அதிகப் பார்வை

திருமங்கையாழ்வார் போற்றும் திருமலை (பகுதி - 1) - முனைவர் இரா.வ. கமலக்கண்ணன்


மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 திவ்விய தேசங்களாகும். கார்த்திகையில் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்த திருமங்கையாழ்வார் மட்டும் 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவற்றுள் திருமலையைப் பற்றிய அவரது பாசுரக் கருத்துக்களைச் சிந்திப்போம். பெரிய திருமொழியில் முதற் பத்து எட்டாம் திருமொழி முதல் இரண்டாம் பத்து முதல் திருமொழி முடிய 40 பாசுரங்களால் முழுமையாகத் திருமலையை மங்களாசாசனம் செய்கிறார். பாசுரக் கருத்துக்களைத் தொகுத்து நோக்குவோம்.


....புராணர் தம்மிடம் பொங்குநீர்ச்

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே! - 1:8:1


வேங்கடம் வடநாட்டுத் திருப்பதிகளுள் முதலானது. "பெருமாள் எழுந்தருளி இருக்குமிடம், நீரில் கயல்மீன்கள் களித்து வாழும் சுனைகளை உடையது திருமலை ஆகும். அத்திருமலையை மனமே! அடைவாயாக!" என ஆற்றுப்படுத்துகிறார்.


“...தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே!" - 1:8:2 


"இறைவனைத் தவிர வேறு பயனை வேண்டாதவர் நாளும் வழிபடும் மலையான திருமலையை மனமே! அடைவாயாக!"


"...ஆநிரைக்கு இடர்நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே!" - 1:8:3


பசுக்கூட்டங்களின் துன்பங்களை நீக்குவதற்காக கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த பெருமான் எழுந்தருளியுள்ள திருமலையை, மனமே! சென்றடைவாயாக. முதல் ஆழ்வார்களும் திருமலையில் சேவை சாதிக்கும் பெருமான் கண்ணபிரானே! என்று போற்றியுள்ளனர்.


“...தீர்த்த நீர்த் தடஞ்சோலை சூழ்

திருவேங்கடம் அடை நெஞ்சமே!" - 1:8:4 


தூய நீராலும் சோலைகளாலும் சூழப்பட்ட திருமலையை, நெஞ்சமே! அடைவாயாக. எல்லா வளமும் நிறைந்த நீர் வளத்தை உடையதாய், அயர்வு அகற்றும் சோலைகளால் சூழப்பட்ட திருமலை என்க.


"...திண் கைம் மாதுயர் தீர்த்தவன்

திருவேங்கடம் அடை நெஞ்சமே!" - 1:8:5


கஜேந்திரன் என்னும் யானையினது துன்பத்தைப் போக்கிய பெருமான் எழுந்தருளியுள்ள திருமலையை, நெஞ்சே! அடைவாயாக. அவ்யானை தளர்ந்து ஓயும் வரை பார்த்திருந்து, பிறகு காலம் கழிந்து வந்து உதவிய குறை தீர அடியார்க்கு முன்னதாக உதவுவதற்காகவே வந்து இருக்குமிடம் திருமலை ஆகும்.


...திண் திறல் அரியாயவன் திருவேங்கடம்

அடை நெஞ்சமே!" - 1:8:6


வலிய நரசிங்க வடிவான பெருமான் எழுந்தருளியுள்ள இடம் திருமலை ஆகும். அதை நெஞ்சமே! சென்றடைவாயாக.


பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான் 

பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம் 

காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோரு மாமுகில் தோய்தர

சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே!" - 1:8:7


மண், நீர், தீ, காற்று, வானம் என்னும் ஐம்பெரும் பூதங்களாய் இருப்பவனும், 1000 திருநாமங்களால் சொல்லப்படுபவனும், வினை காரணமாக வரும் பிறப்பில்லாதவனுமாகிய பெருமான் வளர்கின்ற இடம், வானத்தினின்று மழை நீரும், பனித்துளியும் சொரிய, பெரிய மேகங்கள் படியுமாறு உயர்ந்த சோலைகளாலே சூழப்பட்டு அழகுள்ள திருமலையை நெஞ்சே! அடைவாயாக, ஐம்பெரும் பூதங்களைச் சொன்னதால், உலகமே பெருமானின் திருமேனியாய் இருப்பது சொல்லப்பட்டது.


...கொம்பினன்ன இடைமடக்குறமாதர் நீள் இதணந்தொறும்

செம்புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே!" - 1:8:8


திருமலையில் உயர்ந்த பரண்களிலிருந்து குறப்பெண்கள் கொல்லை நிலங்களைக் காவல் செய்து கொண்டு இருப்பர். அப்படிப்பட்ட திருமலையை அடைவாயாக.


"பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நின்று பின்னரும்

பேசுவார் தமை உய்ய வாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம் 

வாசமாமலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக்கெலாம் 

தேசமாய்த் திகழும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே!" - 1:8:9


நாவுக்கு இனிய திருநாமம் திருஎட்டெழுத்தாகும். அதை ஒருமுறை கூறி, மீண்டும் அதையே சொல்வோரை ஈடேறும்படி ஏற்று, அவர்களுடைய பிறவித் தொடர்பை நீக்கும் பெருமான் கோயில் கொண்டு இருக்கும் இடம், மலர்கள் மணம் வீசும் சோலைகளால் சூழப்பட்டதும், எல்லா உலகுக்கும் ஒளியாய் விளங்குவதுமாகிய திருமலையை அடைவாயாக.


“செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடத்து உறை" - 1:8:10


"செல்வனைக்குறித்துத் திருமங்கையாழ்வார் பாடியுள்ள தமிழ்ப் பாசுரங்களை ஐயமின்றிக் கற்றுச் சொல்ல வல்லவர்கள் இவ்வுலகுக்கு அரசராகிப் பின் திருநாட்டையும் ஆளப் பெறுவர்" என்று பலன் கூறி முடிக்கிறார். "திருமலையை அடைவாயாக" என்று ஆழ்வார் கூறிய அறிவுரைப்படி (அவரும் அவர் நெஞ்சமும் அடைந்தது. ஆயினும் எம்பெருமான் காட்சியளிக்கவில்லை.


"பெருமானே! யான் உம் அடிமை; என் குற்றங்களைப் பொறுத்து அடியேனை ஆட்கொள்ள வேண்டும். இது தான் "வாணிலா முறுவல்" (1:6) என்னும் திருமொழியில் ஆழ்வார் கூறியதன்றோ? எனின், மென்மையானோர் பலமுறை நீரை அள்ளி வெயில் காலத்தில் முகத்தில் இட்டுக்கொள்வது போல, இவரும் மீண்டும் தஞ்சம் புகுகிறார்.


"மூங்கில்கள் நிறைந்து, சோலைகள் சூழ்ந்து, மணம் வீசும் திருமலையிலே எழுந்தருளியுள்ள பெருமானே! உறவு அல்லாதவரை உறவாக எண்ணித் துன்பப் பட்டேன். நாயினும் இழிந்த யான் உன்னை வணங்க வேண்டித் தஞ்சம் புகுந்தேன். அடியேனைக் குளிர நோக்கி அடிமை கொண்டருளுக


"தாயே தந்தையென்றும்... கொண்டருளே" - 1:9:1


“தாய், தந்தை, தம்பி, இருப்பிடம், பாதுகாப்பு, நண்பன், புகல் என்னும் எல்லாம் நாராயணனே ஆவான்" என்பது சுபாலோபநிடதம். எம்பெருமான் வினை வயப்படாதவனாய், திருநாட்டிலே அயர்வறும் அமரர்களுக்கு ஓலக்கம் கொடுப்பவனாய் இருப்பவன்.


அத்தகையவன் குழந்தை விழுந்த கிணற்றிலே ஒக்க விழுந்து எடுக்கும் தாயைப் போல, உயிர்கள் வருந்தும் இவ்வுலகில் வேங்கடத்தில் வந்திருக்கிறான். இது உயிர்களைக் காப்பதற்கே ஆகும்.


"வண்டுகள் நிறைந்த மலர்கள் உள்ள சோலைகளாலே சூழப்பட்ட திருமலையில் எழுந்தருளியுள்ள என்னுடைய ஆனை போன்ற பெருமானே! நான் பல தீவினைகளைச் செய்து நரகம் புகத்தக்கவனானேன். உன்னை அடைந்து உன் திருவடிகளை அடைக்கலமாகப் பற்றினேன். அடியேனை ஆட்கொண்டருள வேண்டும்!


"மானேய் கண்மடவார்... ஆட்கொண்டருளே" - 1:9:2 


மேகங்கள் முழங்கும் குளிர்ச்சியும் பெருமையும் உடைய திருமலையில் எழுந்தருளி இருப்பவனே! குறிக்கோள் இல்லாமல் நான் பலரைக் கொலை செய்தேன். யாசகர்களுக்கு இன்சொல் சொன்னதில்லை. உன்னைக் கிட்டிப் பற்றினேன். அடியேனை ஆட்கொண்டருள்க.


