ஶ்ரீ:
ஶ்ரீமதே இராமாநுஜாய நம:
“உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்”
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
நிறம் எழ உரைத்தாற் போல்*
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
மாற்று இன்றி உரைத்துக் கொண்டேன்*
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்;
என்னையும் உன்னில் இட்டேன்*
என்னப்பா! என் இருடீகேசா!
என் உயிர்க் காவலனே!
பெரியாழ்வார் திருமொழியின் ஐந்தாம் பத்தின் நான்காம் திருமொழியாக விளங்கும் "சென்னியோங்கு" பதிகம், எம்பெருமானிடம் தன்னை முழுமையாகச் சமர்ப்பித்த ஆழ்வாரின் பக்திப் பெருக்கை விவரிக்கிறது. இப்பதிகத்தின் ஐந்தாம் பாசுரமான "பொன்னைக் கொண்டு உரைகல் மீதே..." என்பது ஆழ்வாரின் எல்லையற்ற பணிவையும் எம்பெருமானின் பரத்துவ சௌலப்ய குணங்களையும் ஒருங்கே காட்டும் அரிய பாடலாகும்.
இப்பாசுரத்தின் வியாக்யான வரலாற்றுப் பின்னணி, ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பெரியாழ்வார் திருமொழியின் வியாக்யானங்கள் கால ஓட்டத்தில் சிதைந்துபோய், ஐந்தாம் பத்தின் "வாக்குத் தூய்மை இலாமையினாலே" (5-1-1) என்ற பாசுரத்திற்குப் பிறகு ‘வியாக்கியானச் சக்கரவர்த்தி’ என்று போற்றப்படும் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யான உரைகள் கிடைக்காமல் போயின. இழந்த தமிழ் வேதத்தின் உரைப்பகுதியை மீட்டெடுக்காவிடில் தமிழ் ஆரணங்கள் ஆற்றில் கரைத்த புளி போல் வீணாகிவிடும் என்பதை உணர்ந்த மணவாள மாமுனிகள், திருமொழியின் இறுதிப் பகுதியிலிருந்து பின்னோக்கி வந்து, வாக்குத் தூய்மை பதிகம் வரை விடுபட்ட பகுதிகளுக்குத் தம்முடைய அற்புதமான வியாக்யானத்தை எழுதி வழங்கினார். இதனால் மணவாள மாமுனிகள்,
"மாற்றற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே" என்று போற்றப்படுகின்றார்.
இப்பதிகத்தின் முந்தைய பாசுரங்கள் எவ்வாறு இந்த ஐந்தாம் பாசுரத்திற்கு வழிகோலுகின்றன என்பதை ஆராய்வது அவசியமாகிறது. இப்பதிகத்தின் இரண்டாவது பாசுரத்தில் "பிறவியென்னும் கடலும் வற்றிப் பெரும்பதமாகின்றதால்" என்று எம்பெருமான் தன்னைக் கைக்கொண்ட பின் நிகழ்ந்த ஆன்மீக மாற்றத்தை ஆழ்வார் விவரிக்கிறார். நான்காவது பாசுரத்தில் "உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்" என்று எம்பெருமான் என்னும் அமுதத்தைக் குடித்துத் தன் உடம்பை நிறைத்துக் கொண்டதாகக் கூறுகிறார்.
இந்தத் தெய்வீக அனுபவத்தின் தொடர்ச்சியாகவே ஐந்தாம் பாசுரம் அமைகிறது. எம்பெருமான் என்னும் பேரமுதத்தை வாய் திறந்து பருகியதால், ஆழ்வாரின் நாக்கு எம்பெருமானை உரசிப் பார்க்கும் ஒரு சாதனமாக மாறுகிறது. மேலும், "நெய்க்குடத்தைப் பற்றி" (5-2) என்ற பதிகத்தில் ஆழ்வார் தன் உடம்பை எம்பெருமான் காக்கும் பட்டினமாக விவரித்ததை எம்பெருமான் நினைவுபடுத்துவதாக வியாக்யானங்கள் குறிப்பிடுகின்றன. தன் உடலைக் காத்த எம்பெருமானுக்குத் தான் செய்த பிரதியுபகாரம் என்ன என்பதைச் சிந்திக்கும் போது, ஆழ்வார் தன் நாவினால் எம்பெருமானின் திருநாமத்தைத் துதித்ததையே நினைகிறார்.
இப்பாசுரத்தின் நுட்பமான தத்துவார்த்தப் பொருள்களை எளிதில் விளக்கும் வகையில் அதன் ஒவ்வொரு சொல்லுக்கான ஆசாரிய உரைகளின் விளக்கத்தை பார்ப்போம்.
பொன்னை கொண்டு - தூய்மையான தங்கம் போன்ற, எல்லையற்ற கல்யாண குணங்களைக் கொண்ட எம்பெருமானைத் தன் வழிபாட்டுக்கு உரியவனாகக் கொள்ளுதல்.
உரைகல் மீதே - பொன்னின் தரத்தை அறியப் பயன்படும் கரடுமுரடான உரைக்கல்.
நிறமெழ உரைத்தாற் போல் - பொன்னின் தூய்மையை அறியும் நோக்கில் உரைக்கல்லில் தேய்த்து அதன் நிறத்தை வைத்து அதன் தூய்மையினை கணக்கிடுவது போல,
உன்னை - யோகிகளுக்கும் காண்பதற்கு அரியவனான பரம்பொருளாகிய எம்பெருமானை,
என் நாவகம் பால் - என் நாவாகிய உரைக்கல்லின் உள்ளே, இதில் உள்ளர்த்தமாக உலக விஷயங்களில் ஈடுபட்டுத் தூய்மையற்றுக் கிடந்த தன் நாக்கு என்னும் உரைக்கல் என்கிறார் ஆழ்வார்.
மாற்றின்றி - தகுதியற்ற தன் நாவினால், எம்பெருமானைத் துதித்ததால் அவனது தூய்மைக்கு இழுக்கு ஏற்பட்டது என்ற பணிவு.
உரைத்துக் கொண்டேன் - எம்பெருமானின் திருநாமங்களை என் நாவினால் பாடித் துதித்தேன்.
உன்னைக் கொண்டு - குணபூர்த்தியான உன்னை என் வசமாக்கி அதாவது பக்திப் பெருக்கால் எம்பெருமானை வளைத்துக் கொள்ளுதல்.
என்னுள் வைத்தேன் - என் இதயக் கமலத்திற்குள் எம்பெருமானை நிலையாகக் கோயில் கொள்ளச் செய்தல்.
என்னையும் - எளியவனான அடியேனையும்
உன்னில் இட்டேன் - உனக்கு உடைமையாக்கினேன் / உன்னிடமே ஒப்படைத்தேன் உள்ளர்த்தமாக ஆத்ம சமர்ப்பணம் அல்லது முழுமையான சரணாகதி செய்தல்.
என் அப்பா - எனக்குத் தந்தையானவனே!
என் இருடீகேசா - புலன்களைத் தன் வசப்படுத்தி நல்வழிப்படுத்தும் ஆற்றல் கொண்ட எம்பிரானே,
என் உயிர்க் காவலனே - ஆன்மா வேறு எதற்கும் ஆட்படாமல் காக்கும் ரட்சகனே,
"பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறமெழ உரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்"
ஆழ்வாரின் உவமை நயம் இங்கு மிக உன்னதமானது. உலகத்தவர் தங்கத்தை உரைக்கல்லில் தேய்த்து அதன் தரத்தை அறிவார்கள். "நிறமெழ" என்பதற்குப் தூய்மையற்ற பொன்னை அக்கல்லில் உரைத்தால் அல்லது தூய்மையான தங்கத்தை குறையுள்ள கல்லில் தேய்த்தால் அதற்கு நல்ல நிறம் வந்துவிடாது என்பதால், 'உள்ள மாற்றைக் காண்பது' அல்லது 'நிறமறிவது' என்றே உரையாசிரியர்கள் பொருள் கொள்கிறார்கள்.
இங்குப் பொன்னாக உருவகிக்கப்படுவது எம்பெருமான்; உரைக்கல்லாக உருவகிக்கப்படுவது ஆழ்வாரின் நாக்கு. தூய்மையான பொன்னைத் தரமற்ற கல்லில் தேய்க்கும்போது பொன்னின் துகள்கள் சிதைந்து அதன் மாற்று குறைவது போலத் தோன்றும். அதுபோலவே, அற்ப வாழ்வில் புழங்கின தன் நாக்காகிற உரைகல்லில் எம்பெருமான் என்னும் மாசற்ற செம்பொன்னைத் தேய்த்து உரைத்துக் கொண்டேன் என்கிறார் ஆழ்வார். ஒருவராலும் துதிக்க முடியாத எம்பெருமானைத் தன் தகுதியற்ற நாவினால் துதிக்கத் தொடங்கியது அவனுக்குப் பெருமை சேர்ப்பதல்ல, மாறாக அவனது தூய்மையைக் குறைப்பதாகும் என்று அஞ்சி "மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்" என்று தன் நைச்சியத்தை (தாழ்வு மணப்பான்மையை) வெளியிடுகிறார்.
ஆழ்வாரின் இத்தகைய நைச்சியத்தைக் கண்டு எம்பெருமான் வருந்தி, "ஆழ்வீரே! நான் உமக்கு இவ்வளவு உபகாரங்களைச் செய்திருக்க, நீர் ஏன் உம்மைக் கீழோனாகக் கருதி என் தூய்மையைக் குலைத்ததாகக் கூறுகிறீர்?" என்று கேட்பதாக பூர்வாசாரியர்கள் விவரிக்கிறார்கள். அதற்குப் பதில் அளிக்கும் விதமாகவே அடுத்த வரி அமைகிறது.
"உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்" - யோகிகளுக்கும் காண்பதற்கு அரியவனான எம்பெருமானை ஆழ்வார் தன் நெஞ்சுக்குள் சிறைப்பிடித்து வைத்தார். "என்னையும் உன்னில் இட்டேன்" - அதே சமயம், அற்பனான தன்னையும் எம்பெருமானின் திருவடிகளில் சமர்ப்பித்து அவனுக்குச் சேஷப்படுத்திக் கொண்டார். இது ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் உள்ள பிரிக்க முடியாத சேஷ-சேஷி சம்பந்தத்தை உணர்த்துகிறது.
இந்த இரண்டு வரிகளுக்கு உத்தமூர் ஸ்வாமிகள் கொடுக்கும் வியாக்யானம் மிக அருமையாக இருக்கும். முன் உள்ள பாசுரங்களில் ஆழ்வார் எம்பெருமானை “வாய் திறந்து மடுத்துன்னை நிறைத்துக் கொண்டேன்” என்ற வரிகளின் மூலம் எம்பெருமானின் கல்யாண குணங்களையும் பெருமைகளையும் பெரியாழ்வார் திருமொழி முழுவதும் அனுபவித்து பாட முடிந்தது, அவ்வாறு எம்பெருமானின் கல்யாண குணங்களை அனுபவித்து பாடியதன் பயனாக, அவனைத் தம் நெஞ்சினுள் நிலையாக இருத்திக் கொள்ளும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அப்படி அவருள் புகுந்த எம்பெருமானிடமே அவர் அடைக்கலமானாரே என்ன ஒரு பாக்கியம் இதையும் நீதானே அருளினாய் என்று அழகாக விவரித்துள்ளார்.
இங்கு ஒரு சிறிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன் பெரியாழ்வார் திருமொழியைப் படித்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. 'உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்' என்று ஆழ்வார் கூறிய பின், 'என்னையும் உன்னில் இட்டேன்' என்கிறாரே! ஏற்கனவே எம்பெருமான் ஆழ்வாரின் உள்ளே இருக்கும்போது, பின்னர் அவரிடமே சரணடைந்தேன் என்று கூறுவது எவ்வாறு? என்று குழம்பினேன். அப்பொழுது தான் இந்த வியாக்யானங்கள் பற்றி தெரிய வந்தது. அர்த்தம் புரிந்தது ஆகா எவ்வளவு தவறாக நினைத்துவிட்டேன். அதன் பின்னர் தான் வியாக்யானங்கள் படிக்க ஆரம்பித்தேன் இன்னமும் படித்துக் கொண்டுதானிருக்கிறேன்.
"என் அப்பா! என் இருடீகேசா! என் உயிர்க் காவலனே!” - ஆழ்வார் எம்பெருமானை நோக்கி எழுப்பும் இந்த மூன்று கூப்பிடுகளும் மூன்று வெவ்வேறு தத்துவார்த்த உண்மைகளைத் தாங்கி நிற்கின்றன.
"என் அப்பா" என்பது எம்பெருமானுக்கும் ஜீவனுக்கும் உள்ள பிரிக்க முடியாத ஒன்பது வகையான உறவுகளில் முதன்மையான தந்தை-மகன் உறவைக் குறிக்கிறது. தந்தை மகனை எக்காலத்திலும் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு இது.
"என் இருடீகேசா" (ரிஷீகேசன்) என்பது புலன்களை அடக்கி ஆள்பவனைக் குறிக்கும். மனிதனைத் தீய வழியில் இழுத்துச் செல்லும் இந்திரியங்களை (புலன்களை) எம்பெருமான் தன் வசப்படுத்தி, நல்வழியில் செலுத்துகிறான்.
"என் உயிர்க் காவலனே" என்பது ஜீவாத்மாவைத் தன் வசமாக்கி, அது வேறு யாருக்கும் அடிமையாகாமல் காக்கும் எம்பெருமானின் காக்கும் தன்மையைக் காட்டுகிறது.
பெரியவாச்சான் பிள்ளை மற்றும் மணவாள மாமுனிகள் ஆகிய இரு பெரும் ஆசாரியர்களின் வியாக்யானங்கள் இப்பாசுரத்தின் வெவ்வேறு கோணங்களை விளக்குகின்றன. பெரியவாச்சான் பிள்ளை எம்பெருமானின் திருநாமங்களின் எளிய தன்மையையும், மணவாள மாமுனிகள் ஜீவாத்மாவின் சரணாகதித் தன்மையையும் முதன்மைப்படுத்துகிறார்கள்.
பெரியவாச்சான் பிள்ளை விளக்கும் "கட்டிப்பொன்" மற்றும் "பணிப்பொன்" உவமை மிக நயமானது. கட்டிப்பொன்னை ஆபரணமாக மாற்றிய பின்பே அணிய முடியும்; அதுபோலவே, பரத்துவத்தில் இருக்கும் எம்பெருமானை விட, எளியோர்க்கு எளியவனாய் விளங்கும் அவனது திருநாமமும் சௌலப்ய குணமுமே அடியவர்களுக்குப் பரம போக்யமாக அமைகிறது.
மணவாள மாமுனிகள் தன் வியாக்யானத்தில், "என்னையும் உன்னில் இட்டேன்" என்ற வரியின் மூலம், ஆன்மா தனக்கானது அல்ல, அது எம்பெருமானுக்கே உரியது என்ற ஸ்ரீவைஷ்ணவ தத்துவக் கோட்பாட்டை நிலைநிறுத்துகிறார்.
ஆழ்வாரின் இப்பாசுரம் பக்திநெறியின் ஆழமான தத்துவங்களை மிக எளிய உவமையின் மூலம் விளக்குகிறது. எம்பெருமான் என்னும் மாசற்ற பொன்னைத் தன் நாவாகிய உரைக்கல்லில் இட்டு உரைத்ததாகக் கூறுவதன் மூலம், ஆழ்வார் தன் இயலாமையையும் எம்பெருமானின் அளப்பரிய கருணையையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறார். மணவாள மாமுனிகள் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை போன்ற பெருமக்களின் வியாக்யானங்கள் இப்பாசுரத்தின் ஆன்மீக ஆழத்தை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.
இதுவே ஆழ்வார் அனுபவத்தின் அதிசயம். எம்பெருமானைத் தம் உள்ளத்தில் நிலைநிறுத்தியவரே, தம்மையும் அவனுக்கே முழுமையாக ஒப்படைத்தார்.
ஆன்மா எம்பெருமானுக்கு மட்டுமே உரியது என்ற சரணாகதித் தத்துவமும், புலன்களை அடக்கி ஆளும் இருடீகேசனின் பெருமையும் இப்பாசுரத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன. இத்தகைய பாசுரங்களை ஓதி, அதன் கருத்துக்களைத் தன் நெஞ்சில் இருத்துபவர்கள் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபட்டு எம்பெருமானின் நித்ய கைங்கரியப் பேற்றினை அடைவர் என்பது திண்ணம்.
இப்பாசுரம் பக்தியின் உச்சநிலையான அனுபவத்தையும், சரணாகதியின் சாரத்தையும், ஆசாரியர்கள் விளக்கும் நைச்சிய அனுசந்தானத்தின் பெருமையையும் ஒருங்கே நமக்குக் கற்பிக்கிறது.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
🙏🙏🙇♂️🙇♂️
அடியேன்,
கோமான் ஶ்ரீ பாலாஜி

கருத்துரையிடுக