வரதன்: (சிந்தனையுடன்) ரங்கா, பெரிய பெரிய மகான்கள் எல்லாம் கடவுளை நேரில் கண்டதாகச் சொல்கிறார்களே! அவர்கள் கண்டது கனவா, நனவா என்று தெரியாது. ஆனால் நாமோ தினமும் கோயிலுக்குப் போகிறோம், பெருமாள் சேவிக்கிறோம், தீர்த்தம் சடாரி எல்லாம் வாங்கிக்கிறோம். இத்தனை செய்தும் நமக்கு மட்டும் ஏன் இறைவன் நேரில் தரிசனம் தருவதில்லை? கடவுளைக் காண்பது அவ்வளவு கஷ்டமா?
ரங்கன்: (மெல்லிய புன்னகையுடன்) கடவுளைக் காண்பது கஷ்டமே இல்லை வரதா. ஆனால், நாம் தேடும் வழி தான் தவறு. நம் கண்கள் வெளியே தேடுகின்றன, உள்ளே பார்ப்பதில்லை. நம் ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார், உயர்ந்த ஞானி - கடவுளைக் காண ஒரு தெளிவான வழிமுறையே சொல்லியிருக்கிறார். ஒரு ஆன்மிக சூத்திரம் போல!
வரதன்: (ஆவலுடன்) அப்படியா? என்ன வழிமுறை அது? சொல்லேன் ரங்கா!
ரங்கன்: அவர் பாடிய ஒரு திவ்ய பாசுரம் இருக்கிறது.
"புன் புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து*
நன் புல வழி திறந்து, ஞான நற் சுடர் கொளீஇ*
என்பு இல் எள்கி, நெஞ்சு உருகி, உள்கனிந்து எழுந்ததோர்*
அன்பில் அன்றி, ஆழியானை யாவர் காண வல்லரே?"
என்று ஆரம்பிக்கும் அந்த அற்புதமான பாடல். அதில் மூன்று தெளிவான கட்டளைகள் தருகிறார். மூன்று படிகள், பெருமாளை அடைய.
வரதன்: அப்படியா படிகளா, வெறும் படிகள் ஏறினால் போதுமா?
ரங்கன்: இல்லை வரதா படிகள் என்றால் நாம் மாடியேற பயன்படுத்தும் படிகள் அல்ல வழிமுறைகள் அல்லது விதிமுறைகள் என்று வைத்துக்கொள்ளேன். சரி இதோ முதல் படி, “புன் புல வழி அடைத்து, அரக்கு இலச்சினை செய்து” என்கிறார். உன் வீட்டில் ஜன்னல்கள், கதவுகள் எல்லாம் திறந்தே கிடந்தால் என்ன நடக்கும்? வெளியிலிருந்து புழுதி, குப்பை எல்லாம் உள்ளே வரத்தானே செய்யும்? வீடு அசுத்தமாகிவிடும். அதுபோல தான் நம் ஐம்பொறிகளும்! நம் கண், காது, வாய், மூக்கு, மெய் - இவைகளை ஐம்பொறிகள் என்பர். இவை எல்லாம் கட்டுப்பாடில்லாமல் வெளி உலக இன்பங்களில் ஓடுகின்றன. பார்க்க வேண்டாததைப் பார்க்கின்றன, கேட்க கூடாததைக் கேட்கின்றன. இதுதான் "புன் புல வழி" - அதாவது மோசமான, தாழ்ந்த பாதை.
முதலில் இந்த ஐம்புல வாசல்களையும் அடைக்கச் சொல்கிறார் ஆழ்வார் "புன் புல வழி அடைத்து". ஆனால் சும்மா அடைத்தால் மட்டும் போதாது. "அரக்கு வைத்து முத்திரை இடுவது போல" - அதாவது தேர்தல் முடிந்ததும் வாக்கு இயந்திரங்களை அதற்குரிய பெட்டியில் பூட்டி அரக்கு வைத்து முத்திரை இடுவது போல - உறுதியான வைராக்கியத்தோடு, திடமான மனவுறுதியோடு அடைத்துவிட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் திறந்துவிடும் ஆபத்து இருக்கிறது.
வரதன்: (தலையாட்டி) ஆமாம் ரங்கா, நீ சொல்வது முற்றிலும் உண்மை. நாம் கண்களை மூடினாலும், மனம் என்னவோ எங்கெல்லாமோ அலைந்து திரிகிறது. ஒருவனுடைய முகம், மற்றவன் சொன்ன வார்த்தை, நாளை செய்ய வேண்டிய வேலை... இப்படி எண்ணங்கள் கட்டுக்கடங்காத பறவைகள் போல பறக்கின்றன. சரி, எப்படியோ அடைத்துவிட்டேன் என்று வைத்துக்கொள்வோம். அப்புறம் என்ன செய்ய வேண்டும்? உள்ளே இருட்டாக இருக்குமே, எதையும் காணமுடியாதே? ஒன்றும் தெரியாதே?
ரங்கன்: (கண்கள் பிரகாசிக்க) சரியாகக் கேட்டாய் வரதா! அதனால் தான் ஆழ்வார் இரண்டாவது விதியை உடனே சொல்கிறார். "நன் புல வழி திறந்து, ஞான நற்சுடர் கொளீஇ" என்கிறார். அற்புதமான வார்த்தைகள்! திறந்திருக்கும் கதவை மூடிவிட்டு, இப்போது அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும். அந்த அகக்கண் தான் உண்மையான கண். அங்கே, பக்தியோடு கூடிய ஞானம் என்கிற தெய்வீக விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அந்த விளக்கின் ஒளியில் தான் நாம் பெருமாளைக் காண முடியும்.
வரதன்: ரங்கா, சின்ன கேள்லி தப்பா எடுத்துக்காத, ஞானம்னா என்ன?
ரங்கன்: தப்பா எடுத்துக்கறதா, ஞானம்னா மெய்யான அறிவு. "நான் யார்? நான் எதுக்காக இந்த உலகத்துக்கு வந்திருக்கேன்? என்னோட இலக்கு என்ன? என்னோட உண்மையான உறவு யாரு?"னு தெரிஞ்சுக்கிறது. நாம் வெறும் இந்த உடல் மட்டும் இல்லை, நாம் ஜீவாத்மா. அந்த ஆத்மாவுக்கு சொந்தக்காரன் பரமாத்மா. அவன்தான் நாராயணன். நாம் இயங்குவது இந்த உடலினால் மட்டுமல்ல, அவன் தான் நம்மை இயக்குகிறான். இதை உணர்வதுதான் ஞானம்.
வரதன்: ஓ! புரிகிறது. ஞானம் என்கிற தெய்வீக விளக்கை ஏற்றுவதற்கு மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்தி தியானம் செய்வது போலவா இருக்க வேண்டும்?
ரங்கன்: (உற்சாகமாக) ஆமாம், தியானம் தான் வரதா. ஆனால் அது வெறும் மனப் பயிற்சி மட்டுமல்ல, வெறும் மன ஒருமுகப்படுத்தல் மட்டுமல்ல. இங்கே தான் ஆழ்வார் மூன்றாவதும் மிக முக்கியமானதுமான ரகசியத்தைச் சொல்கிறார். கவனமாகக் கேள்! விளக்கு ஏற்றினால் மட்டும் போதாது என்கிறார். அந்த விளக்கு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் தெரியுமா? அதையும் அவரே கூறுகிறார், கேள்.
"என்பு இல் எள்கி, நெஞ்சு உருகி" என்கிறார். என்ன அற்புதமான வார்த்தைகள்! அதாவது, பெருமாளை நினைக்கும் போது, அவர் நாமத்தை உச்சரிக்கும் போது, அவர் திருவடியைத் தியானிக்கும் போது நமக்கு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? உடலுக்குள் இருக்கும் கெட்டியான எலும்புகள் கூட, வெய்யிலில் உருகும் மெழுகு போல, நெருப்பில் இட்ட வெண்ணெய் போல உருகிப்போக வேண்டுமாம்! உடல் முழுவதும் சிலிர்த்து, பூரிப்படைய வேண்டுமாம்!
வரதன்: (வியப்புடன்) வெயிலில் மெழுகு உருகும் கேள்விப்பட்டிருக்கிறேன், எலும்பு உருகுமா ரங்கா? அது எப்படி சாத்தியம்?
ரங்கன்: (பொறுமையாக) அது ஒரு கவித்துவமான உருவகம் வரதா! ஆனால் அதன் பொருள் மிக ஆழமானது. அந்த அளவுக்கு, அந்த உச்சத்துக்கு உடல் சிலிர்த்து, நெஞ்சம் குழைந்து, உள்ளம் கனிந்து, கண்களில் இருந்து அன்பினால் கண்ணீர் பெருக வேண்டும். "ஆழ்ந்த அன்பு", "உருகும் பக்தி" இல்லாமல் வெறும் புத்தக அறிவு இருந்தால் மட்டும், வெறும் வேதாந்த ஞானம் இருந்தால் மட்டும் பெருமாளைப் பார்க்க முடியாது. அன்பு தான் பாலம், அன்பு தான் படிக்கட்டு!
வரதன்: (பெருமூச்சு விட்டு) புரிகிறது ரங்கா, இப்போது தெளிவாகப் புரிகிறது. நாமும் கோயிலுக்குப் போகிறோம் தான். ஆனால் எங்கே இருக்கிறது நம் மனம்? வாசலில் கழட்டி வைத்த செருப்பின் மீதும், கடையில் வாங்க வேண்டிய மளிகைச் சாமான்களின் பட்டியலிலும், வீட்டு வாடகைக் கணக்கிலும் தான் நம் மனம் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தப் பெருமாளிடம் என்ன வேண்டிக் கொள்ளலாம் அவரிடம் என்ன கேட்கலாம் என்ற சிந்தனையிலேயே இருக்கிறோம். நம் உடல் மட்டும் கோயிலில், மனம் எங்கெங்கோ. ஆனால் ஆழ்வார்களோ, மகான்களோ எலும்பு உருகும் அளவுக்கு, உயிர் உருகும் அளவுக்கு பக்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் பிரிவில் தவித்து, அவர் திருநாமத்தில் திளைத்து, அவர் நினைவிலேயே வாழ்கிறார்கள்.
ரங்கன்: (மகிழ்ச்சியுடன்) அதுதான் விஷயம் வரதா! அதுதான் ரகசியம்! "அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே" என்று தன் பாசுரத்தை முடிக்கிறார் ஆழ்வார். அற்புதமான தீர்ப்பு! திருக்கையில் சக்கரம் ஏந்திய பெருமாளை, திருவாழியாழ்வானை, அப்படிப்பட்ட உருகும் அன்பு இல்லாதவர்களால் கனவிலும் கூட பார்க்கவே முடியாது என்பது அவருடைய உறுதியான தீர்ப்பு. அன்பே வடிவானவர்களை அன்பினால் மட்டுமே அடைய முடியும்!
வரதன்: (உறுதியுடன்) இனிமேல் நானும் என் மனக்கதவை இறுக மூடி, பக்தி எனும் விளக்கை என் நெஞ்சில் ஏற்றி, அன்பால் உருகி நிற்கிறேன் ரங்கா. இறைவனை பக்தியால் மட்டுமே அடைய முடியும், அன்பால் மட்டுமே கட்ட முடியும் என்பது இன்று எனக்கு நன்றாகப் புரிந்தது. அன்பு இல்லாத ஞானம் வெறும் பட்டறிவு, அன்பு இல்லாத பக்தி வெறும் சடங்கு. ஆனால் அன்புடன் கூடிய பக்தியோ... அது நம்மை கரை சேர்க்கும் படகு!
(இருவரும் கோயில் கோபுரத்தை நோக்கி மௌனமாக அமர்ந்திருக்கின்றனர். சூரியன் முழுதாக மறைந்துவிட்டான். ஆனால் அவர்கள் இதயத்தில் ஞான ஒளி பிரகாசிக்கிறது அதுவும் திருமழிசையிலே…)
09-02-2026


கருத்துரையிடுக