"கொன்றேன்… ஆட்கொண்டருளே...." - 1:9:3


"மண்ணில் படிந்த பெரிய மேகக் கூட்டங்கள் சேர்ந்திருக்கும் வழிகள் நிறைந்த திருமலையில் எழுந்தருளியுள்ளவனே! நான் பல குலங்களில் பிறந்து இறந்து கெட்டேன்; நற்செயல் எதுவும் செய்யவில்லை. அத்தகைய நான் உன் திருவடியைப் பற்றினேன்; அடியேனை ஆட் கொண்டருள்க!"


“குலந்தான்... ஆட்கொண்டருளே"- 1:9:4


"பாதுகாப்பாக அமைந்த வலிய மலைகளால் சூழப்பட்ட திருமலையில் கோயில் கொண்டுள்ள பெருமானே! என் தந்தையே! நான் பல பாவங்களைச் செய்து இளைத்து விட்டேன். உன் திருவடிகளை போற்றவும் ஆற்றல் உடையவன் அல்லேன். அடியேனை ஆட்கொண்டருள்க!


“எப்பாவம்… ஆட்கொண்டருளே" - 1:9:5


எப்பாவம். 5 பெரும் பாவங்கள்: கொலை, கள் குடித்தல், பசுவைக் கொல்லல், அந்தணரைக் கொல்லல், பிறர் மனை விரும்பல்.


"வானளாவிய சிகரங்களைக் கொண்ட திருமலையில் எழுந்தருளி இருப்பவனே! ஐம்பூதங்களால் ஆன, புண் நிறைந்த உடலில் அகப்பட்டு மெலிந்து இளைத்தேன். உன் திருவடிகளைத் தஞ்சம் புகுந்தேன்; ஆட்கொண்டருள்க"


“மண்ணாய் நீர்... ஆட்கொண்டருளே" - 1:9:6


"யானைகள் சேர்ந்திருக்கும் பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருமலையில் எழுந்தருளியுள்ளவனே! நான் சிறுவனாக இருந்த போது பல கொடிய செயல்களைச் செய்தேன். பின் மற்றவர்க்காகப் பாடுபட்டுக் கெட்டேன். உன் திருவடிகளைத் தஞ்சம் புகுந்தேன். ஆட் கொண்டருள்க" (1:9:7).


"மரக்கொம்புகளிலிருந்து தேன் பெருகி ஒழுகும் குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட திருமலையில் கோயில் கொண்டுள்ள பெருமானே! பல பிறவிகள் ஏற்படுமாறு வினைகளைச் செய்து வைத்தேன். பெரிதும் துன்புற்றேன். உன்னைக் காண வேண்டி இப்பிறப்பில் உனக்குத் தக்கவன் ஆனேன். உன் திருவடிகளை அடைந்தேன். ஆட்கொண்டருள்க" (1:9:8). 


சோலைகளில் கட்டிய தேன் கூட்டிலிருந்து தேன் வழிவது போல மிகவும் நீசனான என்னிடம் உன் திருவருள் பாய்ந்துள்ளது. அதனால் வந்தடைந்தேன்."ஆச்சரியமான பண்புகளை உடை யவனே! திருமகள் கணவனே! மலைக்குகைகளில் தேன் பெருகிச் சுனைகளில் புக, அங்கே தாமரை மலரும்படியான திருமலையில் வாழ்பவனே! நான் பற்றுக்கோடு இல்லாதவன் நான் பாவமே செய்து பாவியானேன். வேறு வழி ஏதும் அறியாதவன்; இவ்வாறு இருந்தும் உன் திருவடிகளை அடைந்தேன். ஆட்கொண்டருள்க. 


"பற்றேல்... ஆட்கொண்டருளே" - 1:9:9


"யான் குற்றங்களுக்கு ஓர் இருப்பிடமாய் உள்ளேன்; என்னைக் காத்துக் கொள்ள ஒரு வழியும் அற்றவனாய் உள்ளேன்" (அஹிர்புத்ய சம்ஹிதை 37:10).


"ஏழுலகுக்கும் கண் போல, உயிர் போல அமைந்த மேக வண்ணன்; அமரர் வந்து வழிபடும் திருமலையில் உறைபவன்; வேதத்தால் போற்றப்பெறும் பெருமானைக் கலியன் அருளிய இப்பத்து பாசுரங்களையும் ஓதுவோர்க்குத் தீவினை இல்லையாம்."


“கண்ணாய்.... பாவங்களே" -1:9:10


தொடரும்…


நன்றி - சப்தகிரி டிசம்பர் 2019


Post a Comment

புதியது பழையவை