அதிகப் பார்வை

ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் - கோமான் ஶ்ரீ பாலாஜி


ஞானானந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம் |

ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே ||

ஞானமும் ஆனந்தமும் நிறைந்தவரும், மாசற்ற ஸ்படிகம் போன்ற திருமேனி உடையவரும், அனைத்து வித்யைகளுக்கும் ஆதாரமாக விளங்குபவருமான ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானை நாம் தியானிக்கிறோம். பெருமாளின் அவதாரங்களை நினைத்துப் பார்க்கும்போது, உடனே நம் நினைவுக்கு வருவது தசாவதாரங்கள்தான். ஆனால் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்கள் அவ்வளவோடு முடிந்துவிடுவதில்லை. உலகில் தர்மத்தை நிலைநாட்டவும், தம் அடியார்களின் துயரத்தைப் போக்கவும், மறைந்த உண்மைகளை மீண்டும் நிலைநாட்டவும், பகவான் எண்ணற்ற வடிவங்களில் அவதரித்திருக்கிறார். அவற்றுள் மிகவும் விசேஷமானது ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம். ஹயக்ரீவர் என்ற திருநாமத்தைச் சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது கல்வியும் ஞானமும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று பெற்றோர் அவரை வணங்குகிறார்கள். வேதம், வேதாந்தம் பயிலுபவர்கள் அவரைத் தங்கள் உபாஸனா மூர்த்தியாகக் கொண்டாடுகிறார்கள். ஆசார்யர்களும் மகான்களும் அவருடைய திருவருளைப் பெற்றே தங்கள் ஞானப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஹயக்ரீவர் ஏன் ஞானத்தின் தெய்வமாகப் போற்றப்படுகிறார்? அதற்குப் பின்னால் ஒரு அழகான அவதார ரகசியம் இருக்கிறது. சதுர் யுகத்தின் ஆரம்பத்தில் உலகப் படைப்பின் பொறுப்பு நான்முகனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஸ்ரீமன் நாராயணனின் நாபிக்கமலத்தில் தோன்றிய நான்முகனுக்கு வேதங்களே படைப்புப் பணிக்கான வழிகாட்டியாக இருந்தன. அந்த வேத ஞானத்தைப் பெருமாளிடமிருந்து பெற்றுக்கொண்டு, தமது நான்கு முகங்களாலும் வேதங்களை ஓதியபடி படைப்புத் தொழிலை மேற்கொண்டிருந்தார். வேதங்களின் அந்த ஒலி, தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மட்டுமல்லாமல், மூன்று உலகங்களிலும் ஒரு புனிதமான அதிர்வாகப் பரவிக் கொண்டிருந்தது. அப்போது மது, கைடபன் என்ற இரு அசுரர்கள் அந்த வேத ஒலியைக் கேட்டார்கள். அவர்களுக்கு ஞானத்தின் மீது பக்தி பிறக்கவில்லை. மாறாக, அதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது. வேதங்களைப் பறித்துக்கொண்டு இருவரும் பாதாள உலகத்தின் ஆழத்திற்குச் சென்று மறைந்தனர். வேதங்கள் இல்லாமல் நான்முகனால் படைப்புப் பணியைத் தொடர முடியவில்லை. தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற முடியாத நிலையில், அவர் பெரும் கவலையடைந்தார். அப்போது அவர் வேறு யாரையும் நாடவில்லை. வேதங்களுக்கே ஆதாரமான அந்த ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளையே சரணடைந்தார். மனமுருகிப் பெருமானைத் துதித்தார். “எம்பெருமானே! உன்னிடமிருந்து பெற்ற வேத ஞானமே இப்போது என்னிடம் இல்லை. அந்த ஞானம் இல்லாமல் எனது கடமையை என்னால் செய்ய முடியவில்லை. நீயே எனக்கு வழிகாட்ட வேண்டும்” என்று பிரார்த்தித்தார். நான்முகனின் வேண்டுதலைக் கேட்ட பெருமாளின் திருவுள்ளம் கனிந்தது. அப்போது நிகழ்ந்ததுதான் உலகமே வியக்கும் அந்தத் திருவவதாரம். ஸ்ரீமன் நாராயணன் ஓர் அபூர்வமான திவ்யத் திருமேனியுடன் வெளிப்பட்டார். மாசற்ற ஸ்படிகம் போன்ற வெண்மையான திருமேனி. நான்கு திருக்கரங்கள். முகத்தில் அளவற்ற கருணை. அந்தத் திருமேனியின் சிறப்பு — குதிரை முகம். அவரே ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள். மனித உடலில் குதிரையின் தலையைப் பொருத்திய வடிவம் என்று எண்ண வேண்டியதில்லை. அவர் பரம்பொருளின் திவ்யமான வெளிப்பாடு. மகாபாரதத்தில் வரும் ஹயசிரோபாக்யானமும் இந்த ஹயக்ரீவ ஸ்வரூபத்தின் உயர்வை எடுத்துரைக்கிறது. ஆசார்யர்கள், ஹயக்ரீவர் ஸ்ரீமன் நாராயணனின் வ்யூஹ ஸ்வரூபமான அனிருத்தருடன் தொடர்புடைய பரம திவ்ய வடிவம் என்று விளக்குகின்றனர். அந்தத் திருமேனியைப் பார்த்தவுடன், நான்முகனின் மனத்தில் இருந்த கவலை அகன்றது. வேதம் எங்குச் சென்றிருந்தாலும், வேதங்களுக்கு ஆதாரமான பெருமாள் தம்முன் நிற்கிறார். ஹயக்ரீவப் பெருமான் மதுவும் கைடபனும் மறைந்திருந்த பாதாள உலகத்தை நோக்கிப் புறப்பட்டார். அசுரர்களுக்கும் பெருமானுக்கும் இடையே போர் நடைபெற்றது. தங்கள் வலிமையின் மீது பெருமை கொண்டிருந்த அந்த இருவராலும் பகவானின் முன் நிற்க முடியவில்லை. இறுதியில் மதுவும் கைடபனும் அழிக்கப்பட்டனர். அவர்கள் பறித்துச் சென்ற வேதங்கள் மீண்டும் பெருமானால் மீட்கப்பட்டன. வேதங்களை எடுத்துக்கொண்டு நான்முகனிடம் திரும்பிய ஹயக்ரீவப் பெருமாள், அவற்றை மீண்டும் அவரிடம் அருளினார். வேதங்களோடு பாஞ்சராத்திரம் முதலான சாஸ்திரங்களின் அர்த்தங்களையும் உபதேசித்தார். மதுவும் கைடபனும் அழிக்கப்பட்ட இந்த நிகழ்விற்குள்ளும் ஒரு பெரிய தத்துவம் மறைந்திருக்கிறது. மது தமோகுணத்தையும், கைடபன் ரஜோகுணத்தையும் பிரதிபலிப்பதாக ஆசார்யர்கள் விளக்குகின்றனர். தமஸ் ஞானத்தை மறைக்கிறது. ரஜஸ் மனதை அமைதியில்லாமல் அலைக்கழிக்கிறது. இவ்விரண்டையும் கடந்து சத்துவம் மேலோங்கும்போதுதான் உண்மையான ஞானம் உள்ளத்தில் மலரத் தொடங்குகிறது. அந்த சத்துவத்தின் பரிபூரண வடிவமாகவே ஹயக்ரீவப் பெருமானின் அவதாரத்தைப் புரிந்துகொள்ளலாம். அதனால்தான் அவருடைய திருமேனி பளிங்குபோலத் தூய வெண்மையாகக் காட்சியளிக்கிறது. அவரது குதிரை முகமும் ஒரு ஆழமான பொருளைக் கொண்டது. அவரது குரல் சாதாரணமான ஒலி அல்ல; அது வேதங்களின் ஆதிநாதமான பிரணவத்தை நினைவூட்டுகிறது. அவருடைய திருமேனியின் ஒவ்வொரு உறுப்பிலும் வேதங்களின் மகிமையும் பிரபஞ்சத்தின் தத்துவமும் அடங்கியிருப்பதாக ஹயசிரோபாக்யானம் விரிவாக எடுத்துரைக்கிறது. இவ்வாறு வேதங்களை மீட்டருளிய ஹயக்ரீவர், காலம் கடந்தும் ஞானத்தை நாடுபவர்களின் தெய்வமாகத் திகழ்ந்து வருகிறார். வேதவியாசர் அவருடைய மகிமையைப் பாடியுள்ளார். ராமானுஜர், வேதாந்த தேசிகர் போன்ற ஆசார்யர்களின் பரம்பரையிலும் ஹயக்ரீவப் பெருமானுக்குச் சிறப்பான இடம் உண்டு. குறிப்பாக ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஹயக்ரீவ பக்தி மிகவும் பிரசித்தமானது. கருடாழ்வாரிடமிருந்து ஹயக்ரீவ மந்திர உபதேசம் பெற்று, பெருமானின் அருளால் எண்ணற்ற நூல்களை உலகிற்கு அளித்தார் என்று ஆசார்ய பரம்பரை போற்றுகிறது. அவர் அருளிய ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தின் ஒவ்வொரு வரியிலும், “எனக்குக் கல்வி வேண்டும்” என்ற வேண்டுதலைவிட உயர்ந்த ஒரு பிரார்த்தனையை நாம் காண்கிறோம். அறியாமை நீங்க வேண்டும். உண்மையான ஞானம் மலர வேண்டும். பகவத் அனுபவம் கிடைக்க வேண்டும். இதுதான் ஹயக்ரீவ உபாஸனையின் உண்மையான நோக்கம். ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் எழுந்தருளியிருக்கும் ஹயக்ரீவப் பெருமானை நாம் தரிசிக்கும்போது, ஞானமும் மங்களமும் ஒன்றாக இணைந்திருப்பதைப் பார்க்கிறோம். திருமகள் உடனிருந்து அருளும் பெருமாள் என்பதால் அவர் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர். அவருடைய திருவடிகளைப் பற்றிக்கொண்டு நாம் கேட்க வேண்டியது உலகியல் அறிவு மட்டும் அல்ல. “எம்பெருமானே! அறியாமை என்னும் இருளிலிருந்து என்னை வெளியே கொண்டு வா. உண்மையை அறியும் புத்தியைத் தா. ஆசார்யர்களின் திருவடிகளில் நிலையான பக்தியைத் தா. இறுதியில் உன் திருவடிகளை அடையும் ஞானத்தைத் தா” என்பதே அந்தப் பிரார்த்தனையாக இருக்க வேண்டும். அத்தகைய ஞானத்தை அருளும் ஹயக்ரீவப் பெருமானை நினைத்து, ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய அந்த மங்களமான வேண்டுதலுடன் நாம் நிறைவு செய்வோம். நமஸ்த்ரேதாவிபக்தானாம் ஆத்மனாம் அந்தராத்மனே | ப்ரஹ்மணே ஹயவக்த்ராய பந்தமோக்ஷைகஹேதவே || மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட (அதாவது பத்த, முக்த, நித்ய என்ற பிரிவுகளில்) அனைத்து ஜீவராசிகளுக்கும் அந்தர்யாமியாக இருப்பவரே! ஹயமுகம் கொண்ட பரப்பிரம்மமே! சம்சாரப் பந்தத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரே காரணமான பெருமானே! உமக்கு நமஸ்காரம். ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவப் பெருமானின் திருவடிகளே சரணம். (படம் - லக்ஷ்மி ஹயக்ரீவர் - பரகால மடம்)

Post a Comment

புதியது பழையவை