திங்கள், 28 ஆகஸ்ட், 2017

நினைத்தாலே இனிக்கும்! - 24 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

அழிப்பதற்காக ருத்ர மூர்த்தி தோன்றினார். அவர் ஆண்பாதி, பெண்பாதியாக அர்த்தநாரீஸ்வராக இருந்தார். அவரின் ஆண்பாகம் 11 வடிவாகப் பிரிந்தது. அவர்கள் "ஏகாதச ருத்ரர்கள்' என்று பெயர் பெற்றனர். இவ்வாறாக வாசுதேவன், பிரம்மா, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் தாத்தா, பிள்ளை, பேரன் என்னும் விதத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் 
மேற்கொண்டனர். 

பூமியில் இருந்து விஞ்ஞானி வெவ்வேறு கிரகங்களுக்கு செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறார்கள். பூமியில் மைய ஈர்ப்பு விசை கீழ் நோக்கி இழுப்பதால், அதை எதிர்த்துக் கொண்டு மேலே செல்ல வேண்டியிருப்பதால், செயற்கைக்கோள் முன்னோக்கிச் செல்ல உந்துசக்தி அதிகம் தேவைப்படும். இதைப் போலவே, பாவம் புண்ணியத்தை ஏற்படுத்தும் பிறவிச்சுழலில் இருந்து உயிர்கள் அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. அதற்கு வைராக்கியம் தேவை. அதற்கு பெருமாளின் பரம கருணை இல்லாவிட்டால் ஒருக்காலும் முடியாது. அப்போது தான் ஒரு ஜீவன், பிறவி என்பதே இல்லாத முக்தி இன்பத்தை அடைய முடியும். 

108 திவ்ய தேசங்களில் கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று குறிப்பிடப்படும் தலங்கள் ஸ்ரீரங்கநாதர் கோயில், திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில்கள். இங்கு அடியவர்கள் வாழ்வில் நடந்ததைப் பார்ப்போம்.

திருப்பதியில் வாழ்ந்தவர் குரும்பறுத்த நம்பி. இவர் குயவர் குலத்தைச் சேர்ந்தவர். தினமும் மண்பாண்டங்களைச் செய்து விட்டு, மீதி மண்ணில் அழகான மலர்களைச் செய்து சீனிவாசப் பெருமாளுக்கு அர்ப்பணித்து வந்தார். அதே சீனிவாசருக்கு தொண்டைமான் சக்கரவர்த்தி பொன் மலர்களால் பூஜை செய்து வந்தார். ஆனால், நம்பியின் மண்மலர்களை பெருமாள் உவப்புடன் ஏற்றுக் கொண்டார். இதை அறிந்து வருந்திய மன்னரை, நம்பியிடம் நேரில் சென்று வரும் படி ஸ்ரீநிவாசப்பெருமாளே கட்டளை இட்டார். அதன்படி அங்கு செல்ல, நம்பியின் மேலான பக்தியுணர்வை நேரில் கண்டு மன்னர் தன்னையும் அறியாமல் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கினார்.
ஸ்ரீரங்கம் லோகசாரங்கர் என்னும் அந்தணர் ஒருமுறை காவிரியில் தீர்த்தம் எடுக்கச் சென்றார், வழிமறித்து நின்ற பாணனைக் கல்லால் அடித்து விட்டு வந்தார். இதனால், கோபம் கொண்ட ரங்கநாதர் சந்நிதிக் கதவைத் திறக்க முடியாமல் செய்ததோடு, தன் பக்தனான பாணரை பணிவுடன் தோளில் சுமந்தே கோயிலுக்கு வருமாறு கட்டளையிட்டார். பாணரும் அவ்வாறே வந்து, நம்பெருமாளைத் தரிசித்து திருமாலைப் பாசுரங்களைப் பாடி மகிந்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்டம் என்னும் விசிறிவீசும் பாக்கியம் பெற்றவர் திருக்கச்சிநம்பி. தாழ்குலத்தில் அவதரித்த இவர் உண்ட மிச்சத்தை உயர்குலத்தில் பிறந்த ராமானுஜர் மிகவும் விரும்பினார். ஜாதியைப் பொறுத்து யாரும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது. கடவுள் பக்தி கொண்டவன் உயர்ந்தவன். பக்தி அற்றவன் தாழ்ந்தவன் என்பது தான் வைணவத்தின் அடிப்படை. 
மகாபாரதத்தில் வரும் விதுரர் தாழ்குலத்தில் பிறந்தாலும் அவரை வியாசர் போற்றி வணங்குகிறார். வேடனாக இருந்தாலும் குகனை ராமபிரான் தம்பியாக ஏற்றுக் கொண்டு அவன் அளித்த உணவை ஏற்றதையும், பக்தியுடன் தான் சுவைத்த பழங்களைக் கொடுத்த சபரியின் தூய அன்பை ராமன் ஏற்றதையும் ராமாயணத்தின் மூலம் அறிகிறோம். 

"ஒரு மனிதன் இழிந்த சண்டாள குலத்தில் பிறந்தவன் என்றாலும், வலக்கையில் சக்ராயுதம் தாங்கி நிற்கும் திருமாலின் அடியவர்' என்று ஒருமுறை சொல்லி விட்டால் போதும்! "அவரே என் தலைவனுக்குத் தலைவனுக்குத் தலைவன்' என்கிறார் ஞானமே வடிவான நம்மாழ்வார். 

இப்படியாக,செய்யும் தொழிலைப் பொறுத்து நால்வகை வர்ணமாக மக்கள் வகுக்கப்பட்டதை பராசர மகரிஷி விஷ்ணு புராணத்தில் விளக்குகிறார். மனிதர்கள் யாகம், ஹோமங்களைச் செய்து "ஹவிஸ்' உணவை தேவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அதற்குப் பயனாக தேவர்கள் இயற்கையைப் பாதுகாத்து உதவி செய்ய வேண்டும் என்ற நியதி உண்டாக்கப்பட்டது. ஆனால், இது போன்ற விஷயங்கள் கலியுகத்தில் கேலிக்குரியதாகி விட்டன. அதனால் தான் நீர்வளம், நிலவளம் குறைந்து மனித சமூகம் துன்பத்திற்குள்ளாகத் தொடங்கியுள்ளது. 

கிருத, திரேதா, துவாபர யுகங்களில் அந்தணர்கள் வேதநெறி தவறாமல் வாழ்வு நடத்தினர். அவர்களின் தேவையும் மிக குறைவாகவே இருந்தது. தற்போது அந்தணர்கள் தங்களின் தேவையை அதிகமாக்கிக் கொண்டனர். அதனால், மற்ற வர்ணத்தாரும் அவர்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த யுகங்களில் இருந்த மனநிறைவு, நிம்மதி எல்லாம் இப்போது நம்மிடம் இல்லாமல் போனது.

பிராமணர்கள் தங்களுக்குரிய பிரம்மச்சர்ய விரதத்தை தவறாமல் அனுஷ்டித்து வேத நெறியில் வாழ்ந்தால், இறுதியில் பிதுர்லோகத்தைச் சென்றடைவர். படைவீரர்கள் போரில் புறமுதுகிட்டு ஓடாமல் வீரமுடன் வாழ்ந்தால், இந்திர லோகத்தில் வாழும் பாக்கியம் பெறுவர். வியாபாரிகள் நேர்மையுடன் வியாபாரம் செய்தால் வாயுலோகத்தில் வாழும் பேறு பெறுவர். சூத்திரர்கள் தங்களுக்குரிய தர்மத்தைச் சரிவர செய்தால் கந்தர்வ உலகை அடைவர். 

பிரம்மச்சாரி என்பதற்கு "பிரம்மம் என்னும் பரம்பொருளைத் தேடுபவன்' என்பது பொருள். சாதாரணமாக திருமணத்திற்கு முன்புள்ள வயதை பிரம்மச்சர்யம் என்று சொல்வர். இதில் நியமம் அதிகமாகவே இருக்கும். சாப்பாட்டு விஷயத்தில் ஆர்வம் கூடாது. ஒரு ஆடைக்கும் மேல் இன்னொரு ஆடை வைத்துக் கொள்ளத் தேவையில்லை. ஞானத்தைத் தேடுவதில் ஆர்வம் இருக்கவேண்டும். குருகுல வாசமாக 12ஆண்டுகள் தங்கி படிக்க வேண்டும். பிரமாணனை, சாஸ்திரம் "துவிஜன்' என்று குறிப்பிடும். "இருபிறப்பாளன்' என்பது பொருள். தாய்வயிற்றில் பிறந்தது ஒருபிறவி. குருவிடம் உபதேசம் பெற்று ஞானஜென்மம் என்னும் அறிவுப்பிறவி எடுப்பது இரண்டாவது பிறவி. சமஸ்கிருத்தில் பல்லுக்கும் இப்பெயர் உண்டு. ஏனென்றால் பால் பல்லாக முளைத்துபின், விழுந்து விட்டு மீண்டும் முளைப்பதால். பிரம்மச்சாரியாக இருக்கும் போது முப்புரியாக பூணூல் இருக்கும். அதுவே கிரகஸ்தம் என்னும் திருமணத்தில் ஆறு புரியாகி விடும். பிரம்மச்சர்யத்தில் கீழாடை மட்டுமே இருந்தால் போதும். ஆனால், இல்லறத்தில் மேலாடை இல்லாமல் ஒருபோதும் இருப்பது கூடாது என்கிறது சாஸ்திரம். குருவையும், குருபத்தினியையும் தெய்வமாக மதிக்க வேண்டும். எந்த சுகத்தையும் பிரம்மச்சாரி எதிர்பார்க்கக் கூடாது. சக்கரவர்த்தி திருமகனான ராமன் கூட குருகுலவாசத்தில் தரையில் படுத்து தூங்கியதாக ராமாயணம் கூறுகிறது. இதிலிருந்து அறிவுத்தேடலைத் தவிர வேறெந்த சிந்தனைக்கும் குருகுலத்தில் இடமில்லை என்பது தெளிவாகிறது.

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக