நினைத்தாலே இனிக்கும்! - 20 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

நினைத்தாலே இனிக்கும்! - 20 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

பிரம்மா படைத்த மானச புத்திரர்களான சனகாதி முனிவர்கள் நால்வரும் பிரம்மாவின் சிருஷ்டித் தொழிலுக்கு உதவி செய்ய விரும்பவில்லை. பிரம்ம பாவனையில் ஈடுபடப் போவதாக சொல்லிவிட்டு, பரம்பொருளான திருமாலை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தனர். 

மூன்று விதமான பாவனையில் உலகில் மனிதர்கள் வாழ்கிறார்கள். அவை பிரம்மபாவனை, கர்ம பாவனை, உபய பாவனை. கடவுளையே எப்போதும் தியானித்து பக்தி செலுத்துவது பிரம்ம பாவனை. நம்மாழ்வார் போன்ற ஆழ்வார்கள் அனைவரும் இந்த பாவனையில் வாழ்ந்தவர்கள். வேலை, சம்பாத்தியம், குடும்பப் பொறுப்பு என எப்போதும் கடமையில் ஈடுபட்டு இருப்பது கர்ம பாவனை. ஆனால், மனிதர்கள் பெரும்பாலும் பிரம்ம, கர்ம என்ற இரண்டு நிலையிலும் கலந்து வாழவே விரும்புகிறார்கள். இந்தக் கலப்புக்கு உபயபாவனை என்று பெயர். சனகாதி நால்வரும் தியானத்தில் ஆழ்ந்து திருமால் மீது பக்தி செய்து வாழ்ந்தனர். 

அதன்பின், சிருஷ்டித் தொழிலுக்காக பிரம்மா சுவாயம்ப மனுவைப் படைத்தார். 

அவருக்கு உதவியாக ஒரு பெண்ணையும் படைத்தார். இருவரும் மனிதர்கள், அசுரர்கள், விலங்குகள், தாவரங்கள் என பலவிதமான உயிர்களையும் படைக்கத் தொடங்கினர். அவ்வாறு பிறந்த இருவர் தான் இரண்யாட்சன், இரண்யகசிபு என்னும் அசுரர்கள்.

இவர்களில் இரண்யாட்சன் என்பவன் பூமியைக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். இதனால், பூமிபிராட்டி செய்வதறியாமல் திகைத்தாள். அப்போது திருமால் பிரம்மாவின் மூக்கில் இருந்து சிறுபன்றியாக உருவெடுத்து வந்தார். தன் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டார். 10 யானை, 100யானை, 1000 யானை என்னும் அளவுக்கு அளவு உருவம் பெரிதானது. இந்த இடத்தில் பராசரர் விஷ்ணு புராணத்தில் வராகப் பெருமானின் மகிமையை "மகாவராகா' என்றே போற்றுகிறார். 

ராமானுஜர் காலத்தில் வாழ்ந்தவர் பராசர பட்டர். அவருடைய சீடரான நம் ஜீயர் திருமாலின் அவதாரங்களில் சிறந்தது எது? யாருடைய திருவடியைப் பற்றிக் கொண்டால் சம்சாரப்பந்தத்தில் இருந்து தப்பிக்கலாம்? என்ற கேள்வியைக் கேட்டார்.

மச்சாவதாரத்தைப் பற்றிக் கொண்டால் பலன் கிடைக்காது. மீன் தான் வாழும் நீரை விட்டு வெளியேறி கரைக்கு வந்து விட்டால் உயிருக்குப் போராடும். அதனால், சம்சாரக் கடலைத் தாண்டுவதற்கு உதவ முடியாது. ஆமை வடிவான கூர்மாவதாரத்தில் திருமால் மந்திரமலையைத் தாங்க வேண்டியிருந்தது. அவரே சுமையோடு இருக்கும் போது உயிர்களின் சுமையை எப்படி அவரால் தீர்க்க முடியும்? நரசிம்மராக வந்தபோது, மனிதனும், விலங்குமாக இருவேறு உருவம் தாங்கி நின்றார் திருமால். அதனால், அவரை நம்பி வழிபட தயக்கமாக இருக்கும். வாமன மூர்த்தியாக வந்தபோது, தன் சின்ன காலைக் காட்டி மூன்றடி கேட்டார். ஆனால், திரிவிக்ரமனாக வளர்ந்து உலகத்தையே அளந்து கொண்டு சென்று விட்டார். 

அதனால், மகாபலியை ஏமாற்றியவர் வாமனர். கிருஷ்ணாவதாரத்தில் திருமால் பொய்யே வடிவமாக இருந்தார். மாயம் செய்வதில் வல்ல அவரை காதலியான ஆண்டாளே, "மாலாய்ப் பிறந்த நம்பியை, ஏலாப்பொய்கள் உரைப்பானை' என்று பாடியுள்ளார். பொய் பேசுவதில் வல்ல கண்ணனையும் நம்புவதற்கு இல்லை. ஆனால், பிரளய காலத்தில் பன்றியாக வந்து பூமிபிராட்டியைக் கடலுக்குள் இருந்து இடந்து எடுத்து வந்த வராகப்பெருமாளின் திருவடியைப் பற்றிக் கொண்டால் சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டு நற்கதி பெறமுடியும் என்று பதிலளித்தார் பராசரபட்டர்.

பூமித்தாய் பொறுமையின் இலக்கணமாக விளங்குகிறாள். அவளிடம் நாம் செய்யும் அபசாரம் கொஞ்சம் நஞ்சமல்ல! மலம்,ஜலம் அத்தனை கழிவையும் தன்மீது தாங்கிக் கொண்டு பிள்ளைகளான நம்மை ஏற்றுக் கொள்கிறாள். பூமியைக் கொத்துவதும், அகழ்வதும், தோண்டுவதும் என எத்தனையோ செய்தாலும் அவள் நம் மீது கோபம் கொள்வதில்லை. 

இப்படிப்பட்ட பொறுமை மிக்க பூமிதேவி கூட, இயற்கையை மதிக்காமல் நடந்து கொள்ளும் போது சீற்றம் கொள்ள நேரிடுகிறது. அதுவே பூகம்பமாகிறது. 

அதனால், பூமி உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் காக்க வேண்டியது நம் பொறுப்பு. 

ஆழ்வார்கள் பன்றி அவதாரத்தை, "பெருங்கேழல்' என்று குறிப்பிடுகிறார்கள். "பெரிய பன்றி' என்பது இதன் பொருள். அவரின் திருமேனியும், திருவடியும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமாக இருந்தது. மேருமலை கூட சிறுகல் போல பன்றியின் கால் குளம்பில் மாட்டிக் கொண்டதால், "கடகட' என சத்தம் கேட்டதாம். பூமி பிராட்டி பன்றியின் பெரிய தந்தத்தில் ஒட்டிக் கொண்டு நின்ற காட்சி, பூர்ண சந்திரனில் இருக்கும் கறைத்திட்டு போல இருந்தது. வராகமூர்த்தியின் காலில் அணிந்திருந்த சிலம்பு ஆபரணத்தில் மேரு, இமாசலம் போன்ற பர்வதங்கள் பரல்கற்களாக இருந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. 

சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளை உயர்வாகக் கருதுவோம். 

விலங்கினங்களில் பன்றிக்கு மதிப்பு கொடுப்பதில்லை. 

இன்னும் சொல்லப்போனால், தாழ்வாகவே கருதுவோம். 

பன்றியின் அழுக்கு மேனியில் இருந்து எப்போதும் நீர் கொட்டிக் கொண்டிருக்கும். ஆண்டாளும் தன் பாசுரத்தில், "பாசி தூர்த்துக் கிடந்த பார்மகளுக்காக பண்டொரு நாள்' திருமால் வராக அவதாரம் எடுத்து வந்ததாக குறிப்பிடுகிறாள். திருமால் ஏன் பன்றியாக அவதாரம் செய்ய வேண்டும் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார் பெரியவாச்சான்பிள்ளை. 

கணவனும், மனைவியும் கருத்தொருமித்து வாழ்ந்திருக்கும் காலத்தில் அன்பு பாராட்டுவதும், ஆடை, அலங்காரத்தில் ஈடுபட்டு தங்களை அழகுபடுத்திக் கொள்வதும் சகஜம். ஆனால், இருவரில் ஒருவர் நோயுற்று நலிந்திருக்கும் நேரத்தில் இன்னொருவர் அப்படி அழகுபடுத்திக் கொள்வது அன்பின் அடையாளம் ஆகாது. தன் தர்மபத்தினியான பூமிதேவி, இரண்யாட்சனிடம் சிக்கிக் கொண்டு கடலுக்கடியில் இருந்தபோது, அழுக்குமேனியாகி விட்டாள். இதையே ஆண்டாள், "பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்' என்று பாசுரத்தில் குறிப்பிடுகிறாள். மனைவி மீது கொண்ட அன்பின் அடையாளமாக, பவித்ரமே வடிவான எம்பெருமான் திருமாலும் சங்கு, சக்கரம், பட்டு, பீதாம்பரம் என எல்லா ஆடை, அலங்காரங்களைத் துறந்து விட்டு அழுக்குடம்பில் நீர் சொட்ட பன்றி வடிவாகப் பிராட்டியைக் காக்கப் புறப்பட்டார்.

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை