பொன் ஆனாய்! பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழ் ஆனாய்! இகழ்வாயத் தொண்டனேன் நான்*
என் ஆனாய்? என் ஆனாய்? என்னல் அல்லால்
என் அறிவன் ஏழையேன்?* உலகம் ஏத்தும்
தென் ஆனாய்! வட ஆனாய்! குடபால் ஆனாய்!
குணபால மதயானாய்! இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய்!* பின் ஆனார் வணங்கும் சோதி!
திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே!
திருமங்கையாழ்வார் அருளிய திருநெடுந்தாண்டகத்தின் இப்பாசுர விளக்கம் சற்றே விரிவானதாக அமைகிறது. மன்னிக்கவும். நான்கு அடிகளுக்குள் இவ்வளவு பரந்த தத்துவங்களையும், ஆழ்ந்த அனுபவங்களையும் ஆழ்வார் அடக்கியிருப்பது வியப்பை அளிக்கிறது. ஒவ்வொரு சொல்லும் எண்ணற்ற உள் அர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. படித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.
இப்பாசுரத்தின் அர்த்தத்தை காணுமுன், “தாண்டகம்” என்னும் இலக்கிய வடிவத்தைப் பற்றி சிறு முன்னுரை காண்போம்.
தமிழில் தாண்டகம் என்பது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் விளக்கத்தின்படி, இருபத்து நான்கு எழுத்துகளைக் கடந்த நீண்ட அடிகளைக் கொண்ட செய்யுள் என்பதால், “தாண்டு” என்னும் சொல்லிலிருந்து “தாண்டகம்” என்ற பெயர் தோன்றியது.
பல்காயனார், மாபூதனார் போன்ற பழந்தமிழ் புலவர்கள் தொகுத்த இலக்கண நூல்கள் மற்றும் பன்னிரு பாட்டியல் போன்ற நூல்களில் தாண்டகத்தின் இலக்கண அமைப்புகள் விரிவாக எடுத்துரைக்கின்றன. குறிப்பாக, பன்னிரு பாட்டியலின் நூற்பாக்கள், கடவுளரையோ அல்லது மன்னர்களையோ போற்றிப் பாடும் தாண்டகம் ஆறு அல்லது எட்டு சீர்களைக் கொண்ட நான்கடிச் செய்யுளாக அமைய வேண்டும் என்று கூறுகின்றன.
தாண்டகத்தின் சிறப்பு என்னவெனில், ஒவ்வொரு அடியிலும் பொருள் முழுமையாக முடிவடையாமல், அடுத்த அடிக்குச் சிந்தை ஓட்டமாக நகர்ந்து, இறுதியில் ஏகார முடிவைப் பெற்று நிறைவுறுவது ஆகும்.
சைவத் திருமுறைகளில் அப்பரடிகள் இத்தாண்டக யாப்பை மிகச் சிறப்பாகக் கையாண்டு “தாண்டக வேந்தர்” என்ற பெருமை பெற்றார். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார், திருக்குறுந்தாண்டகம் மற்றும் திருநெடுந்தாண்டகம் ஆகிய இரு பிரபந்தங்களை அருளி, தாண்டகத்திற்கு உன்னதமான ஆன்மீகப் பெருமையை அளித்தார். திருநெடுந்தாண்டகம் என்பது திருமங்கையாழ்வாரின் பரவசமான பக்தி அனுபவத்தின் உச்ச வெளிப்பாடாகும். இதனை சந்தத்துடன் பாடும்போது, நம் உள்ளத்தில் இயல்பாகவே ஒரு ஆன்மீகச் சிலிர்ப்பு தோன்றுகிறது.
திருநெடுந்தாண்டகத்தின் பத்தாம் பாசுரமான இப்பாசுரத்தின் ஒவ்வொரு சொல்லிலும் புதைந்துள்ள இலக்கிய நயங்களையும், உத்தமூர் ஸ்வாமிகளின் “பிரபந்த ரக்ஷை” மற்றும் பூர்வாசாரியர்களின் வியாக்யானங்களின் அடிப்படையில் உள்ள தத்துவ அர்த்தங்களையும் இப்போது காண்போம்.
முதல் ஆனாயே! – ஜகத் காரணபூதனாய், அனைத்துலகங்களுக்கும் ஆதிகாரணமாக விளங்குபவனே!
பொன் ஆனாய்! – பொன்னுலகாகிய பரமபதத்தில் தேஜோமயமாக விளங்குபவனே! அல்லது பொன் போன்ற உன்னத ஸ்வரூபத்தை உடையவனே!
பொழில் ஏழும் – கீழுலகங்கள், மேலுலகங்கள் உட்படப் பரந்து விரிந்த சப்தலோகங்களையும்
காவல் பூண்ட – தன் திருக்கரங்களில் திவ்யாயுதங்களை ஏந்தி, அவற்றை விருப்பமுடன் காத்தருளும்
புகழ் ஆனாய்! – இவ்வுலக காக்கும் குணத்தால் பேர்புகழ் பெற்றவனே!
இகழ்வாய்த் தொண்டனேன் நான் – உலகத்தாரால் இகழப்படத் தக்க குற்றங்களைக் கொண்டவனாயினும், செய்வதனாயினும் உனக்கே அடிமைப்பட்ட அடியேன்
ஏழையேன் – உன்னுடைய எல்லையற்ற மகிமைகளை உணரத் தகுதியற்ற, நிலையற்ற புத்தியுடைய ஏழையேன்
என் ஆனாய்? என் ஆனாய்? – “எனக்கு எவ்விதமாய் இருப்பவனே!” என்று வியப்பதோ, அல்லது “என் யானையே!” என்று உருகிக் கதறுவதோ
என்னல் அல்லால் – என்று உன்னை அழைப்பதைத் தவிர
என் அறிவன்? – வேறு எதனால் உன்னை அறிய முடியும்? எனக்குப் பிற அறிவில்லை
உலகம் ஏத்தும் – லீலா விபூதி மற்றும் நித்ய விபூதி ஆகிய இரு உலகத்தாராலும் போற்றப்படும்
தென் ஆனாய்! – தெற்கில் விளங்கும் திருமாலிருஞ்சோலையில் நின்ற யானை போன்றவனே!
வட ஆனாய்! – வடக்கில் விளங்கும் திருவேங்கடத்தில் எழுந்தருளிய யானை போன்றவனே!
குடபால் ஆனாய்! – மேற்குத் திசையில் திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் யானை போன்றவனே!
குணபால மதயானாய்! – கிழக்கில் திருக்கண்ணபுரத்தில் செருக்குடன் விளங்கும் மதயானை போன்றவனே!
இமையோர்க்கு என்றும் முன் ஆனாய்! – நித்யசூரிகளுக்கு எப்போதும் நேரில் காட்சி தருபவனே!
பின் ஆனார் வணங்கும் சோதி! – அவதார காலங்களுக்குப் பின் பிறந்த எளியவர்களும் வணங்கும் அர்ச்சாவதாரப் பேரொளியே!
திருமூழிக்களத்து ஆனாய்! – திருமூழிக்களம் என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளியிருப்பவனே!
பூர்வாசாரியர்களின் ஆழமான தத்துவ விளக்கங்களின்படி, இப்பாசுரத்தின் நான்கு அடிகளும் எம்பெருமானின் ஐந்து நிலைகளாகிய பர, வியூக, விபவ, அந்தர்யாமி மற்றும் அர்ச்சை நிலைகளை வரிசையாக எடுத்துரைக்கின்றன. விசிஷ்டாத்வைத தத்துவத்தின் “பஞ்ச அவதார” ரகசியத்தை ஒரே பாசுரத்தில் சுருக்கமாகக் காட்டும் அற்புத அமைப்பு இதுவாகும்.
“பொன் ஆனாய்! பொழில் ஏழும் காவல் பூண்ட புகழ் ஆனாய்!” என்ற பகுதி, பரமபதத்தில் விளங்கும் பரவாசுதேவ மூர்த்தியையும், உலக இயக்கத்திற்குக் காரணமான வியூக மூர்த்திகளையும் குறிக்கிறது.
“இகழ்வாய்த் தொண்டனேன் நான் என் ஆனாய்? என் ஆனாய்? என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன்?” என்ற பகுதி, இகழ்வுக்குரிய அடியவனின் உள்ளத்திற்குள்ளும் அந்தர்யாமியாக உறையும் எம்பெருமானின் கருணையை எடுத்துரைக்கிறது.
“உலகம் ஏத்தும் தென் ஆனாய்! வட ஆனாய்! குடபால் ஆனாய்! குணபால மதயானாய்!” என்ற பகுதி, எம்பெருமான் பல திசைகளில் எழுந்தருளியிருக்கும் விபவ மற்றும் திவ்யதேச மகிமைகளை உணர்த்துகிறது.
“இமையோர்க்கு என்றும் முன் ஆனாய்! பின் ஆனார் வணங்கும் சோதி! திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே!” என்ற பகுதி, அர்ச்சாவதாரத்தின் எல்லையற்ற சௌலப்யத்தை விளக்குகிறது.
“பொன் ஆனாய்” என்ற சொல்லுக்கு உத்தமூர் ஸ்வாமிகளும் பெரியவாச்சான் பிள்ளையும் அளிக்கும் தத்துவார்த்த விளக்கங்கள் மிக ஆழமானவை. உலகில் உயர்ந்த உலோகமாக மதிக்கப்படும் பொன்னுக்கும், பரம்பொருளான எம்பெருமானுக்கும் இடையே பல உன்னத ஒப்புமைகள் உள்ளன என்று ஆசாரியர்கள் கூறுகின்றனர்.
உறக்கமில்லாக் காப்பு:- பொன்னைப் பெற்றவர்கள் அதை இழந்து விடுவோமோ என்று அச்சப்பட்டு எப்போதும் பாதுகாப்பர். அதுபோல, எம்பெருமானைப் பெற்ற பக்தர்களும் அவனது அனுபவத்தை இழக்காதிருக்க எப்போதும் அவனை நினைத்துக் கொண்டிருப்பர்.
விட மனமின்மை:- பொன்னை யாரும் எளிதில் கைவிடமாட்டார்கள். அதுபோல, எம்பெருமானின் கல்யாண குணங்களை அனுபவித்த அடியவர்கள் அவனைப் பிரிய மனம்கொள்ள மாட்டார்கள்.
விரோதி துர்வர்ணமாதல்:- சிறந்த பொன்னை அணிந்தவர்களை எதிரிகள் ஒளியிழந்தவர்களாகக் காண்பர் என வேதம் கூறுகிறது. அதுபோல, எம்பெருமானை அடைந்தவர்களின் அகப்புற விரோதிகள் அனைத்தும் அழிகின்றன.
இழப்பின் பெருந்துயர்:- பொன்னை இழந்தவர்கள் அதன் பிரிவைத் தாங்காது வருந்துவர். அதுபோல, எம்பெருமானின் அருளைப் பெறாத ஆன்மாக்கள் சம்சார துயரில் தவிக்கின்றன.
உலோகத்தின் முதன்மை:- உலகில் பொன் உயர்ந்த உலோகமாக மதிக்கப்படுகிறது. அதுபோல, எம்பெருமான் அனைத்திற்கும் மேலான பரம்பொருள்.
அழியா மதிப்பு:- பொன்னின் மதிப்பு எக்காலத்திலும் குறையாது. எம்பெருமானின் கல்யாண குணங்களும் அழிவற்றவை.
ஹித ரமணீயத்வம் (இன்பத்தையும் நன்மையையும் தரும் தன்மை):- பொன் அழகையும் பயனையும் தருகிறது. எம்பெருமானும் பேரின்பத்தையும் மோக்ஷ உபாயத்தையும் தருகிறான்.
இரத்தினச் சேர்க்கை:- பொன் நவரத்தினங்களுடன் சேர்ந்தால் மேலும் ஒளிர்கிறது. எம்பெருமானும் தன் பக்தர்களோடு சேர்ந்தபோது பக்தவத்சலனாக பேரழகுடன் விளங்குகிறான்.
முக்தாந்விதம்:- பொன் முத்துக்களுடன் சேர்ந்து அணியப்படுகிறது. எம்பெருமானும் முக்தாத்மாக்களுடன் பரமபதத்தில் விளங்குகிறான்.
ஸ்வயம் சுத்தம்:- பொன் நெருப்பில் சுத்தமடைகிறது. எம்பெருமானோ இயற்கையிலேயே மாசற்ற பரிசுத்தன்.
இதேபோல், இப்பாசுரத்தில் “ஆனாய்” என்ற சொல் பலமுறை வருகிறது. உத்தமூர் ஸ்வாமிகள், “குணபால மதயானாய் என்றவிடத்திற்போலே ஆனாயென்ற இடமெல்லாம் யானை போன்றவனே என்றே பொருள்” என்று விளக்குகிறார்.
யானை என்பது விலங்குகளில் மிகப் பெரியதும், கம்பீரமுமானதும், நன்றியுணர்வு மிக்கதுமானது. தன் மேல் ஏற வருபவர்களுக்காகத் தானே பணிந்து கீழிறங்கும். இப்பண்புகள் அனைத்தும் எம்பெருமானின் சௌலப்ய குணத்தை நினைவூட்டுகின்றன.
வால்மீகி இராமாயணத்தில் இராமபிரானின் நடையை “மத்தமாதங்ககாமி” என்றும் “கஜசிம்ஹகதி” என்றும் வர்ணிக்கிறார். மேலும்,
“யதா யுவாநம் ராஜானம் யதா ச மதஹஸ்திநம்…”
என்ற சாஸ்திர வாக்கியம், ஒரு இளவரசனையோ மதயானையையோ எவ்வாறு மென்மையாகக் கையாளுவோமோ, அதுபோல எம்பெருமானையும் ஆராதிக்க வேண்டும் என்று கூறுகிறது.
ஸ்வாமி வேதாந்த தேசிகன் தயாசதகத்தில், மனதை மதயானையோடு ஒப்பிட்டு, எம்பெருமானின் தயையை அதனை அடக்கும் சங்கிலியாக வர்ணிக்கிறார்.
பெரியவாச்சான் பிள்ளை, யானையின் ஆறு குணங்களை எடுத்துக்காட்டி, அவை எம்பெருமானுக்குப் பொருந்துவதை விளக்குகிறார்:-
- எத்தனை முறை கண்டாலும் திருப்தியளிக்காத பேரழகு
- கம்பீரமான செருக்கு
- தம்மைச் சார்ந்தவர்களை உயர்த்திக் காக்கும் தன்மை
- தானே பணிந்து அருளும் சௌலப்யம்
- விரோதிகளிடம் உக்கிரம்
- தன்னை கட்டும் கயிற்றையே தானே தரும் தன்மை
இவை அனைத்தும் எம்பெருமானின் பக்தவத்சலத்வத்தை விளக்குகின்றன.
“இமையோர்க்கு என்றும் முன் ஆனாய்!” என்ற வரி, நித்யசூரிகளிடம் எம்பெருமான் கொண்டுள்ள கருணையின் பரிபூரணத்தைக் காட்டுகிறது.
தேவர்களின் தேவைகளை அவர்கள் நினைப்பதற்குமுன் அறிந்து அருளுதல், அவர்கள் தியானிப்பதற்குமுன் காட்சி தருதல், கேட்பதற்குமுன் அருள்புரிதல், போரில் முன்னின்று காத்தல், எப்போதும் அனுபவிக்கத் தக்கவனாய் விளங்குதல் ஆகிய ஐந்து காரணங்களால், அவர் “என்றும் முன்னானவன்” என அழைக்கப்படுகிறார்.
“பின்னானார்” என்பது அவதார காலங்களுக்குப் பின் பிறந்த எளிய மனிதர்களைக் குறிக்கிறது. அவர்கள் எளிதில் அணுகுமாறு, எம்பெருமான் அர்ச்சாவதாரமாகத் திவ்யதேசங்களில் எழுந்தருளியிருக்கிறான். இருண்ட சம்சாரத்தில் இவ்வர்ச்சை சோதியே அடியவர்களுக்கு வழிகாட்டும் பேரொளியாக விளங்குகிறது.
“திருமூழிக்களத்து ஆனாய்!” என்ற சொல், அர்ச்சாவதாரத்தின் சௌலப்யத்தை ஒரு திவ்யதேசத்தின் மூலம் நிலைநிறுத்துகிறது.
திருமூழிக்களம், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகக் கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹரித மகரிஷி இத்தலத்தில் தவமிருந்து, எம்பெருமானிடமிருந்து “ஸ்ரீ ஸுக்தி” என்னும் உபதேசத்தைப் பெற்றார். அதனால் “திருமொழிக்களம்” என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் “திருமூழிக்களம்” என மருவியது.
இங்குள்ள பெருமாள் “திருமூழிக்களத்தான்” என்றும் “ஸ்ரீஸுக்திநாதன்” என்றும் போற்றப்படுகிறார். நம்மாழ்வார் “திருமூழிக்களத்து உறையும் ஒண் சுடரே” என்றும், திருமங்கையாழ்வார் “மூழிக்களத்து விளக்கினை” என்றும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகப் பத்தாம் பாசுரம், விசிஷ்டாத்வைத தத்துவத்தின் ஆழமான ரகசியங்களைத் தன்னுள் அடக்கிய அரிய கலைக்களஞ்சியமாக விளங்குகிறது.
பரமபத நாதனாக விளங்கும் எம்பெருமான், எளிய மனிதர்களும் அணுகுமாறு அர்ச்சாவதாரமாகத் திருமூழிக்களத்தில் எழுந்தருளி நிற்பதை ஆழ்வார் பேரானந்தத்துடன் அனுபவிக்கிறார்.
“பொன் ஆனாய்”, “ஆனாய்” என்னும் விளிச்சொற்களின் வழியாக அவனது பரத்துவம், சௌலப்யம், சௌசீல்யம், பக்தவத்சலத்வம் ஆகிய கல்யாண குணங்கள் ஒளிர்கின்றன.
தன்னை “இகழ்வாய்த் தொண்டன்” என்று தாழ்த்திக் கொண்டு, “என் ஆனாய்?” என்று கதறும் ஆழ்வாரின் பரம பக்தி, இறுதியில் நம்மையும் அவனது திருவடிகளில் சரணடையச் செய்கிறது.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக