தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலை பாசுரத்தில் வேதம் வகுத்த நியதிப்படி மனிதனுக்கு வயது 100 என குறிப்பிடுகிறார். இதில் பாதிக் காலத்தை மனிதன் தூங்கியே கழிக்கிறான். இரவில் தூங்கும் மனிதர்களுக்கு மட்டுமே இதுவும் பொருந்தும். பகலிலும் தூங்குபவர்களை பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மீதி 50 ஆண்டுகளில், பிறந்த ஓரிரு ஆண்டுகள் குழந்தை நிலையில் ஏதும் அறியாப் பேதையாக வாழ்நாள் கழிகிறது.
பின் சிலகாலம் பாலகனாக மனிதன் விளையாட்டில் ஈடுபடுகிறான். இளமை முறுக்குடன் கட்டிளம் காளையாக உலகை ரசிக்கப் பழகுகிறான். முப்பது வயதாகும் போது அவன் கவனம் வேலை, கல்யாணம், குழந்தை என குடும்ப பொறுப்பாக மாறுகிறது. இதெல்லாம் முடிந்த பிறகு கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்வோம் என காலத்தைக் கடத்துகிறான்.
இறுதியில் 60 வயதாகும்போது, கோயில் வழிபாடு, கதாகாலட்சேபம் என வரும்போது கடவுளை அறிய வேண்டும் என்று மனம் துடிக்கிறது. ஆனால், கண் பார்வை குறைபாடு, கை,கால் வலி, சர்க்கரை நோய் என்று வியாதியின் தாக்கம் உடலில் தொடங்குகிறது. ஆரோக்கியம் இருந்த காலத்தில் ஆண்டவனைத் தேட மனம் ஒத்துழைக்கவில்லை. மனம் கடவுளிடம் ஈடுபடும் போது ஆரோக்கியம் குறைய ஆரம்பித்து விடுகிறது. இதையே திருமாலை பாசுரத்தில் ஆழ்வார் அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.
விஷ்ணு புராணத்திற்கு உரை எழுதியவர் எங்களாழ்வான் என்பவர். ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள திருவெள்ளறையில் அவதரித்தவர். இவரால் எழுதப்பட்ட "விஷ்ணு சித்தீயம்' என்னும் உரையே விஷ்ணு புராணத்திலுள்ள நுட்பமான விஷயங்களை எல்லாம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.
எங்களாழ்வான் வீட்டுக்கு ஒருமுறை, காஞ்சிபுரத்தில் இருந்து நடாதூர் அம்மாள் என்ற பக்தர் வந்தார். கதவு தாழிட்டிருந்ததால், கதவைத் தட்டி அழைத்தார்.
"யார் வந்திருப்பது?''என்று கேட்டார் எங்களாழ்வான்.
"காஞ்சிபுரத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன்'' என்றார் நடாதூர் அம்மாள்.
"நான் செத்த பின் வாரும்'' என வீட்டுக்குள் இருந்து பதில் வந்தது.
ஒன்றும் புரியாமல் நடாதூர் அம்மாள் காஞ்சிபுரத்திற்குத் திரும்பி விட்டார். அங்கிருந்த பெரியவர்களிடம் விளக்கம் கேட்டார்.
"நான்' என்பது அகங்காரத்தைக் குறிக்கும். செருக்கு சிறிது இல்லாமல் பணிவுடன் இருப்பவனே கடவுளைப் பற்றி அறியும் தகுதி உடையவன் என்பதையே எங்களாழ்வான் குறிப்பாகச் சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்தார் நடாதூர் அம்மாள். மீண்டும் காஞ்சிபுரத்தில் இருந்து திருவெள்ளறை புறப்பட்டார். அங்கு இந்த முறை, "அடியேன் வந்திருக்கிறேன்'' என்று சொல்ல, எங்களாழ்வான் கதவைத் திறந்து வரவேற்றார். அவரிடம் ராமானுஜரால் எழுதப்பட்ட மாபாஷ்யத்திற்கு விளக்கம் கேட்டு மகிழ்ந்தார் நடாதூர் அம்மாள்.
"நான்' என்பதும் "அடியேன்' என்பதும் ஒரு நபரையே குறித்தாலும், இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நான் என்பது அகங்காரத்தின் வெளிப்பாடு. பணிவின் அடையாளம் அடியேன் என்பது. அகங்காரத்தை அடியோடு போக்கவே, அடியவர்களைக் காணும் போது விழுந்து சேவிக்க வேண்டும் என சம்பிரதாயத்தைப் பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். தலைக்கனம் அற்றவனாக மனிதன் வாழ வேண்டும் என்பதே சாஷ்டாங்கமாகச் சேவிப்பதன் நோக்கம்.
பூலோகத்திற்கும், சத்தியலோகத்திற்கும் காலக்கணக்கே வேறு விதமானது. இதை விளக்குவதற்கு வேடிக்கையாக ஒரு கதை சொல்லுவார்கள்.
அந்தக் காலத்தில் ஒரு ராஜா இருந்தார்.
அவர் தன் பெண் ஜாதகத்தோடு அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு பிரம்மாவிடமே திருமணப் பொருத்தம் பார்க்க சத்தியலோகத்திற்குப் புறப்பட்டார். அங்கே எங்கு பார்த்தாலும் ஒரே ஆட்டம் பாட்டம் தான். அதைக் கண்ட ராஜா கொஞ்சநேரம் நாட்டியம் பார்த்துவிட்டுப் போகலாம் என்று ரசிக்க ஆரம்பித்தார். பின்னர் பிரம்மாவின் இருப்பிடத்திற்குப் போனார்.
அவரிடம் ஜாதகத்தைக் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னார். பிரம்மாவோ, ""நீர் நாட்டியம் பார்த்த நேரத்திற்குள் பூலோகத்தில் மாப்பிள்ளைக்கு பேரனுக்குப் பேரன் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறான்'' என்று பதில் அளித்தார். அந்த மாதிரி பூவுலகிற்கும், மேல் உலகத்திற்கும் காலக்கணக்கு முற்றிலும் மாறுபாடாக இருக்கிறது.
தேவலோகத்தில் ஒருநாள் என்பது நமக்கு ஒரு ஆண்டு. தை முதல் ஆனி வரையுள்ள ஆறுமாதமும் உத்ராயணம் என்னும் பகல்பொழுதாக அவர்களுக்கு இருக்கும். ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறுமாதமும் தட்சிணாயனம் என்னும் இரவுப்பொழுது. இப்படியாக கால கணக்கில் நான்கு யுகங்கள். அதில் 4,32,000 ஆண்டுகள் கொண்டது நாலாவதான கலியுகம். அதிலும் உத்தேசமாக 5000 ஆண்டுகள் தான் தற்போது வரை கழிந்திருக்கிறது. இன்னும் 4,27,000 ஆண்டுகள் பாக்கியிருக்கிறது. தர்மத்திற்கு தலைகுனிவு எப்போது உண்டாகிறதோ அப்போது தான் கண்ணன் பூலோகத்தில் மீண்டும் அவதரிக்கப் போவதாக கீதையில் கூறியிருக்கிறார். அதற்குள் நம் ஜென்மத்தைக் கடைத்தேற்றி கண்ணனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு உய்யும் வழியைத் தேடிக் கொள்வது தான் விஷ்ணு புராணம் கேட்டதன் பலன்.
சிருஷ்டியைத் தொடங்கும் முன் பிரம்மா பரம்பொருளான நாராயணரைத் தியானம் செய்ய ஆரம்பித்தார். நாராயணனுக்குரிய மந்திரமாக இருப்பது "ஓம் நமோ நாராயணா'. நாராயண என்பதற்கு தண்ணீரை இருப்பிடமாகக் கொண்டவன் என்பது பொருள்.
நாராயணனே இந்த உலகம் அத்தனைக்கும் இருப்பிடமாகவும் இருக்கிறான் என்றும் பொருள் இதற்குண்டு. "அயன' என்பதற்கு இருப்பிடம் என்று பொருள். இதற்கு இரண்டு சுழி "ன' என்னும் எழுத்து "நார' என்ற பதத்தோடு சேரும் போது மூன்று சுழி "ண' வாக மாறி விடும் என சமஸ்கிருத இலக்கண சூத்திரம் கூறுகிறது. இப்படி மூன்று சுழி கொண்ட "நாராயண' என்று எழுதினால் அது பரம்பொருளான நாராயணனை மட்டுமே குறிக்கும். இது வேறு பாஷைகளில் இல்லாத தனி சிறப்பான விஷயம்.
தமிழ் எவ்வளவு சிறந்த மொழியோ, அதே அளவுக்கு சமஸ்கிருதமும் உயர்ந்த மொழி. இரண்டையும் இரு கண்களாக நம் பெரியவர்கள் போற்றி வந்திருக்கிறார்கள். உபயவேதாந்தம் என்பதை உ.வே. என்று வைணவ சம்பிரதாயத்தில் சேர்த்துக் கொள்வர். அதற்கு சமஸ்கிருதத்தில் உள்ள நாலு வேதம், திராவிட வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தம் இரண்டிலும் கை தேர்ந்தவர் என்பதே பொருள்.
நாராயணரைத் தியானித்த பிரம்மா மானச புத்திரர்களான சனகாதி நால்வரைப் படைத்து, தன் சிருஷ்டி தொழிலுக்கு உதவும்படி வேண்டினார். ஆனால், அவர்களோ தந்தையான பிரம்மாவின் சொல்லைக் கேட்பதாக இல்லை. அப்பாவின் பேச்சை ஏற்காத பிள்ளைகளாக அவர்கள் இருந்தார்கள். ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
- இன்னும் இனிக்கும்
திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...
நன்றி - தினமலர்
நன்றி - தினமலர்