திங்கள், 28 ஆகஸ்ட், 2017

நினைத்தாலே இனிக்கும்! - 25 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

அந்த காலத்தில் பிரம்மச்சாரிகள் குருகுலவாசமாக 12 ஆண்டுகள் கல்வி கற்பது வழக்கம். இப்படி படிக்கும் காலத்தில் அறிவு பெறுவதை தவிர சாப்பாடு, ஆடை, ஆபரணம் போன்ற உலகியல் விஷயங்களில் எந்த நாட்டமும் கொள்ளக் கூடாது. குருவையும், குருபத்தினியையும் தெய்வமாகக் கருத வேண்டும். குருபத்தினியே தாய் போல இருந்து சீடர்களுக்கெல்லாம் நித்யபடியாக சோறிடுவாள். இப்படி சாப்பிட்ட சீடனைப் பற்றிய வேடிக்கை கதை ஒன்று சொல்வார்கள். 

ஒரு குருகுலத்தில் ஒரு சீடன் தினமும் குருபத்தினி இடும் உணவை சாப்பிட்டு வந்தான். அவனுக்கு ஒருநாள் அவள் சாதமும், குழம்பும் விட்டு அதில் நெய் விடுவதற்குப் பதிலாக எண்ணெய்யை ஊற்றி விட்டாள். உடனே சீடன், "அம்மா! என்ன நெய் ஊற்றினால் அல்லவா சாப்பிட முடியும்? நீங்கள் எண்ணெய்யை சாதத்தில் விடுகிறீர்களே'' என்றான்.

அவள் குருவிடம் போய் "இந்த பிள்ளை குருகுலத்திற்கு வந்து 12 வருஷம் ஆகி விட்டது. இனி இவனை அனுப்பி விடுவது தான் சரி'' என்றாள். விஷயமறிந்த சீடனும்,"ஏன் என்னை அனுப்பச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான்.

அதற்கு குருபத்தினி, "நீ வந்த நாளில் இருந்து 12 வருஷமாகவே எண்ணெய் தான் ஊற்றி வந்தேன். பாடத்தில் கவனம் இருந்ததால், நீ சாப்பிடுவது இன்னதென்றே தெரியாமல் சாப்பிட்டு வந்தாய். இப்போதோ, உலகியல் விஷயத்தில் நாட்டம் வந்து விட்டது. உன்னை அனுப்புவது தான் சரி,'' என்றாள். இப்படி, குருவை விட குருபத்தினிகளும் சீடர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்காக இதைச் சொல்வார்கள். 

இப்படி பிரம்மச்சாரியாக இருக்கும் போது, சாப்பாட்டில் ஆசை வைக்க கூடாது. அதற்காக, திருமணம் ஆன பிறகு விருப்பமானதை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணக் கூடாது. அப்போது கிரகஸ்தனுக்கு உரிய இல்லற தர்மத்தில் தான் கவனம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். குடும்பம், குழந்தை என்று வாழ்ந்து முடிந்து வயோதிகம் வரும் போதாவது சாப்பிடலாமா என்று கேட்டால், அப்போது சாப்பாடு மட்டுமில்லாமல் எந்த விதத்திலும் ஆசை இருக்கக் கூடாது என்கிறது வேதம். ஆக, பிறந்தது முதல் மனிதனுக்கு சாப்பாட்டின் மேல் ஆசை கூடாது என்பது தான் விதி. உயிர் வாழ்வதற்காக தான் உணவே ஒழிய, உணவு உண்பதற்காக உயிர் வாழ்வது கூடாது. 

ஒருநாளில் உச்சிப்பொழுதான 12 மணிக்கு பெருமாளுக்கு திருவாராதனம்(வழிபாடு) முடித்து விட்டு, ஒருவேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். மீண்டும் மறுநாள் மதியவேளையில் தான் சாப்பாடு. இப்படி தான் அந்தக் காலத்தில், வைதீக தர்மத்தில் நம்மவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இப்படி ஒருவேளை சாப்பிடுபவனை யோகி என்கிறது வேதம். பசி தாங்க முடியாதவர்கள் இருவேளை உணவு சாப்பிட்டார்கள். அதாவது 12 மணிநேரம் பட்டினி கிடந்தார்கள். அவர்களுக்கு "போகி' என்று பெயர். இரண்டு வேளை சாப்பிட்டாலும் போதவில்லை என்று மூன்று வேளை சாப்பிட்டும் வந்தார்கள். 

அவர்களை "ரோகி' என்கிறது வேதம். பசி என்னும் நோயால் பீடித்திருப்பதால் இவர்களுக்கு "ரோகி' என்று பெயர். இப்போதெல்லாம் வயிற்றில் அமிலம் சுரக்கிறது. அதிக நேரம் பட்டினி போடுவது ஆகாது என்றெல்லாம் சொல்கிறார்கள். அறிவியலாளர்கள் 4மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம் என்று கூடச் சொல்கிறார்கள். அப்படி சாப்பிடுபவர்களுக்கு வேதத்தில் பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 

பிரம்மச்சாரி எந்த வித போகப்பொருளையும் பயன்படுத்தக் கூடாது. சந்தனம் பூசுவது, பூமாலை அணிவது, வெற்றிலை இடுவது கூடாது என்கிறது சாஸ்திரம். இப்படி தான் ஒரு சீடன் தாம்பூலம் தரிக்க ஆசை கொண்டு சாப்பிட்டு விட்டான். இதைக் கண்டவர், "பிரம்மச்சாரியான நீ வெற்றிலை போடலாமா?'' என்றார்.

"பிரம்மச்சாரியாக இருப்பவன் கல்யாணமே செய்து கொள்ளும்போது, வெற்றிலை போடுவதில் என்ன தவறு?'' என்று பதில் கேள்வி கேட்டான். இப்படி விவாதம் செய்வது கூடாது. சாஸ்திரம் கூறிய நியதிகளை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். 

ஞானவேட்கையோடு உலகியல் இன்பத்தில் நாட்டம் வைக்காமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தால் 88,000 யாகம் செய்த புண்ணிய பலனை ஒரு மனிதன் அடைகிறான். ஒரு பெண்ணை மணந்து கொண்டு வாழ்வது கிரகஸ்தம் என்னும் குடும்பவாழ்க்கை. அதன் பின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக விட்டால் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, காட்டுக்குச் சென்று வாழ்வது வானப்பிரஸ்தம். சுகபோகங்களை அனுபவிக்கும் ராஜாக்கள் கூட ராஜ்ய பரிபாலனத்தை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு காட்டிற்குச் சென்று வாழ்ந்தனர். சுகம், துக்கம் இரண்டையும் மனிதன் ஒன்றாகவே கருத வேண்டும் என்பதற்காகவே இப்படி எல்லாம் சாஸ்திரம் நிர்ணயித்திருக்கிறது. பின், ஆசை என்பதையே அறவே விடுத்து சந்நியாசியாக வாழ்வது இறுதி நிலை. 

பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆஸ்ரமங்களிலும் அந்தந்த தர்மத்திற்குரியவற்றைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள் இறுதியில் பிரம்மலோகத்தை அடையும் பாக்கியம் பெறுகின்றனர்.

நமக்குரிய கடமைகள் என்னென்ன என்பதை சாஸ்திரம் தெளிவாக வரையறை செய்திருக்கிறது. இது எதுவும் எனக்கு தெரியாது என்று நாம் சொல்லக் கூடாது. அதை தெரிந்து கொள்ள நாம் முயல்வதில்லை. ஆனால், தெரிந்து கொள்ளவில்லை என்பதற்காக ஒருவருக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது.

கொள்ளைக்காரன் ஒருவனுக்கு சட்டஅறிவு என்பது துளியும் இல்லை. "திருடுவது குற்றம் என்பதே எனக்கு தெரியாது' என்று அவன் நீதிமன்றத்தில் வாதிட்டான். இதை நீதிமன்றம் ஏற்குமா என்றால் நிச்சயம் ஏற்காது. அதனால், பொதுவான விஷயங்கள் தெரியாவிட்டாலும், அந்த விஷயமே இல்லை என்று ஆகிவிடாது.

நால்வகை வர்ணம், ஆஸ்ரமம் என விளக்கிய விஷ்ணு புராணத்தில் தொடர்ந்து, படைப்புக் கடவுளாகிய பிரம்மா ருத்திரராகிய பரமசிவனாரைப் படைத்து அவருக்கு பார்வதியோடு திருமணம் நடந்ததை பராசரர் விவரிக்கிறார். அதன் பின் பாற்கடலில் பிறந்த திருமகளின் வரலாற்றை விளக்குகிறார். பிருகு முனிவரின் மகளாக வளர்ந்ததால் திருமகளுக்கு பார்கவி என்று பெயர். அவளே திருமாலைத் திருமணம் செய்து கொண்டாள். திருமால், மகாலட்சுமி போன்றவர்கள் என்றென்றும் நித்யமானவர்கள். அவர்களுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. 

அதனால் தான் எம்பெருமான் எழுந்தருளிஇருக்கும் ஸ்ரீவைகுண்டத்தை "நித்ய விபூதி' என்றும், அங்கு வாசம் செய்யும் முக்தி பெற்ற உயிர்களை "நித்ய சூரிகள்' என்றும் சொல்கிறார்கள்.

சீனிவாச கல்யாணம், சீதாகல்யாணம் என்றதும், பெருமாள் சீனிவாசராக இப்போது தான் பிறந்து இளைஞராக வளர்ந்திருக்கிறார் என்று நினைக்க கூடாது. அவர்களுக்கு பிறப்போ, இறப்போ கிடையாது. அவர்கள் என்றென்றும் நித்யமாக இருக்கிறார்கள். நமக்காக கல்யாணக் கோலத்தில் மணமக்களாக எழுந்தருள்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...


நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக