திங்கள், 28 ஆகஸ்ட், 2017

நினைத்தாலே இனிக்கும்! - 23 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

மூவகை குணங்களில் தாழ்ந்த குணமான தமோ குணம் கொண்ட உடலெடுத்தார் பிரம்மா. தன் தொடைப்பகுதியில் இருந்து அசுரர்களைப் படைத்தார். அப்போது இரவு நேரமாக இருந்தது. அதனால், அசுரர்களுக்கு எப்போதும் இரவில் உடல் பலம் அதிகமாக இருக்கும்.

அதன் பின், நற்குணமான சத்வ குணத்தில் உடம்பு எடுத்து தேவர்களை தன் மேற்பாகத்தில் இருந்து படைத்தார். அப்போது பகல் பொழுதாக இருந்ததால், தேவர்கள் பகலில் பலமுடையவர்களாக இருந்தனர்.

மீண்டும் நல்ல உடம்பான சத்வகுண உடம்பெடுத்து பிதுர்களான முன்னோர்களைப் படைத்தார். அப்போது மாலைப் பொழுதாக இருந்தது. மத்தியானத்திற்குப் பிறகு சாயந்தர நேரத்தில் தான் பிதுர்களுக்குப் பலம் உண்டாகும். இதனால், பிதுர்தர்ப்பணமான சிராத்தத்தை காலையில் செய்வது கூடாது. காலை 11.30 மணிக்கு மேல் நீராடி, மதியான நேரத்தில் தான் சிராத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், தற்காலத்தில் காலையில் எழுந்ததும் சூடாக காபி குடிக்காவிட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு ஆளாகி விட்டோம். அதனால், மதியம் 3 மணிவரை சாப்பிடாமல் இருந்து சிராத்தம் கொடுப்பது என்பது கடினமான விஷயமாகி விட்டது. இன்னும் சொல்லப்போனால், சிராத்தம் கொடுப்பது பிதுருக்கா அல்லது பிள்ளைக்கா என்ற நிலையே உண்டாகும் அளவுக்கு சிலர் சாப்பிடாமல் சோர்ந்து விடுகிறார்கள். 

கடைசியாக விடியற்காலைப் பொழுதில் பிரம்மா மனிதர்களைப் படைத்தார். மனிதனுக்கு பலம் மிக்க காலம் என்பது அதிகாலைப் பொழுது தான். 4.30 மணி முதல் 6.00 மணி வரையுள்ள காலத்தை உஷத் காலம், அருணோதய காலம் என்றெல்லாம் சொல்வர். அறிவை வளர்க்கும் அருமையான பொழுதை வீணடிப்பது இன்றைய தலைமுறையினரின் இயல்பாகிப் போனது. ஏதோ கிராமப்புற விவசாயிகள் இன்றும் முன்நேரத்தில் தூங்கி எழுந்து, வயல் பணிக்குக் காலையில் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். மற்றபடி மேற்கத்திய கலாச்சாரத்தால், அசுரவேளையான இரவில் விழித்திருப்பதும், காலையில் சூரியன் உதித்து வெகுநேரமாகியும் தூங்குவதையும் இளைய சமுதாயம் ஏற்றுக் கொண்டு விட்டது. படிக்கும் மாணவர்கள் என்றில்லாமல் எந்த வயதினரும் பிரம்ம முகூர்த்தவேளையான ஐந்து மணிக்கு எழுந்து தங்கள் பணிகளைச் செய்வதால் புத்திகூர்மை, தேஜஸ், பலம் அதிகரிக்கும். எக்காரணம் கொண்டும் இரவு 10 மணிக்கு மேல் யாரும் விழித்திருப்பது நல்லதல்ல. 

மனிதர்களில் நால்வகை வர்ணம் உருவானது. அவர்கள் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்பட்டனர். இந்த நால்வகை வர்ணத்தையும் தானே ஏற்படுத்தியதாக பகவத்கீதையில் கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு எடுத்துரைத்துள்ளார். தலைப்பகுதியில் இருந்து பிறந்தவர்கள் பிராமணர். ஏனென்றால் பிராமணன் வேதத்தை அத்யாபனம்(ஓதுதல்) செய்தே தன் ஜீவனத்தைக் கழிக்க வேண்டியவனாக 
இருக்கிறான். பிரம்மத்தை (தெய்வ) பற்றிய அறிவைப் பெறாத வரை, பிராமணன் என்னும் தகுதியை ஒருவன் அடைய முடியாது. 

க்ஷத்திரியர்கள் என்னும் வீரர்கள் தோளில் இருந்து பிறந்தவர்கள். நாட்டைக் காக்கும் வீரர்களுக்கு போரிட வலிமை தேவை என்பதால் இவர்கள் தோளில் இருந்து வந்தார்கள். தொடையில் இருந்து வந்தவர்கள் வைசியர்கள். பயிர்த்தொழில், பசுக்களைப்பாதுகாப்பது, வணிகம் செய்வது ஆகிய தொழிலில் வைசியர்கள் ஈடுபட்டனர். 

இந்த மூவகையினருக்கும் உதவி செய்பவர்களாக கடவுளின் திருவடியில் இருந்து வந்தவர்கள் சூத்திரர்கள். ஓடி ஓடி உழைக்க வேண்டியவர்களாக, அத்தனை உயிர்களுக்கும் சோறு போடுபவர்களாக இவர்கள் தான் இருக்கிறார்கள்.

மனு தர்மத்தில் வர்ணாசிரம தர்மம் கூறப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விஷயத்தைச் சரியாக புரிந்து கொள்ளாததால், மனு தர்மத்தைப் பற்றி தவறாகப் பலரும் கருதுகின்றனர். ஆழ்வார்களின் பாசுரங்களைப் படிக்க வேண்டுமானால் பெரியவாச்சான்பிள்ளை போன்றவர்களின் விளக்கவுரையைப் படிப்பது தான் நல்லது. அவரவர் இஷ்டத்திற்கு ஏதாவது ஒன்றைப் படித்து விட்டு குறை கூறிக் கொண்டு திரிவதில் பயனில்லை. 

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் பிரிவு இல்லாமல் இருக்க முடியாது. ஜாதி மட்டுமில்லாமல், மொழி, மாநிலம், நாடு என்றெல்லாம் பிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது. யாரும் யாருக்கும் உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பிள்ளைலோகாசாரியார் என்ற மகான் வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பற்றிச் சொல்லும்போது, எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் மீது பக்தி கொண்டவன் உயர்ந்தவன், இல்லாதவன் தாழ்ந்தவன் என்று தான் சொல்கிறாரே தவிர, ஜாதி அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிக்கவில்லை. 

விபீஷணன் அரக்கனான ராவணனின் தம்பி. பிரகலாதன் இரண்யகசிபு என்னும் அரக்கனின் மகன். இந்த இருவரும் எம்பெருமானைச் சரணடைந்ததால் பிரகலாத ஆழ்வான், விபீஷணாழ்வான் என்று ஆழ்வாராதிகளாகப் போற்றப்படுகின்றனர். அவர்கள் பிறந்த குலம் குறித்து நாம் சிந்திப்பதில்லை. 

பக்தியுணர்வின் காரணமாக அவர்களைப் போற்றி வணங்குகிறோம். பிராமணராகப் பிறந்தால் மட்டுமே எம்பெருமானைச் சரணடைந்து முக்தி பெற்று ஸ்ரீவைகுண்டத்தை அடைய முடியும் என்று எந்த ஆச்சார்யார்களாவது சொல்லியிருக்கிறார்களா என்றால் இல்லை. யாராக இருந்தாலும், உண்மையான பக்தி ஒன்றே பகவானைச் சென்றடைவதற்கான ஒரே தகுதி. 

ஆழ்வார்கள் பன்னிருவர் என்று சொல்கிறோமே. அவர்கள் அத்தனை பேரும் அந்தணர்களாகவா இருக்கிறார்கள்! அதில் திருப்பாணாழ்வார் என்பவர் யாழ் வைத்துப்பாடும் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர். திருமங்கையாழ்வார் கள்ளர் குலத்தில் அவதரித்தவர். உயர்ந்தவராக தன்னைக் கருதும் அந்தணர் என்றாலும், ஆழ்வார் பன்னிருவரையும் சேவிக்காவிட்டால் வைஷ்ணவராக இருக்கவே முடியாது. ஆழ்வார் வரிசையில் எல்லா சமூகத்தினரும் இருப்பதில் இருந்தே, கடவுளை அடைவதில் ஜாதிப்பாகுபாடு கிடையாது என்பது தெளிவாகி விட்டது. 

வேறுபாடு என்பது வாழ்விற்கு இன்றியமையாதது என்பது அடிப்படை. கையில் விரல்கள் ஐந்து இருக்கின்றன. எல்லாம் ஒரே நீளத்தில், அகலத்தில் இருந்தால் நம்மால் பயன்படுத்த முடியுமா? 

ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசாக இருப்பதால் தானே வெவ்வேறு பணிகளை செய்ய முடிகிறது. அவைகளுக்கு கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் என்றெல்லாம் தனித்தனிப் பெயர் கொடுத்து வைத்திருக்கிறோம். விரல் தான் இப்படி என்று எண்ண வேண்டாம். கையாக இருந்தாலும் வலக்கை, இடக்கை என்று பகுப்பு இருக்கிறதே. பகுப்பு இல்லாவிட்டால் வாழ்க்கையின் இயக்கமே நின்று விடும். ஆனால், அதற்காக இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்ற பாகுபாடு கற்பிப்பது கூடாது. அவரவர் பணிகளைச் சரிவர செய்து வந்தாலே போதும். உலக இயக்கம் செம்மையாக நடந்து கொண்டிருக்கும்.

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக