ஞாயிறு, 7 நவம்பர், 2004

திருப்பல்லாண்டு 10,11,12

பெரியாழ்வார் அருளிச்செய்த

திருப்பல்லாண்டு

முதற்பத்து10

எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட

அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்ததுகாண்

செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய

பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.
எந்நாளெம் பெருமான் உன்றனக்கடியோ மென்றெழுத்துப் பட்ட - எம்பெருமானே உனக்கு நான் அடிமையாக எழுதப்பட்ட நாள் எந்தநாளோ?, அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண் - அந்த நாளே நாங்கள் எங்கள் குழுவான உனக்கு தொண்டு செய்யும் குழுவானது வீடுபெற்றோம் - நல்ல உயர்வான இடத்தினை அடைந்தோம். செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலைகுணித்து ஐந்தலைய பை நாகத்தலைப்பாய்ந்தவனே - அன்று நீ அந்த வடமதுரையில் உனது மாமனாம் கம்சன் செய்த சதியை முறியடித்து, அந்த காளிங்கன் என்ற ஐந்துதலை பாம்பினை அடக்கி அவன் தலையில் நர்த்தனம் செய்தவனே நீ பல்லாண்டு இரும்..........

11

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்

செல்வனைப்போலத் திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன்

நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி

பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே.அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்- அல்வழக்கொன்றுமில்லா, எந்தவிதமான தீய பழக்கங்களும் இன்றி இருக்கும் திருகோட்டியூர் மன்னன், செல்வனைப்போலத்திருமாலேநானு முனக்கு பழவடியேன் - நல்ல செல்வ செழிப்புடன் திருக்கோட்டியூர் தலைவனே உனக்கு நாங்கள் அடிமைகள்., மிகவும் பழமையான அடியவர்கள். நல்வகையால் நமோ நாராயணாவென்று நாமம் பலபரவி - நல்லவிதமாக எம்பெருமானின் திருநாமமான நாராயணாவென்று, பல்வகையாலும் பவித்திரனே.... பல வகையிலும் பரிசுத்தமான உந்தன் நாமங்களை பாடி பாராயணம் செய்வோம்.........12

பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்

வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்

நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று

பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே.
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும் - பரிசுத்தமான, சார்ங்கமென்னும் வில்லினையுடைய, வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல் - அவ்வாறு சார்ங்கமென்னும் வில்லினை கையில் உடைய, திருவில்லிபுத்தூரிலே எழுந்தருளியிருக்கும் பெருமாளே உன்னை விட்டுச்சித்தன் எனப்படும் பெரியாழ்வார், நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாய வென்று - அந்த பெரியாழ்வார் உன்னை பல்லாண்டிரும் என்று உரைப்பார்., பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே - இவ்வாறு விட்டுச்சித்தன் சொன்ன திருப்பல்லாண்டை அனைவரும் எம்பெருமானை சூழ்ந்திருந்து பல்லாண்டை உரைப்பார்கள்.... பல்லாண்டு ஆயிரம் பல்லாண்டே...............இத்துடன் திருப்பல்லாண்டு நிறைவுப் பெற்றது. தொடர்ந்து பெரியாழ்வாரின் திருமொழிகளைக் காண்போம்.........தொடர்ந்து பாருங்கள்.......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக