத்ராஜிதன். இவனுக்கு இப்படிப்பட்ட ஒளி ஏதென்றால், சொல்லுகிறேன் கேளுங்கள். ஸ்யமந்தகமென்னும் மணியின் தேஜஸ்ஸினால் இவன் இவ்வாறு ஜ்வலித்துக்கொண்டு வருகின்றான். இதுவேயன்றி வேறில்லை.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 271

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தைந்தாவது அத்தியாயம்

(ப்ரத்யும்னன் பிறத்தலும், அவனைச் சம்பராஸுரன் கொண்டு போதலும், அவன் சம்பராஸுரனைக் கொன்று, தன் பார்யையாகிய (மனைவியாகிய) ரதிதேவியுடன் த்வாரகைக்குத் திரும்பி வருதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வாஸுதேவனுடைய அம்சமாகிய மன்மதன், முன்பு ருத்ரனுடைய கோபத்தினால் கொளுத்தப்பட்டானல்லவா. அவன் மீளவும் தேஹம் (உடல்) பெறுதற்காக அந்த வாஸுதேவனுடைய சரீரத்தை அடைந்திருந்தான். அந்த மன்மதனே, ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீர்யத்தினால் ருக்மிணியிடத்தில் பிறந்தான். அவன் ப்ரத்யும்னனென்று ப்ரஸித்தி பெற்றிருந்தான். எல்லாவிதத்திலும் தந்தையைக் காட்டிலும் சிறிதும் குறையாதிருந்தான். மன்மதனுக்குச் சத்ருவும் (எதிரியும்), காமரூபியுமாகிய (நினைத்த உருவத்தை எடுக்கும்) சம்பராஸுரன், நாரதர் மூலமாய் அந்த ப்ரத்யும்னன் தனக்குச் சத்ருவென்பதை அறிந்து, பிறந்து பத்து நாள் கழிவதற்கு முன்னமே அக்குழந்தையைக் கொண்டு போய் ஸமுத்ரத்தில் போட்டுத் தன் க்ருஹத்திற்குப் போனான். பலமுள்ள ஒரு மத்ஸ்யம் (மீன்), அக்குழந்தையை விழுங்கிற்று. 

அப்பால், ஒருகாலத்தில் சம்படவர்கள் வந்து, பெரிய வலையை விரித்து, அந்த மத்ஸ்யத்தையும் (மீனையும்), மற்றும் பல மத்ஸ்யங்களையும் (மீன்களையும்) பிடித்தார்கள். சம்படவர்கள், அந்த மத்ஸ்யத்தைக் (மீனைக்) கொண்டு போய், சம்பராஸுரனுக்கு உபஹாரமாகக் (பரிசாகக்) கொடுத்தார்கள். சமையற்காரர்கள், அந்த மத்ஸ்யத்தைப் (மீனை) பாகசாலைக்குள் (சமையல் அறைக்குக்) கொண்டு போய்க் கத்தியினால் சேதிக்க (வெட்ட), அம்மத்ஸ்யத்தின் உதரத்தில் (வயிற்றில்) அற்புதமான ஓர் பாலனைக் கண்டு மாயாவதிக்குத்  தெரிவித்தார்கள். அவள், அந்தப் பாலகனைக் கண்டு, “இப்பாலகன் யாவனோ? தெரியவில்லையே. இவன் என் பர்த்தாவைப் (கணவனைப்) போன்றிருக்கிறான். அல்லது அவன் தானோ இவன்?” என்று மனத்தில் சங்கித்துக் கொண்டிருக்கையில், நாரத மஹர்ஷி அவ்விடம் வந்து, அப்பாலகனுடைய உண்மையையும், அவனுடைய பிறவியையும், அவன் மத்ஸ்யத்தின் (மீனின்) வயிற்றில் புகுந்த விதத்தையும் ஆகிய இவையெல்லாவற்றையும் அவளுக்குச் சொன்னார். அவள், மன்மதனுடைய பத்னி ரதிதேவியென்னும் பெயருடையவள். அவள், ருத்ரனால் தஹிக்கப்பட்ட தன் கணவனுடைய தேஹோத்பத்தியை (உடல் பெறுவதை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஸம்பராஸுரன் அவளைப் பலாத்காரமாகக் கொண்டு வந்து, சமையற்காரர்களுக்குச் சமையலில் உதவியாயிருக்கும்படி பாகசாலையில் (சமையல் அறையில்) நியமித்திருந்தான். அவள், அந்தப் பாலகனை நாரதர் மூலமாய்க் காமதேவனென்று தெரிந்து கொண்டு, அவனிடத்தில் ஸ்னேஹம் செய்து வந்தாள். ஸ்ரீக்ருஷ்ணனுடைய குமாரனாகிய அந்த ப்ரத்யும்னன், ஸ்வல்ப (குறைந்த) காலத்திலேயே யௌவன (இளமை) வயது நேரப் பெற்று, தன்னைப் பார்க்கும் மடந்தையர்கள் அனைவர்க்கும் காம மோஹத்தை (காதல் மயக்கத்தை) விளைத்தான். 

மன்னவனே! அந்த ரதிதேவி, தாமரையிதழ்போல் மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட கண்களுடையவனும், திரண்டு உருண்டு நீண்ட புஜதண்டங்கள் (கைகள்) உடையவனும், மனுஷ்ய லோகத்தில் இணையெதிரில்லாத அழகனும், தன் கணவனுமாகிய அந்த ப்ரத்யும்னனை வெட்கம் அமைந்த புன்னகையுடன் புருவங்களை நெரித்து, ப்ரீதியினால் காமக்கருத்தை (காதல் என்ணத்தை) வெளியிடுகின்ற லீலாவிலாஸங்களுடன் (விளையாட்டுக் கண்ணோக்கங்களோடு) பார்த்துக் கொண்டு பணிந்து வந்தாள். 

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 270

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்து நான்காவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் தன்மேல் எதிர்த்து வந்த சத்ருக்களை வென்று, ருக்மியை விரூபஞ் (அலங்கோலம்) செய்து, பட்டணம் சென்று, ருக்மிணியை மணம் புரிதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அம்மன்னவர்கள் அனைவரும் இவ்வாறு மொழிந்து பரிதபித்து, கோபாவேசமுற்று, கவசம் தரித்து, வில்லையும் ஏந்தி, தங்கள் தங்கள் ஸைன்யங்களால் (படைகளால்) சூழப்பட்டு, ஸ்ரீக்ருஷ்ணனைத் தொடர்ந்தார்கள். 

மன்னவனே! அப்பொழுது, யாதவ ஸேனாபதிகள் அவ்வாறு சத்ருக்கள் (எதிரிகள்) எதிர்த்து வருவதைக் கண்டு, தங்கள் தனுஸுக்களில் (வில்களில்) நாணை ஏற்றி ஒலிப்பித்து, அவர்களை எதிர்த்து நின்றார்கள். குதிரையின் மேல் ஏறிச் சண்டை செய்வதிலும், யானையின் கழுத்தில் இருந்து சண்டை செய்வதிலும், தேர்மேல் இருந்து சண்டை செய்வதிலும் ஸமர்த்தர்களான சத்ருக்கள் (எதிரிகள்), மேகங்கள் பர்வதங்களின் (மலைகளின்) மேல் ஜலங்களைப் பெய்வது போல, யாதவ ஸைன்யங்களின் (படைகளின்) மேல் பாண வர்ஷங்களைப் (அம்பு மழையைப்) பெய்தார்கள். அப்பொழுது அழகிய இடையுடைய ருக்மிணி, தன் பர்த்தாவின் (கணவனின்) ஸைன்யம் (படை) முழுவதும் சத்ருக்களின் (எதிரிகளின்) பாணங்களாகிற விடாமழைகளால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு, பயத்தினால் கண்கள் நடுங்கப்பெற்று, வெட்கத்துடன் அவனுடைய முகத்தை நோக்கினாள். 

அப்பொழுது, மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அந்த ருக்மிணியைப் பார்த்துச் சிரித்து, “அழகிய கண்களுடையவளே! நீ பயப்பட வேண்டாம். இப்பொழுதே உன் ஸேனையிலுள்ளவர்களால், இந்தச் சத்ரு (எதிரி) ஸைன்யம் (படை) முழுவதும் அழியப்போகின்றது!” என்று மொழிந்தான். 

வீரர்களாகிய கதன், பலராமன் முதலிய யாதவர்கள், அந்தச் சிசுபாலன் முதலிய சத்ருக்களுடைய (எதிரிகளுடைய) அத்தகைய பராக்ரமத்தைப் பொறுக்காமல், நாராச (ரம்பம் போன்ற முனை உடைய) பாணங்களால் (அம்புகளால்) குதிரை மேலும், யானை மேலும், ரதத்தின் மேலும், ஏறிச் சண்டை செய்கின்ற அவர்களை, அடித்தார்கள். அப்பொழுது, ரதிகர்களின் (தேரில் இருப்பவர்களின்) தலைகளும், குதிரை வீரர்களின் தலைகளும், யானை வீரர்களின் தலைகளும், குண்டலம், கிரீடம், பாகை இவற்றுடன் கோடி கோடியாக அறுந்து பூமியில் விழுந்தன. மற்றும், அப்பொழுது கத்தி, கதை, தனுஸ்ஸு (வில்) இவற்றோடு கூடிய கைகளும், அடி பருத்து, நுனி சிறுத்து, அழகாயிருக்கின்ற துடைகளும், புஜங்களும், கால்களும், குதிரை, கோவேறு கழுதை, யானை கோடியாக அறுந்து விழுந்தன. ஜராஸந்தன் முதலிய அம்மன்னவர்கள், இவ்வாறு ஜயத்தை (வெற்றியை) விரும்புகின்ற யாதவர்களால் தங்கள் ஸைன்ய (படைக்) கூட்டமெல்லாம் வதிக்கப் பெற்று, யுத்தத்தினின்று திரும்பி ஓடிப் போனார்கள். அப்பால், அம்மன்னவர்கள் அனைவரும் பார்யையை (மனைவியைப்) பறி கொடுத்தவன் போல வருத்தமுற்று, ஒளி மயங்கி, உத்ஸாஹம் அற்று, முகம் வாடி நிற்கின்ற சிசுபாலனைக் கிட்டி, இவ்வாறு மொழிந்தார்கள்.

மன்னவர்கள் சொல்லுகிறார்கள்:- ஓ புருஷ ச்ரேஷ்டனே! மனவருத்தத்தைத் துறப்பாயாக. ப்ராணிகளிடத்தில் ஸுகமாவது, துக்கமாவது நிலை நின்றிருக்காது. ராஜனே! அவை போவதும், வருவதுமாயிருப்பவை. மரத்தினால் இயற்றப்பட்ட பிரதிமை, ஆட்டக்காரனுடைய இஷ்டப்படி ஆடுவதுபோல், இவ்வுலகத்திலுள்ள ப்ராணிகள் அனைவரும் ஈச்வரனுக்கு உட்பட்டு ஸுக துக்கங்களை விளைக்கவல்ல கார்யங்களைச் செய்கின்றார்கள். ஸுகத்தையாவது, துக்கத்தையாவது நாம் ஸ்வதந்தரித்துப் (தன் இச்சையாக வேண்டியபடி) பெற முடியாது. நாம் ஸுகத்தையே விரும்பி முயற்சி செய்யினும், ஈச்வரனுடைய இச்சையின்படி ஸுக, துக்கங்கள் இரண்டையும் பெறுகின்றோம். ஆகையால், அவ்விஷயத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்?

சனி, 6 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 269

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்து மூன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் ருக்மிணியைப் பறித்துக்கொண்டுபோதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- யாதவ குமாரனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், ருக்மிணி சொல்லியனுப்பின ஸமாசாரத்தைக் (செய்தியைக்) கேட்டு, தன் கையினால் அந்த ப்ராஹ்மணனைக் கையில் பிடித்து, சிரித்து மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- மிகவும் நல்லியற்கையுடைய அந்த ருக்மிணி எப்படி ஸர்வ காலமும் என்னிடத்தில் நிலைநின்ற மனமுடையவளாயிருக்கிறாளோ, அவ்வாறே நானும் அவளிடத்தில் நிலை நின்ற மனமுடையவனாகி, இரவில் நித்ரையும்கூட நேரப் பெறாதிருக்கின்றேன். ருக்மி, என்னிடத்தில் த்வேஷத்தினால் (பகைமையினால்) ருக்மிணியை எனக்குக் கொடுத்து விவாஹம் செய்வதைத் தடுத்து விட்டானென்பது எனக்குத் தெரியும். அதைப்பற்றியும் நான் உறக்கம் பிடிக்காதிருக்கின்றேன். இப்பொழுது, நான் சிசுபாலன் முதலிய அற்ப ராஜர்களை யுத்தத்தில் ஜயித்து, சிறிதும் தோஷங்களுக்கிடமாகாமல் ரமணீயமான (அழகிய) அங்கங்களுடையவளும், என்னையே முக்யமாகக் கொண்டு எப்பொழுதும் என்னிடத்திலேயே நிலைகின்ற மனமுடையவளுமாகிய, அந்த ருக்மிணியை அரணிக்கட்டையினின்று அக்னி ஜ்வாலையைக் கொண்டு வருவது போலக் கொண்டு வருகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன், அந்த ப்ராஹ்மணனுக்கு இவ்வாறு மொழிந்து, ருக்மிணியின் விவாஹத்திற்கு ஏற்பட்டிருக்கும் நக்ஷத்ரம் இன்னதென்பதைத் தெரிந்து கொண்டு, “தாருக! ரதத்தில் குதிரைகளைப் பூட்டிக்கொண்டு வருவாயாக” என்று ஸாரதியைப் பார்த்து மொழிந்தான். அவனும், சைப்யம், ஸுக்ரீவம், மேகபுஷ்பம், வலாஹகம் என்னும் பெயருடைய நான்கு குதிரைகள் பூட்டின ரதத்தைக் கொண்டு வந்து நிறுத்தி, அஞ்சலித்துக் கொண்டு, முன்னே வந்து நின்றான். ஸ்ரீக்ருஷ்ணன், ப்ராஹ்மணனை ரதத்தில் ஏற்றி, தானும் ஏறிக்கொண்டு, குதிரைகள் மிகுந்த வேகமுடையவைகளாகையால், ஒரு ராத்ரியில் ஆனர்த்த தேசத்தினின்று விதர்ப்ப தேசம் போய்ச் சேர்ந்தான். 

குண்டின புரத்தை ஆள்கின்ற பீஷ்மக மன்னவன், தன் பிள்ளையாகிய ருக்மியிடத்தில் ஸ்னேஹத்தினால் அவனுக்கு உட்பட்டு, தன் புதல்வியான ருக்மிணியைச் சிசுபாலனுக்குக் கொடுக்க முயன்று, பட்டணத்தை அலங்கரிப்பது, பித்ருக்களையும், தேவதைகளையும் பூஜிப்பது முதலிய கார்யங்களை நடத்தினான். அந்தக் குண்டினபுரத்தில், ராஜவீதிகளும், ஸாதாரண மார்க்கங்களும், நாற்சந்தி வீதிகளும், நன்கு விளக்கி ஜலந்தெளித்து, விசித்ரமான த்வஜங்களாலும் (கொடிகளாலும்), பதாகைகளாலும் (திரைச்சீலைகளாலும்), தோரணங்களாலும் அலங்காரம் செய்யப் பெற்றிருந்தன. 

அந்நகரத்தில், வீடுகள் அனைத்தும், அகில் புகையிடப்பெற்று, மிகவும் அழகாயிருந்தன. வீடுகள் தோறும், ஆண், பெண்கள் அனைவரும் நிர்மலமான ஆடைகளை உடுத்தி, பூ மாலைகள், சந்தனம், அகில், குங்குமம் முதலிய அங்காரகங்கள் (உடலில் பூசும் வாசனைப் பொருட்கள்), புஷ்ப ஸரங்கள், ஆபரணங்கள் இவைகளை அணிந்து, மிகவும் உத்ஸாஹமுற்றிருந்தார்கள். இத்தகைய ஸ்த்ரீ, புருஷர்களாலும், செல்வப் பெருக்குகள் அமைந்த அழகிய க்ருஹங்களாலும், அந்நகரம் மிகவும் அழகாயிருந்தது. 

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 268

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்து இரண்டாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் யுத்தத்திற்கு வந்த ஜராஸந்தனிடத்தினின்று பயந்தாற் போல் ஓடி, ப்ரவர்ஷண பர்வதத்தில் ஒளிந்து கொண்டிருந்து, மீண்டு பட்டணம் போதலும், ருக்மிணீ ஸந்தேசமும் (செய்தியும்))

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவனாகிய அந்த முசுகுந்தன், ஸ்ரீக்ருஷ்ணனால் இவ்வாறு அனுக்ரஹம் செய்யப் பெற்று, அம்மஹானுபாவனை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து, குஹையினின்று வெளிப்பட்டான். அந்த முசுகுந்தன், மனுஷ்யர்களும், பசுக்களும், செடி, கொடி, மரங்களும் முன்னிருந்த அளவைக் காட்டிலும் குறைந்து குள்ளமாயிருப்பதைக் கண்டு, கலியுகம் வந்திருப்பதை அறிந்து, தவம் செய்வதற்காக வடதிசையைக் குறித்துச் சென்றான். 

ஜிதேந்த்ரியனும் (புலன்களை வென்றவனும்), மனமலங்கள் கழியப்பெற்றவனும், நமக்குப் பேறு கை கூடுமோ கூடாதோ என்னும் ஸந்தேஹமற்றவனுமாகிய அந்த முசுகுந்த மன்னவன், ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மனத்தை நன்றாக நிலை நிறுத்தித் தவம் செய்ய வேண்டுமென்னும் ச்ரத்தையுடன் கூடி, கந்தமாதன பர்வதத்திற்குப் போனான். 

அங்கு, நர, நாராயணர்களின் இருப்பிடமாகிய பத்ரிகாச்ரமத்திற்குச் சென்று, குளிர், வெய்யில் முதலிய த்வந்தங்களை (இரட்டைகளை) எல்லாம் பொறுத்து, மனத்தை அடக்கிக் கொண்டு, தன்னைப் பற்றினவர்களின் பந்தத்தைப் போக்கும் தன்மையனாகிய பகவானைத் தவத்தினால் ஆராதித்தான். 

பிறகு, ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீக்ருஷ்ணன், யவனர்களால் சூழப்பட்ட மதுராப்புரிக்குத் திரும்பி வந்து, அந்த ம்லேச்ச ஸைன்யங்களை (படைகளை) எல்லாம் வதித்து, அவர்களுடைய தனத்தையெல்லாம் ஸமுத்ர மத்யத்தில் (நடுவில்) தான் ஏற்படுத்தின ஜலதுர்க்கமாகிய (நீர்க்கோட்டையாகிய) த்வாரகாபுரிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தான். ஸ்ரீக்ருஷ்ணனால் தூண்டப்பட்ட மனிதர்கள், அந்தப் பணத்தை எருதுகளின் மேல் ஏற்றிக் கொண்டு போகையில், ஜராஸந்தன் இருபத்து மூன்று அக்ஷெளஹிணி ஸைன்யத்தைக் (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) கூட்டிக்கொண்டு வந்தான். 

ராஜனே! ராம, க்ருஷ்ணர்கள், ஜராஸந்தனுடைய ஸைன்யத்தின் (படையின்) வேகத்தையும், உத்ஸாஹத்தையும் கண்டு, மானிடவர்களின் செயலை அனுஸரிக்க முயன்று, வேகமாக ஓடிப்போனார்கள். அவர்கள், பயமற்றவர்களாயினும், மிகவும் பயந்தவர்கள் போன்று அளவற்றிருக்கிற தனத்தையும் துறந்து, தாமரையிதழ் போல் மிகவும் மெதுவான பாதங்களால் பல யோஜனைகள் கடந்து சென்றார்கள். பலிஷ்டனாகிய (பலசாலியான) ஜராஸந்தன், அந்த ராம, க்ருஷ்ணர்கள் அவ்வாறு ஓடுவதைக் கண்டு, ஸர்வேச்வரர்களான அந்த ராம, க்ருஷ்ணர்களின் ஸ்வரூப, குணங்கள் அளவற்றிருக்கையை அறியாதவனாகையால், பல ரதங்களுடன் கூடி, அவர்களைத் தொடர்ந்தோடினான். 

அந்த ராம, க்ருஷ்ணர்கள், வெகு தூரம் ஓடி இளைப்புற்றவர்கள் போன்று, மிகவும் உயர்ந்திருக்கின்ற ப்ரவர்ஷணமென்னும் பர்வதத்தின் மேல் ஏறினார்கள். மேகம் என்றும் ஓயாமல் மழை பெய்து கொண்டிருக்கையால் அப்பர்வதம், ப்ரவர்ஷணமென்று யதார்த்தமான பெயருடையது. 

மன்னவனே! அந்த ஜராஸந்தன், அந்த ராம, க்ருஷ்ணர்களின் அடிவைப்புக்களால் (கால் அடி) ஆங்காங்கு அடையாளம் செய்யப்பெற்ற இடங்களைக் கண்டு, அந்த அடையாளத்தினால் இவர்கள் ப்ரவர்ஷண கிரியில் மறைந்து கொண்டிருக்கிறார்களென்று தெரிந்து கொண்டு, அந்தப் பர்வதத்தைச் சுற்றி முழுவதும் பத்து யோஜனை (1 யோஜனை = 12.8 கி.மீ.) தூரம் வரையில் கட்டைகளை அடுக்கி, அதில் அக்னியை இட்டுக் கொளுத்தினான். 

சனி, 30 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 267

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தொன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் காலயவனனை முசுகுந்தனுடைய திருஷ்டியால் (பார்வையால்) தஹிப்பித்தலும் (எரித்தலும்), முசுகுந்தன் ஸ்ரீக்ருஷ்ணனைத் துதித்தலும், ஸ்ரீக்ருஷ்ணன் முசுகுந்தனுக்கு வரம் கொடுத்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பொழுது, உயர்கின்ற சந்த்ரன் போல் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி அழகியனும், கறுத்துப் பொன்னிறமுள்ள பட்டு வஸ்த்ரம் தரித்து, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளம் அமைந்து, கழுத்தில் திகழ்கின்ற கௌஸ்துப மணியை அணிந்து, திரண்டு உருண்டு நீண்ட நான்கு பாஹு தண்டங்களும் (கைகளும்), அப்போதலர்ந்த செந்தாமரை மலர்போல் சிவந்தழகிய திருக்கண்களும், என்றும் ஸந்தோஷமுற்று அளவற்ற ஸௌந்தர்யமும், அழகிய கபோலங்களும் (கன்னங்களும்) பரிசுத்தமான புன்னகையும், திகழ்கின்ற மகரகுண்டலங்களும் அமைந்த முகாரவிந்தமும் (திருமுகத் தாமரையும்) விளங்கப்பெற்று மிகவும் விளங்குகின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணன், பட்டணத்து வாசலினின்று வெளிக் கிளம்பி வருவதைக் கண்டு காலயவனன், நாரதரிடத்தில் ஸ்ரீக்ருஷ்ணன் இத்தகைய அடையாளங்களுடையவன் என்று கேட்டிருப்பவனாகையால், “ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளமுடையவனும், நான்கு புஜ தண்டங்கள் (கைகள்) உடையவனும், செந்தாமரைக்கண்ணனும், வனமாலை அணிந்தவனும், பேரழகனுமாகிய இப்புருஷன் வாஸுதேவனேயாக வேண்டும். நாரதர் சொன்ன லக்ஷணங்களெல்லாம் இவனிடத்தில் அமைந்திருக்கின்றன. ஆகையால், இவன் மற்றொருவனுமல்லன். இவன் ஆயுதமில்லாதிருக்கின்றனன். இவனோடு நான் காலால் நடந்து கொண்டு, ஆயுதமில்லாமலே யுத்தம் செய்யவேண்டும்” என்று நிச்சயித்துக்கொண்டு, அம்மஹானுபாவன் தன்னை எதிர்க்காமல் பராங்முகனாய் (முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறு திசையில்) ஓடக் கண்டு, யோகிகளுக்கும் கூட எட்டாத அப்பரம புருஷனைப் பிடிக்க முயன்று, பின் தொடர்ந்தோடினான்.

ஸ்ரீக்ருஷ்ணன், அடிகள் தோறும் தன்னைக் கையில் அகப்படுகிறவன் போல் காட்டிக் கொண்டே, அந்த யவனனை வெகுதூரம் இழுத்துக் கொண்டு போய், பர்வத குஹையில் சேர்த்தான். “நீ யது குலத்தில் பிறந்தவன். நீ பலாயனம் செய்வது (போரில் பின் வாங்குவது) யுக்தமன்று (ஸரியன்று)” என்று பழித்துக்கொண்டே அந்த யவனன், வேகமாகத் தொடர்ந்து சென்றும், பாபங்கள் தொலையப் பெறாதவனாகையால், இவனைப் பெறவில்லை. மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனோவென்றால், இவ்வாறு பழிக்கப் பெற்றும், பேசாமல் பர்வத குஹையில் நுழைந்தான். அக்காலயவனனும், அந்தப் பர்வத குஹையில் நுழைந்து, அங்கு வேறொரு மனுஷ்யன் படுத்திருக்கக் கண்டான். அவன், “வாஸுதேவன் என்னை இவ்வளவு தூரம் இழுத்துக்கொண்டு வந்துவிட்டு, இப்பொழுது ஸாதுவைப்போல் பேசாமல் படுத்திருக்கிறான். நிச்சயம். இவன் க்ருஷ்ணனே” என்று, மூடனாகையால், அம்மனிதனை ஸ்ரீக்ருஷ்ணனாகவே நினைத்து, அவனைப் பாதத்தினால் உதைத்தான். நெடுநாளாய்த் தூங்கிக்கொண்டிருக்கிற அப்புருஷன் எழுந்து, மெல்ல மெல்லக் கண்களை விழித்து, திசைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு, வந்து பக்கத்திலிருக்கின்ற அந்த யவனனைக் கண்டான். 

பரத வம்சாலங்காரனே! அந்த யவனன், கோபமுற்றிருக்கிற அப்புருஷனுடைய கண் பட்ட மாத்ரத்தில் பற்றி எரிகின்ற, தன் தேஹத்தினின்று (உடலிலிருந்து) உண்டான அக்னியால் தஹிக்கப்பட்டு (எரிக்கப்பட்டு), அந்த க்ஷணமே பஸ்மமானான் (சாம்பலானான்).

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்மர்ஷீ! யவனனைக் கொன்ற அப்புருஷன் யாவன்? யாருடைய வம்சத்தில் பிறந்தவன்? எத்தகைய வீர்யமுடையவன்? அவன் எந்தக் காரணத்தினால் குஹைக்குள் சென்று படுத்திருந்தான்? அவனுடைய தேஜஸ்ஸு (ஆற்றல்) எத்தகையது?

வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 266

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பதாவது அத்தியாயம்

(ஜராஸந்தாதிகளோடு யுத்தமும், ஸமுத்ரத்தினிடையில் த்வாரகாபுரியை நிர்மித்துத் தன் பந்துக்களை அவ்விடம் கொண்டு போய்ச் சேர்த்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரத ச்ரேஷ்டனே! கம்ஸனுக்கு அஸ்தியென்றும், ப்ராஸ்தியென்றும் இரண்டு பட்ட மஹிஷிகள் (ராணிகள்) இருந்தார்கள். அவர்கள், பர்த்தாவான (கணவனான) கம்ஸன் முடிகையில், துக்கத்தினால் வருந்தித் தந்தையாகிய ஜராஸந்தனுடைய க்ருஹத்திற்குப் போனார்கள். அப்பால், வருத்தமுற்றிருக்கின்ற அந்த கம்ஸ மஹிஷிகள் (ராணிகள்), மகத தேசங்களுக்கு ப்ரபுவும், தங்கள் தந்தையுமாகிய ஜராஸந்தனுக்குத் தங்கள் வைதவ்யத்தின்  (விதவையானதன்) காரணத்தையெல்லாம் விஸ்தாரமாகத் தெரிவித்தார்கள்.   

அந்த ஜராஸந்தன், அப்ரியமான (விரும்பத்தகாத) அந்தச் செய்தியைக் கேட்டு, சோகம், கோபம் இவைகளுடன் கூடி, பூமியில் யாதவப் பூண்டே இல்லாதபடி செய்யப் பெருமுயற்சி கொண்டான். அவன் இருபத்து மூன்று அக்ஷௌஹிணி ஸைன்யங்களைத் (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட்படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) திரட்டிக் கொண்டு சென்று, யாதவர்களின் முக்ய பட்டணமாகிய மதுராவை எல்லாத் திசைகளிலும் தகைந்தான் (முற்றுகை இட்டான்). ஸ்ரீக்ருஷ்ணன், கரை புரண்ட ஸமுத்ரம் போன்றிருக்கிற அந்த ஜராஸந்தனுடைய ஸைன்யத்தையும் (படையையும்), அவனால் தன் பட்டணம் தகையப்பட்டிருப்பதையும் (முற்றுகை இடப்பட்டிருப்பதையும்), தன் ப்ரஜைகளெல்லாம் பயந்து, வ்யாகுலம் (வருத்தம்) உற்றிருப்பதையும் கண்டு, பாரத்தை நீக்குகையாகிற காரணத்திற்காக மானிட உருவத்தை ஏற்றுக் கொண்டவனும், தன்னைப் பற்றினவர்களுடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அந்தத் தேச காலங்களுக்குத் தகுந்திருக்கும்படி தன்னுடைய அவதாரத்தின் ப்ரயோஜனத்தை ஆராய்ந்து, இவ்வாறு செய்யவேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டான். 

“இந்த மாகதன் (மகத நாட்டு அரசன் ஜராசந்தன்) திரட்டிக்கொண்டு வந்திருக்கிற இந்த ராஜாக்களின் ஸைன்யம், பல அக்ஷெளஹிணி (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட்படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) கணக்குடையது. போர்வீரர்களும், குதிரைகளும், தேர்களும் அளவற்றிருக்கின்றன. இந்த ஸைன்யம் (படை) முழுவதும் பூமிக்குப் பாரமாயிருக்கிறதாகையால், இதை வதித்து (அழித்து) விடுகிறேன். மாகதனை (மகத நாட்டு அரசன் ஜராசந்தனை) மாத்ரம் இப்பொழுது வதிக்கலாகாது (அழிக்கலாகாது). ஏனென்றால், அவனை வதிக்காமல் விட்டு விடுவோமாயின், அவன் மீளவும் ஸைன்யங்களைத் (படைகளைத்) திரட்டிக்கொண்டு வருவான். அவற்றையும் வதிக்கலாம். அவதரித்தது, பூமியின் பாரத்தை நீக்குவதும், ஸத் புருஷர்களைக் காப்பதும், துஷ்டர்களை வதிப்பதும் ஆகிய இவற்றிற்காகவன்றோ? இதுவன்றி, என்னுடைய அவதாரத்திற்கு வேறு சில ப்ரயோஜனங்களும் உண்டு. 

ஒருகால், மிகவும் தலையெடுத்து வளர்ந்து வருகின்ற அதர்மத்தை அழிப்பதற்காகவும், தர்மத்தைப் பாதுகாப்பதற்காகவும், நான் தேஹத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன்” என்று இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணன் சிந்தித்துக் கொண்டிருக்கையில், அப்பொழுதே ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியுடையவைகளும், ஸாரதியோடு (தேர் ஓட்டுபவர்) கூடினவைகளும், மற்றும் வேண்டிய பரிகரங்களெல்லாம் (உபகரணங்களெல்லாம்) அமைந்தவைகளுமாகிய இரண்டு ரதங்கள் (தேர்கள்) ஆகாயத்தினின்று இறங்கி வந்தன. அமானுஷங்களான (மனிதர்களுக்கு அப்பாற்பட்ட) பழைய ஆயுதங்களும், திடீரென்று வந்து தோன்றின. அப்பால், ஸ்ரீக்ருஷ்ணன் அவற்றைக் கண்டு, பலராமனைப் பார்த்து மொழிந்தான்.

செவ்வாய், 26 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 265

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தொன்பதாவது அத்தியாயம்

(அக்ரூரன் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று ஸமாசாரம் (செய்தி) தெரிந்து கொண்டு வந்து ஸ்ரீகிருஷ்ணனுக்குச் சொல்லுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த அக்ரூரன் கௌரவேந்த்ரர்களுடைய புகழ்களை வெளியிடுகிற தேவாலயம் முதலியவைகளால் அடையாளம் செய்யப் பெற்ற ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று, அங்கு பீஷ்மருடன் கூடியிருக்கின்ற த்ருதராஷ்ட்ரனையும், விதுரனையும், குந்தியையும், பாஹ்லிகனையும், அவன் பிள்ளையாகிய ஸோமதத்தனையும், க்ருபாசார்யரையும், த்ரோணாசார்யரையும், கர்ணன், துர்யோதனன் அச்வத்தாமா இவர்களையும், பாண்டவர்களையும், மற்றுமுள்ள நண்பர்களையும் கண்டான். 

அவ்வக்ரூரன், உரியபடி பந்துக்களைக் கிட்டி, அவர்களால் க்ஷேமம் விசாரிக்கப் பெற்று, தானும் அவர்களை க்ஷேமம் வினவினான். துஷ்டர்களான பிள்ளைகளுடையவனும், மனோதைர்யம் அற்பமாயிருக்கப் பெற்றவனும், அற்ப புத்திகளான கர்ணாதிகளின் அபிப்ராயத்தை அனுஸரிக்கும்  தன்மையனுமாகிய ராஜனான த்ருதராஷ்ட்ரனுடைய நடத்தையை ஆராயும் பொருட்டு, அவ்விடத்தில் சிலமாதங்கள் வஸித்திருந்தான். யுதிஷ்டிரனிடத்தில் ப்ரஜைகளுக்கு ப்ரீதி உண்டாயிருப்பதையும், அவர்களுடைய தேஜஸ்ஸு (பராக்ரமம்), ஓஜஸ்ஸு (ஆயுதங்களைத் தாங்கும் திறன்), பலம் (உடல் வலிமை), வீர்யம்  (வீரம்), வணக்கம் (அடக்கம்), நாட்டு மக்களிடம் அன்பு முதலிய குணங்களையும், பொறுக்க முடியாதிருக்கின்ற த்ருத்ராஷ்ட்ரன் பிள்ளைகளான துர்யோதனாதிகள் செய்த விஷம் கொடுத்தது முதலிய கொடுஞ் செயல்களும், இன்னும் அவர்கள் செய்ய நினைத்திருப்பதும் ஆகிய எல்லாவற்றையும் ப்ருதையும் (குந்தியும்), விதுரனும் அக்ரூரனுக்குச் சொன்னார்கள். ப்ருதை (குந்தி) முன்னமே தன் ப்ராதாவான அக்ரூரன்  வந்திருப்பதைக் கண்டு, அவனிடம் சென்று, பிறந்த அகத்தை நினைத்துக் கொண்டு, கண்ணும், கண்ணீருமாய் அந்த அக்ரூரனைக் குறித்து இவ்வாறு மொழிந்தாள்.

ப்ருதை சொல்லுகிறாள்:- நல்லியற்கையுடையவனே! என் தாய் தந்தைகளும், சகோதரர்களும், சகோதரிகளும், சகோதரர்களின் புத்ரர்களும், உறவுப் பெண்களும், தோழிகளும் எங்களை  நினைக்கின்றார்களா? எங்கள் ப்ராதாவாகிய வஸுதேவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தவனும், சரணம் அடையத் தகுந்தவனும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), பக்தர்களுடைய தோஷங்களைப் பாகையாகக் கொள்ளும் (பாகை - உபஹாரம்) தன்மையனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனும், தாமரைக்கண்ணனாகிய பலராமனும், அத்தையின் பிள்ளைகளான யுதிஷ்டிராதிகளை நினைக்கிறார்களா? 

செந்நாய்களிடையில் அகப்பட்ட மான் பேடை (பெண் மான்) போல், சத்ருக்களின் (எதிரிகளின்) இடையில் அகப்பட்டு வருந்துகின்ற என்னையும், தந்தையற்றவர்களான என் பிள்ளைகளையும், அந்த ராம, க்ருஷ்ணர்கள் வந்து, நல்வார்த்தைகளால் ஸமாதானப்படுத்துவார்களா? இவ்வாறு குந்தி அக்ரூரனைப் பார்த்து மொழிந்து, ஸ்ரீக்ருஷ்ணனை நினைத்து, புத்தியில் தோன்றுகிற அந்தப் பகவானை வேண்டுகிறாள்.  

ஸ்ரீக்ருஷ்ணா! எல்லாம் அறிந்தவனே! அறிஞர்களில் உனக்கு மேற்பட்டவர்கள் உண்டோ? அனைவர்க்கும் அந்தராத்மாவாயிருப்பவனே! எங்கள் வருத்தம் உனக்குத் தெரியவில்லையா? ஜகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இப்பூமியில் அவதரித்தவனே! குழந்தைகளுடன் வருத்தமுற்று உன்னையே சரணம் அடைகின்ற என்னைப் பாதுகாப்பாயாக.  

திங்கள், 25 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 264

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தெட்டாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் த்ரிவக்ரையின் க்ருஹத்திற்கும், அக்ரூரனுடைய மாளிகைக்கும் போய், அவர்களை அனுக்ரஹித்து, அக்ரூரனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்புதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அனந்தரம் (பிறகு), ஸர்வாந்தராத்மாவும், எல்லாவற்றையும் ஒரே ஸமயத்தில் ஸாக்ஷாத்கரிப்பவனுமாகிய பகவான், த்ரிவக்ரையென்னும் ஸைரந்த்ரி (அந்தப்புர பணிப்பெண்), அக்ரூரன் இவர்களுக்குத் தான் வருகிறேனென்று சொன்னதையும், அவர்களுடைய அபிப்ராயத்தையும் ஆராய்ந்து காம விகாரத்தினால் (காதல் கிளர்ச்சியால்) தபிக்கப்பட்ட (எரிக்கப்பட்ட) ஸைரந்த்ரிக்கு (அந்தப்புர பணிப்பெண்ணிற்கு) ப்ரியம் செய்ய விரும்பி, அவளுடைய க்ருஹத்திற்குச் சென்றான். அங்கு, வீட்டிற்கு வேண்டிய உபகரணங்கள் பலவும் விலையுயர்ந்து நிறைக்கப்பட்டிருந்தன. காம போகத்திற்கு (காதல் ஆசை அனுபவிக்க) வேண்டிய கருவிகள் பலவும் ஸம்ருத்தமாயிருந்தன (நிறைந்திருந்தன). மற்றும், அந்த க்ருஹம், முத்துமாலைகளாலும், த்வஜங்களாலும் (கொடிகளாலும்), மேற்கட்டுகள், படுக்கைகள், ஆஸனங்கள் இவைகளாலும், நல்ல மணமுள்ள தூபங்களாலும், அத்தகைய தீபங்களாலும், அத்தகைய பூமாலைகளாலும், கந்தங்களாலும் (வாசனை பொருட்களாலும்) பலவர்ணங்களால் எழுதப்பட்டு மிகவும் அழகாயிருப்பவைகளும், காம சாஸ்த்ரத்தில் (ஆண் பெண் உறவு பற்றிய சாஸ்த்ரத்தில்) நிரூபிக்கப்பட்டவைகளுமாகிய பலவகைச் சித்ரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

ஸ்ரீக்ருஷ்ணன், இத்தகையதான தன் மாளிகையைக் குறித்து வருவதைக் கண்டு, அந்த ஸைரந்த்ரி (அந்தப்புர பணிப்பெண்) மிகவும் பரபரப்புற்று, அப்பொழுதே ஆஸனத்தினின்று எழுந்து, ஸகிகளுடன் (தோழிகளுடன்) அவ்வச்சுதனை உரியபடி எதிர்கொண்டு, சிறந்த ஆஸனம் முதலிய உபசாரங்களால் பூஜித்தாள். பிறகு, உத்தவன் அந்த ஸைரந்த்ரியால் நன்றாகப் பூஜிக்கப்பட்டு, அவள் தனக்காகக் கொடுத்த ஆஸனத்தை ஸ்பர்சித்து (தொட்டு), வெறுந்தரையிலேயே உட்கார்ந்தான். ஸ்ரீக்ருஷ்ணனோ வென்றால், காமக் கலவியில் (காதல் சேர்த்தியில்) ஆழ்ந்த மனமுடைய உலகத்தவர்களின் நடத்தையை அனுஸரித்து, புதியதும், விலையுயர்ந்ததுமாகிய படுக்கையின் மேல் ஏறி உட்கார்ந்தான். 

அந்த ஸைரந்த்ரி (அந்தப்புர பணிப்பெண்), எண்ணெய் தேய்த்து, அரைப்பு முதலியன பூசி, ஸ்நானம் செய்து, வெண்பட்டாடை உடுத்து, ஆபரணங்களை அணிந்து, பூமாலைகள் சூட்டி, சந்தனம், குங்குமம் முதலிய கந்தங்கள் (வாசனைப் பொருள்) பூசித் தாம்பூலம் (வெற்றிலை பாக்கு), ஆஸவம் (திராட்சை ரஸம்) இவற்றால் வாய் மணக்க, அம்ருதம் போன்ற மேலான மத்யபானம் செய்து (கள் அருந்தி), மற்றும் பலவகைகளாலும் தன் தேஹத்தை அலங்கரித்துக் கொண்டு, வெட்கம் நிறைந்த மந்த ஹாஸம் (புன்னகை) அமைந்த விலாஸங்களோடு (விளையாட்டோடு) கூடிய, கண்ணோக்கங்களோடு கூடி ஸ்ரீக்ருஷ்ணனிடம் சென்றாள். புதிய கலவி (சேர்த்தி) ஆகையால் வெட்கமுற்று, சங்கித்து நிற்கின்ற அப்பெண்மணியை அழைத்து, வளையினால் அலங்கரிக்கப்பட்ட கையைப் பிடித்து, படுக்கையின் மேல் உட்கார வைத்துக் கொண்டு, சந்தனம் கொடுத்தமையாகிற சிறிது புண்யம் செய்த அப்பெண்மணியுடன் க்ரீடித்தான் (இன்புற்றான்).  

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

மங்கைக்காதலி - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

“மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!” என்று கூறினாள் சூடிக்கொடுத்தச் சுடர்கொடி. காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்பர் ஆன்றோர். மானுடத்தை காதலித்த கவிஞர் ஒரு கோடி என்றால் தெய்வத்திடம் ஆராக்காதல் கொண்ட தொண்டர்கள் பலகோடி சேரும். ஆண்டாள் போன்று ஆழ்வார்களில் திருமங்கைக் காதலியும் ஒருவர். அவளது மனம் ஆண்டவனின் அருளையே நாடி இருந்தது.


 ஒரு நாள் அரங்க மாளிகையின் நடுவே கருங்கடல் வண்ணனாய் கண்டோர் களிப்புறும் வகையில் அரிதுயில் அமர்ந்த ஆனந்தமூர்த்தியிடம் மையல் கொண்டு ஆராக்காதல் அடைந்து விட்டாள். எப்பொழுதும் ஒரே ஏக்கம். மனதிற்குள்ளே கம்பளிப் பூச்சிகள் நெளிவதைப்போன்று ஒரே கிறுகிறுப்பு. எங்கு நோக்கினும் எந்நேரத்திலும் தன் காதலனின் திருவுருவையேக் கண்டாள். காதல் பெருகிடின் கருத்தொழிந்து பித்துற்ற நிலையில் பேதுருளானாள்.


பறவைக் கூட்டம் ஒன்று வானவெளியில் பறந்து செல்வதை கண்டாள். அவைகளுடன் தன் பிரிவாற்றாமையை சொல்லி அழ அவள் எண்ணியிருக்க வேண்டும் மாறாக ஒருகால் அந்த பறவைக் கூட்டங்கள் தனக்கு உதவி புரிந்து தன் காதலனுடன் தன்னை சேர்த்து வைக்காதா என்ற ஏக்கமும் சேர்ந்திருக்கிறது.


செம்போத்து என்ற ஒரு பறவை உண்டு, காக்கை போன்ற உடலமைப்பு. ஆனால் அதன் இறகுகள் பொன்னிறமாயும் வண்ணம் கொள்பவை அவை. அந்த செம்போத்தை பார்த்து விளிக்கிறாள் திருமங்கை காதலி.


‘திருத்தாய் செம்போத்தே, திருமாமகள் தன்கணவன்,

மருத்தார்தொல்புகழ் மாதவனை வரத் திருத்தாய் செம்போத்தே.’மனமிகுந்த மாலையையணிந்த என் மாதவனை என்னிடம் வரும்படியாக சொல். தான் யாரிடம் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதை மறந்த அவள், அடுத்ததாக அங்கே பறந்து வந்த ஒரு காக்கையையை பார்த்து விளிக்கிறாள். காக்கைகள் கரைந்தால் யாராவது விரும்பிய விருந்தினர் வீட்டுக்கு வருவது என்பது பலர் நம்புவது உண்டு. அந்த நம்பிக்கை தோன்றவும் காகத்தைப் போன்ற கருமுகில் வண்ணன் என் காதலன் தொல்புகழ் உத்தமன் இங்கு என்னை காண காக்கையே கரைவாயாக என்று வேண்டுகிறாள்.

ஶ்ரீமத் பாகவதம் - 263

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தேழாவது அத்தியாயம்

(கோபிகைகளுக்கும், உத்தவனுக்கும் நடந்த ஸம்வாதத்தையும் (உரையாடலையும்), அவர்களுக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்திலுள்ள ப்ரேமாதியத்தையும் (அளவு கடந்த அன்பையும்) வர்ணித்தல்).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நீண்ட புஜ தண்டங்கள் (கைகள்) உடையவனும், அப்போதலர்ந்த செந்தாமரை இதழ் போன்ற கண்களுடையவனும், பொன்னிறமான ஆடை உடுத்தியிருப்பவனும், தாமரை மலர் மாலை அணிந்தவனும், தாமரை மலர் போல் திகழ்கின்ற முகமுடையவனும், நிர்மலமாய் விளங்குகின்ற குண்டலங்களுடையவனும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய ப்ருத்யனுமாகிய (சேவகனுமாகிய) அவ்வுத்தவனைக் கண்டு, பரிசுத்தமான புன்னகையுடைய கோபிகைகள் அனைவரும் “அழகிய காட்சியுடையவனும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய வேஷம் போன்ற வேஷமுடையவனுமாகிய இப்புருஷன் யாவன்? எங்கிருந்து வந்தான்? யாருடையவன்” என்று மொழிந்து கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களையே பணியும் தன்மையனான அவ்வுத்தவனை ஆவலுடன் சூழ்ந்துகொண்டார்கள். அந்தக் கோபிகைகள், வெட்கத்தோடு கூடின மந்தஹாஸத்தினாலும் (புன்னகையாலும்), கண்ணோக்கத்தினாலும், இனிய உரையினாலும், அர்க்யம் முதலிய மற்றும் பல உபசாரங்களாலும், அவ்வுத்தவனை நன்றாக அர்ச்சித்து, ஏகாந்தத்தில் (தனி இடத்தில்) ஆஸனம் அளித்து, ஸுகமாக உட்காரச்செய்து, ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனான ஸ்ரீக்ருஷ்ணனிடத்தினின்று ஸமாசாரம் (செய்தி) கொண்டு வந்தவனென்று தெரிந்துகொண்டு, நமஸ்காரம் செய்து, வணக்கத்துடன் மேல்வருமாறு வினவினார்கள்.

கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- நீ, யாதவர்களுக்கு ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய ப்ருத்யனென்றும் (சேவகன் என்றும்), அவனிடத்தினின்று ஸமாசாரம் (செய்தி) கொண்டு வந்தவனென்றும் நாங்கள் தெரிந்து கொண்டோம். ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தாய், தந்தைகளான யசோதா, நந்தர்களுக்கு ப்ரியம் செய்ய விரும்பி, உன்னை இவ்விடம் அனுப்பினான். இல்லாத பக்ஷத்தில், அவாப்த ஸமஸ்த காமனாகிய (விரும்பியது அனைத்தும் அடையப்பெற்றவனான) அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நிஹீனமாகிய (மிகவும் தாழ்ந்ததான) இந்தக் கோகுலத்தில் நினைக்கத்தகுந்த வஸ்துவொன்று இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. தாய், தந்தை முதலிய பந்துக்களிடத்தில் உண்டாகும் ஸ்னேஹமாகிற பாசத்தை எத்தகைய முனிவனாலும் கூடத் துறக்க முடியாதல்லவா? (ஆகையால் அவன் தாய் தந்தைகளிடம் நல்வார்த்தை சொல்லும் பொருட்டே உன்னை அனுப்பியிருக்க வேண்டுமன்றி வேறில்லை). 

பந்துக்களைத் தவிர மற்றவரிடத்தில் உண்டாகும் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) ப்ரயோஜனத்தைப் பற்றினது (ஒரு பலனைக் கருதி ஏற்படுவது). அந்த ப்ரயோஜனம் (பலன்) கைகூடும் வரையில் மாத்ரமே ஸ்னேஹித்திருப்பது (நட்புடன் இருப்பது) போலப் பாவிப்பார்கள். பரபுருஷனை (கணவனைத் தவிர வேறு ஆண்மகனைப்) புணரும் தன்மையுள்ள பெண்களிடத்தில் புருஷர்களின் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) போலவும், தேன் நிறைந்த புஷ்பங்களில் வண்டுகள் செய்யும் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) போலவும், ப்ரயோஜனத்தைப் பற்றி (ஒரு பலனைக் கருதி) வரும் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) உண்மையன்று. பணமில்லாதவனை விலைமாதர்களும் (வேசிகளும்), ரக்ஷிக்கும் திறமையற்ற மன்னவனை ப்ரஜைகளும், வித்யையைக் கற்ற சிஷ்யர்கள் ஆசார்யனையும், தக்ஷிணை கொடுத்த யஜமானனை ருத்விக்குகளும், பழங்கள் மாறின வ்ருக்ஷத்தைப் (மரத்தை) பக்ஷிகளும், போஜனம் (உணவு) அளித்தவனுடைய க்ருஹத்தை அதைப் புசித்த அதிதிகளும், நெருப்பு பற்றி எரிந்த அரண்யத்தை (காட்டை) ம்ருகங்களும் (விலங்குகளும்), அன்புடன் தொடர்கின்ற மாதைப் (பெண்ணை) புணர்ச்சி கூடப் பெற்ற (சேர்ந்து அனுபவித்த) கள்ளக் காதலனும் துறக்கின்றார்களல்லவா? ஆகையால், ப்ரயோஜனத்தைப் பற்றி (ஒரு பலனைக் கருதி) வரும் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) ப்ரயோஜனம் (பலன்) கைகூடும் வரையில் மாத்ரமே இருக்குமேயன்றி அதற்குமேல் தொடராது.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 262

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தாறாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் உத்தவனைக் கோகுலத்திற்கு அனுப்பி நந்தகோப, யசோதைகளையும், கோபிகைகளையும் ஸமாதானப்படுத்துதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மதுரையில் உத்தவனென்பவன் ஒருவன் உளன். அவன் வ்ருஷ்ணிகளில் (ஸ்ரீக்ருஷ்ணன் அவதரித்த குலம்) சிறந்தவன்; ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ப்ரியமுள்ள நண்பனும், மந்திரியுமாயிருப்பவன்; ப்ருஹஸ்பதிக்கு நேரே சிஷ்யன்; இயற்கையாகவே புத்தியுடையவர்களில் சிறந்தவன்; மிகவும் புகழத்தகுந்தவன்; ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மாறாத பக்தியுடையவன். தன்னை சரணம் அடைந்தவர்களின் மன வருத்தங்களைப் போக்கும் தன்மையுள்ள ஸ்ரீக்ருஷ்ணன், அவனை ஒருகால் ரஹஸ்யத்தில் அழைத்து, தன் கையினால் அவன் கையைப் பிடித்துக் கொண்டு இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- நல்லியற்கையுடையவனே! உத்தவா! நீ கோகுலத்திற்குப் போய் எங்கள் தாய் தந்தைகளாகிய நந்தகோப, யசோதைகளுக்கும், கோபிகைகளுக்கும் ப்ரீதியை விளைப்பாயாக. என்னைப் பிரிந்தமையால் உண்டான அவர்களுடைய மன வருத்தத்தை என் வார்த்தைகளால் போக்குவாயாக. கோபிகைகள் என்னிடத்திலேயே  நிலைநின்ற மனமுடையவர்கள்; என்னையே ப்ராணனாக (உயிராக) உடையவர்கள்; எனக்காகத் தேஹ (உடலைப்) போஷணத்தைத் (பராமரிப்பதைத்) துறந்தவர்கள்; மன இரக்கமுடையவனும், மிகுந்த அன்பனும், அந்தராத்மாவுமாகிய என்னையே எப்பொழுதும் மனத்தினால் சரணம் அடைந்திருப்பவர்கள். “எவர்கள் எனக்காக லோக தர்மங்களையெல்லாம் துறந்திருப்பவர்களோ, அவர்களை நான் போஷிப்பது வழக்கமாகையால், நீ கோகுலத்திற்குச் சென்று, என்னுடைய வார்த்தைகளால் கோபிகைகளின் மன வருத்தத்தைப் போக்குவாயாக.” 

உத்தவனே! அந்தக் கோபிகைகள், ப்ரீதிக்கிடமானவைகள் எல்லாவற்றிலும் மிகவும் ப்ரீதிக்கிடமாகிய நான் தூரத்தில் இருப்பினும், என்னையே நினைத்துக் கொண்டு, என்னைப் பிரிந்திருக்கையால் என்னைக் கண்டு அனுபவிக்க வேணுமென்னும் பேராவலுற்று, அதனால் தழதழத்து, மெய்மறந்து, மோஹித்திருப்பார்கள். நான் கோகுலத்தினின்று புறப்பட்டு வரும்பொழுது, “சீக்கிரத்தில் திரும்பி வருகிறேன்” என்று சொல்லியனுப்பின வார்த்தைகளை நம்பி, என்னுடையவர்களான கோபிகைகள், என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்தி, விரஹ தாபத்தினால் தஹிக்கப்பட்டவர்களாகவே மிகவும் வருத்தத்துடன் பெரும்பாலும் ப்ராணன்களைத் (உயிரைத்) தரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், அவர்களை அவச்யம் ஸமாதானப்படுத்த வேண்டும்.

வியாழன், 21 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 261

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்து ஐந்தாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன்  தாய் தந்தைகளை ஸமாதானப்படுத்தி, உக்ரஸேனனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து, உபநயனம் செய்யப்பெற்று, ஸாந்தீபனியிடம் வித்யா அப்யாஸம் செய்து (கல்வி கற்று), குரு தக்ஷிணை கொடுத்து மீண்டு வருதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- புருஷோத்தமனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், சிறந்த புருஷார்த்த ஸ்வரூபனாகிய தன்னுடைய உண்மையைத் தன் தாய் தந்தைகள் தெரிந்து கொண்டிருப்பதை அறிந்து, அவர்களுக்கு அத்தெளிவு தொடர்ந்து வரலாகாதென்று நினைத்து, ஜனங்களையெல்லாம் மதிமயங்கச் செய்வதாகிய தன் மாயையைப் பரப்பினான். பிறகு, ஸ்ரீக்ருஷ்ணன் தமையனுடன் தாய் தந்தைகளிடம் சென்று, வினயத்தினால் வணங்கி, ஆதரவுடன் “அம்மா! அண்ணா!” என்று மொழிந்து மனக்களிப்புறச் செய்து கொண்டு மேல்வருமாறு கூறினான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- அண்ணா! நீங்கள் எங்கள் விஷயத்தில் என்றும் ஆவலுற்றிருப்பினும், உங்கள் புதல்வர்களாகிய எங்கள் பால்யம், பௌகண்டம், கைசோரம் முதலிய

(பால்யம் - ஐந்து வயது வரையில். பௌகண்டம் - அதற்குமேல் பத்து வயது வரையில். கைசோரம் - அதற்கு மேல் பதினைந்து வயதுவரையில் என்றுணர்க. ஐந்துக்கு மேல் ஒன்பது வரையில் பௌகண்டம். அதற்குமேல் பதினாறுவரையில் கைசோரமென்று சிலர். இவ்விஷயம் பதினைந்தாவது அத்யாயத்தின் முதல் ச்லோக வ்யாக்யானத்தில் முனிபாவப்ரகாசிகையில் காண்க.) 

இளம்பருவங்களெல்லாம் உங்களுக்கெட்டாத ஏதோ ஒரு இடத்தில் கடந்து போயின. பாக்யமற்றவர்களாகையால், நாங்கள் இதுவரையில் உங்களருகாமையில் வாஸம் செய்து வளரப்பெற்றிலோம். இளம்பிள்ளைகள், தாய் தந்தைகளின் க்ருஹத்தில் இருந்து, அவர்களால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்துச் சீராட்டப் பெற்று, எத்தகைய ஸந்தோஷத்தை அடைவார்களோ, அத்தகைய ஸந்தோஷத்தை நாங்கள் அடையப்பெற்றிலோம். 

தர்மம் முதலிய ஸமஸ்த புருஷார்த்தங்களுக்கும் விளை நிலமாகிய தேஹத்தைப் (உடலைப்) படைத்து, வளர்த்தவர்களான தாய் தந்தைகள் விஷயத்தில் பட்ட கடனை நூறாண்டுகள் சுஷ்ரூஷை (பணிவிடை) செய்யினும் தீர்த்துக்கொள்ள வல்லவனாக மாட்டான். எவன், தான் ஸமர்த்தனாயிருந்தும், அந்தத் தாய் தந்தைகளுக்குத் தேஹத்தினாலும், தனத்தினாலும், ஜீவனத்தைக் கல்பிக்காது போவானோ, அவன் லோகாந்தரம் (வேறு உலகம்) போகையில், யமதூதர்கள் அவனைத் தன் மாம்ஸத்தைத் தானே புசிக்கச் செய்வார்கள்; இது நிச்சயம்.