கிருஷ்ணன் பால்ய வயதில் நிகழ்த்திய அற்புதச் செயல்பாடுகளில் அசுர வதங்களை எல்லாம் விட நம்மை சிந்திக்க வைப்பது பிரம்மனையும், இந்திரனையும் கொண்டு அவன் நிகழ்த்திய செயல்பாடுகள் தான்!
பிரம்மன் சார்ந்த விஷயம் விஷ்ணு மாயை பற்றியது. இந்திரன் சார்ந்த விஷயம் அவன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தனகிரியை தூக்கிப் பிடித்தது. முதலில் பிரம்மன் சார்ந்த விஷயத்தைப் பார்ப்போம்.
பிரம்மா என்ற பெயரைக் கேட்ட உடனேயே நான்கு முகங்களுடன் கூடிய தோற்றம் நம் நினைவுக்கு வந்து விடும்.
உண்மையில் பிரம்மாவுக்கு ஐந்து முகங்கள். இதில் ஒன்று கழுதை முகம்.
எதனால் இப்படி என்று புரிந்து கொள்ள அறிவைக் கடந்த ஞானமுதிர்வு நமக்கு வேண்டும். பிரம்மா விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் தோன்றியவர் என்பதால், அவருக்கு விஷ்ணுவே தாயும் தந்தையுமாக இருக்கிறார். விஷ்ணு பிரம்மாவைப் படைத்ததோடு, அவரின் மூலமாக சகல உயிர்களையும் படைத்து இயக்கத்தை தோற்றுவித்தார். இதனால் படைப்புக் கடவுள் என்று போற்றப்படுகிறார். பிரம்மா என்கிற பெயரே கூட காரணப் பெயர் தான்!
'மா' என்றால் 'பெரிய'. 'அம்மா' என்றால் நாம் பிறக்கக் காரணமானவள். அதனால் ஒரு உயிருக்கு தாயை விட பெரியவர் யாரும் இருக்க முடியாது.
அப்படிப்பட்ட அம்மாவையும், அந்த அம்மாவுக்கு அம்மாவையும் படைத்தவர் பிரம்மா. ப்ரம்மா என்பதே சரியான உச்சரிப்பாகும். 'ப்ர' என்றால் 'பெரிய' என்று பொருள். 'பெரிய அம்மா' என்பதே பிரம்மாவுக்கான பொருள். சகல உயிர்களுக்குமான படைப்புத் தாயாக பெரிய தாயாக இருப்பவரே பிரம்மா.
பிரம்மாவுக்கு ஆதியில் ஐந்து தலைகள். இதில் ஒன்றுக்கு அசுர குணம் இருந்தது. இந்த தலையை சிவனே கொய்து, அவரை முழுமுதல் தேவகுணாதிபதியாக ஆக்கினார்.
இப்படி ஐந்து தலை கொண்டவர் நான்முகனாகி மும்மூர்த்தியில் ஒருவராகி அனேக திருச்செயல்களைப் புரிந்தவர். 'ஓம்' என்னும் பிரணவத்துக்குப் பொருள் கூற முடியாமல் குமரக்கடவுளால் சிறை பிடிக்கப்பட்டவர். சித்தி, புத்தி என்னும் விநாயகரின் சக்திகளை புத்திரிகளாக பெற்றவர். ஊர்வசி மூலம் அகத்தியரை பெற்றவர். திலோத்தமையைப் படைத்து அசுரர்களை மயக்கியவர். பிரம்மாவின் பின்னால் நாம் அறிய அநேக விஷயங்கள் உள்ளன. இருப்பினும் பிரம்மா என்றவுடன் சிவனின் அடி முடி தேடிய கதை தான் நமக்கு முதலில் தெரிய வரும். அதில் மேல் நோக்கி செல்லும் வழியில், கண்ட தாழம்பூவைக் கொண்டு வந்து தான் முடியைக் கண்டதாக பொய் சொல்லி, அதன் காரணமாக கோவிலே இல்லாமல் போன சாபத்திற்கு ஆளானவர்.
இந்த செய்திகள் நமக்குள் பல கேள்விகளை உண்டாக்கும். படைப்புக்கடவுளான அவர் ஏன் பொய் சொல்ல வேண்டும்? 'ஓம்' என்னும் பிரணவத்திற்கு பொருள் தெரியாமல் சிறைப்பட வேண்டும்? ஏன் கழுதை முகத்துடன் அசுர குணம் கொண்டிருக்க வேண்டும்? இப்படி கேள்விகள் எழுவது இயற்கையே. இதற்கான விடை மிக எளியது.
குழந்தைகள் முன் சில சமயம் நாம் அழுவது போலவும், அடிபடுவது போலவும் எல்லாம் நடிப்போம். அதைக் கண்டு குழந்தை சிரிக்கும். அதன் உற்சாகம் நம்மை தொடர்ந்து நடிக்க வைக்கும். அதே போன்றே புராணங்களில் நாம் காணும் சம்பவங்களும்....நமக்கு குழந்தையின் சிரிப்பும், உற்சாகமும் தரும் என்பது ஒரு கணக்கு, புராணங்கள் நம் வாழ்க்கையில் சில உண்மைகளை உணர்த்துவது என்பதும் ஒரு கணக்கு. இதை உணர்ந்து புராணங்களை பார்க்க வேண்டும்.
நாம் மீண்டும் பிரம்மாவிடம் வருவோம். பூலோகத்தில் விஷ்ணு கிருஷ்ணாவதாரம் செய்து குழந்தை வடிவில் இருக்கும் நிலையில், அரக்கர்களை சம்ஹாரம் செய்தது கண்டு தேவர்கள் ஆர்ப்பரிக்க, பிரம்மாவும் கிருஷ்ண சாதுர்யத்தை காண்கிறார்.
பூலோகத்தைக் காக்க படைப்புத் தொழில் புரியும் தன்னைக் கொண்டே ஒரு பலம் வாய்ந்த மானிடனைப் படைக்கச் சொல்லாமல், தானே இங்கு பிறப்பது என்பது ஒரு கோணத்தில் பூலோகத்தின் மீது கொண்ட கருணை என்றாலும், பிரம்மாவுக்கு அது அதிகபட்ச ஆர்வமாகத் தோன்றுகிறது. தங்களுக்கான இணக்கம் மற்றும் வரம்பை மீறிய ஒன்றாகவும் கருத வைக்கிறது.
'என்னையும் மீறி எனக்கும் தெரியாமல் பூலோகத்தில் ஜென்மம் எடுத்து மாயா வினோதங்களை செய்கிறீர்களே... ஒரு வார்த்தை என்னிடம் சொன்னால் என்ன...? அப்புறம் எனக்கு எதற்கு படைப்புக்கடவுள் என்ற பெயர்... மூவரில் ஒருவன் என்ற பெருமை?'
இப்படி பிரம்மாவுக்குள் ஒரு எண்ணம் ஓடிற்றோ என்னவோ... பூலோகத்திற்கு வந்தார். யாதவ குல பிள்ளைகளோடு களியாட்டம் போடும் கிருஷ்ணர், பலராமரைப் பார்த்தார். கிருஷ்ண, பலராமர் அந்த கூட்டத்தில் இருந்து சற்று விலகிய நேரத்தில், யாதவகுல பிள்ளைகள், அவர்களது மாடு, கன்றுகளைத் தன் விசேஷ சக்தியால் மறையச் செய்தார் பிரம்மா.
'கிருஷ்ணன் வந்து கலங்கட்டும். பின் என்னை அழைத்து பேசட்டும். உங்களுக்கு தான் லீலைகள் தெரியுமா? எனக்கும் தெரியும்... என்னிடம் ஏன் ஆலோசிக்கவில்லை” என்றெல்லாம் பிரம்மாவின் மனதில் எண்ணம் ஓடியது. ஆனால், கிருஷ்ணன் பதிலுக்கு செய்தது தான் விந்தை.மறைந்து போன பிள்ளைகள், மாடு, கன்றுகள் என சகலத்தையும் மாயையால் அப்படியே உருவாக்கி, அவர்களை எல்லாம் வீடு திரும்பும் படி செய்தான். பிரம்மாவும் கணநேரம் (நம் கணக்குக்கு ஒரு வருஷம்) இந்த ஒளிதலை நிகழ்த்தி விட்டு, கிருஷ்ணன் பாடாய்பட்டிருப்பார் என்று வந்தால், பதிலுக்கு தான் ஒளித்த அனைவரும் வழக்கம் போல செயல்பட்டதைக் கண்டு விக்கித்து நின்றார்.
அவர் அப்படி நிற்பதைக் கண்ட கிருஷ்ணன் உற்சாகமாகக் குழலூதினான். சகல உயிர்களிடத்திலும் சங்கு, சக்கரத்தோடு தன் விஷ்ணு சொரூபத்தை காண்பித்தான். பிரம்மா தன்னையும் விஷ்ணு ரூபமாக பார்த்து, 'சர்வம் விஷ்ணும் ஜகத்' என்பதை உணர்ந்தார்.
இப்படி தன்னையும் விஷ்ணு ரூபமாகக் காணத் தான், தனக்குள் அப்படி எல்லாம் எண்ணங்கள் எழுந்தது என்றும், அதனால் தான் அவன் செயல் விளையாட்டாக தன்னுள் ஒரு பொறாமை உணர்வு ஏற்படச் செய்தது என்றும் புரிந்து கொண்டார்.
விஷ்ணுவாகிய அந்த கிருஷ்ணனே ஆதிவடிவானவன் பரம்பொருள் என்பதை உணர்ந்து கை கூப்பி, “பிரபோ... என்னுள் இருந்து, என்னை இயக்கி அசைகின்ற, அசையாத சகலமும் விஷ்ணு மயம்” என்பதை உணர்த்தி விட்டீர். உங்களின் இந்த அவதார நோக்கத்தை சிந்திக்கும் போதெல்லாம் நானும் உங்களோடு சிந்திக்கப்படுவேன்.
இது எனக்கு பெருமை... இதுவும் கூட உமக்கு உரியதே...” என்றான்.
கிருஷ்ணனின் முகத்தில் ஒரு புன்னகை. இதன் உட்பொருள் என்ன தெரியுமா?
“இது தொடக்கம் மட்டுமே பிரம்ம தேவா... இனி தான் நிறைய உள்ளன” என்பது தான். அடுத்து நாம் அனுபவிக்கப் போவது கோவர்த்தன கிரிதாரியான சம்பவத்தை...
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்