மகாவிஷ்ணுவின் திருவுள்ளத்தில் தான் உயிர்கள் செய்த பாவ,புண்ணியக்கணக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதில் மண்ணில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பக்கம் இருக்கும். செய்த புண்ணியம் வரவு வைக்கப்படும். பாவம் பற்று வைக்கப்படும். பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்தாலும், இந்த கணக்கு அழியப் போவதில்லை. புண்ணியம் அதிகமாகி விட்டால் அந்த உயிர் வைகுண்டத்திற்குச் செல்லும் என்று நினைக்கிறார்கள். ஆனால், புண்ணியத்தை அனுபவிக்கும் உலகமாக சொர்க்கம் இருக்கிறது. பாவத்தை அனுபவிப்பதற்கு நரகத்திற்குச் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த பாவம், புண்ணியம் இரண்டும் இல்லாமல் போனால் தான் வைகுண்டத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.
உயிரைப் பற்றியிருக்கும் கர்மவினைகளால் தான் பாவமும், புண்ணியமும் உண்டாகிறது. சிறைச்சாலையில் இருப்பவன் இரும்புக் கம்பிகளுக்குள் அடைபட்டால் என்ன! அல்லது தங்க கம்பிகளுக்குள் அடைபட்டால் என்ன! சிறை சிறை தானே! அங்கே அவன் சுதந்திரம் அற்றவனாகவே இருக்கிறான். அதுபோல, கர்மவினைகளில் சிக்கியிருக்கும் உயிருக்கும் மோட்சகதி கிடைப்பதில்லை. புண்ணியம் என்பது தங்கச்சங்கிலி போலவும், பாவம் என்பது இரும்புச் சங்கிலி போலவும் தான் இருக்கிறது. இரண்டு சங்கிலிகளுமே கடவுளை அடைவதற்குத் தடையாகவே இருக்கிறது.
இரண்டு நபர்கள் சேர்ந்து ஒரு தொழில் நிறுவனம் நடத்துகிறார்கள் என்றால் ஆண்டு தோறும் அதில் கிடைக்கும் லாபத்தை பிரித்துக் கொள்வார்கள்.
நிறுவனத்தையே கலைத்து விடும் முடிவுக்கு வந்து விட்டால், முதலும், லாபமுமாக பிரித்துக் கொண்டு நடையைக் கட்டிவிடுவார்கள் தானே! அதுபோல, ஒருவருக்கு வைகுண்டத்தில் இடம் தர முடி வெடுத்து விட்டால், கடவுளும் அவருடைய பாவ, புண்ணியக் கணக்கையே நேர் செய்து பற்று, வரவு இல்லாமல் செய்து விடுகிறார்.
ஒரு வங்கியில் ஆயிரமாயிரம் சேமிப்பு கணக்குகள் இருக்கும். இதில் ஒருவரின் கணக்கில் வைக்க வேண்டிய வரவோ, பற்றோ இன்னொருவர் கணக்கில் சேர்த்து விடும் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், பூலோகத்தில் கணக்கில் அடங்காத ஜீவராசிகள் இருக்கின்றன. அவை செய்த பாவ, புண்ணிய கணக்குகள் இம்மியும் பிசகுவதில்லை. அவரவர் செய்த வினைப்பயனை எத்தனை பிறவிகள் எடுத்தாலும், அவரவரே அனுபவிக்கும் நியதியை உண்டாக்கி வைத்திருக்கிறார்.
பிரம்ம பதவிக்காக புண்ணியம் செய்த உயிரைத் தேர்ந்துஎடுத்து விஷ்ணு படைக்கிறார். அதன்பின் பூலோகத்தில் சிருஷ்டி தொழிலை பிரம்மாவின் மூலம் நடத்த தொடங்குகிறார். என்ன தான் பிரம்மா சிருஷ்டி நடத்தினாலும் அதற்கும் காரணம் என்னவோ பெருமாள் தான். எப்படி என்றால், வைத்தியம் செய்த ஆஸ்பத்திரி சென்ற அனுபவம் நம் எல்லோருக்கும் இருக்கும். மருத்துவர் வியாதியை பரிசோதித்து விட்டு, அதற்கான மருந்தை ஊசியில் ஏற்றிக் கொண்டு லாவகமாக கையில் போட்டு விடுவார். ஊசி உடம்பிற்குள் நுழைந்தாலும், உள்ளே சென்று குணப்படுத்துவது என்னவோ மருந்து தானே! அதுபோல, உலகத்தில் படைப்புத் தொழிலை பிரம்மா தான் நடத்துகிறார் என்றாலும், அவருக்குள் இருந்தும் வழிநடத்தும் அந்தர் ஆத்மா பரம்பொருள் விஷ்ணுவே. இப்படியே, எல்லா உயிர்களுக்குள்ளும் அந்தர் ஆத்மாவாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.
மருந்து உடம்புக்குள் சென்றால் நோய் தீருவது போல, அந்தர்ஆத்மாவான எம்பெருமானே உயிர்களை சம்சார பந்தத்தில் இருந்து காத்தருள்கிறார். அண்டங்கள் (உலகங்கள்) ஏழு இருக்கின்றன. அந்த ஒவ்வொரு உலகத்திற்கும் தனித்தனி பிரம்மா இருக்கிறார்கள். பராசரர் இந்த இடத்தில், "அவனே படைக்கிறான்; அவனே படைக்கப்படுகிறான். அவனே காக்கிறான்; அவனே காக்கப்படுகிறான்' என்று வேதாந்தம் பேசுகிறார்.
வேதாந்தம் என்றால் புரிந்தது போல இருக்கும். ஆனால், முழுமையாகப் புரியாது. மயில் ஆடுகிறது என்றால் உங்களுக்கு அர்த்தம் புரிகிறது. மயிலே ஆட்டப்படுகிறது என்றால் அசைந்தாடும் தோகையும் மயிலின் உடம்பில் ஒரு பாகம் தானே! அதைப் போலவே பரம்பொருளான விஷ்ணுவே படைக்கிறான்; படைக்கப்படுகிறான் என்று குறிப்பிடுகிறார்.
பிரம்மாவின் ஆயுளைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார் பராசரர். பிரம்மாவின் ஆயுளுக்கும், மனிதனின் ஆயுளுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. முதலில் மனிதர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம் 60,70 ஆயுள் கொண்ட மனித வாழ்விலேயே எத்தனையோ கஷ்டங்கள் குறுக்கிடுகிறது.
அந்தக் காலத்தில் 50 வயதுக்கு மேலே தான் வியாதியே எட்டிப் பார்க்கும். ஆனால், இப்போதெல்லாம் 30 வயதில் கூட மருத்துவரின் உதவி தேவைப்படுகிறது. ஆழ்வார்கள் மனித உடம்பை, "ஓட்டை மாடம்' என்று குறிப்பிடுகின்றனர். உடம்பில் வியாதி வராத வரை பிழைத்துக் கொண்டோம். வந்து விட்டால் அப்புறம் நைந்து கிழிந்த வேட்டி கதை தான். ஒருபுறம் தைத்தால் இன்னொரு புறம் கிழிந்து போவது போல, ஒரு வியாதிக்கு வைத்தியம் பார்க்க இன்னொரு வியாதி உடம்பில் புகுந்து கொள்கிறது.
மகாபாரதக் கதையில் நச்சுப் பொய்கையில் நீர் குடிக்கச் செல்லும்போது, யட்சன் கேட்ட கேள்விக்கு தர்மபுத்திரர் விடை சொல்லும் பகுதி விசேஷமானது. யட்சன், ""உலகில் அதிசயமானது எது?'' என்று கேட்க, ""ஒன்பது வாசல் கொண்ட உடம்புக்குள் உயிர் தங்கியிருப்பது தான்'' என்று பதில் சொல்வார் தர்மர். உடம்பில் கண், காது, மூக்கு, வாய், மல,ஜல துவாரம் என ஒன்பது துவாரம் இருந்தாலும், உயிர் அது வழியே சென்று விடாமல் தானே இருக்கிறது. கூண்டுக்கிளியைப் பார்த்திருப்பீர்கள். இறக்கை வீசி வானில் சுதந்திரமாகப் பறக்க வேண்டிய கிளிகூண்டைத் திறந்தாலும் பறக்காமல் அதற்குள்ளேயே உயிர் வாழ்வது போல, உடம்புக்குள் உயிரும் சிறைப்பட்டே கிடக்கிறது.
யட்சன் தர்மரிடம் தொடர்ந்து, ""உயிரையும் விட அதிசயமானது எது?'' என்று கேட்க, ""தன்னோடு வாழ்ந்த மனிதன் இறந்து போவதைக் கண்டும் கூட "போறவன் எல்லாம் போகட்டும்! நான் மட்டும் உலகில் நிரந்தரமானவன் என்று கருதிக் கொண்டு வாழ்வது தான் இன்னும் அதிசயம்'' என்று சொல்வார்.
தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய "திருமாலை' என்னும் 45 பாசுரங்கள் விசேஷமானவை. ""திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதார்'' என்றே சொல்வார்கள். இதில் மனிதன் நூறு ஆண்டுகாலம் வாழ்ந்தாலும் கூட, எப்படியெல்லாம் காலத்தை வீணாக்கி விடுகிறான் என்பதை ஆழ்வார் பட்டியலிடுகிறார். அதை தொடர்ந்து பார்ப்போம்.
- இன்னும் இனிக்கும்
திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...
நன்றி - தினமலர்
நன்றி - தினமலர்