திங்கள், 28 ஆகஸ்ட், 2017

நினைத்தாலே இனிக்கும்! - 22 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

பூமிதேவியை வராகப் பெருமாள் காப்பாற்றியதும், மீண்டும் பிரம்மா படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். அவரால் பூமியில் முதலில் ஏற்பட்ட சிருஷ்டி தாவரங்கள் தான். மரம், செடி, கொடி, புல், பூண்டு என்னும் ஐந்துவகையான தாவரங்கள் அவரால் படைக்கப்பட்டன. பின் விலங்குகள், தேவர்கள், மனிதர்கள் என படைப்பு தொடர்ந்தது. 

காரணம் இல்லாமல் யாரும் இந்த பூமியில் பிறப்புஎடுப்பதில்லை. அவரவர் செய்த கர்ம நியதிப்படி பிறவிச் சக்கரம் தொடர்கிறது. பாவ, புண்ணிய பதிவுக்கேற்ப அந்தந்த உயிர்களின் ஆத்மாவின் அறிவு ஒளி வேறுபடும். தாவரத்திற்கும், மனிதருக்கும் ஆத்மா இருந்தாலும், ஆத்மாவிலுள்ள அறிவின் ஒளி மாறுபடவே செய்கிறது. 

வைஷ்ணவ சித்தாந்தப்படி, ராமானுஜரின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு நம்பெருமாளை பூரணமாகச் சரணாகதி அடைந்து விட்டால் மீண்டும் பிறவி உண்டாகாது என்பது நிச்சயம். 

"நான் இன்னும் கொஞ்சம் நாழிகை கழித்து பிறந்திருந்தால், ராஜா போல இருப்பேன். அப்படி இல்லாததால இப்போ கஷ்டப்படறேன்,'' என்று பலரும் அலுத்துக் கொள்வதுண்டு. அவ்வையாரோ, "அரிது அரிது மானிடர் ஆதல் அரிது! கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது!'' என்று மனிதப்பிறவியின் மகத்துவத்தைச் சொல்லி இருக்கிறார். ஆனால், மனிதப்பிறவியின் பெருமையை உணராமல் நாம் வருத்தப்படுகிறோம். 

மும்பையில் உபன்யாசம் செய்யப்போயிருந்த சமயத்தில் ஒரு ஆங்கில வாசகம் கண்ணில் பட்டது. ""நான் இன்று இருக்கும் நிலை இறைவன் எனக்கு அளித்த பரிசு! நான் செய்து காட்ட வேண்டிய நாளைய நிலை தான் நான் திரும்ப அவருக்கு நான் அளிக்கும் பரிசு,'' என்று எழுதப்பட்டிருந்தது. வேதம் தான் என்றில்லாமல், நல்லதை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கடவுள் நமக்கு எல்லாவற்றையும் சரியாகவே கொடுத்திருக்கிறார். அதைக் கொண்டு நாம் தான் வாழ்ந்து காட்ட வேண்டும்.

மகாபாரதத்தில் ஒரு சந்தேகம் நமக்கு எழத் தான் செய்யும். துரியோதனன் கடைசி வரை நன்மையை மட்டுமே அனுபவித்தான். பஞ்சபாண்டவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஏன் நாம் துரியோதனன் மாதிரி தர்மத்தை மறந்து வாழ்ந்திடக் கூடாது என்று எண்ணத் தோன்றலாம். கத்தியின் பயன்பாடு பழம் நறுக்குவது. அதையே உயிரைக் கொல்லவும் பயன்படுத்தலாம். விளக்கின் பயன்பாடு ஒளியூட்டவே. அதன் வெளிச்சத்தில் பயன் தரும் நல்ல புத்தகத்தை வாசிக்கலாம். அதே நெருப்பைக் கொண்டு ஊரைக் கொளுத்தினால் என்னாகும்? வாழ்வை நன்மைக்காக பயன்படுத்த வேண்டியது அவரவர் கையில் தான் இருக்கிறது.

குருக்ஷேத்திரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்தது. ஹஸ்தினாபுரத்தில் இருந்து கண்ணன் துவாரகைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அரண்மனைப்பக்கமாக உதங்க மகிரிஷி வந்து கொண்டிருந்தார். அவர் கண்ணனைப் பார்த்து, ""கண்ணா! யுத்தம் முடிந்ததாமே! யார் அதில் ஜெயித்தது?'' என்றார். 

"மகரிஷி! தர்மம் ஜெயித்தது. அதர்மம் அழிந்தது. தர்மத்தின் பக்கம் இருந்த பாண்டவர்கள் தான் வெற்றி,'' என்றான் கண்ணன். 

"கர்மாவின் படி அவரவருக்கு பாவத்தையும், புண்ணியத்தையும் தருபவன் நீ தானே! ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து கொண்டு இயக்குபவன் நீ தானே! நீ நினைத்தால் துரியோதனனை நல்லவனாக்கி விட முடியாதா? தவறு செய்யும் குழந்தையை தடுத்து நிறுத்துவது தாயின் கடமை தானே! நீ நினைத்தால் யுத்தத்தையே நிறுத்தி விடலாமே! இத்தனை கஷ்டம் உனக்குத் தேவையா? '' என்று கேட்டார் உதங்க மகரிஷி. 

தயக்கத்துடன் கண்ணன் மகரிஷியிடம், ""அவசர வேலையாக துவாரகைக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். இன்னொரு சமயத்தில் இதைப் பற்றி பேசுவோமே!'' என்று புறப்பட்டான்.

"ஏன் கண்ணா! என் கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல முடியவில்லையா? பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வெற்றி என்னவோ உனக்குத் தானே. அது போகட்டும். அர்ஜூனனுக்கு காட்டிய விஸ்வரூப தரிசனத்தைக் காண என் மனம் விரும்புகிறது. அதற்கு இப்போதே அருள் செய்ய வேண்டும்,'' என்று மகரிஷி கண்ணனை வேண்டி நின்றார். 

"துவாரகைக்குப் போய் நான் என்ன செய்யப் போகிறேன். ஒன்றும் அவசரமில்லை,'' என்று சொல்லி விஸ்வரூபதரிசனத்தை உதங்க மகரிஷிக்கு அப்போதே கண்ணன் காட்டி அருளினான். கர்மாவுக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். 

பிரம்மசூத்திரத்தில் வியாசர் இதனை அழகாக விளக்குகிறார். அவரவர் செய்த பாவ புண்ணிய அடிப்படையில் வாழ்க்கை நடக்கிறது. இந்த கர்ம நியதியும் கடவுளுக்குக் கட்டுப்பட்டது தான். இருந்தாலும், கடவுள் மீது பழி ஏதும் சொல்ல முடியாது என்பதைச் சொல்லியுள்ளார்.

இதை இப்படி சொன்னால் நீங்கள் எளிதில் புரிந்து கொள்வீர்கள்.

மா,தென்னை என எந்த மரமானாலும் தண்ணீர் விடுவதும், உரம் போடுவதும் பொதுவான விஷயம் தான். ஆனால், எப்படி தண்ணீர் விட்டாலும் எல்லா மரமும் தென்னையாகவோ, மா மரமாகவோ மாறுவதில்லை. விதையின் அடிப்படையில் தான் ஒரு மரம் உருவாகிறது. மற்றபடி தண்ணீரும், உரமும் அதன் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன அவ்வளவே. இந்த தண்ணீரையும், உரத்தையும் போன்றது தான் கடவுளின் அருள். ஆனால், அந்தந்த விதையைப் போல உயிர்களின் வினைப்பதிவான கர்மா இருக்கிறது. 

இதையே இன்னொரு விதமாகவும்சொல்லலாம். தாய் குழந்தைக்கு நடை கற்றுத் தருவதைப் பார்த்திருப்பீர்கள். தாயார் குழந்தையை கூடத்தில் நிறுத்தி விட்டு, தானாகவே நடந்து வரும்படி விட்டு விடுவாள். தளர் நடையிட்டபடி குழந்தையும் கீழே மேலே விழுந்து எழ ஆரம்பிக்கும். ஆனால், குழந்தை அழாதவரை தாய் அதைத் தூக்கி விடச் செல்ல மாட்டாள். அதற்காக தாயின் கட்டுப்பாட்டில் குழந்தை இல்லை என்று சொல்லி விடமுடியுமா? அவளது கண் வட்டத்திற்குள் தான் குழந்தை இருக்கிறது. ஆனாலும், குழந்தைக்கு என்று சுதந்திரமும் தரப்பட்டிருக்கிறது. அதுவாகவே செயல்படும்படி தாய் விட்டு விடுவது போலவே, பகவானும் உயிர்களை சுதந்திரமாக செயல்பட விட்டிருக்கிறார்.

ஒரு நிறுவனத்தின் எல்லா பணிகளையும் முதலாளியே செய்து கொண்டிருக்க முடியாது. பண நிர்வாகம், கொள்முதல், விற்பனை, பணிநியமனம் எல்லாம் அந்தந்த பிரிவில் இருக்கும் மேலாளர்கள் செய்து கொண்டிருப்பார்கள். அதற்காக முதலாளியின் கட்டுப்பாட்டில் நிறுவனம் இல்லாமல் போய்விட்டதாகாது. 

பணியாளர்களின் பின்னணியில் அத்தனையும் நடந்தாலும், முதலாளியின் கண் பார்வையில் தான் நிர்வாகம் நடந்து கொண்டிருக்கும். பணியாளர்கள் சரியான வழியில் நடந்தால் சம்பள உயர்வு, சலுகை எல்லாம் கிடைக்கும். இல்லாவிட்டால் பணியில் இருந்து விலக நேரிடும். 

இதைப்போலவே, கடவுளும் உயிர்களுக்கு கண், காது, மூக்கு என்று அத்தனை அவயங்களும் கொடுத்திருக்கிறார். இது நல்லது, இது கெட்டது என்று சிந்திக்கும் புத்தியும் கொடுத்திருக்கிறார். அதைக் கொண்டு சுதந்திரமாகச் செயல்பட விட்டிருக்கிறார். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நல்லவனாக உயர்ந்து விட்டால் சொர்க்க வாழ்வு கிடைக்கிறது. அதை விடுத்து, மனம் போன போக்கில் நடந்து வந்தால் அதற்கு தண்டனையாக நரகவாழ்வு கிடைக்கிறது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு விட்டால் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொண்டவர்களாவோம். 

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக