நினைத்தாலே இனிக்கும்! - 21 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

நினைத்தாலே இனிக்கும்! - 21 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

பூமிபிராட்டியைத் தாங்கியபடி வராகப்பெருமாளும் கடலுக்கடியில் இருந்து மேலெழுந்து கரை சேர்ந்தார். பெருமாளின் வராக வடிவைச் சேவிக்க வேண்டுமானால் சென்னைக்கு அருகிலுள்ள திருவிடவெந்தை திவ்யதேசத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு பெருமாள் இடது மடியில் பூமித்தாயாரைத் தாங்கியபடி சேவை சாதிக்கிறார். இடது மடியில் சேவை சாதிப்பதால் இடவெந்தை. பெருமாளின் வலது மடியில் பூமித்தாயாரைத் தாங்கிய கோலமான வலவெந்தை காஞ்சிபுரத்தில் இருக்கிறது. இந்த திவ்யதேசத்தை திருக்கடல்மல்லை என்று சொல்வது சம்பிரதாயம்.

இங்கு தலசயனப் பெருமாளாக திருமால் வீற்றிருக்கிறார். இவருக்கு பின்புறத்தில் வராகப்பெருமாள் பூமித்தாயாரைத் தன் வலது மடியில் வைத்தபடி காட்சி தருகிறார். 

பூமித்தாயாரின் அவதாரமான ஆண்டாளின் பெருமையை "கோதாஸ்துதி' என்னும் ஸ்தோத்திரமாகப் பாடியவர் வேதாந்த தேசிகர். அதில் வராகப்பெருமாள் ஒரு உண்மையை நமக்கு காட்டுவதாகச் சொல்கிறார். பூமித்தாயாரின் திருவடிகளைத் தன்கையில் தாங்கியபடி இருப்பதன் மூலம், நமக்கு வாழ்வு தரும் பூமித்தாயாரின் திருவடியை முதலில் நாம் பிடித்துக் கொள்ளும் படி உணர்த்துவதாகச் சொல்கிறார் தேசிகர். 

அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் என்னும் மூன்று வித சித்தாந்தம் உண்டு. இந்த மூன்றையும் உபதேசித்த ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் மூவருமே விஷ்ணுவையே பரம்பொருளாகப் போற்றினர். ஆனால், கொள்கை அளவில் வேறுபட்டனர். 

பரம்பொருள் ஒன்றே உண்மை. மற்றதெல்லாம் பொய் என்பது ஆதிசங்கரரின் அத்வைதம். சிறுவயதில் பூஜைக்காகப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார் சங்கரர். ஒவ்வொரு பூவைப் பறிக்கும் போதும் ஒன்று, ஒன்று என்றே திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட தாயார் "எண்களின் வரிசை மறந்து போனதா?' என்று மகனைக் கேட்டார். ""ஒன்றைத் தவிர வேறொன்றும் என் கண்ணில் பட வில்லையம்மா'' என்றார் சங்கரர். 

புது பட்டாகத்தி ஒன்று பார்க்க பளபளப்பாக இருந்தது. விளையாட்டாக எடுத்த சிறுவன் வீட்டை விட்டு வெளியில் வந்து நின்றான். பவுர்ணமியான அன்று, நிலா பட்டா கத்தியில் பிரதிபலித்தது. அறியாத அவனோ நிலவை இரண்டு என எண்ணிக் கொண்டான். 
குளக்கரைக்குச் சென்றால், அங்கு தண்ணீரில் வானிலவு எதிரொலித்தது. நிலாவின் எண்ணிக்கை மூன்றானது. வீட்டுக்கு வந்தால் கண்ணாடியில் நிலவின் பிம்பம் தெரிந்தது. இப்படி நிலாவின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டேயிருந்தது. ஒரே நிலா நான்காய் தெரிந்தது போல, பரம்பொருள் ஒன்றே ஆயினும், அதன் பிரதிபலிப்பு தான் உலகமாக இருக்கிறது என்கிறது அத்வைதம்.

ஒருராஜாவுக்கு உபதேசம் செய்ய சீடர்களுடன் குரு நாட்டுக்கு வந்திருந்தார். கடவுள் ஒன்றே சத்தியம். மற்றதெல்லாம் பொய் என்று உபதேசம் செய்து விட்டுப் புறப்பட்டார். செல்லும் காட்டுப்பாதையில் புலி ஒன்று எதிர்ப்பட்டது. ஆளாளுக்கு துண்டைக் காணோம்! துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்தனர். குரு தெற்கு நோக்கி ஓடினார். சீடர்கள் வடக்கு நோக்கி ஓடினர். மீண்டும் காட்டுப்பாதையில் ஒருவருக்கொருவர் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். 

அதில் ஒரு சீடன், ""குருவே! கடவுள் ஒன்றே சத்தியம். மற்றதெல்லாம் பொய் என்று உபதேசம் செய்த நீங்களே, இப்படி பொய்யான புலியைக் கண்டு பயந்தோடலாமா?'' என்று கேட்டான்.

குருநாதர் சீடனிடம், "இப்போதும் சொல்கிறேன் கேட்டுக் கொள். கடவுள் ஒன்றே சத்தியம். மற்றதெல்லாம் பொய். புலி வந்ததும் பொய். நாம் பயந்ததும் பொய். நீ கேட்டதும் பொய். நான் சொல்வதும் பொய். இப்படி எல்லாமே பொய் தான். கடவுள் ஒன்றே என்றென்றும் நிலையான உண்மை'' என்று விளக்கம் அளித்தார். அதனால், எந்த விஷயத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ளுதல் என்பது முக்கியம். 

சோழ அரசர் ஒருவரிடம் பரிசு பெறும் நோக்கத்தில் கவிஞன் ஒருவன் வந்தான்.

"மன்னா! உனக்கு இரண்டாவதாக வேறு ஆளே உலகில் கிடையாது,'' என்று புகழ்ந்து பாடினான். அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கி கவுரவித்தான் மன்னன். அவன் மீது பொறாமை கொண்ட இன்னொரு கவிஞன் மன்னனிடம், ""மன்னா! இளவரசர், பட்டமகிஷிகள், அமைச்சர் குழாம், படை பரிவாரங்கள் என எத்தனையோ பேர் உம்மைச் சூழ்ந்திருக்க இரண்டாவதாக வேறு ஆள் இல்லை என்கிறானே! ஓட்டாண்டி என்று சொல்லாமல் சொல்லி விட்டு போகிறான் இவன்! இது எப்படி பெருமைப்படுத்தியதாகும்?'' என்று சொல்லி தண்டிக்கும்படி கேட்டுக் கொண்டான்.

ஆனால், முதல் கவிஞன், ""மன்னா! நல்ல மனைவி, மக்கள், பணியாளர்கள், படைபலம், ஆள் பலம், அந்தஸ்து எல்லாம் பெற்றிருக்கும் உனக்கு நிகராக வேறொரு ஆள் இரண்டாவதாக உலகில் கிடையவே கிடையாது'' என்று விளக்கம் கொடுத்தான். 

கவிஞன் முதலில் சொன்னது போல, கடவுளைத் தவிர வேறொன்று கிடையாது என்பது அத்வைதம். இரண்டாவது சொன்னது போல கடவுளுக்கு நிகரான வேறொன்று கிடையாது என்பது விசிஷ்டாத்வைதம். இந்த இரண்டு கொள்கைகளும் வைஷ்ணவ மதத்தில் இருக்கின்றன.

வராகப் பெருமான் பூமி பிராட்டியை தாங்கிக் கொண்டு மடியில் வைத்திருந்த போதும், அவள் திருமேனி நடுங்கியபடி இருந்தது. ""காப்பாற்றிய பின்னும் உனக்கு பயம் தீர வில்லையா? ஏன் நடுங்குகிறாய்? என்று கேட்டார். ""சுவாமீ! என்னைக் காப்பாற்றி விட்டீர்கள்! ஆனால், என் பிள்ளைகளான உயிர்கள் எல்லாம் உம்மை அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. அவைகளை எண்ணித் தான் கவலைப்படுகிறேன். ஏதாவது எளிய உபாயம் இருந்தால் சொல்லுங்கள்!'' என்றாள். பெருமாளும் தாயாருக்காக மனம் இரங்கினார் ""மனதால் நினைத்து, வாயினால் பாடி, கைகளால் வணங்கினால் போதும். சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டு என்னை வந்தடைய முடியும்,'' என்று வழிகாட்டினார். 

தன் பிள்ளைகளுக்கு நல்வழி காட்ட பூமி பிராட்டியே ஆழ்வாரின் திருமகளாக ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆண்டாளாக அவதரித்தாள். இந்த மூன்று உபாயத்தாலும் கண்ணனை ஆராதித்து, உயிர்களுக்கு நல்வழி காட்டினாள். "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...'' என்று தொடங்கும் திருப்பாவைப் பாசுரத்தில் ""தூயோமாய் வந்து தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்'' என்று உபதேசம் செய்கிறாள்.

வராகப்பெருமானின் திருவடியை அடைய விரும்பினால் பூமித்தாயாரின் திருவடியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ராமபிரானின் திருவடியை சேர எண்ணினால் ஸ்ரீதேவியான சீதாதேவியின் பாதங்களைக் பற்றிக் கொள்ள வேண்டும். கண்ணனின் கழலடியில் இருக்க விரும்பினால் நீளாதேவியான நப்பின்னை பிராட்டியின் பாதங்களை முதலில் பற்ற வேண்டும். நாச்சிமார்களான ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்னும் மூவரின் திருவடிகளைப் பற்றிக் கொண்டாலே பெருமாளின் திருவடிகளை எளிதில் அடைய முடியும்.

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை