ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 7 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ணனின் ஜாலமிகு செயல்களில் அனைவராலும் பெரிதும் வியக்கப்படுவது காளிங்க நர்த்தனம். நர்த்தனம் என்றதும் நடராஜரின் நாட்டியம் தான் நினைவில் எழும். விஷ்ணு என்றால், அவரது சயனக் கோலமும், அவர் பாம்புப் படுக்கையில் நித்திரை கொள்வதும் ஞாபகத்துக்கு வந்து விடும். இப்படி பாம்பை படுக்கையாக்கி தூங்கும் விஷ்ணு, தன் கிருஷ்ண அவதாரத்தில் அந்த பாம்பின் மீது நின்று நடனமாடுவதும், அதன் பின்னணியும், உட்பொருளும் நமக்கு தெரிய வேண்டும்.
நம் உயிரின் மூல வடிவம் பாம்பு. உயிரணுவை உற்றுப் பார்த்தால் இந்த உண்மை புலனாகும். நமக்கு கை, கால் முளைத்த தோற்றமும், சிந்தனையும், பேச்சும் ஒரு வகை பரிணாம வளர்ச்சியாகும். உயிர்கள் அனைத்திற்கும் மூலவடிவம் பாம்பு வடிவம் என்றாலும், அதை சிந்தித்துப் பார்த்து உணரும் அறிவு மனித குலத்துக்கே அருளப்பட்டதாகும். அதனாலேயே நம் உயிர்மூலம் வழிபாட்டிற்கு உரியதானது. பாம்பை வணங்கும் பழக்கத்தைக் கூட, ஒரு வகையில் நம்மை நாமே வணங்கும் பழக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
நாம் வணங்கும் இறை வடிவங்கள் அனைத்திலும் பாம்புக்கு பிரதான இடம் உள்ளது. மாலவனுக்கு பாம்பு ஆதிசேஷன் வடிவில் படுக்கை என்றால், சிவனுக்கு அது கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணம். கணபதிக்கு அது யக்ஞோபவீதம் (பூணூல்). முருகனுக்கோ காலடி உபகரணம். சக்திக்கு இடையாபரணம். கங்கணம், குடை என்று எல்லாமே....
இவர்களை நாம் வணங்கும் போது பாம்பையும் சேர்த்தே வணங்குகிறோம். ஆனாலும் படமெடுத்தாடும் பாம்பைக் கண்டால் வயிற்றில் அமிலம் சுரக்கும் அளவுக்கு அச்சம் கொள்கிறோம்.
இந்த அச்சம் தனி மனிதனுக்கு மட்டுமல்ல...
நாம் கூட்டமாய் பெரும் படையோடு இருந்தாலும், தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
'பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்ற பழமொழியே தோன்றி விட்டது.
இந்த அச்சம் ஒருவித மாயை! இது அறவே நீங்கினால் ஞானம் சித்திக்கும். அந்த நிலையை அடைய வேண்டும் என்பதாலேயே ஞானிகள் பாம்பை வணக்கத்திற்குரியதாக வைத்தனர். இது இறை சம்பந்தமுடையது என்ற தெளிவு நமக்கு ஏற்படும் போது, இந்த உயிரினத்தை ஒரு புழுவாகவோ, அசையும் கயிறாகவோ எண்ணத் தோன்றும். ஒரு ஆச்சரியம் என்னவென்றால், தெளிந்த ஞானியின் முன் பாம்பு அடங்கி ஒடுங்கிக் கிடக்கும். இதற்கு ஆயிரம் சாட்சிகள் உண்டு.
காஞ்சி மகாபெரியவர் ஒருமுறை அதிகாலையில் ஒரு மரப்பலகை மீது அமர்ந்த நிலையில் ஜபம் செய்து கொண்டிருந்தார். பலகைக்கு கீழே ஒரு கருநாகம் சுருண்டு கிடந்தது. பெரியவரைக் காண வந்த உதவியாளர் பாம்பைப் பார்த்து மனம் பதைத்தார். பெரியவருக்கோ பதட்டமோ, பயமோ துளியும் இல்லை. அதுவும் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்று விட்டது. பாம்பிற்கும் பெரியவரைத் தரிசிக்க விருப்பமோ என்று அனைவரும் எண்ணினர்.
சேஷாத்ரி சுவாமிகள் என்றொரு ஞானி!
எங்காவது பாம்பு புற்றைக் கண்டால் கையால் பாம்பைப் பிடித்து விடுவார். அதைத் தன் கழுத்தில் சுற்றிக் கொண்டு சிவன் போலக் காட்சியளிப்பார். அவரைப் பார்ப்பவர்களுக்கு பயம் தொற்றிக் கொள்ளும். ஆனால் அவர் இதன் மூலம் உயிர் மூலத்தைத் தொட்டதாகத் தான் கருதிக் கொள்வார்.
பாம்பு ஒன்று தான், நம்மிடம் நூறு சதவிகித உயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும். ஆடி வெள்ளி போன்ற சுபநாட்களில் புற்றுக்குப் பால் விட்டு வணங்குவதும் கூட உயிர் மூலத்தை வணங்கும் விதமாக உருவாக்கப்பட்ட சடங்கே. 
பிள்ளைப் பேறு இல்லாமல் இருக்க சர்ப்ப தோஷத்திற்கு பிரதான இடம் உண்டு. அச்சம், சுயநலம் காரணமாக பாம்பைக் கொலை செய்த பாவம் தான் சர்ப்ப தோஷம். எந்த உயிர் மூலத்தை அறியாமையால் அழித்தாயோ, அந்த உயிர்மூலம் உன்னுள் துளிர்க்காமல் போய்விடும் என்பதே இதன் அடிப்படை. 
பாம்புக்கு பால் விடுதல் என்பது உயிர் மூலத்திற்கு உணவளிப்பது போன்ற ஒரு பாவனைக்குரிய நடவடிக்கை. எந்த உயிராக இருந்தாலும் தாய்ப்பாலை முதல் உணவாக உண்டே நிமிரத் தொடங்குகிறது. எனவே, பால் மனித வாழ்வில் முதல் உணவாகவும், முற்றான உணவாகவும் உள்ளது. இதனாலேயே இறப்பிலும் பால் வார்த்தல் என்னும் சடங்கு உள்ளது. 
இந்த முற்றான முதல் உணவை, பாலையே பாற்கடல் என்றாக்கி, உயிர்களின் ஏழுபிறப்பை குறிக்கும் விதத்தில் ஏழுதலை கொண்ட ஆதிசேஷன் என்றாக்கி, அதன் மீது பள்ளி கொண்ட விஷ்ணுவே எல்லாவற்றிற்கும் மூலம் என்பதைக் குறியீடாக உணர்த்துவதே பள்ளி கொண்ட தோற்றம்! இப்படியே சிவன், உமையவள், கணபதி, முருகனோடும் பாம்பு சம்பந்தப்பட்டிருப்பதற்கு நுட்பமான காரணங்கள் உண்டு. 
பாம்பிற்கு உயிருள்ளவை மட்டுமே உணவு என்பது நாம் உணர வேண்டிய உண்மை. புழு, பூச்சி, தவளை, பறவை என்று அது கவ்விப் பிடிக்கும் ஜீவன்கள் இரையாகி விடுகின்றன. இவை அனைத்தும் அதன் வாயால் விழுங்கப்பட்ட பிறகே உயிரை விடும். பின்னர் உடலோடு கலந்து விடும்.
மேலான மனிதர்களான நாம் கூட, உயிர் விட்டவைகளையே உணவாக கொள்கிறோம். இந்த வகையில் ஒவ்வொரு பாம்பும் உயிர் விழுங்கி உயிரடக்கி! இதை படுக்கையாகவே ஒருவன் தரித்திருக்கிறான் என்றால் அவன் எத்தனை பெரியவனாக இருக்க வேண்டும்? எண்ணிப் பார்க்கும் போதே பிரமிப்பு உண்டாகிறது. 
இப்படி படுக்கையாக கொண்டவன், அதன் தலை மீதேறி நர்த்தனம் ஆடினான் என்றால் அது எத்தனை பெரிய சிந்தனைக்குரிய விஷயம்! 
பிருந்தாவனத்தில் ஒரு மடு! குளத்துக்கும், ஏரிக்கும் இடைப்பட்ட ஒரு நீராழி அது... அதனுள் காளிங்கன் என்றொரு நாகம்! இந்த நாகத்துக்கும், கருடனுக்கும் ஆகவே ஆகாது. பொதுவாகவே நாகமாகிய உயிர் மூலத்திற்கு கருடன் எதிரி! இதை சற்று மாற்றியும் சொல்லலாம். சிறிய உயிர்கள் உயிர்மூலமாகிய பாம்புக்கு உணவாகும். அந்த பாம்போ கருடனுக்கு உணவாகும். கருடனோ விஷ்ணுவின் வாகனம். அதாவது அவரையே சுமப்பவன். ஆக, உயிர் மூலங்களான பாம்புகள், கருடன் மூலம் ஆதி பரம்பொருளான விஷ்ணுவைத் தாங்கி அவனை அடைகின்றன. இது ஒரு வட்ட சுழற்சி. அவனிடம் தோன்றி அவனையே அடையும் ஒரு நிகழ்வு!
இதன் அடிப்படையில் கருடன் காளிங்கனாகிய பாம்புக்கு எதிரியாகிறான். இந்த கருடனால் வர முடியாத ஒரு இடம் தான், பிருந்தாவனத்து மடு. அதாவது கருட இனம் சார்ந்த எந்த ஒரு பறவையும் இங்கு வந்து மடுவில் வாழும் மீன்கள் உள்ளிட்ட எந்த உயிர்களையும் உண்ணக் கூடாது. சவுபரி என்னும் முனிவரின் சாபமே இதற்கு காரணம்.
கருடனால் கவர்ந்து செல்ல முடியாத, பாதுகாப்பான இந்த மடுவில் காளிங்கன் வாழ்ந்து வந்தான். ஆனால் அவனது விஷமூச்சின் நெடிக்கு புல், பூண்டுகள் கூட கருகத் தொடங்கின. பிருந்தாவனத்து யாதவர்கள், பசுக்கள், பறவைகளின் தாகம் தீர்த்து வந்த இந்த மடு, காளிங்கன் வந்த பிறகு விஷப் பொய்கையானது. இதன் அருகில் சென்ற உயிர்கள் மடிந்து போயின. அப்படித் தான் ஒருநாள் கிருஷ்ணனின் பசுக்களும் தாக மிகுதியால் இதனருகே சென்று மயங்கி விழுந்தன.
ஒரு பாம்பின் சுயநலம்... அதாவது ஒரு உயிர்மூலத்தின் சுயநலம், பல நூறு உயிர்களுக்கு எதிரானதாகி விட்டது. இதைக் கண்ட கிருஷ்ணன், மடுவுக்குள் இறங்கி அதை அடக்கி தலை மேல் நின்றாடி, அதன் செருக்கை அடக்கிய ஜாலமே காளிங்க நர்த்தனம்.
மடுவுக்குள் இறங்கிய கிருஷ்ணனை காளிங்கன் தன் உடம்பால் வளைத்துப் பிடித்து மலைப்பாம்பு போல விழுங்க முற்படுகிறான். இதை அறிந்த வசுதேவர் முதல் யசோதை வரை அனைவரும் மடுவுக்கு வந்து தங்களின் பிள்ளை இப்படி சிக்கிக் கொண்டானே என்று பதறிப் போனார்கள். யசோதை மயங்கியே விழுந்து விடுகிறாள்.
ஆனால் கிருஷ்ணன் தன் உடலை மாய சக்தியால் பெரிதாக்கி காளிங்கனின் பிடியைத் தளரச் செய்து, அதன் சீற்றம் கண்டு அஞ்சாமல், அதன் மீது ஏறிக் குதித்து இறுதியாக அவன் வாலைப் பற்றி ஆட ஆட காளிங்கனுக்குள் கிருஷ்ண பாத சம்பந்தம் ஏற்பட்டதால் சுயநலம், கோபம், செருக்கு எல்லாம் அடங்கிப் போனது. தன் மீது ஆடியபடி நிற்பவன் பரந்தாமன் என்ற விழிப்பு ஏற்பட்டது. பிறகென்ன... காளிங்கனின் மனைவிகளும் வந்து கதறிட, அவர்களுக்கும் கருணை செய்து காளிங்கனை கடலுக்குள் சென்று வாழப் பணித்தான். அந்த மடுவை மீட்டு பசுக்களின் தாகம் தீர்க்கும் குளிர் மடுவாக மாற்றினான்.
இந்த காளிங்க நர்த்தன லீலை இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது. பாம்புகள் எப்படிப்பட்டவை என்பது முதல் விஷயம்! அவன் பாத சம்பந்தம் விஷத்தைக் கூட அமுதாக்கி விடும் என்பது இரண்டாவது விஷயம்!
இந்த இரண்டின் உள்ளடக்கமே காளிங்க நர்த்தனம்!
அடுத்த லீலை கோவர்த்தன கிரி தாங்கியது...
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக